எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாக்காளர்கள் பட்டியலை சரிபார்த்து பெயர் இருப்பதை உறுதி செய்ய அறிவுரை

சென்னை, செப். 4- வாக்காளர் பட்டியலில் இதுவரை இல்லாத அளவுக்கு 5.77 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டி யலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் ஆகியோரை நீக்கும் பணிகளில் ஆணையம் தீவிரம் காட்டியது.

இறந்தவர்கள் குறித்து அவர்களது இறப்புச் சான்றிதழ் மூலமாகவும், இடம்மாறியவர்கள், இரு இடப் பதிவு போன்றவை கள ஆய்வு மற்றும் கணினி வழியாகவும் ஒப்பிட்டுப் பார்க்கப் பட்டன. போதிய ஆதாரங்களுடன் அவர்களின் பெயர்கள் வாக் காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 186 வாக்காளர்கள் நீக்கப் பட்டனர்.

இதில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 439 இறந்து போன வாக் காளர்களின் பெயர்களும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 189 இடம்மாறிய வாக்காளர்கள், 75 ஆயிரத்து 558 இரு இடங்களில் பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவை அடங்கும்.

ஆகஸ்ட 31-ஆம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத் திலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத் தில் மிக அதிகமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 922. இடம்மாறியவர்கள் 66 ஆயிரத்து 749. இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் 18 ஆயிரத்து 371 பேர் ஆகும்.

இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதில், இறந்தவர்கள் 12 பேரும், இடம் மாறியவர்கள் 118 பேரும், இரு இடங்களில் பதிவு செய்தோர் 31 பேரும் அடக்கம்.

இதர மாவட்டங்களில் ஆயிரம் முதல் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரி செய்யும் இந்தப் பணியில், வாக்காளர்கள் யாருடைய பெயர்களாவது தேவையில்லாமல் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுருக்க முறைத் திருத்தத்தைப் பயன்படுத்தி பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பணிகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இந்த இரண்டு மாதங்கள் மேற்கொள்ளப்படும்.

எனவே, தமிழகத்தில் கடந்த 1 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் சரிபார்த்து தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பாலாற்றின் குறுக்கே தடுப்பணையை உயர்த்திக் கட்டும் ஆந்திர அரசு

மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை

எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புல்லூர், செப். 4- பாலாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணையை ஆந்திர அரசு உயர்த்திக் கட்டி வருகிறது. இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகத்தில் உற்பத்தியாகும் பாலாறு ஆந்திர மாநிலத்தில் சுமார் 26 கி.மீ. தொலைவு பயணித்து, தமிழகத்தில் பாய்ந்தோடி வங்கக் கடலில் கலக்கிறது. இந்நிலையில், ஆந்திர மாநில பகுதியில் உள்ள பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஆந்திர அரசு 20-க்கும் மேற்பட்ட தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேலும், வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோயில் அருகே ஏற்கெனவே பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு கட்டியிருந்த 7 அடி உயர தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரித்து 12 அடியாக உயர்த்திக் கட்டியது. இதன் காரணமாக தமிழகப் பாலாற்றில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தமிழக-ஆந்திர எல்லையான புல்லூர் அருகே, கங்குந்தி பெத்தவங்கா ஊராட்சியில் பெரும்பள்ளம் பகுதி உள்ளது. இப்பகுதியையொட்டி, தமிழகத்திலிருந்து ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் வழியில், பேட்டைபள்ளம் எனும் பகுதியில் பாலாற்றின் கிளை ஆற்றின் குறுக்கே இருந்த 5 அடி உயர தடுப்பணையை 10 அடி உயர தடுப்பணையாக ரூ. 1 கோடி மதிப்பில் ஆந்திர அரசு உயர்த்தி வருகிறது. இதற்காக இரும்பு, ஜல்லி, சிமென்ட் கலவையைக் கொண்டு திடமான தடுப்பணை கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.

தொடர்ந்து, மேலும் சில தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகளும் நடந்து வருவதாகத் தெரிகிறது. இதனால் தமிழகத்துக்கு பாலாற்றில் நிரந்தரமாக தண்ணீர் வர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை : போராவூரணியில் கடை அடைப்பு போராட்டம்

தஞ்சை, செப். 4- கடைமடைக்கு தண்ணீர் வராததைக் கண்டித்து போராவூரணியில் வணிகர்கள் கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேட்டூர் தண்ணீர் திறந்து 45 நாட்களுக்கு மேலாகியும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 3500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner