எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாடு முழுவதும் பாஜகவிற்கு எதிரான நிலை உருவாகிக் கொண்டு இருக்கும் போது மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சாம்பலை வைத்து அரசியல் லாபம் பார்க்க மோடி மற்றும் அமித்ஷா திட்டமிட்டுக் கொண்டிருக் கின்றனர். இது தொடர்பாக வாஜ்பாய் மருமகளே கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாத சூழல் நிலவுகிறது, மேலும் மோடியின் புகழும் சரிந்து வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், வரும் குளிர்கால கூட்டத்தொடரில் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் குறித்த விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பா.ஜ.க. அரசு உள்ளது. ஆனால்  2014ஆம் ஆண்டுமுதல் இதுவரை மோடி அறிவித்த திட்டங்களின் பலன்கள்பற்றி எந்த ஒரு துறையும் முழுமையாக அறிக்கை எதையும் சமர்ப்பிக்கவில்லை. ஊடகங்களும், பாஜக ஆதரவு தனியார் அமைப்புகளும் அவ்வப்போது பல்வேறு பொய்யான செய்திகளை கூறி பாஜக மற்றும் மோடியின் செயல்பாடுகள் வெற்றிகரமாக இருப்பதாக கூறிக்கொண்டிருக்கின்றன.  இருப்பினும் இழந்த செல்வாக்கை ஈடுசெய்ய முடியாமல் மோடி மற்றும் அமித்ஷா திணறி வருகின்றனர். இந்த நிலையில் பாஜக இழந்த செல்வாக்கை மீண்டும் ஈடு கட்ட வாஜ்பாயின் மரணத்தைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சி செய்கின்றனர். பா.ஜக. மிகவும் திட்டமிட்டு வாஜ்பாயின் சாம்பலை இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், மாநில தலைநகரங்கள், சிறுநகரங்களில் வரும் தேர்தல் வரை வைத்திருக்க முடிவு செய்துள்ளது.

முக்கியமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 150க்கும் மேற்பட்ட நகரங்களில் வாஜ்பாய் சாம்பல் பார்வைக்கு வைக்கப்படும் என்று உ.பி.பாஜக அறிவித்துள்ளது. இதன்படி அவர்கள் குறைந்த பட்சம் 60 நாட்கள் வரை உ.பி. முழுவதும் சாம்பல் ஊர்வலங்களைத் தொடர்ந்து நடத்த உள்ளதாகத் தெரிகிறது, அதே போல் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தோடு வாஜ்பாயின் சாம்பலையும் எடுத்துச்சென்று மக்களிடம் சத்தியம் வாங்கும் திட்டத்தையும் பாஜக எடுத்துள்ளதாகத் தெரிகிறது.  டில்லிக்கு அருகில் உள்ள சரோஜினி நகர் மார்க்கெட் பகுதியில் அப்பகுதி பாஜக பிரமுகர் நூற்றுக்கணக்கான கலசங்களை முன்பணம் கொடுத்து தயாரிக்கச் சொல்லியிருக் கிறார். அந்தக் கலசங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு பாஜக பிரமுகரிடம் ஒப்படைக்கத் தயாராக  உள்ளன.

இன்னமும் வட இந்தியாவின் பலநகரங்களுக்கு அஸ்திகலசம் சென்று சேரவில்லை. விரைவில் தேர்தல் நடைபெறும் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானிற்கு இந்த அஸ்திகலசங்கள் கொண்டுசெல்லப்படலாம் என்று தெரிகிறது.

இது தொடர்பாக உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் அஸ்திகலசம் தயாரிக்கும் பட்டறை உரிமையாளரிடம் கேட்ட போது "பொதுவாக ஆண்டிற்கு ஆயிரம் அஸ்திகலசங்கள் தயாரிக்கும் எங்களிடம் திடீரென்று சில நாட்களில் நூற்றுக்கணக்கான கலசங்கள் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார்கள். உத்தரவிட்டவர்கள் பாஜகவினரா அல்லது வேறு ஒருவரா என்று தெரியவில்லை. நாங்கள் பல கலசங்களைச் செய்து முடித்துவிட்டோம், எங்களுக்கு முன்பணம் கொடுத்தவரே தாங்களே வந்து எடுத்துச்செல்வதாக கூறியுள்ளார்" என்று கூறினார்.

இதற்கு முன்பு அஸ்தி கலசத்திற்கு முன்பணம் கொடுத்தவர்களிடம் சில நாட்கள் காத்திருக்கச்சொல்லி கலசம் தயாரிப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அஸ்தி எந்த எந்த நகரங்களில் வைக்கப்படுகிறது, எவ்வளவு கூட்டம் கூடுகிறது போன்றவற்றை படத்துடன் அமித்ஷாவிற்கு அனுப்பவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் படங்களை அனுப்பிவிட்டன. ஆனால் வட இந்தியாவில் பல நகரங்களில் பாஜகவினர் இன்னும் படங்களை அனுப்பவில்லை. அஸ்திகலசம் இன்னும் வராததால் ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில நகரங்களில் வாஜ்பாய் நினைவு மேடைகள் அமைத்து பஜனைகள் பாடிவருகின்றனர். அஸ்திகலசம் வந்த பிறகு அவற்றை அங்கே பார்வைக்கு வைத்து ஊர்வலமாக எடுத்துச்செல்ல முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாஜ்பாயின் அஸ்தியை ஆற்றில் கரைக்க பா.ஜ.க. மாநிலத் தலைவர் ராமபதி ராம் திரிபாடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஷ் திவேதி, ராம் சவுத்ரி உள்ளிட்டோர் படகு மூலம் ஆற்றுக்குள் சென்றனர். படகில் அதிக அளவில் ஆட்கள் ஏறியதால் படகு திடீரென நிலைத்தடுமாறி கவிழ்ந்தது. படகு கவிழத் தொடங்கியதும் ஒரு பகுதியினர் ஆற்றில் குதித்து கரையை நோக்கி நீந்தத் தொடங்கினர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆற்றில் குதித்து அனைவரையும் மீட்டனர். இந்த விபத்தில் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஒரு மனிதர் மறைந்தார் - அவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது - அதோடு அதனை முடித்திருந்தால் மரியாதையாக இருந்திருக்கும். ஆனால் அவரின் அஸ்தியை அரசியல் மூலதனமாக்குவது பா.ஜ.க.வின் பரிதாப பலகீனத்தை வெளிப்படுத்துகிறது என்பதுதான் உண்மை!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner