எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக முதல்வரும் - தமிழக அமைச்சர்களும்

உடனடியாக களத்தில் இறங்கி செயல்படவேண்டும்!

தமிழர் தலைவர் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை

தமிழகத்திலுள்ள ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடுகளை போதிய அளவில் தந்து, அவர்களுக்கு ஒரு வகையான நிம்மதியை - நம்பிக்கையைத் தந்து விரக்தியிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டாமா?  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

திராவிடர் கழகம் தீர்மானம்

கடந்த மாதம் 17.12.2016 இல் திருவாரூரில் கூடிய திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் - லட்சோப லட்சம் மக்கள், விவசாயிகள், பொதுமக்கள் திரண்ட மாபெரும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தனித் தீர்மானம், ‘‘காவிரி டெல்டா பகுதியில் மழையின்மை, காவிரியில், கருநாடக அரசு தண்ணீர் திறந்துவிட மறுத்ததின் விளைவு - சம்பா நாற்றுப் பயிர்கள் எல்லாம் கருகி விட்டன; வேதனையின் துயரத் தீயில் விவசாயிகளின் உள்ளங்களும் வெந்து கருகி விட்டன!

மாநில அரசு இதை வறட்சி மாநிலமாக அறிவிக்க வைத்து, மத்திய அரசின் உதவிகளை உடனடியாகப் பெற்றுத் தரவேண்டுமெனவும் விவசாயிகளின் தற்கொலைகள் பெருகிய வண்ணம் உள்ளதை - தடுத்து நிறுத்திட மாநில அரசும், மத்திய அரசும் போதுமான நடவடிக்கைகள் எடுத்து, காப்பாற்றவேண்டிய மனிதாபிமான அடிப்படையில் மிக மிக அவசர, அவசிய நடவடிக்கையாகத் தொடரவேண்டும் என்ற கருத்தடங்கிய தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

ஒரே நாளில் 8 விவசாயிகள் உயிரிழப்பு

தமிழகத்தில் வறட்சியால் பயிர்கள் கருகும் நிலை யில், அதிர்ச்சியாலும் - மாரடைப்பாலும், தற்கொலை செய்துகொண்டும் நேற்று (2.1.2017) ஒரே நாளில் 8 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்!

இதற்கு விடிவே இல்லையா? இந்தியா முழுவதிலும் குறிப்பாக அதிகமாக மகாராஷ்டிர மாநிலம் உள்பட நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டத்தில் மட்டும் ஏற்கெனவே 31 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். நேற்று 4 விவசாயிகள்  மரணம்;   அந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 35 விவசாயிகளின் உயிர் பறிபோய் உள்ளது!

திருவாரூர்மாவட்டத்தில்ஏற்கெனவே11விவசாயி கள் உயிர் இழந்த நிலையில், மேலும் 3 பேர் மரண மடைந்துள்ளனர்! ஆக, 14 பேர் அந்த மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 84 விவசாயிகள் இப்படி தற்கொலை - மாரடைப்பு காரணமாக இறந்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம், கடலூர் மாவட்டம் இப்படிப் பல மாவட்டங்களில் விவசாயிகளின் தற் கொலை, மாரடைப்பு. இந்தத் துன்பம் ஏற்படுத்திய மன அழுத்தம் காரணமாக இறந்தவர்களின் எண் ணிக்கையையும் அலட்சியப்படுத்திவிட முடியாது!

2017 ஆம் ஆண்டு இப்படியா தொடரவேண்டும்?

தமிழக அரசு - முதல்வர் - விவசாயத் துறை அமைச்சர் முதலியோர் நேரில் சென்று அக்குடும்பங்களுக்கு ஆறுதல் கூற வேண்டாமா?

உரிய நிவாரண நிதி கொடுத்து, துயர் துடைக்க முன்வர வேண்டாமா?

ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் இழப்பீடுகளை போதிய அளவில் தந்து, அவர்களுக்கு ஒரு வகையான நிம்மதியை - நம்பிக்கையைத் தந்து விரக்தியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றவேண்டாமா? 2017 ஆம் ஆண்டு இப்படியா தொடரவேண்டும்?

தமிழக முதல்வரும், தமிழக அமைச்சர்களும் உடனடியாக களத்தில் இறங்கி, தாமதிக்காமல் செயல் படவேண்டியது தலையாய கடமையாகும்!

 

கி.வீரமணி
தலைவர்,   திராவிடர் கழகம்.


சென்னை
3.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner