எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சுகதியோ தொராட்

1.9.2018 அன்றைய தொடர்ச்சி....

மாநிலங்களின் அதிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன

மாநிலப் பல்கலைக் கழகங்களையும், கல்லூரி களையும் உருவாக்கும் மாநில அரசுகளின் அதிகாரமும் இந்த சட்டத்தால் குறைக்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியமான கட்டளையே, ஒருங்கிணைப்பது, முடிவெடுப்பது மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தைப் பேணவேண்டும் என்பதுதான். தரத்தையும், திறனையும் பேணுவதற்கான விதிகளை உருவாக்கும்போது, அந்த விதி மாநில அதிகார எல்லையை ஆக்கிரமிக்காமல் இருக்கிறதா என்பதை எப்போதும் பல்கலைக் கழக மான்யக் குழு உறுதிப் படுத்திக் கொள்ளும். பட்டங்கள் அளிப்பது, பல்கலைக் கழகத்துடன் இணைப்பது ஆகியவற்றுக்கு மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரம் இந்த சட்ட விதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பட்டமோ, பட்டயமோ வழங்குவதற்கான  பாடவகுப்புகளைத் தொடங்குவதற்கு முன் உயர்கல்வி ஆணையத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்று இந்த புதிய ஆணைய சட்டம் தெரிவிக்கிறது. இந்த அதிகாரம் இப்போது மாநில அரசுகள் மற்றும் மாநிலப் பல்கலைக் கழகங்களிடம் உள்ளது. அது போலவே, தற்போது மாநிலங்களிடம் இருக்கும், புதியதாகத் துவங்கப்படும் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக இணைப்பு வழங்கும் அதிகாரம், இனி உயர்கல்வி ஆணையத்துக்கு மட்டுமே இருக்கும். தற்போதுள்ள நடைமுறைப்படி புதிய கல்லூரியில்  கற்பிக்கப்படும் பாடம் பற்றிய செய்தியை  பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு சாதாரணமாக தெரிவித்துவிட்டு, 2 எப் என்றழைக்கப்படும் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டால் போதுமானது. அதன் பின் பாடம் கற்பிக்கும் பணியைத் தொடங்கலாம். முதன் முதலாக பாட திட்டத்தைக் கற்பிக்கத் தொடங்கவோ அல்லது பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப்படுவதற்கோ,  வேறு எந்த அனுமதியையும் அவர்கள் பெறத் தேவையில்லை. அவர்களுக்கு நிதிஉதவி தேவைப்படும்போது மட்டுமே பல்கலைக் கழக மான்யக் குழுவை அணுகவேண்டும்.

பல மாநிலங்களிடையேயும்  மிக அதிகமான வேறுபாடுகள் நிலவும்போது, வேறுபாடின்றி பொதுவான நிபந்தனைகளைத் திணிப்பது, உயர்கல்வி நிறுவனங் களின், குறிப்பாக மூலை முடுக்குப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தும். நமது நாட்டில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை நான்கில் ஒரு பங்கு என்ற அளவில் மட்டுமே உள்ள நிலையில், இவ்வாறு செய்வது கல்வி நிறுவனங்களை செயலிழக்கச் செய்வதுடன், உயர்கல்வியின் வளர்ச்சியையும் பாதிக் கும். நிபந்தனைகளை பல்கலைக் கழக மான்யக் குழுவே நிர்ணயித்து, அவற்றை நடைமுறைப்படுத்தும் பணியை, அவர்களது குறிப்பிட்ட சூழ்நிலையில் நடை முறைப் படுத்த மாநிலங்களுக்கே விட்டுவிட்டு, உயர்கல்வி ஆணையத்துக்கு தெரிவிப்பதே முறையானதாக இருக்கும் என்று தோன்றுகிறது.

மேலாண்மையின் குறுக்கீடுகள் இன்றி, சுயகட்டுப் பாட்டு அமைப்புகளாக  கல்வி நிறுவனங்களை ஆக் குவது என்று கல்வி ஆணைய சட்டம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டு வெளி யிடப்பட்ட பிறகே அது பற்றிய உண்மையான நிலவரங்கள் தெளிவாகும். ஆனால், கடந்த 4 ஆண்டு கால பல்கலைக் கழக மான்யக் குழுவின் அனுபவத்தை வைத்துப் பார்த்தால்,   பாடதிட்ட தன்னாட்சியை கல்வி நிறுவனங்கள் அனுபவிக்க இயலுமா என்பதே சந்தேகத்திற்கு இடமாக இருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சில துறைகளில் கல்வி பாட திட்ட விதிகளை பல்கலைக் கழக மான்யக் குழு பிறப்பிக்கும். ஆனால் பல கல்வி பாட திட்ட விதிகளை நிர்ணயித்துவிட்டு கல்வி  நிறுவனங் களின் சூழ்நிலைக்கேற்ப அவற்றைப் பின்பற்றுவது கல்வி நிறுவனங்களுக்கே விட்டுவிடப்படும். கடந்த 4 ஆண்டு காலமாக,  பாடதிட்டம், மாணவர் ஆசிரியர் விகிதம், மற்றும் பல அம்சங்களைப் பற்றி மேற்கொள்ளப் பட்ட மிக நுணுக்கமான மேலாண்மை கல்வி நிறுவனங் களின் தன்னாட்சியைக் குறைத்ததுடன், கல்வியின் தரத்தையும் பாதிக்க செய்தது.

உயர்கல்வி நிருவாகப் பணி நியமனங்களில் வெளிப்படையான- ஒரு தலை சார்பற்ற-நடுநிலை வகிக்கும் நடைமுறை தேவை

சிக்கலான தலைமைப் பொறுப்புகளுக்கு நியம னங்கள் செய்வதற்கான தர அளவு கோல்களை கல்வி ஆணையம் நிர்ணயிக்கும் என்று இந்த சட்டம் கூறுகிறது. ஆனால், நியமனங்களுக்கான விதிகள் மற்றும் நடை முறை பற்றி அது எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கிறது. சுயகட்டுப்பாடும், தன்னாட்சியும் கொண்டதாக கல்வி நிறுவனங்கள் ஆவதற்கு எத்தகைய விதிகள், நிபந் தனைகள் நிறைவேற்றப்பட வேண்டும்? பணித்திறன் என்ற பெயரில் தற்போதுள்ள விதிகள் கல்வி நிறுவ னங்களின் தன்னாட்சியை மிகமிக மோசமாக பாதிக் கின்றன. மத்திய, மாநிலப் பல்கலைக் கழகங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வேந்தர்கள், துணை வேந் தர்கள், நிர்வாக அமைப்பு உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவதில் மத்திய, மாநில அரசுகளின் குறுக் கீடுகள் அதிக அளவில் உள்ளன. மத்திய பல்கலைக் கழகங்களுக்கான துணைவேந்தர், நிர்வாகக் குழுக்களுக் கும், செனட்டுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதில், மத்திய அரசு ஒரு பெரும் பங்காற்றுகிறது. எடுத்துக் காட்டாக மகாராட்டிரா மாநிலப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக அம்மாநில ஆளுநர் இருப்பார். மற்ற நியமனங்களுக்கான தேடுதல் குழுவின் தலைவராக மாநில உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் இருப்பார். ஆளுநரால் நியமிக்கப்படும் ஓர் உறுப்பினருடன், செனட்டில் 15 உறுப்பினர்களும், நிர்வாகக் குழுவில் 13 உறுப்பினர்களும் இருப்பார்கள். இது அரசு அளிக்கும் தன்னாட்சியல்ல; பல்கலைக் கழகத்தின் தன்னாட்சியைப் பெரிதும் குறைத்து அதன் அதிகாரங் களை அரசே எடுத்துக் கொள்வதாகும். அரசியல் செல்வாக்கு இல்லாதவர்களைத் தேர்ந்தெடுத்து பொறுப் புகளில் எவ்வாறு நியமனம் செய்வது என்பதுதான், கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிக்கு மிகமிக முக்கியமானதாகும். இந்த புதிய கல்வி ஆணைய சட்டம் இதனைப் பற்றி எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இருந்து பல பாடங்களை அரசு கற்றுக் கொள்கிறது என்ற போதிலும், உயர்கல்வி விஷயத்தில் அது பாடம் கற்றுக் கொள்வதில்லை;  அவ்வாறு செய்தால், அதிகாரத்தை இழக்க நேரிடும் என்பதே அதன் காரணம். மேற்கத்திய நாடுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்தான் என்ன? 2014 ஆம் ஆண்டு பல்கலைக் கழக தரப்பட்டியலில் 47அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின்  பல்கலைக் கழகங்களும்,   உலக உயர்தர கல்வி நிறுவனங்களின் முதல் 100 நாடுகளின் பட்டியலில்  இடம் பெற்றுள்ளன. இந்த பல்கலைக் கழகங்களில் எல்லாம்,  உயர் நிலை நிர்வாகிகள் நியமனம் செய்யப்படும் நடைமுறை பல்கலைக் கழகத்தின் குழு அல்லது கவுன்சிலால்  மேற்கொள்ளப்படுகிறது. அதற்கான தேடுதல் குழு,  நிருவாகக் குழு அல்லது கவுன்சிலின் பிரதிநிதி,  மரியாதைக்குரிய பேராசிரியர்கள், முன்னாள் மாண வர்கள், ஆசிரியர்கள், இந்நாள் மாணவர்கள் ஆகி யோரைக்  கொண்டதாக இருக்கும். அதனைத் தொடர்ந்து,  வெளிப்படையான ஒருதலைசார்பற்ற நடுநிலை வகிக்கும் நடைமுறையைப் பின்பற்றி, கல்வி நிறுவனத்துடன் தொடர்புடைய அனைவரும் ஈடுபடுத் தப்பட்டு நியமனங்களுக்கான தேர்வு நடைபெறும். இவ்வாறு செய்வது அரசை எட்டத்திலேயே நிறுத்தி வைத்துவிடுகிறது. கல்வி நிறுவனங்களுக்கு உண்மை யான தன்னாட்சியைக் கொண்டு வருவதற்கான விதி களை உருவாக்குவதற்கு அரசுக்குக் கிடைத்துள்ள மிக நல்ல வாய்ப்பு இது.

இடஒதுக்கீடு பற்றி புதிய சட்டம் எதுவும் கூறாமல் மவுனம் காக்கிறது

1986 கல்விக் கொள்கையும்,1992 நடவடிக்கைக்கான செயல் திட்டமும் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியில் அனைவரும் சமமான பங்கு பெறும் வாய்ப்பு அளிக் கப்பட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளன.  உயர்கல்வி கவுன்சிலின் நிருவாக அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்கள் மற்றும்  கல்லூரிகளில்  மாணவர் சேர்க்கை, நியமனங்கள்  அரசு விதிகளின்படி செய்யப்படும் போது, தாழ்த்தப்பட்டோர், பழங்குடி யினத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், சிறுபான்மையினர் மற்றும் பெண்களுக்கான நியாயமான இட ஒதுக்கீட்டை வழங்குவது பற்றியும், இந்த சட்டம் எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காக்கிறது. உயர்கல்விக்குப் பொறுப்பான, அத்துடன் தொடர் புடைய அனைவரையும் போதுமான அளவில் அரசு கலந்து ஆலோசிக்க வில்லை என்றே நான் நினைக்கிறேன். பல்கலைக் கழக மான்யக் குழு உரு வாக்கப்பட்டு 60 ஆண்டுகள் கழிந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள் ளதை நாம் அங்கீகரிப்பது அவசிய மாகும். அதற்குப் பிறகு உயர்கல்வித் துறையில் மிகப் பெரும் அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மிகப் பெரிய அளவில் கல்வித் துறைக்கு வந்துள்ள தனியார் துறை பற்றி நாம் அதிக அளவில் அறிந்திருக்கவில்லை. 1964 இல் கோத்தாரி ஆணையத்துக்குப் பிறகு உயர்கல்வி பற்றிய எந்த மறு ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் முக்கியமாக கவனிக்க வேண்டும். எனவே உயர்கல்வித் துறையின் தன்மை பற்றி நாம் ஒரு சிறிய அளவிலேயே அறிந்துள்ளோம். குறைந்த அளவிலான புள்ளி விவரங்களையும், தகவல்களையும் வைத்துக் கொண்டு, கொள்கை வடிவமைப்பது பெரும்பாலும் தோல்வி யிலேயே சென்று முடியும். இந்த புதிய ஆணைய சட்டம் பற்றி மாநில அரசுகளுடனும், 17 கல்வி கவுன்சில் களுடனும்,  தனியார் பல்கலைக் கழகங்களுடனும், கல்லூரிகளுடனும், மாணவர்கள் அமைப்புகளுடனும், கல்வியாளர்களுடனும் மத்திய அரசு கலந்தாலோசித் திருக்க வேண்டும். நம்மிடம் உயர்கல்வித் துறை பற்றிய முழுமையான தகவல்கள் இல்லாத நிலையில், இவர்களுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய கலந்தாய்வுகள் மூலம் அவர்களது அனுபவத்தின் வாயிலாகப் பெற்ற புதிய அறிவையும், பயனையும் நாம் பெற முடியும். உயர்கல்வி மேலாண்மையின் மீது இந்த சட்டம் ஒரு மாபெரும் செல்வாக்கைப் பெற்றிருக்கிறது. எனவே, ஆன்லைன் வசதிகளுடன் 10-15 நாட்கள் இந்த முக்கியமான பிரச்சினை பற்றி நாடு தழுவிய அளவில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.

(நிறைவு)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner