எழுத்துரு அளவு Larger Font Smaller Font

***நீரா சந்தோக்***

வரலாற்றில் வேறு எந்த ஒரு அரசாலும் இது வரை பயன்படுத்தப்படாத அதிகாரங்களை எல்லாம், ஒற்றறிதல் , கட்டுப்பாடு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகளை இன்றைய நவீன ஜனநாயக அரசு பெற்றி ருக்கிறது என்ற உண்மை உலகம் முழுமையாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். ஒரு ஜனநாயக நாட்டில் குடியிருக்கும் ஒருவர் ஒரு குடிமகனாக மாறுகிறார். அப்படி இருந்தாலும்,  அமைப்பு அரசியலின் மனதில் பேரச்சத்தினை ஏற் படுத்துவது, கொலை செய்வது, அச்சத்தையும், நடுக்கத் தையும் ஏற்படுத்துவது ஆகியவைகளை மேற்கொள் வதற்கு ஒரு ஜனநாயக அரசு முடிவு செய்தாலன்றி, உரிமைகள் படைத்த நமது குடிமக்களை விட அதிக அளவில் உதவி கிடைக்காத, தாக்குதலுக்கு உள்ளாக இயன்ற வர்கள் வேறு எவரும் இருக்க முடியாது. நமது காலத்தில் மிகுந்த ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு அமைப்பாக சந்தை அமைப்பு முற்றிலும் ஒழுக்க நெறியற்றதாகவே ஆகிவிட்டது. மனித இனம் துன்புறுவதைப் பற்றி அதற்கு எந்த விதக் கவலையுமே இல்லை. அரசால் வஞ்சிக்கப்படும் குடிமக்கள் பால் அதற்கு எந்த விதமான பரிவோ பரிதாபமோ இல்லை.

மிகமிக முக்கியமானதொரு இடம்

எங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல அரசுக்கும், தனிப்பட்டவருக்கும் இடையே இருக்கும் இடத்தில் நிற்பது நாகரிக சமூகம் மட்டுமே. கற்பனையான இந்த இடத்தில், தனிப்பட்டவர்கள் சங்க வாழ்க்கை என்னும் இணையதளங்களில் ஒன்றாக சேர்கின்றனர். மனுக்கள், எதிர்ப்புகள், வேலை நிறுத்தங்கள், இறுதியில் நீதிமன்றத் தலையீடு ஆகியவற்றின் மூலம் அரசின் காட்டாண்டித் தனமான அதிகாரங்களுக்கு சவால் விடும் ஆற்றலை இந்த சங்கங்கள் பெற்றுள்ளன. இந்த ஜனநாயக முறையிலான எதிர்ப்பு நடவடிக்கைகள் பயன்தராத போது,  அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த மய்யங்களை,  துடிப்பான செயல்பாடு மிகுந்த ஒரு சங்கத்தின் மூலமாக மட்டுமே, குடிமக்களால் அணுக இயலும். ஒரு பன்முகத் தன்மை கொண்ட இடமான நாகரிக சமூகம் என்பதில் கால்பந்து குழுக்களில் இருந்து திரைப்பட ரசிகர் சங்கங்கள் வரையிலான பல்வேறு சங்கங்கள் தங்களுக்கான இடத்தைத் தாங்களாகவே தேடிக் கொள்கின்றன. ஒவ்வொரு ஜனநாயக சங்கமும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.  ஆனால், மனித இன நல்வாழ்வுக்கு, சமூக சுதந்திரம் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் செயல்படுவது  என்பது தவிர்க்க இயலாத ஒரு முன் நிபந்தனையாகும். நாட்டில் 1975-1977 காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த தேசிய நெருக்கடி நிலையின் போது,  பல இந்திய குடிமக்கள் எதேச்சதிகாரமாக இங்குமங்கும் கைது செய்யப்பட்டனர். மற்ற குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அதனால், நெருக்கடி நிலை காலத்திற்குப் பிறகு, இந்திய அரசியல் களத்தில் சமூக சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்கான இயக்கங்கள் திடீரென்று தோற்றம் பெற்றதில் வியப்பேதும் இருக்க முடியாது. மனித உரிமை இயக்கங்களுடன் இணைந்து செயல்படும் இயக்கங்களாக மாறிய இந்த சமூக சுதந்திர இயக்கங்கள், இந்திய அரசமைப்பு சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள உயிர் வாழ்வதற்கான மற்றும் சுதந்திரமாக இருப்ப தற்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு மாபெரும் பணியை ஏற்றுக் கொண்டன.

உலகில் தோன்றிய அரசியல் புரட்சிகள் அனைத்துமே உயிர் வாழ்வதற்கும், சுதந்திரமாக இருப்பதற்குமான உரிமைகளுக்காக உருவாகியவையே ஆகும். மனித இனத்தவருக்கு மிகமிக முக்கியமானவை என்று அடையாளப் படுத்தப்பட்ட மற்ற உரிமைகளின் மேம்பாட்டுக்கு மய்யமாக அமைந்தவை இந்த இரு உரிமைகளேயாகும். சித்தரவதை செய்யப்படவோ, கொல்லப்படவோ கூடாது என்பதில் தொடங்கிய இந்த உரிமைகள்,  முறையான காரணம் இன்றி அரசின் கைக்கூலிகளால் கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட முடியாத உரிமை வரையும் நீண்டு செல்கின்றன. உயிர் வாழ்வது என்பது ஓர் அடிப்படை உரிமை என்பதால்,  காரண காரியமின்றி நாம் சிறையில் அடைக்கப்படுவது நாம் உயிர் வாழ்வதையே அர்த்தமற்றதாக ஆக்கிவிடுகிறது.

நெருக்கடி நிலைக்குப் பிந்தைய காலங்களில், இந்திய அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பிரிவினையைப் பாதுகாக்கும் காவலர் களாக இந்த மனித உரிமைக் குழுக்கள் ஆகிவிட்டன. எதேச்சதிகாரமாக சிறையில் அடைக்கப்படுவது,  காவலில் இருக்கும்போது ஏற்படும் மரணங்கள், என்கவுன்ட்டர் என்ற பெயரில் மக்களைக் கொல்வது,  அரசு அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் பேசத் துணியும் எந்த ஒரு குடிமகனையும் அச்சுறுத்துவது போன்ற நிகழ்வுகளைப் பற்றி இந்த மனித உரிமை குழுக்கள் விசாரித்தன. மத, ஜாதி வன்முறைகளைத் தூண்டிவிடும் அத்தகைய நிகழ்வுகளுக்கான காரணங் களை மிகுந்த கவனத்துடன் ஆவணப்படுத்தியுள்ள இந்த மனித உரிமை அமைப்புகள், அரசுகள் தங்களது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துவது பற்றிய ஒரு மிகச் சிறந்த ஆவணக் காப்பகத்தை உருவாக்கித் தந்துள்ளன. வெகுசில இந்தியர்களால் மட்டுமே கேட்கப்பட இயன்ற பல கேள்விகளை இந்த மனித உரிமை அமைப்புகள் கேட்டன. அனைத்துக்கும் மேலாக,  ஆதிவாசிகள், தலித்துகள், முஸ்லிம்கள் என்பது போன்ற நமது சொந்த மக்களின்,  வஞ்சிக்கப்பட இயன்ற பிரிவு மக்களின் உரிமைகளை அவை பாதுகாத்து வந்துள்ளன.

சுதந்திர சமூக, மனித உரிமை அமைப்புகளின் தொண்டர்களில் வழக்குரைஞர்களும், கல்வியாளர் களும், பத்திரிகையாளர்களும், பொதுநலனை மனதில் கொண்ட  இந்திய குடிமக்களும் அடங்கியிருக்கின்றனர். ஏழைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், உடமைகள் பறிக்கப்பட்டவர்கள், துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் ஆகியோர் பால் அவர்கள் கொண்டிருந்த மனிதநேயம் மிகுந்த கவலைகளே மிகமிக முக்கியமானவையாக இருந்தன.   நமது சமூகத்தின் தார்மீகக் கடமை எனப்படும்  ஒழுக்கநெறி மனச்சான்றினைப் பாதுகாப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமானது. அனைத்து நாகரிக சமூகக் குழுக்களும் இவ்வாறு செயல்படு வதில்லை.  அரசிடமிருந்தோ அல்லது வேறு எவரிடமி ருந்தாவதோ நிதிஉதவி வாங்குவது என்ற வியா பாரத்தை மட்டுமே சில குழுக்கள் செய்து வருகின்றன. ஊடகத்தின் அனைத்துப் பிரிவினரும் அவ்வாறு செய் வதில்லை.   அவர்களது கார்ப்பரேட் எஜமானர்களால் பெரும்பாலான நேரங்களில் ஊடகங்கள் ஊமைகளாக ஆக்கப்படுகின்றன; புகழுக்காகவும், பணத்துக்காகவும் சிலர் ஊமைகளாக இருந்து விடுகின்றனர். தங்களது சக குடிமக்கள் காவல்துறையினரால் சித்தரவதைக்கு உள்ளாக்கப் படும்போதும், வாழ்வாதாரத்திற்கான பொருளை ஈட்ட முடியாதபடி தடுக்கப்படும்போதும், கொல்லப் படும்போதும், கார்ப்பரேட் இந்தியாவால் வஞ்சிக்கப்படும்போதும் பெரும்பாலான இந்தியர்கள் அவற்றைக் கண்டனம் செய்யாமல் வாய்மூடி மவுனமாக இருப்பது மிகுந்த வருத்தத்தையும், கவலை யையும் அளிப்பதாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் போராட்டத்தை மேற் கொள்ளும் கடமையை மனித உரிமைத் தொண்டர்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொள்கின்றனர்.

களப் போர்கள்

கோடிக்கணக்கான மக்களின் துன்பங்களைப் பற்றி சற்றும் கவலையோ அக்கறையோ அற்ற, தன்னைத் தானே ஓர் அச்சில் வார்த்துக் கொள்ளும், நன்னெறி மற்றும் ஒழுக்க நெறியை வெளிப்படையாகக் கடைபிடிக்க மறுக்கும் ஓர் அரசால் நாம் இன்று ஆளப்படுகிறோம் என்பதால், நமது நாட்டில் ஜனநாயக நடைமுறையைப் பாதுகாப்பதற்கு இத்தகைய மனித உரிமை குழுக்கள் மிகமிக அவசியமானவை ஆகும்.  தனிப்பட்டவர்களுக்கும், சந்தைக்கும், அரசுக்கும் இடையேயான இடத்தில் ஆதிக்கம் செலுத்த  இன்றைய ஆளுங்கட்சியின் தொண்டர்களும், அதன் கோட் பாட்டு முதுகெலும்பாக விளங்கும் ராஷ்டிரிய சுயம் சேவக் போன்ற முன்னணி அமைப்புகளும் முயல் கின்றன  என்ற அளவில், நாகரிக சமூகத்தின் தேவை களைப் புறக்கணிக்கும் தலைவர்களால் இன்று நாம் ஆளப்படுகிறோம். இதன் விளைவுகள் மிகமிக மோசமானவையாக அமைபவையாகும். பத்து ஆண்டுகளுக்கு முன்னர், அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் கட்ட ஆட்சியின் போது,  உணவுக்கான நமது உரிமை, வேலை வாய்ப்புக்கான உரிமை, கல்விக்கான உரிமை, தகவல் பெறுவதற்கான உரிமை, நிலம் பெறுவதற்கான உரிமை பற்றி எல்லாம் நாம் பேசிக் கொண்டிருந்தோம். நவீன சமூகத்தின் தீவிர செயல்பாட்டினால்,  ஒரு சமூக ஜனநாயக அரசை நோக்கி இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டை நாம் உருவாக்கிக் கொண்டிருந்தோம். கொல்லப்படாமல் இருப்பதற்கான உரிமை பற்றி பேசுபவரோ அல்லது உயிர் வாழ்ந்திருப்பதற்கும், சுதந்திரத்துக்குமான உரிமைக்காக போராடுவதற்கோ வெகுசில அமைப்பு களே உள்ளன. கார்ப்பரேட் நிறு வனங்கள், இரக்கமே அற்ற அரசு, அதன் கொடுமை யான காவல்துறை, வன்முறையில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற வலது சாரி அமைப்புகளின் தொண்டர்களால் விடப்படும் சவால் களை இந்த மனித உரிமை அமைப்புகள் எதிர்கொண்டு வருகின்றன.

உரிமைகள் மீறப்படுவதை மிகுந்த எச்சரிக்கையு டனும், கவனத்துடனும் கண்காணித்து வந்தும், அவற்றுக்கு எதிராகப் போராடிக் கொண்டும் இருக்கும் தொண்டர்கள் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்படுகின் றனர். சுதந்திரத்துக்காக நாம் கொடுக்க வேண்டிய விலை இது என்று அயர்லாந்து வழக்குரைஞரும், அரசியல்வாதியுமான ஜான் கர்ரன் 1790 லேயே இதனைப் பற்றிக் கூறியிருக்கிறார். அரசும், வலதுசாரி அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களைத் தேடித்தேடி அச்சுறுத்தி வருகின்றன. வசதி, வாய்ப்புகள் பறிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகப் பாடுபடுபவர்கள் என்று நன்று அறியப்பட்ட வழக்குரைஞர்கள், கவிஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களான சுதா பரத்வாஜ், வரவரராவ், வெர்னான் கொன்ஸ்லேவ்ஸ்,  அருண் பெராரியா, கவுதம் நவ்லாகா, ஆனந்த் டும்மே, ஸ்டான் சகாமி ஆகியோரின் வீடுகளில் சோதனை செய்து, ஆகஸ்ட் 28 அன்று மகாராட்டிர  காவல்துறையினரால் அவர்களில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிக்காகப் போராடும் இந்தப் போராளிகள் இவ்வாறு துன்புறுத்தப்படுவதற்கான காரணங்கள் எந்த வித அடிப்படையும் இல்லாதவையும், மனநிறை வடையச் செய்ய இயலாதவையும் ஆகும். 2018 அன்று  பீமா-கொர்கானில் நடைபெற்ற தலித் பேரணியில் வன்முறை தூண்டிவிடப்பட்டதற்கு  2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எல்கர் பரிசத் கூட்டத்தில் அவர்கள் பேசிய பேச்சே காரணம் என்ற குற்றச்சாட்டு  காவல் துறையினரால் எளிதில் மெய்ப்பிக்க இயலாது.  அமை தியாக நடந்தேறிக் கொண்டிருந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது சாம்பாஜி பீடே தலைமையிலான ஷிவ் பரிஸ்தான் மற்றும் மிலின்ட் ஏக்போட் தலைமையிலான இந்து ஏக்தா மஞ்ச் என்ற, இந்துக்கள் மற்றும் மராட்டியர்கள் பற்றி ஓர் உயர்ந்த பெருமை பாராட்டிக் கொள்ளும்,  இரு வலதுசாரி அமைப்புகளின் தொண்டர் களால் தாக்கப்பட்டனர் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது; அவர்கள் இருவரும் 2018 மார்ச்சில் கைதும் செய்யப்பட்டனர். விரைவில் காவல் துறையும், மகாராட்டிர அரசும் அவர்களைக் குற்றத்தில் இருந்து விடுவித்துவிட்டன. இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு வகை முகவர்கள் உள்ளே கொண்டு வரப்பட்டு, வரலாறோ புவியியலோ கூறாத நகர்ப்புற மாவோயிசம் என்ற குற்றம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இது மிகவும் சில்லரைத் தனமாக உள்ளது.

தன்வினை தன்னைச் சுடும்

சங்கங்களின் இடத்தைத் தங்களது சொந்த அமைப்புகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வர வேண்டும் என்று விரும்பும் ஒரு கட்சியால், நாகரிக சமூகத்தின் மீது அண்மையில் தொடுக்கப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இதுதான். இந்த முயற்சியே அந்தக் கட்சிக்கு எதிராகவும் திரும்பவும் கூடும். 1920 களில் முசோலினி அரசால் சிறையிடப்பட்ட புகழ்பெற்ற இத்தாலிய கோட்பாளர் அந்தோணியோ கிராம்சி என்பவர் ஒரு முக்கியமான கேள்விக்கு விடை அளிக்க முற்பட்டார். மார்க்ஸ் எதிர்பார்த்தது போல, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் ஏற்படாத புரட்சி, நிலப் பிரபுக்கள் அதிகமாக இருந்த ஜாரின் ரஷ்யாவில் மட்டும் எப்படி ஏற்பட்டது? ரஷ்யாவைப் போல தனது காட்டாண்டித்தனமான அதிகாரத்தை அரசு நேரடி யாகவும், சற்றும் வெட்கம் இல்லாமலும் பயன் படுத்துவதால்தான் புரட்சிகள் ஏற்படுகின்றன என்ற முடிவுக்கு அவர் வந்தார்.நவீன சமுதாய சங்கங்கள் உள்ள நாடுகளில் புரட்சி ஏற்படுவதில்லை. இந்நாடு களில் ஆதிக்கம் செலுத்துவதும், அதனை எதிர்ப்பதும் ஒன்றுக்கொன்று சமன் செய்துகொள்கின்றன. அங்கெல் லாம் புரட்சி செய்ய வேண்டும் என்ற தேவை மக்களுக்கு இல்லை.

ஆழ்ந்த இந்தப் பேரறிவிலிருந்து நமது ஆட்சியா ளர்கள் கற்றுக் கொள்வதற்கான ஒரு பாடம் ஏதேனும் உள்ளதா?

நன்றி: 'தி இந்து' 30-8-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner