எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 6- செவிலியர் பட்டயப்படிப்புக்கான தகுதிப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப் பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 23 அரசு செவிலியர் பட்டயப்படிப்பு கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக் கான (2018-19) மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை 23-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கல்லூரிகளில் சுமார் 2,000 இடங்கள் உள்ளன. மாணவிகள் மட்டுமே இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் படிப்புக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்தப் படிப்புக்கான தகுதிப் பட்டியல் இணையதளங்களில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல் பிரிவில் படித்த 9,060 பேர், செவிலிய தொழிற்கல்வி பிரிவில் படித்த 451 பேர், பிற பாடத்தில் பயின்ற 692 பேர் என மொத்தம் 10,203 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதிப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வின் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். கலந்தாய்வு தேதி, அட்டவணை குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

தருமபுரி, செப். 6- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை நொடிக்கு 7,000 கனஅடியாகச் சரிந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 8,500 கன அடியாக இருந்தது புதன்கிழமை காலை நொடிக்கு 7,000 கனஅடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 120.09 அடியாகவும், நீர் இருப்பு 93.69 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக தண்ணீர் திறப்பு

சிறீமுஷ்ணம், செப். 6- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும்.

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரி நீர் கீழணையில் இருந்து கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது. நேற்று கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 1,300 கனஅடி தண்ணீர் வந்தது. இன்றும் அதே அளவான 1,300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர் மட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 47 அடியாகவே வைக்கப்பட்டுள்ளது.

விவசாய பாசனத்துக்கு கடந்த 26-ஆம் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று ஏரியில் இருந்து வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு திறந்து விடப்பட்டது. இன்றும் தொடர்ந்து அதே அளவான 300 கனஅடி தண்ணீர் விவசாயத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது. நேற்று 73 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. இன்று 74 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இது நேற்றைய விட 1 கன அடி அதிகமாகும்.

தலைக்கவசம்: விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன?  நீதிமன்றம் கேள்வி

சென்னை, செப். 6- தலைக்கவசம் தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற மோட்டார் சட்ட விதிகளை அமல்படுத்த உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம் குறித்து காவல்துறை கூடுதல் ஆணையர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை பார்த்த நீதிபதிகள் தலைக்கவசம் அணிவது குறித்து கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இதுவரை எந்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்தவில்லையே என்று கேள்வி எழுப்பினர். சட்டத்தை அமலாக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளதா? இல்லை நீதிமன்றத்திற்கு உள்ளதா? என்று அவர்கள் கேட்டனர். வாகன ஓட்டிகள் தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்துவதில் அரசு தோல்வி அடைந்து விட்டதா என்றும் நீதிபதிகள் சாடினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய காவல்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் புகைப்படத்திற்கு போஸ் மட்டும் கொடுப்பதா என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner