எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்மையில், அமெரிக்காவின் மாமனிதர்களில் ஒருவரான ஜான்மெக்கெயின்  (John Mccain) என்ற ரிப்பப்ளிக்கன் கட்சியின் நீண்ட கால செனட் உறுப்பினர் (நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்) எழுதிய  'The Restless Wave' - ஓய்வில்லாத அலைகள் (அ) அலைகள் ஓய்வதில்லை - எப்படி வேண்டுமானாலும் தமிழ்ப்படுத்திக் கொள்ளக் கூடிய ஒரு வரலாற்று வாழ்க்கைக் குறிப்பு நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

இவருடன் இணைந்து 'மார்க் சால்ட்டர்' (Mark Salter) எழுதியுள்ள இந்நூலில் பொங்கும் மனிதம் ஏராளம். நல்ல மனிதர்கள் வாழ்வு கொடும்நோயால் பறிக்கப்பட்டு விடுவது, தந்தை பெரியார் அவர்கள் கூறிய சொற்றொடரைத் தான் நினைவூட்டுகிறது! - "இயற்கையின் கோணல் புத்தி" என்றார்.

அண்மையில் அவர் மறைந்தார்; இராணுவ மரியாதையுடன் அவர் புதைக்கப்பட்டார்; புற்று நோயில் அவதிப்பட்ட நிலையிலேயே இந்த நூலை மார்க் சால்ட்டரின் உதவியுடன் எழுதி இவ்வாண்டின் துவக்கத்தில் வெளியிட்டார்! இவர் ரிப்பப்ளிக்கன் கட்சி சார்பில் 2008இல் குடியரசுத் தலைவர் தேர்தலில் பேரக் ஒபாமாவை எதிர்த்து நின்று தோற்றுப் போனார்.

பழைய குடியரசுத் தலைவர்கள் (ஓய்வு பெற்ற வர்கள்) அத்தனைப் பேரும் வந்து இவருக்கு இறுதி மரியாதை செய்து, அவரது தொண்டறத்தைப் பாராட் டினர் - கட்சிகளை மறந்து. தனது நினைவலைகளை இந்த தனது வாழ்க்கைக் குறிப்புகளுடன் இணைத்து, மிகவும் உருக்கமாக எழுதியுள்ளார்.

புத்தக அட்டையின் முகப்பிலேயே  "Good Times, Just Causes, Great Fights, and Other Appreciations" என்ற சொற்றொடர்களை இணைத்து - புதுமையான அறிமுகத் தலைப்பால் "நல்ல வாய்ப்பான நேரங்கள், நியாயமான காரணங்கள், சிறந்த போராட்டங்கள் மற்றும் பலவகையான பாராட்டுகள்" - இப்படிப்பட்ட அம்சங்களைக் கொண்டது இந்நூல் என்று முகப்பில் கூறி வாசகர்களை சுண்டியிழுத்துள்ளனர்!

இந்நூலின் முகவுரையில் மாமனிதர் ஜான் மெக்கெயின் கூறுகிறார்:

"இன்னும் எவ்வளவு காலம் இங்கு நான் வாழ்வேன் என்பது எனக்குத் தெரியாது; அடுத்த ஒரு 5 ஆண்டு காலம் வாழக் கூடும் -  காரணம் புற்று நோய் தடுப்பு  அழிப்பு  ஆய்வாளர்களின் சிகிச்சை வெற்றியில் அது எந்த அளவு சாத்தியப்படுமோ என்று எனக்குத் தெரியாது. ஏன் ஒரு வேளை நீங்கள் இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கு முன்பேகூட நான் இறந்து போகவும் கூடும். எனது உடல் நிலை - எதுவும் அறுதியிட்டு உறுதியாகக் கூற முடியாத நிலை.   நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்.

ஆனால், அப்படி எனக்கு முடிவு ஏற்படுமுன் என்முன்னே சில முக்கியப் பணிகள் காத்திருக்கின்றன. அவற்றை முடிக்க வேண்டுமே என்பது தான் அது. சிலரை நான் சந்தித்து  கருத்துக்களை அவர்களிடம் பேச வேண்டும். எனவே சக அமெரிக்க மக்களிடம் நான் இன்னும் சில செய்திகளைக் கூறியாக வேண்டும்" - இப்படி உருக்கமாகக் கூறுகிறார்!

இராணுவத்தில், கப்பற்படையில் பணிபுரிந்து தேச சேவை செய்து, பிறகு அரசியலுக்கு வந்த இந்த செனட்டர் அமெரிக்காவின் அபூர்வ மாமனிதர்களில் ஒருவர்.

(நாளை தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner