எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 69 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் ஜாதிக்காரர்களால் வழக்குத் தொடுக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. அதனுடைய கடைசி கட்ட விசாரணை வரும் நவம்பரில் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் திறந்த நீதிமன்றத்தில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு பற்றி தேவையில்லாமல் கேள்வியை எழுப்பியுள்ளார். பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு குறித்தும் வினாக்களைத் தொடுத்துள்ளார்.

இந்த நிலையில்தான் திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் கடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டம் (29.8.2018) கூட்டப்பட்டு அதில் முக்கிய தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் வருமாறு:

தீர்மானம்: 1 (அ)

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76 ஆம் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடை முறையில் செயலாக்கம் பெற்று வருகிறது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள் ளுமாறு தமிழ்நாடு அரசினை இந்தக் கலந்துரையாடல் கூட்டம் வலியுறுத்துகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீடு - 69 சதவிகித இட ஒதுக்கீடு இவற்றைப் பாதுகாத்திட இந்திய அரசமைப்புச் சட்டம் 31-சியின்கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறை வேற்றம் - இவ்விரண்டிலும் முறையே முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர் களுக்கும் முக்கிய பங்கு இருப்பதால், அ.இ.அ.தி.மு.க. அரசு - உச்சநீதி மன்றத்தில் நடைபெறும் இவ்வழக்கில் கூடுதல் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயல் படவேண்டிய கடமை உணர்வு கூடுதலாக இருக்கிறது என்பதையும் இக்கலந்துரையாடல் கூட்டம் சுட்டிக்காட்டுகிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் திணிக்கப் பட்டுள்ள கிரிமீலேயரையே நீக்கவேண்டும் என்று சமூகநீதியாளர்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில், தாழ்த்தப் பட்டவர்களுக்கும் கிரிமீலேயர் தேவை என்ற பொருளிலும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்திய அரச மைப்புச் சட்டம் 77 ஆம் திருத்தம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்தும் உச்சநீதிமன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பியுள்ளதானது - சமூகநீதி மீதான பெரும் அச்சுறுத்தலேயாகும். இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உரிய அளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுப்பது, டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது உள்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம்: 1 (ஆ)

முதுநிலை மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் உள்ள (2018-19) 10,449 இடங்களில் 205 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நட வடிக்கை எடுத்திடவேண்டும்.

தீர்மானம்: 1 (இ)

மேற்கண்ட கருத்துகளை மய்யப்படுத்தி, நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், தேவையான கிளர்ச்சி களையும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

நீதித் துறையிலும் இடஒதுக்கீடு இல்லாததாலும், பெரும்பாலும் உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் உயர் ஜாதிக்காரர்களே ஆதிக்க நங்கூரம் பாய்ச்சி இருப்பதால், சமூக நீதி சிந்தனையின்றி இப்படியெல்லாம் அதிகப்படியான வார்த்தைப் பிரயோகங்களைச் செய்கின்றனர்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தி வந்திருக்கிறது - வருகிறது.

மத்திய சட்ட அமைச்சராகவிருந்த சங்கரானந்து அவர்களை சென்னையில் நேரில் சந்தித்து, இந்த வகையில் அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்  கோரிக்கை மனு ஒன்றினை எழுத்துப் பூர்வமாக அளித்ததுண்டே. ('விடுதலை' 22.9.1988).

1999இல் நடந்த ஒரு நிகழ்ச்சியை இந்த இடத்தில் நினைவூட்டுவது பொருத்தமானதாகும்.

அப்பொழுது குடியரசு தலைவராக இருந்தவர் கே.ஆர். நாராயணன் அவர்கள். உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த நான்கு நீதிபதிகளுக்கான கோப்பு - குடியரசு தலைவர் என்ற முறையில் அவரிடம் சென்றது. அந்தக் கோப்பில் அவர் எழுதிய கருத்து மிகவும் முக்கியமானது.

"மக்கள் தொகையில் 25 விழுக்காடு தாழ்த்தப்பட்டவர்களும், பழங்குடியினரும் உள்ளனர். அவர்களுக்கும், பெண்களுக்கும் அரசி யல் சட்டத்தின்படியும் சமூகநீதிக் கொள்கைக்கு ஏற்பவும் உரிய பிரதி நிதித்துவம் அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதிருப்பது அல்லது ஒட்டு மொத்த மாகப் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பது நியாயமாகாது" என்று குடியரசு தலைவர் அந்தக் கோப்பில் எழுதினார்.

அப்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.எஸ். ஆனந்த் (பார்ப்பனர்) "இது போன்ற பதவிகளில் தகுதி, திறமைதான் முக்கியம்" என்று எழுதினார் என்றால் அதன் பொருள் என்ன?

அதே நேரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கவிருந்த (19.5.2013) ஜஸ்டீஸ் திரு. பி.சதாசிவம் அவர்கள்ஆங்கில ஏடு ஒன்றுக்கு பேட்டியளிக்கும்பொழுது சொன்ன கருத்தென்ன?

"உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி நியமனத்தில் இடஒதுக்கீடு அவசியம்" என்று வலியுறுத்தினாரே; காரணம் சமூகநீதி என்னும் பயிர் செழித்து வளர்ந்த தந்தை பெரியார் பிறந்த மண்ணிலிருந்து சென்றவர் அவர்.

உயர் அதிகார நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு அவசியம் தேவைப்படுகிறது.  இதனை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது (16.8.2018)  குறிப்பிடத்தக்கது. வரும் நவம்பரில் டில்லியில் இது குறித்துக் கருத்தரங்கம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்   அறிவித்துள்ளார்.

நமது பயணங்கள் தொடரும்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner