எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க.வுக்கு அறிவுரை சொல்லுவதற்கு - சம்மன் இல்லாமல் ஆஜராவதில் முந்திரிக்கொட்டையாக முறுக்கிக் கொண்டு கிளம்புவதில் முதலிடத்தில் 'துக்ளக்' இருக்கிறது - அதன் ஆசிரியர் திருவாளர் குருமூர்த்தி அய்யர் இருக்கிறார்.

இதற்கு முன்பும் கூட இதுகுறித்து 'விடுதலை' எழுதியதுண்டு. 'திருவாளர் குருமூர்த்தி அவர்களே - உங்கள் அறிவுரை திமுகவுக்குத் தேவையில்லை!' என்று எழுதியதுண்டு.

ஆனாலும் தொடர்ந்து அதே வேலையை அது செய்து கொண்டுதான் இருக்கிறது.

திமுக தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் - கலைஞரோடு அதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அந்தப் பழைய போக்கிலிருந்து மாறவேண்டும்; அப்படி மாறினால்தான் அவர் ஆட்சிப் பொறுப்பிற்கு வரமுடியும் என்று கருத்துத் தானம் செய்து கொண்டு வருகிறது.

கேள்வி: சமீபத்தில் ஈரோட்டில் நடந்த திமுக மண்டல மாநாடு பற்றி தங்கள் கருத்தென்ன?

துக்ளக் பதில்: சடங்கு போல நடந்திருக்கிறது என்று தோனுது அது. பெரிய உற்சாகமோ, புத்துணர்வோ, புதிய சிந்தனையோ, புதிய உத்தியோ இருந்தது போன்று தெரியவில்லை. திமுக முன்னே செல்வதற்குப் பதில் பல காலம் பின்னே சென்று தி.க.வின் நிலையைத் தழுவுவது போல் தோன்றுகிறது என்று எழுதியது 'துக்ளக்'.

காஞ்சிபுரம், ஏப். 17- தமிழகத்துக்கு ஆன்மிக அரசியல் தான் தேவை என 'துக்ளக்' பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் உலக நன்மைக்காக கடந்த 9ஆம் தேதி முதல் தக்ஷிண காளி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடந்தப்பட்டு வருகின்றன. புதன் கிழமை வரை நடைபெற உள்ள இந்த ஹோமத்தை ஸ்தானிகர் நடராஜ சாஸ்திரி நடத்தி வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹோமத்தில் 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி பங்கேற்றார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழகத்துக்குத் தற்போதைய தேவை ஆன்மிக அரசியல்தான். ஆன்மிக அரசியலை யார் பேசினாலும் அவர்கள் தேவை என்று குறிப்பிட்டார் ('தினமணி', 18.4.2018, பக். 5).                                                                                                         

ஃ ஃ ஃ ஃ ஃ

சொன்னவர் உங்கள் மூதறிஞர்

திராவிட இயக்கத்தவர்கள் அரசியல் எதிரிகளை தரக்குறைவாகப் பேசுவார்கள், கலைஞரும் அப்படிதான் என்று கலைஞர்மீது அவதூறுக் கணைகள் வீசப்படும் கட்டுரை ஒன்று இவ்வார 'துக்ளக்'கில் இடம் பெற்றது.

பெரியார், அண்ணா, கலைஞர் பிம்பங்களை உடைக்கப் போகிறார்களாம். அதையும்தான் சந்திப்போமே.

உங்கள் ஜெகத் குருவின் காம கஷாய வேட்டி தான் ஆகாயத்தில் பறந்ததே - விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசியதை விடவா?

வேலைக்குச் செல்லும் பெண்களை ஒழுக்கக் குறைவானவர்கள் என்று காஞ்சிபுரத்து ஜெயேந்திரர் கூறியதை விடவா?

நேருவின் அழகில் மயங்கிப் பெண்கள் ஓட்டுப் போட்டு விடுகிறார்கள் என்று உங்கள் ஆச்சாரியார் (ராஜாஜி) கூறியதை விடவா?

நாத்திக அரசியல், தமிழ்ப் பிரிவினைவாதம் போன்ற தனது பழைய பாணியிலிருந்து திமுக மாறினால் அதற்கு ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது, தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது என்பது வெளிப்படை ('துக்ளக்', 14.3.2018, பக். 15)

ஃ ஃ ஃ ஃ ஃ

திமுகவின் காலாவதியான சிந்தனைகளையும், சித்தாந்தங்களையும் ஒதுக்கிவிட்டு, காலத்திற்கேற்றாற்போல ஸ்டாலின் திமுகவை மாற்றினால் திமுக மாநில அளவிலான தேசிய கட்சியாக மறுஜென்மம் எடுக்கும். தமிழகத்துக்கு நல்லது, பாரத நாட்டுக்கும் நல்லது ('துக்ளக்', 12.9.2018, பக். 5).

திமுகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் சுயமரியாதை, பகுத்தறிவு, சமத்துவக் கொள்கைகளைத் திமுக தொடர்ந்து கடைபிடிக்கும்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் பயணம் தொடரும் என்று திரும்பத் திரும்ப சொன்னதற்குப் பிறகு மீண்டும் மீண்டும் துக்ளக் - ஏன், இந்த வார இதழில் கூட -  (12.9.2018) பழைய பஞ்சாங்கத்தையே திருப்பித் திருப்பி எழுதுவது எப்படி? “முதலையும், மூர்க்கனும் கொண்டது விடான்” என்ற தன்மையிலே எழுதுகோல் பிடிப்பானேன்?

ஏன்? ஏன்?

குருமூர்த்தி வகையறாக்களுக்கு ஒரு தகவல். சமூக சீர்திருத்தம், மறுமலர்ச்சி  காண விரும்பிய புத்தர் முதல் மகாத்மா பாபுலே, நாராயணகுரு, வேமண்ணா, தந்தை பெரியார், அம்பேத்கர் உள்பட அனைவரும் பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருந்தார்களே ஏன்?

எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? 1971இல் சேலத்தில் அடிபட்டும் இன்னும் புத்தி கொள்முதல் பெறவில்லையே ஏன்? பார்ப்பனர்களுக்கு முன்புத்தி கிடையாது என்பாரே தந்தை பெரியார் - அதுதானோ?

“எனவே அந்த வாய்ப்பை பயன்படுத்தி, காலத்தால் நலிந்து வரும் தி.மு.க.வின் சிந்தனைகளிலும், சித்தாந்தங்க ளிலும் ஸ்டாலின் மாறுதல் கொண்டு வரவேண்டும். நாத்திகம், திராவிடம், தமிழ் தீவிர வாதம், ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, மாநில சுயாட்சி போர்வையில் பிரிவினை வாதம் போன்ற சித்தாந்தங்களையும், சின்னங்களையும், அவ்வப்போது ஊறுகாய் தொட்டுக்கொள்வது போல தொட்டு, அதனால் வரும் பாதிப்புகளை தன்னுடைய திறமையாலும், நாவன்மையாலும் சமாளித்து வந்தார் கருணாநிதி. கருணாநிதியின் அந்த யுக்தி அரசியலால், காலாவதியான அந்த சிந்தனைகளும், சித்தாந்தங்களும் தி.மு.க.வின் அடையாளங்களாகவும், பிம்பங்களாகவும் ஆகி விட்டிருக்கின்றன. தங்களுக்கு அது ஏற்புடையது இல்லை என்றாலும், தி.மு.க.வின் அந்த பிம்ப சிந்தனைகளைப் பெரும்பாலான தி.மு.க.வினர் கருணாநிதிக்காக சகித்துக் கொண்டனர் என்பதுதான் உண்மை. காலத்துக்கு ஒவ்வாத அந்த பிம்ப கொள்கைகளை ஸ்டாலின் ஒதுக்க வேண்டும். அவர் தலைவரானவுடன் ‘தி.மு.க. கடவுளை எதிர்க்கும் கட்சி அல்ல’ என்று பேசியது வரவேற்கத்தக்கது. அவர் அத்துடன் நிற்காமல் நாத்திகம் என்பது தனிமனிதக் கொள்கை , அது தி.மு.க. வின் முகமல்ல என்று கூறவேண்டும்''.  ('துக்ளக்', 12.9.2018, பக். 4)

நாத்திகம், ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்து எதிர்ப்பு, மாநில சுயாட்சி, திராவிடம் என்பதெல்லாம் பார்ப்பனர் பார்வையில் எப்பொழுதுமே தீவிரவாதமாகத்தான் தோன்றும்.

அவர்கள் பார்வையில் இவையெல்லாம் பிற்போக்கு - காலாவதியானவை. இராமாயணம், மகாபாரதம், மனுதர்மம், கீதை பற்றி 'துக்ளக்'கில் இன்றுவரை பக்கம் பக்கமாக எழுதுவது எல்லாம் முற்போக்கு! காலாவதியாகாத கங்கு பட்டர் தத்துவம்.

பிர்மா என்ற ஆண் கடவுளின் முகத்தில் பிரசவம் ஆனது என்பதுதான் அவர்கள் பார்வையில் விஞ்ஞானத் தத்துவம்.

பார்ப்பனர்கள் இன்னும் ஒரு குலத்துக்கொரு நீதி பேசும் வர்ணாசிரம திமிரிலேயே மிதக்கிறார்கள் என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

இன்றுவரை ஆவணி அவிட்டம் என்ற பெயரால் பூணூலைப் புதுப்பிக்கிறார்களே - இதன் பொருள் என்ன? நாங்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்கள் - நாங்கள் துவி ஜாதியினர் (இருபிறப்பாளர்) என்பதால் ஒவ்வொரு ஆவணி அவிட்டத்தின் போதும் பூணூலை அணிகிறோம் - புதுப்பிக்கிறோம்.

நீங்களோ பிறப்பில் பிர்மாவின் காலில் பிறந்தவர்கள்!

அதைத்தான் எங்கள் ஹிந்து மதம் கூறுகிறது - மனுதர்ம சாஸ்திரம் கூறுகிறது - வேண்டுமானால் மனுதர்மம் அத்தியாயம்  எட்டு 415ஆம் சுலோகத்தைப் பாருங்கள்.

தேவடியாள் மகன் என்பது உட்பட சூத்திரன் ஏழு வகைப்படுவான் என்பதை ஒப்புக் கொண்டே தீரவேண்டும்.

மனுதர்மத்தின் அதே அத்தியாயம் 413ஆம் சுலோகத்தையும் கண்டிப்பாகப் படியுங்கள்.

பிராமணன் சம்பளம் கொடுத்தேனும், கொடாமலேனும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். ஏனெனில் அவன் பிராமணனின், வேலைக்காகவே பிராமணனால் சிருஷ்டிக் கப்பட்டவன் என்கிற இந்த ஹிந்து மதத்தை எதிர்த்தால், மனுதர்மத்தை எரித்தால் நாங்கள் தீவிரவாதிகளா?

எந்தப் பொருளில் அவர்கள் சொன்னாலும் நாங்கள் உண்மையிலேயே தீவிரவாதிகள்தான். அதற்காகப் பெருமையே படுகிறோம். தீவிரமாகப் பாடுபடுங்கள் தோழர்களே என்று சொல்லுவதில்லையா - அதே போல்தான்.

தீவிரவாதிகள் என்றால் வன்முறையாளர்கள் என்று பொருளல்ல. போலீஸ்காரன் தாக்கினால் அவன் முகத்தைப் பார்க்காதே. முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்ன தலைவரின் தொண்டர்கள் கருஞ்சட்டையினர்.

“இரத்தப் பரிசோதனை செய்து ஆரியர் - திராவிடர் என்று நாங்கள் பிரித்துப் பேசவில்லை. கலாச்சார - பண்பாட்டுப் பேதத்தால்தான்.

இந்து மகாஸ்தாபனம் கூறட்டுமே இன்று - 'இனி இந்த நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடோ, வகுப்புப் பிரிவோ, அவ்வேறுபாட்டை வலியுறுத்தும் சட்டங்களோ, சாஸ்திரங்களோ, புராணங்களோ இருக்க அனுமதியோம்; இவை அனைத்தையும் ஒழிக்கவே இனி நாங்கள் பாடுபடப்போகிறோம்'' என்று; உடனே எங்கள் கழகத்தைக் கலைத்துவிட்டு இந்து மகா சபையில் சேர்ந்து விடுகிறோமே.

அதற்கு மாறாக இன்று வரைக்கும் இந்த இழிவு போக்கும் முயற்சியை 'பிராமண' உயர்ஜாதி மக்கள் தடுத்துக் கொண்டுதானே வந்திருக்கிறார்கள். இராமனாக வந்து, கிருஷ்ணனாக வந்து, நரசிம்மனாக வந்து, சீர்திருத்தப் பெரியோர்களைக் கொன்ற திருக்கூட்டந்தானே இக்கூட்டம். தெய்வீக சக்திகளின் பெயரால் அவர்களைக் கொன்றது - நரகத்தின் பெயரால் மக்களைப் பயமுறுத்தி மூடநம்பிக்கைகளை வளர்த்து விட்டது - அதனால் தான் பகுத்தறிவு வளர முடியாமற் போய்விட்டது.

எந்தப் பகுத்தறிவுவாதிகளையும் இத்திருக் கூட்டம் முதலில் அழிக்கப்பார்க்கும், அழிக்க முடியாவிட்டால், அவனை மனிதனுக்கு மேலாகப் புகழ்ந்து பேசி, அவன் காரியத்தில் இறங்கும் சமயம் பார்த்து, அவனைப் 'பகவான் திருவடி' நிழலில் சேர்த்துவிடும் அவ்வளவுதான். காந்தியார் நிலை அது தான்” என்று இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன் வேலூரில் பேசினாரே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ('விடுதலை', 15.3.1948).

இன்று வரை பார்ப்பனர்களின் நிலைப்பாடு இதுதானே! அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்றால் உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுப்பது யார்?

கோயிலில் வழிபாட்டு மொழி தமிழ் என்றால் 'துக்ளக்' துள்ளி எழுந்து தலையங்கம் தீட்டுகிறதே - தமிழில் சொன்னால் பொருள் இருக்கும் - அருள் இருக்காது - அஃது சமஸ்கிருத ஒலியில்தான் இருக்கும் என்று எழுதவில்லையா? ('துக்ளக்', 18.11.1998).

பூஜை வேளையில் பெரியவாள் (சங்கராச்சாரியார்) நீஷப் பாஷை பேச மாட்டார் என்ற நிலை இன்றும் இருக்கவில்லையா?

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய போது குத்துக் கல்லாக உட்கார்ந்தவர் யார்? மக்களுக்குத் தெரியாதா? திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்றரை கிலோவில் தங்கப் பூணூல் அணிவித்து ஏழுமலையானும் எங்கள் ஜாதிக்காரன்தான் என்று காட்டவில்லையா காஞ்சி ஜெயேந்திரர்?

கோயில்களில் சமஸ்கிருத அர்ச்சனையை மனம் உவந்து ஏற்றுக் கொள்ளும் தமிழ்நாட்டு பக்தர்களிடம் போய் 'சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யாதே' என்று ஸ்டாலின் சொல்லத் தயாரா? ('துக்ளக்', 1.11.2017) என்று சவால் விடுகிறார் குருமூர்த்தி அய்யர்.

இப்படி சொல்பவர்கள் தான் திருந்தியவர்கள் - முற்போக்கு வாதிகள் - பழசுகளை மறந்து விட்டுப் புதிய பாதையில் பாதம் பதிப்பவர்களாம்!

52 லட்சம் ரூபாய் மதிப்பில் சீறீரங்க நாதனுக்கு வைரப்பூண் பூட்டவில்லையா நாராயண ஜீயர்? கர்ப்ப கிரகக் கடவுளும் சாமி, அர்ச்சகப் பார்ப்பானும் சாமி என்று சொல்லுவதன் சூட்சுமம் புரிகிறதா?

In fact, in one occasion, Rajaji proudly said that he valued his Brahmin hood more than his Chief Ministership (Caravan, April (1), 1978).

முதல் அமைச்சர் பதவியைவிட பிராமணனாக இருப்பதில்தான் பெருமையாம் - இப்படிப்பட்டவர் ராஜாஜிதான் மூதறிஞராம்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ் வழிபாட்டு மொழி தேவை என்று சொன்னால் - அது திராவிடம் - பிற்போக்கு கொள்கை - பழைய வாதம் என்று சொல்லக்கூடிய திமிர் இந்த பஞ்சகச்சங்களுக்கு வந்திருக்கிறது என்றால், அந்த அளவுக்குத் தமிழர்கள் சொரணை இழந்து போய்விட்டார்கள் என்ற கணக்கு இந்த கைபர் கணவாய்க் கூட்டத்துக்கு.

பெங்களூரு திருவள்ளுவர் சிலை  திறப்புப் பற்றி சோவின் கருத்தென்ன?

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான், கன்னட வெறியர் கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தாலே போதுமே. ('துக்ளக்', 19.8.2009, பக். 3)

இப்படி எழுதுபவர்கள் திருந்தத் தேவையில்லையாம்.

பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படு வதற்குக் காரணமாக இருந்த கலைஞரும், திராவிட இயக்கமும் திருந்த வேண்டுமாம் - ஏன் இன்னும்அந்தப் பழைய காலாவதியான திராவிட சித்தாந்தம் என்று சிண்டுகள் சீறுகின்றனர் -

மத்தியிலே நரேந்திர மோடி தலைமையில் அதிகாரம் வந்தாலும் வந்தது. இந்த சிறுநரிகள் எல்லாம் தங்களை சிங்கங்களாக நினைத்துக் கொண்டு கர்சிக்க ஆரம்பித்துள்ளன. திராவிட இயக்கத்துக்குப் புத்திமதி சொல்லும் அளவுக்கு இந்தப் பூதேவர்கள் பூணூலை முறுக்கிக் கொண்டு கிளம்புகின்றனர்.

காஞ்சி சங்கரமடத்தில் இன்று என்ன 'சூப்'? என்ன பொரியல்? குருமூர்த்தி ஆத்தில் இன்றைக்கு வெண்டைக்காய் குழம்பு - கத்திரிக்காய் கூட்டு வைக்க வேண்டும் என்று கூட நாங்கள் சொல்லலாமா?

திமுகவுக்கு வீரமணியும், வைகோவும் துவாரபாலகராக ('துக்ளக்', 13.6.2018 பக். 10) இருப்பதில் என்ன ஆச்சரியம்? அக்கிரகாரத்துக்கு நாடித்துடிப்பு அதிகரிப்பதேன்?

திராவிட இயக்கம் தோன்றி நூற்றாண்டைக் கடந்து விட்டது. அதன் சித்தாந்தம்தான் பார்ப்பனர்களைக் கூட பெயருக்குப் பின்னால் ஜாதி வாலை ஒட்ட நறுக்கிக் கொள்ளச் செய்திருக்கிறது.

அக்ரகாரத்தில் 'மொட்டைப் பாப்பாத்தி' என்ற நிலை இல்லாமல் செய்திருக்கிறது.

பாரதீய ஜனதாவிற்கும் நோட்டாவுக்கும்தான் இங்குப் போட்டி. 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு தான் பார்ப்பனர்.

அருப்புக் கோட்டையில் உங்கள் மூதறிஞர் என்ன பேசினார்?

ராஜாஜி பேசும்போது இடைத் தேர்தலில் காங்கிரஸ்காரர்களுக்கு நல்ல அடிகொடுக்க வேண்டும், அதுவும் செருப்படிபோல் விழ வேண் டும் என்று பேசினார். இவருக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா என்று கேட்டு “செங்காங் கடை யில் ஆச்சாரியார்” எனும் தலைப்பில் 'விடுதலை' தலையங்கம் தீட்டியதுண்டு (14.4.1964).

இதே ராஜாஜி சென்னை கடற்கரையில் கறுப்புக் காக்கையைக் கல்லால் அடித்து வீழ்த்தினால் மற்ற காக்கைகள் தானாக ஓடிவிடும் என்று காமராசரை மறைமுகமாக சாடினாரே! (27.2.1966).

இதெல்லாம் தகுதிமிக்க தரமிக்க சொல்லா டல்களா!

கடைசியில் உங்கள் ராஜாஜியே ஒப்புக் கொண்டு விட்டார்.

'தேவர்கள் - அரக்கர்கள் போராட்டமே தமிழ்நாட்டின் நிலை' - சி.இராஜகோபாலாச்சாரியார் (18.9.1953). திருவொற்றியூர்

இதை ஒப்புக்கொள்ள ஏன் தயக்கம்?

நீங்கள் மகாத்மாவாக்கினீர்களே அந்த காந்தியார் என்ன சொன்னார்?

“பிராமணர்கள் தங்களை உயர்வாகக் கருதும் தற்பெருமை காரணமாக தங்களுக்கும், மற்றவர் களுக்கும் இடையே அவர்கள் கற்பிக்கும் வேற்றுமை கொடூரமானது ('தி இந்து', 23.8.1920).

மாற்றம் ஒன்றுதான் மாறாதது - மனுவாதிகளே மாறித் தொலையுங்கள். இல்லாவிட்டால் இப்பொழுது கிடைத்துள்ள அந்த ஒரு சட்டமன்ற இடம் கூடக் கிடைத்திடாது.

திராவிட இயக்கத்தை சீண்டச் சீண்ட கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆன கதைதான்.

குருமூர்த்தி அய்யர்வாளே! உங்கள் குருநாதர் 'சோ' ராமசாமியே தன்னை ஒரு அரசியல் புரோக்கர் என்று வேறு வழியின்றி ஒப்புக் கொண்டார் (ஆனந்த விகடன், 1.2.2012).

நீவீர் எப்படி?

நாங்கள் அப்படிதான் இருப்போம் - இன்றும் ஆவணி அவிட்டம் கொண்டாடிக் கொண்டுதான் இருப்போம் - இன்னும் வேதம், இராமாயணம், மகாபாரதம், கீதை, மனுதர்மம், மகாத்மியம் பாடிக் கொண்டுதான் இருப்போம் - உங்களது சுயமரியாதை, பகுத்தறிவு, திராவிட சித்தாந்தம் எல்லாம் காலாவதியானவை; நீங்கள்தான் திருந்த வேண்டும் என்று இறுமாப்போடு அரட்டை அடிப்பீர்களே யானால், திருத்தப்படுவீர்கள் என்பது மட்டும் நிச்சயம்!

 

- கலி.பூங்குன்றன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner