எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பி.ஜே.பி.யினர் பேசாத பேச்சா - அவர்கள்மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிறையில் அடைக்கப்பட்ட மாணவியை உடனே விடுதலை செய்க!

ஆராய்ச்சி மாணவி ஒருவர் 'பாசிச பா.ஜ.க. ஒழிக' என்று கூறியதற்காக தமிழகப் பா.ஜ.க. தலைவர் அதனைப் பொருட்படுத்தாமல், பிரச்சினையைப் பெரி தாக்கி அந்த மாணவியைச் சிறையில் அடைக்கும் அளவுக்குச் சென்றிருக்கவேண்டாம் என்பது நமது கருத்து; அப்படிப் பார்க்கப்போனால், பி.ஜே.பி.யினர் தரம் தாழ்ந்து பேசும் பேச்சுகள்மீது நடவடிக்கை உண்டா என்பதை தமிழக பா.ஜ.க. தலைவர் சிந்திக்கவேண்டும். மாணவி லூயிஸ் சோஃபியா விடுவிக்கப்படவேண்டும் என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகப் படித்துக் கொண்டிருக்கும் செல்வி லூயிஸ் சோஃபியா (28 வயது) தூத்துக்குடியைச் சார்ந்தவர்.

இது ஒரு பெரிய விஷயமா?

அவர் நேற்று (3.9.2018) சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்தபோது, அதே விமானத்தில் பயணித்த தமிழ்நாடு பா.ஜ.க. தலைவருடன் உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் நடைபெறும் கருத்தாளர், எழுத்தாளர் கைதுகள்பற்றி, இளைய தலைமுறையினரிடம், ஜனநாயக நாட்டில் இப்படி கருத்துரிமை, பேச்சுரிமைக்கு எதிராக பொய் வழக்குகளைப் போட்டு கைது செய்வது - சிறையில் தள்ளுவது ஜனநாயகத்தின் மாண்புக்கு ஒவ்வாதது; பாசிசப் போக்கு என்று பரவலாகப் பரவியுள்ள நிலையில், அந்த மாணவி, பாசிச பா.ஜ.க. ஆட்சி ஒழிக!'' என்று ஓங்கிக் குரல் எழுப்பியுள்ளார்!

இது ஒரு பெரிய விஷயமே அல்ல. இதை திருமதி. தமிழிசை அவர்கள்,  தக்க வகையில் அம்மாணவியிடம் பதில் கூறி, அவரிடம் அக்கருத்து சரியில்லை என்று முடிந்தால் உணர்த்தியி ருக்கலாம்; அல்லது அதைப் பொருட்படுத்தாமல் விட்டிருக்கலாம்.

பா.ஜ.க.விற்குப் பெருமையா?

ஆனால், இப்பிரச்சினைக் குறித்து காவல்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்ட பிறகும், இதனை மிகவும் பெரிதாக்கி, அம்மாணவிபற்றி புதுக்கற்பனைகளில் எல்லாம் ஈடுபட்டு, கைது செய்ய வைத்ததானது - பா.ஜ.க.விற்கோ அல்லது தமிழிசை அவர்களுக்கோ பெருமை சேர்க்காது!

பல பேட்டிகளின்போது, செருப்பு, ஷூ வீசியவர்களைக்கூட பல மாற்றுக் கட்சித் தலைவர்கள், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறி, உயர்ந்தே இருக்கிறார்கள்.

இதில் தமிழிசை அவர்கள் பா.ஜ.க. ஆட்சிபற்றி இளைய தலைமுறை, வெளி உலகம் எப்படிக் கருதுகிறது என்ற சுவரெ ழுத்துப் போன்ற உணர்வினைப் புரிந்து, அந்த எண்ணம் பரவலாக ஏற்பட்டிருப்பதை மாற்றுவது எப்படி? என்று சிந்தித் திருப்பாரேயானால், அதுவே சரியான அணுகுமுறையாகும்.

பா.ஜ.க.வினர் எப்படி எப்படியெல்லாம் வசைபாடுகிறார்கள்?

பா.ஜ.க.வைச் சேர்ந்த எச்.இராஜா போன்ற பலரும் தரக்குறை வான விமர்சனம், பெருந்தலைவர்களைக்கூட ஒருமைச் சொற்களில் தகாத முறையில்  பேசிய ஒலிநாடாக்கள்மீது நட வடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, ஏதும் நடவடிக்கை மேற்கொள்ளாத தமிழக அரசின் காவல்துறையினர் இந்த மாணவி விஷயத்தில் மட்டும் இப்படி கைது நடவடிக்கையில் ஈடுபடுவது எவ்வகையில் நியாயம் ஆகும்?

அவைக் குறிப்பிலிருந்து பிரதமர் மோடியின் உரையே நீக்கப்பட்டதே!

பிரதமர் மோடியின் மாநிலங்களவைப் பேச்சினை - மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அவர்களே நீக்கிடும் - வரலாறு கண்டிராத போக்கு தழைத்துள்ள நிலையில், ஒரு மாணவி உணர்ச்சிவசப்பட்டு கோஷம்' போட்டதற்காக சிறை என்றால், நம் நாட்டின் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை உலகத்திற்கே எடுத்துக்காட்டுவதாக ஆகியுள்ளது!

தமிழிசை அவர்களின் புகாரை ஏற்ற தூத்துக்குடி - புதுக்கோட்டை காவல்துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டவரின் தந்தை புகார் கொடுத்துள்ளார் -  அதன்மீது எவ்வித நடவடிக் கையும் எடுக்காத ஒருதலைப்பட்சபோக்கு நியாயம்தானா?

இது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்!

விடுதலை செய்க மாணவியை!

உடனடியாக அந்த மாணவி லூயிஸ் சோஃபியாவை விடுதலை செய்து, தங்களுக்கு ஏற்பட்டுள்ள கறையைப் போக்கிட வேண்டும். நீதிமன்றங்கள் தலையில் குட்டிய பிறகு விடுதலை செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

4.9.2018

கடைசிச் செய்தி: கைது செய்யப்பட்ட மாணவி லூயிஸ் சோஃபியாவிற்கு தூத்துக்குடி நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது ஆறுதல் அளிக்கிறது!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner