எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

தஞ்சை டெல்டா விவசாயிகள் நெற்பயிர்கள் கருகி, அவர்களின் வாழ்க்கையே கருகி விட்ட கொடுமையும், இதனை தாங்கிக் கொள்ளாமல் மாரடைப்பு மரணங்களும், தற்கொலைகளும் நாளும் அங்கே பெருகி வருவது கண்டு, மனிதநேயம் உள்ள அனைவரும் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர்.

இதை நாம் சென்ற மாதம் 17 ஆம் தேதி திருவாரூர் மாநாட்டில் தெரிவித்தோம். தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு துயர், துன்பம் நீங்க - அதுவும் பொங்கல் நேரத்தில்  - ஆறுதல் தர அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கையாக முனைந்து செயல்படவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தடுக்கப்படாவிட்டால், இது மேலும் அதிகமான எண் ணிக்கையில் தற்கொலைகள், மரணங்களும் நிகழும் நிலை ஏற்படும்.

பொறுப்பற்றுப் பேசியுள்ள

அமைச்சரை நீக்குக!

தமிழ்நாட்டு அ.தி.மு.க. அரசின் உள்ள அமைச்சர் ஒருவர் (திரு.சம்பத் என்பவர்) விவசாயிகள் முதுமை காரணமாக மரணமடைகின்றார்கள் என்று பொறுப்பற்றுப் பேசியுள்ளது, இந்த ஆட்சிக்கே பெருத்த அவமானம். உடனடியாக இத்தகைய வாய்க் கொழுப்பு, வக்கிரபுத்தியாளர்களை அமைச்சரவையிலிருந்து நீக்க ஆளும் அ.தி.மு.க. தலைமையும், முதல்வரும் கலந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

இன்றேல் இந்த அரசுக்கு மிகவும் அவப்பெயரை - கேட்டை - நீக்க முடியாத கறையை  - நீங்காத விவசாயிகளின் எதிர்ப்பை - நிரந்தரமாகவே உருவாக்கிடும் என்பது உறுதி!

ஆறுதல் சொல்லாவிட்டாலும், வாய்மூடி மவுனமாவது காக்கப்பட வேண்டாமா?

நடவடிக்கை இல்லையென்றால்

ஆட்சிக்குக் கெட்ட பெயர்தான்

அமைச்சர்கள் ஓடோடி ஆறுதல் கூறி விவசாயிகளுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கவேண்டும்; அதைச் செய்யத் தவறியதோடு, இப்படி பொறுப்பற்று உளறுவதால், அறு வடை எதில் போய் முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கட்டும் இவ்வரசு.

உடனே நடவடிக்கை தொடர்க! இன்றேல், இதுவே தமிழ்நாட்டின் அ.தி.மு.க.வின் கருத்து என்று கடும் பிரச்சாரம் பெருகுவது தவிர்க்க இயலாத ஒன்றாகும்.

 

கி.வீரமணி     
தலைவர்,  திராவிடர் கழகம்.

 

சென்னை

7.1.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner