எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தாலும் வந்தது; பிற்போக்குவாதிகளுக்கெல்லாம் இறக்கை முளைத்து விட்டது, தலையில் புதிய திமில்கள் கொம்பும் முளைத்து விட்டது.

காலத்தால் கழித்து கழிசடையாக ஒதுக்கப்பட்ட பழம் குப்பைகளுக்கு முடிசூட்டிட மூர்க்கமாகக் கிளம்பி விட்டனர்.

"இந்தியக் குடும்பங்களைக் காப்பாற்றுவோம்!" (Save Indian Family Foundation - Sift) என்ற ஓர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் 150 பேர் கங்கைக் கரையில் யாகம் நடத்தியுள்ளனர்.

எதற்காகவாம் இந்த யாகம்? ஆண்களுக்கு நிகரானவர்கள் கிடையாது பெண்கள்; பெண்ணியம் என்ற கோட்பாடு ஒழிய வேண்டும் என்பதற்காக இந்தப் பூஜை - புனஷ்காரங்கள் - யாகங்களாம்.

இந்து ராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம், ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது அல்லவா - அதனுடைய இன்னொரு தாக்கம்தான் இந்தக் கேவலம்.

பெண்களின் உரிமையைப் பற்றிப் பேச - இந்த ஆண்களுக்கு உரிமையைக் கொடுத்தவர்கள் யார்? மனுதர்மப் புத்திதானே இதற்குக் காரணம்? பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் வேறு பொருளாக நினைப்பதுதானே மனுதர்மம்.

பால்யத்தில் தகப்பனுடைய ஆக்ஞையிலும், பருவத்தில் கணவனுடைய ஆக்ஞையிலும், வயோதிகத் தில் மகனுடைய ஆக்ஞையிலும் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டியவள்தான் பெண்களே தவிர, எந்தக் காரணத்தை முன்னிட்டும் தன்னிச்சையாக செயல்பட அருகதையற்றவள் என்கிறதே மனுதர்மம்! (மனுதர்மம் அத்தியாயம் 5 - சுலோகம் 148)

படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்! (மனு அத்தியாயம் 9 - சுலோகம் 17).

கீதை கீதை என்று உளறுகிறார்களே - அறக்கட்டளை அமைத்து உலகம் முழுவதும் மலிவாகக் கீதையைப் பரப்புகிறார்களே - அந்தக் கீதை என்ன சொல்லுகிறது? பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 - சுலோகம் 32).

பெண்ணாய்ப் பிறப்பதைவிட கெட்ட பிறப்பு எதுவுமில்லை - எல்லாக் கேடுகளுக்கும் வேர் பெண்களே என்கிறது பாரதம் (அணுகானய பருவம்).

இந்து மத வேத இதிகாச புராணங்கள் அனைத்துமே பெண்களைப் பிறவி அடிமைகளே என்றுதான் ஆணித்தரமாகப் பறையொலிக்கின்றன.

இன்றைக்கு மத்தியில் இருக்கக்கூடிய பிஜேபி ஆட்சியும் இந்த இந்து மத நூல்களின்படியே இந்து ராஜ்ஜியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. தமிழ்நாட்டில் இது போன்ற யாகங்களை நடத்திடத் துணிவு உண்டா? அந்தளவுக்குத் தந்தை பெரியாரும், தன்மான இயக்கமும் இம்மண்ணை பக்குவப்படுத்தி யிருக்கிறது.

சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் 33 சத இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு இந்த நடவடிக்கை ஒன்று போதாதா? சட்டமியற்றும் இந்த அவைகளில் பெண்களுக்குரிய பிரதிநிதித்துவம் இருந்தால்தானே இது போன்ற பிற்போக்குத்தனங்களைத் தட்டிக் கேட்க முடியும்?

இந்த ஆண்களின் அமைப்பில் 4000 பேர்கள் உறுப்பினர்களாம். ஆண்டுக்கு ஒரு முறை சூர்ப்பனகை உருவப் பொம்மையைச் செய்து அவள் மூக்கை வெட்டுவார்களாம்.

இந்த மூடு திரைக்குள் இருப்பவர்கள் இராம ராஜ்ஜிய வெறிக் கும்பல் - காவிக் கும்பல் என்பது இதன் மூலம் விளங்கிடவில்லையா?

இந்த வெட்கம் கெட்ட கும்பல்தான் சீதையை சீதாதேவி என்றும், இலட்சுமியின் அவதாரம் என்றும் கூறிக் கொள்கிறது. அவர் பெண்ணில்லையா?

பார்வதியை சக்தியின் சொரூபம் என்று பீற்றிக் கொள்கிறது. கங்கைக் கரையிலே யாகம் நடத்தும் இந்த யோக்கிய சிகாமணிகள், சிவனின் இன்னொரு மனைவி தான் கங்கை என்ற புராண பால பாடத்தையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டாமா?

பெண்களுக்கு எதிரான இத்தகைய அமைப்புகளை அரசு எப்படி அனுமதிக்கிறது? பெண்கள் இந்தப் பிரச்சினையை சும்மாவிடக் கூடாது; வீறு கொண்டு வீதிக்கு வந்து பூகம்பத்தை ஏற்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பெண்கள் திடமான ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். பெண்ணடிமைக் கொள்கை உடைய பிஜேபியை முற்றிலும் முறியடித்தே தீருவது என்பதுதான் அந்தத் தீர்க்கமான முடிவு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner