எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜன.10-    தமிழனுக்குரிய பண்பாட்டு விழாவாக இருக்கக்கூடிய ஒரே விழா பொங்கல் விழாவிற்கு விடு முறை இல்லை என்று சொன்னால், அதனைத் திரும்பப் பெறும் வரையில், அத்துணைக் கிளர்ச்சிக் களமாக தமிழ்நாடு மாறும் - மாறவேண்டும் - மற்றவர்கள் முயற்சி எடுக்கிறார்களோ இல்லையோ -இந்தக் கருத்தில் எல்லோரையும் ஒன்று சேர்க்க நாங்கள் இருக்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மத்திய அரசு ஒரு அறிவிப்பை

வெளியிட்டிருக்கிறது

இங்கே உள்ளே எத்தனை பேருக்கு அந்த செய்தி தெரியும் என்று தெரியவில்லை. அது என்ன செய்தி தெரியுமா?

மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது என்னவென்றால், பொங்கல் விழா விடுமுறை கட்டாயமல்ல. அதை தேசிய விடுமுறைப் பட்டியலிருந்து எடுத்துவிட்டோம் என்கிற அறிவிப்பு சற்று நேரத்திற்கு முன் வந்திருக்கிறது.

இது எதைக் காட்டுகிறது நண்பர்களே? தமிழன் தூங்குகிறானா? விழித்திருக்கிறானா? தூங்கியவன் தொடையில் கயிறு திரிக்கலாம் - தமிழ்நாட்டில் யாரும் கேட்கமாட்டார்கள் - அடிமைகள் வாழுகின்ற பிரதேசம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன் னால், முதல் குரல் இந்தக் கூட்டத்திலிருந்து எழுகிறது - அதனை தெளிவாக நினைத்துக் கொள்ளுங்கள்.

பொங்கல் விடுமுறை கட்டாயமல்ல என்பதை நீங்கள் திரும்பப் பெறும் வரையில், தமிழ்நாட்டில் போராட்டங்கள் நாளைமுதல் வெடித்துக் கிளம்பும்.

தமிழர்கள் ஈனப் பிறவிகள் அல்ல; எங்கள் உடலில் ஓடுவது ரத்தம் - சேறல்ல. அதனை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

உங்களுடைய ஆட்சியின் வாழ்வு

எவ்வளவு நாள்?

தமிழ் மானம் என்று சொன்னார்களே, அதற்கு என்ன பொருள்? சொன்னவர்களுக்கு ஒரு எல்லை இருக்கலாம்; எங்களுக்கு எல்லை இல்லை. நெருக்கடி காலத்தையே பார்த்தவர்கள் நாங்கள். நீங்களும் நெருக்கடியில் இருந்து, எங்களை நெருக்கடியில் தள்ளலாம் என்று நினைத்தால், உங்களுடைய ஆட்சியின் வாழ்வு எவ்வளவு நாள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இது என்ன கொடுமை! தயவு செய்து நீங்கள் எண்ணிப் பாருங்கள். மதம் என்ற பெயராலே, இந்துத்துவா என்ற பெயராலே - இங்கே அழகாக சொன்னார் முனைவர் திருமாறன் அவர்கள்.

எவ்வளவு பெரிய கொடுமை இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தீபாவளிக்கு விடுமுறை - அரக்கர் கள் அழித்தார்கள் என்பதற்கான விடுமுறை. இன்னும் கேட்டால், பூணூல் போடுவதற்கு விடுமுறை. பொங்கல் திருநாள் ஒன்றுதானே தமிழர்களுக்கு இருக்கின்ற மதச்சார்பற்ற திருவிழா - திராவிடர் திருவிழா - தமிழர் திருநாள் - அறுவடை திருநாள்- உலகம் முழுவதும் அவன் உழைக்கின்ற அந்தத் திருவிழா.

அந்தப் பொங்கலுக்கு விடுமுறை தேவையில்லை என்றால், கிள்ளிப் பார்க்கிறார்களா? சுரணை இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கிறார்களா?

பதவியை துச்சமென்று நினைக்கின்ற

நூறு பேர் போதும்

நாமெல்லாம் பிரிந்து கிடக்கின்றோம் என்கிற எண்ணமா? கட்சிகளால் பிரிந்திருப்பார்கள் அல்லது பதவி எலும்புத் துண்டுகளை வீசினால், இவர்கள் கவ்விக் கொண்டு ஓடுவார்கள் என்கிற எண்ணமா? பதவியைத் துச்சமென்று நினைக்கின்ற நூறு பேர் போதும் இதனை மாற்றுவதற்கு. கோடிக்கணக்கான பேர் தேவையில்லை.

எங்கள் மத்தியில், இங்கே இருக்கின்றவர்கள் அத் துணை பேரும் ஒரே கருத்துள்ளவர்கள் அல்ல. ஆனால், நாங்கள் எல்லோரும் பெரியார் சொன்னதில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டவர்கள். அது என்னவென்று சொன்னால், தந்தை பெரியாருடைய அறிவுரை கால மெல்லாம் தாண்டிய அறிவுரை, அனுபவத்தால் கனிந்த அறிவுரை - அவர் சொன்னார்,

எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத்துங்கள்

பொது அமைப்பு வருகின்ற நேரத்தில், போராட்டக் களத்தில் நாம் நிற்கவேண்டிய அவசியம் வரும்பொழுது,

எது நம்மை இணைக்கிறதோ அதனை அகலப்படுத் துங்கள்; எது நம்மைப் பிரிக்கிறதோ, அதனை அலட்சியப் படுத்துங்கள்.

இதுதான் அவர்கள் காட்டிய வழி.

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு,

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்னார்களே, அதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் வந்தாகவேண்டும்.

‘‘மறைமலையம்’’ சரியான நேரத்தில் வெளிவந்திருக்கிறது. எனவே, இந்தக் குரல், இன்றைக்கு இந்த மேடையிலிருந்துதான் முதல் குரலாக ஒலிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் ஒலிக்கும். நாங்கள் சோதாக்கள் அல்ல; சோம்பேறிகள் அல்ல; சுக வாழ்வு வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல. சிறைச்சாலைதான் எங்களுக்கு வாழ்க்கை என்றால், அதைவிட  எங்கள் கொள்கைக்காக நாங்கள் உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாங்கள் தயாராக இருப்போம். அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

வருமானமா முக்கியம்? தமிழ் மானம், தன் மானம், தமிழர் மானம் என்று சொல்கிறபொழுது, அந்தத் தமிழ் மானம், தன்மானம், இனமானம் இன்றைக்கு அறைகூவலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்ற நேரத்தில், அதனை சகித்துக் கொண்டிருக்க முடியுமா?

இனத்தினுடைய மீட்சியைப்பற்றி கவலைப்படுகின்ற இனம்

ஆட்சிகள் ஒரு பக்கத்தில் - நாங்கள் ஆட்சிகளைப் பற்றி கவலைப்படுவதைவிட - ஆட்சியை வைத்து ஆட்டிப் பார்க்கலாம், விளையாடிப் பார்க்கலாம் என்று நினைக்கலாம்; ஆனால், நாம் ஆட்சியைப்பற்றி கவலைப்படுவதைவிட, இன்னும் ஒரு படி மேலேபோய், மீட்சியைப்பற்றி - இந்த இனத்தினுடைய மீட்சியைப்பற்றி - இந்த இனத்தினுடைய மான வாழ்வினுடைய மீட்சியைப்பற்றி கவலைப்படுகின்ற இனம்.

மறைமலையடிகளாருடைய நூல் இன்றைக்குத் தெளிவாக வெளிவந்திருக்கிறது. அவர் நமக்கு வழிகாட்டுகிறார்; அவர் நமக்கு ஆணையிடுகிறார். தந்தை பெரியாருடைய கருத்துகள் எவ்வளவோ இருக்கின்றன.

(மறைமலை அடிகளாரின் நூல் தொகுப்பான ‘‘மறைமலையம்‘’ வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர், சென்னை, 9.1.2017)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner