எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழுவிற்குப் பிஜேபியைச் சேர்ந்த கரியமுண்டாதான்தலைவராக இருந்தவர். அவர் கூறிய கருத்தும் தகவலும் வெகு முக்கியமானவை.

"இந்தியாவில் 481 உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருக்கின்றனர். அதில் 15 தாழ்த்தப்பட்டவர்களும், 5 பழங்குடியினர் மட்டும் தான் உள்ளனர். உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஒருவர்கூட இல்லை. ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் அடைவதை வேண்டுமென்றே திட்டமிட்டுக் கெடுக்கும் முயற்சியே இது. எங்கோ ஒரு இடத்தில் பாகுபாடு நிறைந்த மனோ நிலை நிச்சயமாக நிலவுகிறது"

"கடந்த 50 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்களில் திறமை படைத்த நீதிபதி ஒருவர்கூட இல்லாமல் போய் விட்டனர் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அலுவலர்களுள் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளபோது நீதித்துறையில் மட்டும் ஏன் இல்லை? மற்றவர்கள் எல்லோரும் கந்தையாக உள்ளபோது சில நீதிபதிகள் மட்டும் அளவுக்கு அதிகமான அறிவாளிகளாக உள்ளனர் என்பதையும் என்னால் நம்ப இயலவில்லை" என்றார் நாடாளுமன்ற நிலைக் குழுவில் அதன் தலைவர் கரியமுண்டா ('தி வீக்' 13.8.2000).

ஒரு பிஜேபிக்காரரே இப்படி கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி வலியுறுத் தப்பட்டு இருந்தாலும்  உச்சநீதிமன்ற நீதிபதிகள் சமூகநீதிப் பிரச்சினை என்று வரும்போது அதற்கு மாறாகப் பேசுவது உகந்ததல்லவே.

பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுப்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.

சென்னை உயர்நீதிமன்றம் ரங்காச்சாரி வழக்கில் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

Appiontment Includes Promotion Also  என்று கூறப்படவில்லையா? பணி நியமனம் என்பது பதவி உயர்வையும் உள்ளடக்கியதே என்ற தீர்ப்பு இருப்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிய மாட்டார்களா? 20 வருடம், 30 வருடம் பணியாற்றியவர்களைப் புறந்தள்ளி ஒரு தேர்வு மூலம் (அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். உள்ளிட்ட) 25 வயது வாலிபர் ஒருவர் மேலதிகாரியாக வருவதை ஏற்றுக் கொள்ளும்போது - பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதை ஏன் ஏற்கக் கூடாது?

மண்டல் குழுவின் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்பான இந்திரா  சஹானி வழக்கில் இதே உச்சநீதி மன்றம் தேவையில்லாமலும், பொருத்தம் இல்லாமலும் தாழ்த்தப் பட்டவர்களுக்குப் பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பதை ரத்து செய்தது.

அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பதவி உயர்வில் இட ஒதுக்கீடுக்கு உறுதியளிக்கும் வகையில் 77ஆம் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டதெல்லாம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா?

தலைமை செயலாளராக இருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அய்.ஏ.எஸ். அதிகாரியின் மகனுக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பிய நீதிபதிக்கு ஓர் உண்மை தெரியுமா?

இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட தலைமை செயலாளராக இல்லை என்பதுதான் அந்த உண்மை. இல்லாத ஒன்றை உருவாக்கி நிழலோடு சண்டை போடுவது ஓர் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு அழகாகுமா?

இன்னொரு பிரச்சினையையும் கிளப்பி உள்ளனர் மெத்தப் படித்த நீதிபதிகள். தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஏன் பொருளாதார அளவு கோலைக் (Creamy Layer) கொண்டு வரவில்லை என்பதுதான் அந்தக் கேள்வி.

இடஒதுக்கீடு என்கிற போது -அதற்கான அளவுகோல்  சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் (Socially and Educationally)  பின்னிலையில் இருக்கக் கூடியவர்கள்தான் என்று அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே தவிர - பொருளாதார (Economically) ரீதியாக என்று சொல்லப்படவில்லையே.

இட ஒதுக்கீட்டுக்காகத் தான் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்திற்கு முக்கிய காரணமே தமிழ்நாடுதான் - தந்தை பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் கடுமையாகப் போராடியதுதான் - மற்ற தமிழகத் தலைவர்களும் அந்தப் போராட்டத்தில் கைகோத்தனர் என்பது வரலாறு.

முதல் திருத்தம் நாடாளுமன்றத்தில் வந்தபோது (1951) பொருளாதார ரீதியாக என்பதும் சேர்க்கப்பட வேண்டும் என்ற திருத்தம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது அதற்கு ஆதரவாக வெறும் அய்ந்து வாக்குகளும், எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன என்பதை உச்சநீதிமன்றம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

2017ஆம் ஆண்டு அக்டோபர் 6 நாளிட்ட ஒரு ஆணை பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோரின் வருமானமும் (Creamy layer) கணக்கில் கொள்ளப்படும் என்று கூறுகிறது. 2017க்கு முன் வரை ஆண்டு வருமானம் 8 லட்சத்துக்குள் வருமானம் வருமானால் கிரீமிலேயர் அவர்களுக்குப் பொருந்தாது என்ற நிலை இருந்தது. 2017 - புதிய ஆணை மூலம் பொதுத்துறையில் பணியாற்றும் பணியாளர்களையும் கிரீமிலேயருக்குள் கொண்டு வந்துள்ளது. பொதுத் துறை  நிறுவனங்களில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்கூட இட ஒதுக்கீட்டின் பலனை அனுபவிக்க முடியாத சூழ்ச்சி வலை பின்னப் பட்டுள்ளது.

இதன் காரணமாக அய்.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற பிற்படுத்தப் பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை எதிர்த்து போடப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றமும், டில்லி உயர்நீதிமன்றமும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குச் சாதகமாக ஆணை பிறப்பித்தும் பாதிக்கப்பட்டவர்களைப் பணி நியமனம் செய்யாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளனர். மத்திய அரசின் அடாவடித்தனமான - சமூக நீதிக்கு எதிரான ஆணையினாலும் 2015ஆம் ஆண்டில் 11 பேர்களுக்கு இந்திய அரசுப் பணிகளிலும், இந்தியக் காவல்துறைப் பணிகளிலும், 120 பேர்களுக்குப் பிற பணிகளும் மறுக்கப்பட்டன. 2017ஆம் ஆண்டில் 29 பிற்படுத்தப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டாண்டு காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் இந்த 2018லும் சட்ட விரோதமான அநீதி இழைக்கப்படுகிறதே!

சமூகநீதி உரிமையை மீட்பதில் முன் வரிசையில் நிற்கும் திராவிடர் கழகம் இப்பொழுதும் அதன் கடமையைச் செய்ய முன் வந்துள்ளது. அதன் அடையாளம்தான் கடந்த 29.8.2018 அன்று திராவிடர் கழகத்தால்  கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டமாகும். நாடாளுமன்றத்தின் குளிர்க் காலக் கூட்டத் தொடர் நடக்கும் நவம்பரில் இந்திய அளவில் சமூகநீதியாளர்கள் ஒருங் கிணைக்கப்பட்டு மிகப் பெரிய மாநாட்டை திராவிடர் கழகம் நடத்திட உள்ளது. சமூகநீதியாளர்கள் ஓர் அணியில் திரளுவோம் - வெல்லுவோம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner