எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குருகுலக் கல்வியை ஒழிக்க அனைவரையும் இணைத்துப் போராடி ஒழித்துக் கட்டுவோம்!

பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டுத் தீர்மானங்கள்

பட்டுக்கோட்டை, மே 30 குருகுலக் கல்வி திட்ட ஒழிப்பு, நீட்' ஒழிப்பு, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பி.ஜே.பி.யை வீழ்த்த ஒரே அணி உள்பட 17 தீர்மானங்கள் பட்டுக்கோட்டையில் நேற்று (29.5.2018) மாலை நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்  1:

இரங்கல் தீர்மானம்

மக்கள் விரோத  ஸ்டெர்லைட்' ஆலையை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழ்நாடு காவல்துறையின் அத்துமீறல் துப்பாக்கிப் பிரயோகத்தால் பலியானவர் களுக்காக இம்மாநாடு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது - அவர்களை இழந்து வாழும் குடும்பத்தி னருக்கு இம்மாநாடு ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண்  2:

அன்னை மணியம்மையார்

நூற்றாண்டு விழா

தந்தை பெரியார் அவர்களைத் தொண்ணூற்றைந்து ஆண்டுகாலம் வரை வாழவைத்து, தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு கழகத்தையும், அறக்கட்டளை களையும் பாதுகாத்து, இயக்கப் பணி, கல்விப் பணி களை வெகு சிறப்பாக ஆற்றியவரும், உலகில் ஒரு நாத்திக இயக்கத்திற்குத் தலைமை வகித்த முதல் பெண் மணியுமான அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவை 2019 மார்ச் மாதத்தில் எழுச்சி யுடனும் வெகுசிறப்புடனும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண் 3:

அனைத்துஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்து, அந்தப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே இறுதி மூச்சைத் துறந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, இன இழிவு ஒழிப்பு இலட்சியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு முன்னுரிமை கொடுத்து செல்படுவது என்று தீர்மா னிக்கப்படுகிறது. இதற்கான போராட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டுமென கழகத் தலைவரை இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 4:

மத்திய அரசின் குருகுலக் கல்வி திட்டத்திற்குக் கண்டனமும் - எதிர்ப்பும்!

குருகுலக்கல்வியினைபலப்படுத்துவது,

பரவலாக்குவதுதொடர்பாகஉஜ்ஜனியில்கடந்தஏப்ர லில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நடத்திய மாநாட்டு முடிவுகளை மத்திய பா.ஜ.க. அரசு நடைமுறைப் படுத்திட தொடங்கியுள்ளது.

முதல் நடவடிக்கையாக குருகுலக் கல்விச் சாலையில் படித்த மாணவர்கள் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 15 வயது நிரம்பிய எந்தவொரு மாண வரும் தனக்கு சமஸ்கிருதம் படிக்க, எழுதிடத் தெரியும் என தற்சான்று (வேறு சான்று எதுவும் தேவை யில்லை) அளித்தால் 10 ஆம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய திறந்த பள்ளி நிறுவனம் (National Institute of Open Schooling) 10ஆம் வகுப்பில் சேர அனுமதி அளித்துவிடும். அதற்கான அனுமதிச் சான்று பெறுவதற்கு முன்பாக மாணவர்கள் அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதிட வேண்டும்.

அவை:

வேத அத்தியாயன (வேதம் கற்றல்), பாரதீய தரிசனம் (இந்தியச் சிந்தனை), சமஸ்கிருத வியாகரன (சமஸ்கிருத இலக்கணம்), சமஸ்கிருத சாகித்ய (சமஸ்கிருத புலமை) மற்றும் சமஸ்கிருத மொழி ஆகிய அய்ந்து பாடங்களில் தேர்வு எழுதி குறைந்தது 33 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் 10ஆம் வகுப்பில் சேர்ந்து கல்வியினைத் தொடர சான்று அளிக்கப்படும். 10ஆம் வகுப்பிற்கு முன்னர் முறையான கல்வித் திட்டத்தில் பிற மாணவர்கள் பயின்ற பல்வேறு பாடங்களான அறிவியல், கணிதம், வரலாறு, பூகோளம் பற்றி குருகுலக் கல்விக் கூடங்களில் பயின்ற மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இந்தியாவின் அறிவுப் பாரம்பரியத்தினை (Indian Knowledge Tradition) வளர்ப்பதாகக் கூறும் இந்த மத்திய அரசுத் திட்டம் உண்மையில் அடிப்படைக் கல்வி பயிலாத மாணவர்களும் 10ஆம் வகுப்பில் சேர்ந்திட சமஸ்கிருதக் கல்வி பயின்றிருந்தால் போதுமானது எனக் கூறுகிறது.

சமஸ்கிருதத் திணிப்பினை முன்னிறுத்தி கல்வியின் தரம் சீரழிக்கப்படுவதற்கு மத்திய அரசால் இந்த புதிய கல்வித் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் பயின்ற மாணவர்கள் - குருகுலக் கல்வி முறையிலோ அல்லது அஞ்சல்வழிப் பள்ளியிலோ பயின்ற மாணவர்கள் முறையான கல்வித் திட்டத்தில் பள்ளிப் படிப்பினை முடித்திட ஏதுவான ஒரு வழிமுறையாக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுகிறது. கல்வியின் தரம் பற்றிய கவலை இல்லை. சமஸ்கிருதம் தெரிந்திருந்தால் போதும் எனும் சமஸ்கிருதக் கலாச்சாரத்தைத் திணிக்கும் நோக்கில் இந்தக் குருகுலக்கல்வி கொண்டு வரப்படுகிறது. சமஸ்கிருத ஆதிக்க அணுகுமுறையில் ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தும் பார்ப்பனீய வருணாசிரம முறையை, குருகுலக்கல்வி என்ற போர்வையில் குலக்கல்வித் திட் டத்தைக் கொண்டு வர முயற்சிக்கும், மத்திய பிஜேபி ஆட்சியின் முயற்சியை அதன் தொடக்கத்திலேயே முறியடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் கடமை யுமாகும்.

மத்திய பிஜேபி அரசின் இந்தப் பிற்போக்குக் கல்வித் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் வற்புறுத்துகிறது. இல்லையெனில் நாடு தழுவிய அளவில் இதனை முறியடிப்பதற்கான பிரச்சாரத்தில், தீவிரப் போராட்டத்தில் முயற்சிகளில் ஈடுபடுவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 4(அ):

நீட்' வேண்டவே வேண்டாம்

மருத்துவக் கல்லூரிகளில், பல் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு நீட்'  நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2017 ஜனவரியில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு இதுவரை ஒப்புதல் பெற்றுத்தராத மத்திய பி.ஜே.பி. அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்குக்கு இம்மாநாடு தனது கண்ட னத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இனியும் காலந் தாழ்த்தாது மாநில உரிமையை மதிக்கும் வண்ணம் தமிழ்நாட்டின் இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் பெற்றுத் தரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இவ்விரு மசோதாக்களுக்கும் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறுவதில் ஆர்வம் காட்டாத தமிழக அரசின் போக்கிற்கு இம்மாநாடு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. சமூகநீதியின் தாய்ப்பூமியான தமிழ் மண்ணில் திராவிட இயக்கம் என்னும் போர்வையில் ஆட்சியிலி ருக்கும் ஒரு கட்சி (அ.தி.மு.க.) இதில் முக்கிய கவனம் செலுத்தி வெற்றி பெற்றுத் தரவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4(ஆ):

100 விழுக்காடு இடங்களையும்

தமிழக மாணவர்களுக்கே வழங்குக!

மருத்துவக் கல்வி இடங்களில் ஏற்கெனவே நடை முறையில் உள்ள 100 விழுக்காடு இடங்களையும் தமிழ் நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கே வழங்கவேண்டும் என்று இம்மாநாடு அரசை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 4(இ):

மருத்துவக் கவுன்சில் விதிமுறையில் திருத்தம்

அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை மற்றும் சிறப்பு மருத்துவக் கல்வியில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட மருத்துவக் கவுன்சில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 5:

அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ்., அய்.எஃப்.எஸ்.

தேர்வும் - புதிய நடைமுறையும்!

இப்பொழுது நடைமுறையில் உள்ள அய்.ஏ.எஸ். தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள மாற்றம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும், முதல் தலைமுறையாகப் படித்துவரும் இருபால் மாண வர்களுக்கும் அநீதியாகவும், உயர்ஜாதியினருக்கும், பல தலைமுறையாகப் படித்து வருபவர்களுக்குச் சாதகமாகவும் இருப்பது மட்டுமல்லாமல், வெளிப்படைத் தன்மையற்றதும், அரசியல் தலையீட்டுக்கு வழி செய்யும் தன்மை கொண் டதாகவும் இருப்பதால் இதனை அறவே கைவிட வேண் டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலி யுறுத்துகிறது. ஏற்கெனவே இருந்துவரும் நடைமுறையே தொடரப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 6:

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

கல்வி ஒரு பக்கம் வளர்ந்துவரும் அதேவேளையில், வேலைவாய்ப்பு என்பது பெரிதும் அரிதாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக இளைஞர்களின் எண் ணங்களும், செயல்பாடுகளும் விபரீதமான திசைநோக்கிப் பயணிக்கும் அபாயம் இருக்கிறது என்பதையும் முக்கியமாக கவனத்தில் கொண்டும், சமுதாய, பொருளாதார நோக்கில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் அவசியம் என்பதாலும், குடும்பங்களின் கட்டமைப்புக்கு அடித்தளம் என்பதாலும் வேலைவாய்ப்புடன் கூடிய தொழிலகங்களை உருவாக்குவதில் மத்திய, மாநில அரசுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தனியார் துறைகள் வளர்ந்து வரும் இக்கால கட்டத்தில் அத்துறைகளிலும் இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட உரிய வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற நரேந்திர மோடியின் காற்றில் பறந்த வாக்குறுதியையும் இந்த நேரத்தில் மக்களுக்கு இம்மாநாடு நினைவூட்டுகிறது.

தீர்மானம் எண் 7:

அரசுடைமை வங்கிகளில் எழுத்தர் பணிகளுக்குத்

தமிழ் தெரியாதவர்களுக்கு இடம் அளிக்கக் கூடாது!

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் எழுத்தர் (கிளர்க்) பணிகளுக்கு அந்தந்த மாநில மொழி கட்டாயம் தெரிந்திருப்பது அவசியம் என்று இருந்த நிபந்தனையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், இப்பொழுது வெளி யிடப்பட்டுள்ள விளம்பரம் அமைந்துள்ளது. மாநில மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை என்பது இதுவரை இருந்து வந்த நிபந்தனையை செயலிழக்கச் செய்து வெளிமாநிலத்தவர்கள் நுழைய கதவு திறந்து விட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

இதுவரை இருந்து வந்த நிபந்தனையே தொடர வழி செய்யவேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 8:

தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடு

விளைவிக்கும் திட்டங்களைக் கைவிடுக!

தமிழ்நாட்டு நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்குக் கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருப்பதை உணர்ந்து மத்திய - மாநில அரசுகள் இத்திட்டங்களைக் கைவிடவேண்டும் என்றும், இத்திட்டங்களை எதிர்த்துப் போராடும் ஜன நாயகக் கடமையைச் செய்யும் மக்களின் நடவடிக்கைகளை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகக் கருதி ஒடுக்கும் பிற் போக்கு அணுகுமுறையைக் கைவிடவேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 9:

அகழ்வாராய்ச்சிகளில் தமிழ்நாட்டை வஞ்சிக்கும்

மத்திய அரசின் போக்குக்குக் கண்டனம்

1876 ஆம் ஆண்டு வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்திலேயே ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுத் துறையால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இதுவரை அதி காரப்பூர்வமாக ஆய்வறிக்கை வெளியிடப்படவில்லை.

அதேபோல, சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இடையிலே அது நிறுத் தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகள்மூலம் திராவிட இனத்தின் தொன்மை, நாகரிகம் உள்ளிட்ட பெருமைகள் வெளியில் வந்தால், அவை ஆரிய நாகரிகத்துக்கு முந்தையது - பெருமையு டையது என்ற உண்மை வெளிவந்துவிடக்கூடாது என்ற பார்ப்பனிய நோக்கில்தான் மத்திய அரசு நடந்துகொள்கிறது என்று இம்மாநாடு திட்டவட்டமாகவே அறிவிக்கிறது.

மேலும் காலந்தாழ்த்தாமல் அறிவு நாணயத்தோடு ஆய்வுக் கண்ணோட்டத்தில் தொல்லியல் பணிகளை கீழடியில் மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆதிச்ச நல்லூரின் அதிகாரப்பூர்வ ஆய்வு அறிக்கையை உடனே வெளியிடவேண்டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசும் போதிய அழுத்தம் கொடுக்குமாறும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

காவிரி நதிநீர் உரிமை:

உச்சநீதிமன்றத் தீர்ப்பும் - தமிழ்நாடு அரசின் நிலைப்பாடும்!

காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பில் சொல்லப்பட்டிருந்த தன்னாட்சி மிக்க காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திற்குப் பதில் முழுக்க முழுக்க மத்திய  அரசின் அதிகாரப்படி இயங்கும் ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசின் வரைவு திட்டத்தை ஏற்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து தமிழ்நாடு பாதிக்கப்படும் நிலைக்கும் தள்ளப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்கத் துணிவின்றி, மத்திய அரசுக்குத் துணைபோகும் தமிழ்நாடு அரசின் செயல்பாடு தமிழ்நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகமே என்று இம்மாடு கண்டிக்கிறது.

காவிரி நீர் பொய்த்துப் போனதால் காவிரி டெல்டா பகுதிகள் வறண்டு கொண்டிருக்கின்றன. தொடர்ந்து 7 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடி செய்ய முடி யாமலும், உரிய நேரத்தில் மேட்டூர் அணை நீர்ப் பாசனத்திற்குத் திறந்து விடப்படாமலும் அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் காலியாகி, விவசாயமும், விவசாயத் தொழில்களும் முழுமையாக நலிவடைந்து விட்டன. அதனால் விவசாயிகள் தற் கொலையும், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வேறு வேலை தேடி அண்டை மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்லும் அவல நிலைமையும் ஏற்பட்டுள்ளது. ஆகவே ஜூன் ஒன்றாம் தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து, அரசிதழில் அறிவிக்கை செய்து, குறுவை சாகுபடிக்கு காவிரி நீரைத் திறந்து விட மத்திய அரசு அவசரகால நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.

தமிழகஅரசுஜூன்12ஆம்தேதிமேட்டூர் அணையை திறப்பது மட்டுமன்றி, விவசாயிக ளுக்குஉரியநீரைவழங்குவதற்கானஅனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக எடுக்கவேண்டுமென்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 11:

ஜாதி - தீண்டாமை ஒழிப்பு இளைஞர்களுக்கு...

அரசியல் சுய லாப நோக்கத்தோடு ஜாதி, தீண்டாமை ஆங்காங்கே தூண்டப்படுகிறது. இந்து முன்னணி, ஆர்.எஸ்.எசின் விஷமங்களும் இதன் பின்னணியில் உள்ளன. ஜாதிப் பிளவுகளைக் கண்டறிந்து அவற்றை முளையிலேயே கிள்ளி எறிய கழக இளைஞர்கள் முனைந்து செயல்படவேண்டும் என்றும், தேநீர்க் கடை களில் இரண்டு டம்ளர்கள், ஜாதி காரணமாக சுடுகாட்டுப் பாதைப் பிரச்சினைகள் ஆகியவற்றை உடனடியாக தலைமைக் கழகத்தின் பார்வைக்குக் கொண்டு வருமாறு கழகத் தோழர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

கவுரவக் கொலை'' என்பது கவுரவத்திற்கு எதிரான பிற்போக்குத்தன்மையானது என்பதையும் இம்மாநாடு பிரகடனப்படுத்துகிறது.

தீர்மானம் எண் 12:

வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் - உச்சநீதிமன்றமும்!

தற்போது நடைமுறையில் உள்ள எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்யும் எந்த முடிவினையும் மேற்கொள்ளக் கூடாது என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.  நீதிமன்றங்களின் தவறான தீர்ப்பின் விளைவுகளிலிருந்து தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண் டும் என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 13:

ஜாதி மறுப்பு, மத மறுப்பு மற்றும்

விதவைத் திருமணம், மறுமணம்

மாணவர்கள், இளைஞர்கள் அதிகபட்ச கல்வி கற்று, பொருளாதார நிலையில் சொந்தக் காலில் நிற்கும் நிலை ஏற்பட்ட பின், திருமணத்தைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் என்றும், அப்படித் திருமணம் செய்யும்போது ஜாதி மறுப்பு, மத மறுப்பு, கணவனை இழந்தோர், விவாகரத்து பெற்ற பெண்களைத் திருமணம் செய்துகொள்ள முன்வர வேண்டும் என்று இம்மாநாடு இளைஞர்களை குறிப்பாக இயக்க இளைஞர்களை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 14:

கழகத்திற்கு இளைஞர்கள், மாணவர்கள் சேர்க்கை

மத்திய அரசின் அதிகார  பலத்தாலும், ஊடகப் பலத்தாலும், கார்ப்பரேட்டுகளின் பண பலத்தாலும் ஆர்.எஸ்.எஸ். என்ற இந்துத்துவா பார்ப்பன அமைப்பை தமிழகத்தில் காலூன்றச் செய்வதற்கான முயற்சிகளும், திட்டங்களும் இருந்துவரும் நிலையில், அவற்றை முறியடிக்கவும், திராவிட இயக்க சித்தாந்தங்களையும், தந்தை பெரியார் கொள்கைகளையும் மேலும் வலுப் படுத்துவதற்கு இளைஞர்கள், மாணவர்கள் சக்தி அதிகம் தேவைப்படுமாதலால், கழகத்தில் மாணவர்கள், இளை ஞர்கள், மகளிர்கள் பலத்தைப் பெருக்கும் வண்ணம் அனைத்து வகை ஏற்பாடுகளையும், திட்டங்களையும், பயிற்சிப் பட்டறைகளையும், போட்டிகளையும் உருவாக்கிச் செயல்படுத்துவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 15:

திராவிட இயக்க ஆட்சிக்கு மாற்று என்பதில் உள்ள அபாயம்!

திராவிட இயக்க ஆட்சிக்கு மாற்று என்று சொல்லுவதன் பின்னணியில் சமூகநீதி,  இனநலம், ஜாதி ஒழிப்பு, சமதர்மம், சமத்துவம், மதச்சார்பின்மை இவற்றிற்கு எதிரான நோக்கும் - போக்கும் இருப்பதை விழிப்பாக உணர்ந்து, பார்ப்பனீயத் துக்குத் துணை போகும் அந்தப் பிற்போக்குச் சக்திகளை தலையெடுக்க விடாமல் தரைமட்டமாக்குவதே நமது முழுமுதற் கடமை என்பதையும், பார்ப்பனர் அல்லாத வெகு மக்கள் உணர்ந்து திராவிட இயக்கத்தால்தான் எழுந்தோம்; வளர்ந்தோம் எனும் உண்மைத் திராவிட இயக்கச் சித்தாந்தங்களை உள்வாங்கிக் கொண்டு தீவிரமாக செயல்பட வேண்டும் என்று இளைஞர்களை, மாண வர்களை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. தீர்மானம் எண் 15(அ): மனுதர்மப் போக்குக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடியவர்கள் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவோர், பார்ப்பன ஆதிக்கத்திற்கு, மீண்டும் மனுதர்மப் போக்குக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கக் கூடியவர்கள் என்பதை பார்ப்பனர் அல்லாத இம் மண்ணுக்குரிய மக்கள் உணரவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 15(ஆ)

அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பலியாகவேண்டாம்!

ஆன்மிகம் என்ற போர்வை மற்றும் சினிமா கவர்ச்சி என்ற முகமூடி அணிந்து தமிழர் என்ற போர் வையில் ஆரிய ஆதிக்கத்தை நுழைக்கும் அரசியல் சூழ்ச்சிகளுக்குப் பலியாக வேண்டாம் என்று இம்மாநாடு நாட்டு மக்களைக் கேட்டுக் கொள்கிறது. அரசியல் வெற்றிடம் என்று கூறி, தலையை நுழைக்கப் பார்க்கும் வேடதாரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 16:

பி.ஜே.பி. - பி.ஜே.பி.க்கு எதிரான

அணி என இரண்டே அணிகள்தான்!

மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு மதச்சார்பின்மைக்கு விரோதமாக இந்துத்துவா ஆட்சியை அமைக்க விரும்புவதாலும், சமூகநீதிக்கு விரோதமாக இருப்பதாலும், கடந்த நான்கு ஆண்டுகால ஆட்சியில், எந்த வகையிலும் வளர்ச்சிப் போக்கின்றி வீழ்ச்சித் திசையில் நாட்டைக் கொண்டு சென்றதாலும்,  தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அ.தி.மு.க. அரசு மத்திய ஆட்சிக்குப் பல வகை களிலும் துணை போவதாலும் இவ்விரு ஆட்சிகளையும் ஆட்சிப் பீடத்திலிருந்து அகற்றிட பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைந்து பி.ஜே.பி. - பி.ஜே.பி.,க்கு எதிரான அணி என்ற இரு அணிகளாகச் செயல்படுவதுதான் இதற்கான சாத்தியம் என்பதையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 17(அ)

பேராவூரணியில் உரிமையியல்

மற்றும் குற்றவியல் நீதிமன்றம்

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி என்பது ஒரு வட்டத்தின் தலைநகரமாகும். பேராவூரணி நானூ றுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கியதும், சுமார் நான்கு லட்சம் மக்கள் தொகையும் கொண்ட முக்கிய பகுதியாகும். இப்பகுதி பொதுமக்களின், வழக்கு நிலுவைகளால் ஏற்படும் வீண் கால விரயத்தையும், பொருளாதார இழப்பையும் போக்கிடும் வகையில், கடந்த (1996-2001 ஆம் ஆண்டு) தி.மு.க. ஆட்சி காலத்தில் ஆய்வு செய்யப்பட்டு, நீதித்துறையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றம் பேராவூரணி நகரில் ஏற்படுத்துவதற்கு ஆவன செய்ய வேண்டுமாய் தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 17(ஆ)

பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி

நினைவு மண்டபத்தை சீரமைப்பு செய்க!

பட்டுக்கோட்டை நகரில் முதலமைச்சர் அவர் களால் காணொலி காட்சிமூலம் திறக்கப்பட்ட பட்டுக் கோட்டை அஞ்சாநெஞ்சன் தளபதி அழகிரிசாமியின் நினைவு மண்டபம் மின்விளக்கு வசதி இன்றி இருட்டில் உள்ள நிலையை மாற்றி பயனுறு வகையில் உருவாக்கப்படவேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 17(இ)

பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில்பாதை

பட்டுக்கோட்டை - காரைக்குடி அகல ரயில் பாதை திறக்கப்பட்டு ஒரு நாள் காட்சியாக மட்டும் ரயிலை இயக்கிவிட்டு, இன்றுவரை ரயில்வே துறை கிடப்பில் போட்டுவிட்டது. மக்களுக்குப் பயன்படும் வகையில் இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்த முன்வரவேண்டும் என்று மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானங்களை கழகப் பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிந்தார். பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள் வழி மொழியப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner