எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 5- ''சந்திரயான் - 2 செயற்கை கோள், அடுத்தாண்டு, பிப்., 16க்குள் விண்ணில் செலுத்தப்படும்,'' என, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, 'இஸ்ரோ'வின் தலைவர், சிவன் கூறினார்.

சென்னை விமான நிலையத்தில், நேற்று (4.9.2018) அவர் அளித்த பேட்டி: 'சந்திரயான் - -2' செயற்கை கோள், அடுத்தாண்டு, பிப்., 16க்குள் விண்ணில் செலுத்தப்படும். 'ஜி.எஸ்.எல்.வி., மார்க்-' ரக ராக்கெட் வழியாக, இந்த செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படும். இதற்கான பணிகள், இந்தாண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். மீனவர்கள், கடல் எல்லை தாண்டுவதை கண்டறிய உதவும் செயலி, தயாரிக்கப்பட்டு வருகிறது.

பருவ மழைக்காலம் முடிந்ததும், இந்த செயலி வெளியிடப்படும். விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் குறித்து, ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதன்படி, 2022க்குள், மூன்று மனிதர்களை, விண்ணிற்கு அனுப்ப திட்டமிடப் பட்டுள்ளது.அடுத்த ஆண்டிற்குள், 'பி.எஸ்.எல்.வி., சி42' ராக் கெட்டை ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்பின், 'ஜி.எஸ்.எல்.வி., டி - 2' ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.இவ்வாறு சிவன் கூறினார்.

கீழடி அகழாய்வு 30இல் நிறைவு

திருப்புவனம், செப். 5- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் கீழடி பள்ளிச்சந்தை புதூரில், தமிழக தொல்லியல் துறை சார்பில், ஏப்ரல், 19இல், 55 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட்ட அகழாய்வு பணி, வரும், 30ல் நிறைவு பெற உள்ளது. கீழடியில் சோணை என்பவரது நிலத்தில் முதல் கட்டமாக, 20 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்தது.

இதில் உறைகிணறுகள், களிமண் அச்சுகள், தங்க அணி கலன்கள் கண்டறியப் பட்டன. இதையடுத்து, கணேசன் என்பவரது நிலத்தில், 13 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு நடந்து வருகிறது. இதில், 1,000த்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் காலம் அறிய ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணியை வரும், 30ஆம் தேதிக்குள் முடிக்க தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்துக் குறைந்தது

தருமபுரி, செப்.5 ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து செவ்வாய்க்கிழமை நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

கருநாடக மாநில அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி, ஒகேனக்கல்லுக்கு நொடிக்கு 16 ஆயிரம் கன அடியாக இருந்துவந்த நீர்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது.

ஒகேனக்கல்லில் நீர்வரத்துக் குறைந்தாலும், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க 56-ஆவது நாளாக செவ்வாய்க் கிழமையும் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை

சென்னை, செப்.5 அத்தியாவசியப் பொருள்களான பெட்ரோல், டீசல் விலை செவ்வாய்க்கிழமை இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 17 காசுகளும், டீசலுக்கு 20 காசுகளும் உயர்ந்து உச்சத்தை தொட்டது.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களாக தினசரி 3 காசுகள், 5 காசுகள் என தொடர்ந்து உயர்ந்து வந்த பெட்ரோல் விலை சென்னையில் திங்கள்கிழமை மட்டும் ஒரே நாளில் 32 காசுகள் உயர்ந்தது.

இதனால் ஞாயிற்றுக்கிழமை ரூ.81.92-க்கு விற்பனை செய்யப் பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், திங்கள்கிழமை ரூ. 82.24-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. அதன்படி டில்லியில் ரூ. 79.31, மும்பையில் ரூ. 86.72, கொல்கத்தாவில் ரூ. 82.33, சென்னையில் ரூ. 82.41-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை டில்லியில் ரூ. 71.34, மும்பையில் ரூ.75.74, கொல்கத்தாவில் ரூ.74, சென்னையில் 75.39 ரூபாயாகவும் இருந்தது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தை தொட்டுள்ளதால், விலைவாசி உயர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 16 பைசாக்கள் சரிந்து ரூ.71.37 தொட்டு வரலாற்றில் இல்லாத சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாகவும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்ப தாகவும், பன்னாட்டு அளவில் அமெரிக்கா, சீனா, அய்ரோப்பிய நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தக போர் விரைவில் தீர்க்கப்படாவிடில், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மின் உற்பத்தி பாதிப்பு

தூத்துக்குடி, செப்.5 தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 1-ஆவது அலகில் செவ்வாய்க்கிழமை திடீரென கொதிகலன் பழுது ஏற்பட்டதால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 1050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அனல் மின் நிலையத்தின் 1-ஆவது அலகின் இயந்திரத்தின் கொதிகலனில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பழுது காரணமாக அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நான்கு அலகுகளிலும் வழக்கம்போல தொடர்ந்து மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner