எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழறிஞர்களின் நூல்களை முழுமையாக பதிப்பித்துவரும் இளவழகனாரை காலந்தோறும் தமிழுலகம் பாராட்டும்!

மறைமலை அடிகளாரின் படைப்புகள் வெறும் நூல்கள் அல்ல; பண்பாட்டுப் படையெடுப்பினை வீழ்த்தும் போர்க்கருவிகள்

நூல் வெளியிட்டு விழாவில் தமிழர் தலைவர் எழுச்சியுரை!

சென்னை, ஜன.10- தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் நூல்கள் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து மீட்சிப் பெறுவதற்கான போர்க் கருவிகள் என்றார்திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியின் எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பாக 6.1.2017 ஆம் தேதிமுதல் 19.1.2017 வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது. அப்புத்தகக் காட்சியில் நேற்று (9.1.2017) நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு வெளியிடான ‘மறைமலையம்’ நூல் வெளியிட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.

அவரது  உரை வருமாறு:

எவரும் சாதிக்கத் துணியாத,

சாதிக்க முன்வராத ஒரு பணி

எழுச்சியோடு தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு நிறைவு வெளியீடாக ‘‘மறைமலையம்’’ என்ற தமிழ்க்கடல் மறை யடிகளாரின் பேச்சும், எழுத்தும் உள்ளடங்கிய, 34 தொகுதிகளை, 11,472 பக்கங்களைக் கொண்ட ‘மறைமலையம்’ நூலினை ஓர் அற்புதமாக எவரும் சாதிக்கத் துணியாத, சாதிக்க முன்வராத ஒரு பணியை, லாபநோக்கம் கருதாமல், இனமானம் கருதி, தமிழ் மானம் கருதி இங்கே அந்நூல் வெளியீட்டு விழாவை சிறப்பாக நடத்தக்கூடிய அருமைத் தோழர் மானமிகு இளவழகனார் அவர்களுடைய முயற்சியில் நடைபெறக்கூடிய விழா இது.

ஒரு நல்ல அறிவிப்பு செய்த  ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் முனைவர் நடராசன்

தமிழ் மானத்தை என்றைக்கும் காப்போம்; நம் மிடத்தில் வம்புகள் செய்வோர் யாராக இருந்தாலும், அவர்கள் வம்புகள் செய்தால், அந்த வம்புகளை நாங்கள் சந்திப்போம் என்பதற்கு ஒரு நல்ல அறிவிப்பாக இங்கே சொல்லியிருக்கக்கூடிய அருமை நண்பர் ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் முனைவர் நடராசன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு அற்புதமான உணர்ச்சி உரைகளை நிகழ்த்தியுள்ள உணர்ச்சிக் கவிஞர் காசி.ஆனந்தன் அவர்களே, முனைவர் க.இராமசாமி அவர்களே, புலவர் பச்சையப்பனார் அவர்களே, முனைவர் திருமாறன் அவர்களே, புலவர் செந்தலைக் கவுதமன் அவர்களே, ஓவியர் வீர.சந்தானம் அவர்களே, நிகழ்வில் அனைவரையும் வரவேற்று உரையாற்றிய விடுதலை வேந்தன் அவர்களே, தொகுப்புரை வழங்கிய மதி வாணன் அவர்களே, இந்த அரங்கத்தில் இருக்கக்கூடிய அறிவார்ந்த பெருமக்களே, புலவர் பெருமக்களே, பேராசிரியப் பெருமக்களே, இலக்கியச் செல்வர்களே, மொழிப் போராளிகளே மற்றும் தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலம் போதவில்லை என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். ஆனால், போதாத காலம் என்று சொன்னார்கள். தமிழனுக்குப் போதாத காலம் இப்பொழுது வந்து கொண்டிருக்கிறதோ என்பதற்குப் பொருளென்ன என்றுகூட நம்முடைய அருமைத் தோழர் நடராசன் அவர்களிடம் கேட்டார்கள். ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

 

மொழிப் போராளிகளே மற்றும் தோழர்களே உங்கள் எல்லோருக்கும் என் அன்பான வணக்கத்தினைத் தெரிவித் துக் கொள்கிறேன்.

காலம் போதவில்லை என்று அய்யா அவர்கள் சொன் னார்கள். ஆனால், போதாத காலம் என்று சொன்னார்கள். தமிழனுக்குப் போதாத காலம் இப்பொழுது வந்து கொண்டி ருக்கிறதோ என்பதற்குப் பொருளென்ன என்றுகூட நம் முடைய அருமைத் தோழர் நடராசன் அவர்களிடம் கேட் டார்கள். ஆனால், உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

வெறும் மொழிக் கண்ணோட்டத்தோடு பெரியார் தொண்டர்களான நாங்கள் பார்க்கவில்லை...

மறைமலையத்தை வெறும் புத்தகத் தொகுப்பாக நாங்கள் பார்க்கவில்லை. மறைமலையடிகளாருடைய தனித்தமிழ் இயக்கத்தையும் வெறும் மொழிக் கண்ணோட்டத்தோடு பெரியார் தொண்டர்களான நாங்கள் பார்க்கவில்லை, பெரியார் பார்க்கவில்லை. பின் என்ன? இது ஒரு நியாயமான கேள்வி.

இந்த மொழியின் மூலமாக நம்முடைய காலங்காலமாக இருந்துவந்த பண்பாட்டை, திராவிட இனத்தினுடைய பண்பாட்டை அழிப்பதற்கு இன்னொரு இனத்தினுடைய பண்பாடு, சமஸ்கிருதப் பண்பாடு, ஆரிய பண்பாடு உள்ளே நுழைந்து, அழித்து ஒழித்துவிடக்கூடிய அந்தக் காலகட்டத் தில்தான், நம்முடைய அடிகளார் போன்றவர்கள், கா.சு. பிள்ளை போன்றவர்கள், தன்மானப் பெரும்புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் அதையொட்டி மிகப்பெரும் அரும்புலவர்கள் எல்லாம் ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு இங்கே வந்தது என்று சொன்ன நேரத்தில்,

அதனை எதிர்ப்பதற்குத்தான் இந்தி மொழி எதிர்ப்பு - வடமொழி எதிர்ப்பு என்று தமிழ்ப் பாதுகாப்பு என்று சொன்னார்கள். மொழி ஒரு கருவி. ஆனால், அதேநேரத்தில், அந்தக் கருவி நமக்குப் போர்க் கருவியாக பயன்படவேண்டும்.  அந்தக் கருவி நம் இனத்திற்கு ஏற்படக்கூடிய அறைகூவல் களை சந்திக்கக்கூடிய கருவியாக இருக்கவேண்டும். அந்த எண்ணத்தைத்தான் நமக்கு ஊட்டினார்கள்.

ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் உடைக்க முடியும்

இந்த நூலிலுள்ள 34 தொகுதிகளில் பல இன்றைக்குத் தேவைப்படக்கூடிய உணர்வு இருக்கிறது. அதுதான் மிக முக்கியம். அரசியல் படையெடுப்பு இருக்கிறதே, அது கைக்குப் போட்ட விலங்கு போன்றது, பளிச்சென்று தெரியும். தந்தை பெரியார் கருத்து இது. பொருளாதாரப் படையெடுப்பு இருக்கிறதே, அது கால்களுக்குப் போட்ட விலங்கு. அதுவும் பளிச்சென்று தெரியும், சங்கடத்தோடு நாம் அதனை உடைக்க முயற்சிக்கலாம். ஆனால், பண்பாட்டுப் படையெடுப்பு என்பத இருக்கிறதே, தோழர்களே, அது மூளைக்குப் போட்ட விலங்கு. அது மிக ஆபத்தானது. அதனை ஈரோட்டு சம்மட்டியால் மட்டும்தான் உடைக்க முடியும். அந்தக் கருவியை மிக அருமையாகத் தந்தவர் மறைமலையடிகளார்.

இங்கே உரையாற்றியவர்களின் பேச்சுகளை நான் தனித்தனியே சொன்னால், எவ்வளவோ சொல்லலாம். இது ஒரு உணர்ச்சிக் காவியமாக இருந்தது. இது வெறும் நூல் வெளியிட்டு விழாவாக மட்டும் இல்லை. அவ்வளவு அற்புதமாக இருந்தது. பல கருத்துள்ளவர்கள் பேசினார்கள். மிக அருமையாக நம்முடைய திருமாறன் அவர்கள் சொன்னார்கள்; நம்முடைய புரட்சி ஓவியர் சந்தானம் அவர்கள் பேசியதில் நமக்கு மிகவும் மகிழ்ச்சி - அவர் உடல்நலம் தேறியிருக்கிறார் என்பதில்.

நாம் எந்தக் கருவியை எடுத்துப் போரிடவேண்டும் என்பதை, நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்

ஏனென்றால், எதிரிகள் வரும்பொழுதுதான், நமக்கு ஆக்கமும், ஊக்கமும் வரும். இல்லையெனில், நாமெல்லாம் ஓய்ந்திருப்போம்; அசந்திருப்போம். இப்பொழுது நம்மை ஓய்ந்திருக்க விடுவதில்லை நம்முடைய எதிரிகள். நாம் எந்தக் கருவியை எடுத்துப் போரிடவேண்டும் என்பதை, நம்முடைய எதிரிகள்தான் தீர்மானிக்கிறார்கள்.

இளவழகன் அவர்கள் மிக அருமையான மறைமலை யத்தினைத் தந்திருக்கிறார்கள். இது வெறும் புத்தகம் அல்ல நண்பர்களே, போர்க்கருவி. தயவு செய்து போர்க் கருவியாகப் பாருங்கள். பண்பாட்டுப் படையெடுப்பு வேகமாக, இன்னும் வேகமாக வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் காலத்தைவிட, பெரியார் இல்லை, மறைமலையடிகளார் இல்லை, கா.சு. பிள்ளை இல்லை, சோமசுந்தர பாரதியார், தமிழ்மறவர் பொன்னம்பலனார் இல்லை, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இல்லை, பேரறிஞர் அண்ணா இல்லை, பெருந்தலைவர் காமராசர் இல்லை மற்றும் உணர்ச்சிக்காகப் போராடக் கூடியவர்கள் இல்லை என்று எதிரிகள் துச்சமாகக் கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

அதன் காரணமாகத்தான் நான் நிறைய செய்திகளை சொல்லவேண்டும் என்று நினைத்தாலும், நேரமின்மை காரணத்தினால், ஓரிரு செய்திகளை சொல்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின்மீது வீண் வம்பை திணிப்பதோடு மட்டுமல்ல, நீங்கள் எங்கள் அடிமைகள்தான் என்று இன்னொருமுறை வலியுறுத்தக் கூடிய ஒரு செய்தி, ரத்தம் கொதிக்கக்கூடிய ஒரு செய்தி, ஆவேசம் வரக்கூடிய ஒரு செய்தி வந்திருக்கிறது இப்பொழுது.

‘தமிழர் மதம்’

‘தமிழர் மதம்’ என்ற நூலில், ஒரு செய்தியை மறைமலை யடிகளார் சொல்கிறார். அவரைப் போல முதுகெலும்புள்ள தமிழ்ப் புலவரை எளிதில் பார்க்க முடியாது.

அதேபோல, அவர்கள் வருமானத்திற்காகவோ, மற்றதற் காகவோ பார்த்ததில்லை. அவர்கள் துணிந்து, தெளிவாக எழுதினார்.

எந்தப் புலவருக்கு இன்றைக்கு அத்தனைத் துணிவுண்டு. புலவர்களையே தாக்கி எழுதினார். முற்காலப் புலவர் - பிற்கால புலவர் என்று.

அதனைப்பற்றி சொல்லும்பொழுது, முற்காலப் புலவர்களி டம், கற்பனை வளத்தில்கூட ஒரு நாணயம் இருந்தது. பிற் காலத்தில், நிலைகுலைய வைத்தார்கள் என்று வேதனை பட்டார், கம்பரை அதற்கு சான்றாகக் காட்டினார். இதற்கான ஆதாரத்தை நாங்கள் வைத்திருக்கிறோம். நான் ஏதோ என்னுடைய கருத்தைப் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். ‘‘மறைமலையம்’’ தொகுப்பினை நாங்கள் வெளி யிடுகிறோம் அல்லது தலைமை தாங்குகிறோம் என்றால், ஏதோ விழாவிற்கு வருகிறோம் என்பதல்ல நண்பர்களே, விடியலுக்காக நாம் தயாரிக்கக்கூடிய ஓர் அற்புதமான வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம் என்பதற்கு அடையாளம்.

‘மதம் இன்னதென்பது’

என்கிற தலைப்பில்...

மறைமலையடிகள் சொல்கிறார், ‘மதம் இன்னதென்பது’ என்கிற தலைப்பில்,

நன்றாக கவனியுங்கள், இன்றைக்கு அந்த மதம்தான் விளையாடுகிறது; அந்த மதம்தான், பொங்கல் விழாவிற்கு கட்டாய விடுமுறை வேண்டாம் என்று சொல்கிறது; அந்த மதம்தான் இன்றைக்கு முழுக்க முழுக்க ஒரு ஆரியப் பண்பாட்டை, பார்ப்பனப் பண்பாட்டை, படையெடுப்பை நம்மீது திணித்துவிடலாம் என்பதற்கு கடவுள்களையும், மதங்களையும், விழாக்களையும், பள்ளிகளையும் இன்றைக்கு மேலும் மேலும் எங்கள்மீது அழுத்திக் கொண்டிருக்கிறது. அதற்குப் பதில் சொல்கிறார், தமிழ்க்கடல் மறைமலையடிகளார் அவர்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் - இன் றைக்கும் அது தேவைப்படுகிறது.

எப்போதெல்லாம் நோய் வருகிறதோ, அப்போதெல்லாம் மருந்து தேவை!

மருந்தைக் கண்டுபிடித்தவன் மறைந்திருப்பான்; ஆனால், மருந்து எப்போதும் தேவைப்படும். எப்போதெல்லாம் நோய் வருகிறதோ, அப்போதெல்லாம் மருந்து தேவை. அந்த மருந் தைக் கண்டுபிடித்தவன் வாழவேண்டிய அவசியமில்லை. மருந்தின்மூலம், மருத்துவத்தின்மூலம், மருத்துவக் குணத்தின் மூலம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்; சாகாதவர் களாக என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இங்கே பார்க்கும்பொழுது,

‘‘மதம் என்னும் சொல், கடவுளைப்பற்றியாதல், உயிரைப் பற்றியாதல், உலகத்தைப்பற்றியாதல், ஒழுக்கத்தைப்பற்றியாதல் மக்கள் குழுவினர் கொண்ட குழுவிற்குப் பெயராய் தமிழ் நூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.’’

இப்பொழுது மதம், சமயம் என்று சொல்லுகின்ற நேரத்தில், எவ்வளவு ஆழமாக மறைமலையடிகளார் சிந்தித்திருக்கிறார் பாருங்கள்;

‘‘கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்குப் அஃதாவது இன்றைக்கு 1,700 ஆண்டுகளுக்கு முற்பட்ட நூல்களில், ‘மதம்’ என்னும் சொல், கொள்கை என்னும் பொருளில் வருதலைக் காண்கி லோம்.

புறநானூறு, பரிபாடல், பத்துப்பாட்டு முதலிய பண்டைய இலக்கியங்களில் ‘மதம்’ என்னுஞ் சொல் வலிமை - செருக்கு, அறியாமை, அழகு முதலான பொருளில் வருகிறதே அன்றி, கொள்கை என்னும் பொருளில் வரவில்லை.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதான மணி மேகலையிலுங்கூட ‘சமயம்’ என்னுஞ் சொல் வந்திருக்கிற தேயன்றி, அதற்கு ஈடாக ‘மதம்’ என்னுஞ் சொல் வரவில்லை.’’

எங்களைப் போன்றவர்களுக்கு

மதம் பிடிக்கவில்லை

எனவே, மதம் பிடிக்காதவன் தமிழன், திராவிடன். அன்றைக்கும் மதம் பிடிக்கவில்லை; இன்றைக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு மதம் பிடிக்கவில்லை. அதனால்தான், நாங்கள் மனிதர்களாக இருக்கிறோம்.

யானைக்கு மதம் பிடித்தாலே ஆபத்து; மனிதனுக்கு மதம் பிடித்தால் எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை வடக்கு காட்டிக் கொண்டிருக்கிறது. அதனுடைய தொல்லைதான், இப்பொழுது இங்கே இடக்காக தொடரலாம் என்று நினைத்துப் பார்க்கிறது.

மறைமலையடிகளார் மேலும் சொல்கிறார்,

‘‘கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பாதியில் தோன்றிய மாணிக்கவாசகப் பெருமான் அருள் செய்த திருவாசக காலத்திலிருந்துதான் ‘மதம்’ என்னுஞ் சொல், கொள்கையென்னும் பொருளில் இன்று காறும் வழங்கி வருகின்றது’’ என்று சொல்கிறார்.

மிக ஆழமான பொருள். ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு எப்படி வரும் என்பதற்கு இது மிகவும் முக்கியம்.

மேலும் அவர் கூறுகையில்,

‘‘இடைப்பட்ட காலத்தெழுந்த ‘நன்னூல்’ முதலான இலக் கண நூல்களும், ‘மதம்’ என்னுஞ் சொல்லைக் கொள்கை யென்னும் பொருளில் வழங்கி வருதல் ‘‘எழுவகை மதமே யுடம்படி மறுத்தல்’’ என்னும் நன்னூற் சூத்திரத்தால் அறியப் படும். ஆனால், பண்டைத் தமிழ் இலக்கணமான தொல் காப்பியத்தில், ‘மதம்’ என்னுஞ் சொல்லாதல் ‘சமயம்’ என்னுஞ் சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவே யில்லை. இது கொண்டு பல்வகை மதங்களும் இத்தமிழ் நாட்டிற்றோன்றுதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கும்; அங்ஙனமே மணிமேகலை காலத்திற்கு அஃதாவது 1090 ஆண்டுகளுக்கு முற்பட்ட எந்தத் தமிழ் இலக்கியத்திலுஞ் ‘சமயம்’, ‘மதம்’ என்னுஞ் சொற்கள் வழங்காமையை உற்றுநோக்குங்கால், 1090 ஆண்டுகளுக்குமுன்னே, இத்தென்றமிழ் நாட்டின் கண்ணே, பலவகைச் சமயப் பகுப்புகள், பல்வகை  மத வேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கா நிற்கும்.’’

நாங்கள் மதம் பிடிக்காதவர்கள் என்று சொல்லும்பொழுது, நீங்கள் எல்லாம் சிரித்தீர்கள் நீங்கள் எல்லாம். அதனைத்தானே அடிகளார் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.

இன்றைக்கு அதுதானே நமக்குப் பல தொல்லைகளை உண்டாக்கிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, இங்கே நம்முடைய தாயுமானவர் இருக்கிறார். அவருடைய தந்தை யார் அவர்கள் எழுதிய, மறைமலையடிகளாருடைய வாழ்க்கை வரலாறு. பல்லாவர வாழ்க்கை - மறைமலையடிகள் வரலாறு - இதில் ஒரு பகுதி.

‘பெரியார் தொண்டன்’ என்ற

ஒரே தகுதி போதும்

இந்த நூல் வெளியிட்டு விழாவில் பங்கேற்பதற்கு நான் எந்த அளவிற்குத் தகுதி உள்ளவன் என்று நினைத்த நேரத்தில், ‘பெரியார் தொண்டன்’ என்ற ஒரே தகுதி போதும் என்ற அந்த உணர்வைப் பெறுவதற்கு, இந்த புத்தகத்தில் ஒரு செய்தி,

‘‘வேற்றுமையில் ஒற்றுமை - அடிகள் கொண்ட மகிழ்ச்சி’’ என்ற அந்தப் பகுதியை பார்க்கவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றில் தன்னுடைய நேரத்தை வீணடிக்கிறார்கள்.

இதுபோன்ற மான உணர்ச்சி, அறிவு உணர்ச்சி, இன உணர்ச்சியைப் பெறவேண்டிய அளவிற்கு நிறைய செய்தி களைப் பார்க்கவேண்டும்.

தந்தை பெரியாரைப்பற்றி மறைமலையடிகளார்!

அடிகளார் சொல்கிறார், இந்தப் பகுதியைப் பற்றி, அவருடைய தந்தையார் என்ன கருத்தைச் சொன்னார் என்பதை, அருமை அய்யா மறை திருநாவுக்கரசர் அவர்கள் சொல்கிறார்கள்:

‘‘கடவுள், சமயம், கோவில், வழிபாடு, சமய நூல்களில் ஆழ்ந்த ஆர்வம் கொண்ட சிவத்தொண்டராம், அடிகள், தாம் பரப்ப விரும்பிய தமிழ் இன நாகரிக மொழி சீர்திருத்த கருத்துகள் யாவற்றையும் ஈ.வெ.ரா. பரப்பி வருவது கண்டு ஆனந்த மகிழ்ச்சி கொண்டார்.

யான் ஆராய்ந்து எழுதி, அரிதே அச்சிட்டு, வெளிப்படுத்தும் கோட்பாடுகள் யாவும், கலைஞருக்கும், புலவருக்கும், பொதுமக்களில் சிறந்தார் சிலருக்குமே பயன் பெறுகின்றன. ஆனால், ஈ.வெ.ரா.வின் கிளர்ச்சியோ, சிற்றூர், பேரூர்களில் எல்லாம் பரவி, பயன் விளைக்கின்றது. இதனால், எனது நோக்கங்களும், விருப்பங்களும் அவராலே எளிதில் எங்கும் பரவுகின்றன.

என் நோக்கம், எனக்கு வருத்தத்தருதலின்றி, எளிதே முற்றிடு கின்றன. ஆதலால், ஈ.வெ.ரா. நெடிது இனிது வாழ்க - அவர் முயற்சி வெல்க என்று தம்மை காண வருகின்றவர்களிடம் எல்லாம் அடிகளார் ஈ.வெ.ரா. அவர்களை வாயார வாழ்த்திக் கொண்டிருந்தார் என்று அவருடைய தந்தையார் அற்புதமாக எழுதியிருக்கின்றார்.

எனவே, நூற்றாண்டு திராவிட இயக்கம் - தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு இரண்டிற்கும் சம்மந்தம் இல்லை என்று சில பேர் கோடு போடுகிறார்கள்.

இன்னும் தமிழன் என்ற பெயராலே, பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொண்டு, தமிழன் என்று வியாக்கியானம் செய்து, அதன்மூலமாக இங்கே பல கலவரங்களை உருவாக்கலாம் என்று நினைக்கிறார்கள், இங்கே நண்பர்கள் சொல்லியது போல.

அடிகளார் எழுதியிருக்கிறார். ஒரு தனித்தலைப்பில், ‘‘பார்ப்பனர் தமிழரல்லர்!’’

எத்தனைப் புலவருக்கு இன்றைக்கு அந்தத் துணிச்சல் இருக்கும்? அடிகளார் அவர்கள் வருமானத்தைக் கரு தினாரா? அல்லது புகழைக் கருதினார்களா?

இன்றைக்கும் பிரச்சார கருவிகள், பரப்புக் கருவிகள் அவர்களுடைய கைகளில்தானே இருக்கிறது. அதனால் தானே, எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நினைக் கின்றார்கள்.

பார்ப்பனத் தொல்லைகளிலிருந்து பெரியார் ஒருவரால்தான் நம்மைக் காப்பாற்ற முடியும்!

பெரியார் அவர்கள் கூட்டங்களில் பேசும்பொழுது ஒன்றைச் சொல்வார்,

ஒருமுறை மறைமலையடிகளாரிடம் புலவர்கள் எல்லாம் சென்று, நம்மையெல்லாம் தாக்கி எழுதிக் கொண்டிருக்கிறாரே பெரியார்; நீங்கள் சும்மா இருக்கிறீர்களே! முதலில் நம்மைப் பயன்படுத்தி ராமாயண ஆபாசங்களையெல்லாவற்றையும் வெளிப்படுத்தினார். வைஷ்ண நூல்களைப்பற்றி எழுதினார். பெரிய புராண ஆராய்ச்சிபற்றியும் வந்துவிட்டாரே. நாம் சும்மா இருக்க முடியுமா? என்றார்கள்.

இதற்கு அடிகளார் பதில் சொன்னார்,

என்ன நீங்க சொல்கிறீர்கள்; சைவத்தை நாம் எப்போது வேண்டுமானாலும் காப்பாற்றிக் கொள்ளலாம்; ஆனால், பார்ப்பனத் தொல்லைகளிலிருந்து அவர் ஒருவரால்தான் நம்மைக் காப்பாற்ற முடியும். அவரை விட்டால் வேறு யாராலும் அது முடியாது என்றாராம்.

இன்றைக்கும் அதுதானே உண்மை? இன்றைக்கும் அதனுடைய தத்துவங்கள்தானே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகவே, அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நம்முடைய செந்தலை புலவர் கவுதமன் அவர்கள் இங்கே அழகாகச் சொன்னார்.

அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, 1967 ஆம் ஆண்டிற்கு முன், எஸ்.எஸ்.எல்.சி.  பாடத் திட்டம் வகுக்கப்பட்டு இருக்கிறது. ஆட்சி மாறுதலுக்கும், அதற்கும் சம்மந்தமில்லை.

மறைமலையடிகளாரின் பாடத்தை எடுக்கவேண்டும் என்றார்கள்!

சமஸ்கிருதம் - வடமொழியைப்பற்றி ஒரு பாடம். உடனே அந்தப் பாடத்தைப்பற்றி மறைமலையடிகளார் பாடத்தை எடுக்கவேண்டும் என்று கூப்பாடு போட்டனர்.

மறைமலையடிகள் அந்நூலில் எழுதினார்,

சமஸ்கிருதம் படித்தால், வயிற்றுக் கோளாறு வரும்; மூச்சுக் கோளாறு வரும் என்று.

அப்பொழுதுதான் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அண்ணா அவர்கள் பார்த்து வைத்த பாடத் திட்டமல்ல அது.

அதில் ஒன்று, நம்முடைய மறைமலையடிகளாருடைய பாடத்தை அந்தப் பாடத் திட்டத்தில் வைத்திருந்தார்கள்.

அதனை எடுக்கவேண்டும் என்று ஆங்கிலப் பத்திரி கைகள் போன்ற நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.

பாடத் திட்டத்தை எடுக்கக்கூடாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்!

உடனே தந்தை பெரியாரும், விடுதலை நாளிதழும்தான் முன்னே நின்றார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? அந்த மொழியைப் படித்தவர், அந்த மொழியினுடைய தத்துவத்தை எடுத்துச் சொல்கிறார் என்றெல்லாம் வேகமாக சொன்னதோடு மட்டுமல்ல, அந்தப் பாடத் திட்டத்தை அரசாங்கம் எடுக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார்.

அண்ணா அவர்கள் எப்பொழுதும் நீக்குப் போக்கான ஒரு நல்ல முயற்சியை செய்யக்கூடியவர். அவர் என்ன செய்தார் தெரியுமா? டாக்டர் மு.வ. அவர்களின் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தப் பாடத்திட்டத்தில் தவறு இருந்தால் அதனை எடுத்துவிடலாம் என்று சொல்லி, ஆய்வு செய்தார்.

அந்தப் பாடத்திட்டத்தில் தவறு இல்லை என்று அந்த ஆய்வுக் குழுவினர் சொல்லியதும், தவறில்லை, அந்தப் பாடத் திட்டம் இருக்கலாம் என்று முடிவு செய்து அரசு சார்பில் அறிவித்தார்கள்.

அறிவுரைக் கொத்து

அந்தக் காலத்தில், அறிவுரைக் கொத்து சென்னைப் பல்கலைக் கழகத்தில், துணைப் பாட நூலாக இருந்த நேரத்தில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்பட்டது.

எனவேதான், மிகப்பெரிய அளவிற்கு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்ப்பதற்கு அவைகள் ஆயுதங்கள். மொழியை அதற்குத்தான் பயன்படுத்தினார்கள்.

தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு

தமிழே ஞானத்தின் ஞாலப்பண்பு!

தமிழர்கள் பிரிந்திருக்கக் கூடாது

அந்த உணர்வு, அந்த எண்ணம் இருக்கவேண்டும். அதன்மூலமாக நம்முடைய உணர்வுகள் கூனிக் குறுகி, நம்மை சூத்திரனாக்கி, இங்கே சொன்னார்கள் அல்லவா!

எனவே, ஆழமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது -

ஜாதியால் தமிழர்கள் பிரிந்திருக்கக் கூடாது;

மதங்களால் தமிழர்கள் பிரிந்திருக்கக் கூடாது;

கட்சிகளால்கூட தமிழர்கள் பிரிந்திருக்கக் கூடாது என்பதுதான் மிக முக்கியம்.

நாம் இப்பொழுதுதான் கொஞ்சம் தலைதூக்குகிறோம். ஒரு நூற்றாண்டுதான் ஆகியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக இந்தப் படையெடுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழைப்பற்றி நாம் இவ்வளவு பேசுகிறோம். இன்னமும் கோவிலில் தமிழ் உள்ளே போக முடியவில்லை. ‘‘திருவாச கத்திற்கு உருகார்; ஒரு வாசகத்திற்கும் உருகார்’’ என்பார்கள். அதேநேரத்தில், கோவில்களில் தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும் என்றார்கள்; நாங்கள் என்னய்யா அது உம் என்று கேட்டவுடன், அந்த உம் காணாமல் போனது, தி.மு.க. ஆட்சியில்.

தமிழுக்கு செம்மொழி தகுதி வந்திருக்கிறது கலைஞர் அவர்கள் அரும்பாடுபட்டதன் காரணமாக. நமக்குக் கட்சிக் கண்ணோட்டமே தேவையில்லை.

இன எதிரிகளைப் பாருங்கள்; மற்றவர்களைப் பாருங்கள். பெரியார் அவர்கள், செவ்வாடை, காவியாடை அணிந்த துறவிகளையெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஒன்று சேர்த்தார்கள் என்றால், நம் இலக்கு என்ன என்பதுதான் முக்கியம்.

எது நம்மை சேர்க்கிறது

என்று விவாதம் கூடாது!

மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறோம் -

எது நம்மை இணைக்கிறதோ அதன்கீழ் நாம் ஒன்றாக வேண்டும்;

எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனை நாம் அலட்சியப் படுத்தவேண்டும்.

இப்பொழுது நமக்குள்ளே எது நம்மை சேர்க்கிறது என்று விவாதம் செய்து கொண்டிருக்கக்கூடாது.

எனவே, பொது எதிரி - மிகப்பெரிய அளவிற்கு ஆபத்தாக உருவாகிக் கொண்டிருக்கிறது. பொங்கல் விழாகூட தமிழ் நாட்டில் விடுமுறையாகக் கொண்டாடக்கூடாதாம்!

கிளர்ச்சிக் களமாக தமிழ்நாடு மாறும் - மாறவேண்டும்

எது எதற்கோ விடுமுறை - உப்புசப்பில்லாதவற்றிற் கெல்லாம் விடுமுறை. ஆனால், தமிழனுக்குரிய பண்பாட்டு விழாவாக இருக்கக்கூடிய ஒரே விழா பொங்கல் விழாவிற்கு விடுமுறை இல்லை என்று சொன்னால், அதனைத் திரும்பப் பெறும் வரையில், கிளர்ச்சிக் களமாக தமிழ்நாடு மாறும் - மாறவேண்டும் - மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்களோ இல்லையோ -இந்தக் கருத்தில் எல்லோரையும் ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என்று சொல்லி முடிக்கிறேன்.

இந்த விழாவினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்த இளவழகனார் அவர்களுக்கும், கலந்துகொண்டு கருத்துகளை எடுத்துக்கூறிய அருமை நண்பர் ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் முனைவர் நடராசன் அவர்களுக்கும், ஏனைய புலவர் பெருமக்களுக்கும், அறிஞர் பெருமக்களுக்கும் நன்றி! நன்றி!!

வீண் வம்பு திணிக்கப்பட்டு இருக்கிறது - அந்த அறைகூவலை ஏற்போம்!

இது ஒரு நல்ல தொடக்கம் - வீண் வம்பு திணிக்கப்பட்டு இருக்கிறது - அந்த அறைகூவலை ஏற்போம்! ஏற்போம்!! ஏற்போம்!!! என்று கூறி முடிக்கிறேன்.

வணக்கம், நன்றி!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner