எழுத்துரு அளவு Larger Font Smaller Font

370 அய் நீக்கினால் இந்தியாவை விட்டு காஷ்மீர் வெளியேறும்

மெகபூபா முப்தி எச்சரிக்கை

சிறீநகர், செப். 8 காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங் கும் சட்டப்பிரிவு 370- அய் நீக்கினால், ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இந்தியாவிலிருந்து வெளியேறும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காஷ்மீர் இந்தியாவோடு இணைக்கப்பட்டபோது, பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. அதிலொன்றுதான், காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சட்டப்பிரிவு 35ஏ மூலம் 1954 ஆம் ஆண்டு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டதாகும். ஆனால், இந்த சிறப்புத் தகுதியை  ரத்து செய்ய வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றனர்.  30-க்கும் மேற் பட்டோர் வழக்குகளையும் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு களை விசாரித்த, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தீர்ப்பை 2019 ஜனவரி 19 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், மக்கள் ஜனநாயகக்கட்சி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ள, அக்கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, “சட்டப் பிரிவு 35ஏ மற்றும் 370-இன் கீழ் வழங்கப்படும் அதிகாரம் நீக்கப்பட்டால், காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடனான உறவை முறித்துக்கொள்ள நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.

நான் உயர் ஜாதியினருக்குத்தான் விசுவாசமாக இருப்பேன்

உ.பி. பாஜக எம்எல்ஏவின் ஆணவப் பேட்டி

லக்னோ, செப்.8 உத்தரப்பிரதேச மாநிலம் பயிரியா தொகுதியின் பாஜக எம்எல்ஏ.வாக இருப்பவர் சுரேந்திரா சிங். கடைந்தெடுத்த இந்துத்துவா பேர்வழிகளில் ஒருவர். தாழ்த்தப்பட்டவர்கள் மீதும், இசுலாமியர்கள் மீதும் தொடர்ந்து வெறுப்பைக் கக்கி வருபவர். அந்த வகையில், தற்போது மீண்டும் அவர் தனது வன்மத்தைக் காட்டியுள்ளார்.

எஸ்.சி.,எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக, ஜாதி ஆதிக்கவாதிகள் வியாழனன்று உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையொட்டி பேட்டி ஒன்றை அளித்துள்ள சுரேந்திரா சிங், ஜாதி ஆதிக்கவாதிகளின் பந்த்தை ஆதரிப்பதாக அறிவித் துள்ளார். மேலும், “உயர்ஜாதி மக்கள்தான் என்னை எம்எல்ஏ ஆக்கினார்கள்; இசுலாமியர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ என்னை எம்எல்ஏ ஆக்கவில்லை; அதனால் உயர் ஜாதி யினருக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறேன்; உயர்ஜாதியில் உள்ள எனது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டால், எம்எல்ஏ பதவியிலிருந்து விலகுவேன்’’ என்றும் பகிரங்கமாக கூறியுள்ளார்.

பணமதிப்பு நீக்கத்தால் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சிறுதொழில்கள் கடும் பாதிப்பு!

தேனா வங்கி அதிகாரி

அகமதாபாத், செப்.8 குஜராத் மாநில அனைத்து வங்கிகளின் ஆலோசனைக் கூட்டம், அண்மையில் அகமதாபாத் நகரில் நடைபெற்றது.  பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன்முடிவில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது.

அதில், “குஜராத் வங்கிகளின் வராக்கடன் ரூ. 35 ஆயிரத்து 342 கோடியிலிருந்து ஒரே ஆண்டில் சுமார் 2 ஆயிரம்கோடி ரூபாய் அதிகரித்து, 37 ஆயிரத்து 342 கோடியாக அதிகரித்துள்ளது. இது 5.7 சதவிகித அதிகரிப்பாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வராக்கடன் அதிகரிப்புக்கான காரணத்தை, தேனா வங்கியின் தலைமை அதிகாரி ரமேஷ் சிங் தெளிவுபடுத்தியுள்ளார்.

அவர், “இந்த கடன்கள் அனைத்தும் சிறுகடன்களாக அளிக்கப்பட்டவை” என்றும், “அவை வராக் கடன் ஆனதற்கு பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கமே காரணம்’’ என்றும் உண்மையைப் போட்டு உடைத்துள்ளார்.

பாஜக எம்எல்ஏமீது வழக்கு

சோலாப்பூர், செப்.8 சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராம் கடம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள காட்கோபர் தொகுதியில் வெற்றி பெற்றவர் பாஜகவைச் சேர்ந்த ராம் கடம். கடந்த வாரம் நடந்த கோகுலாஷ்டமியின்போது ராம் கடம் பேசியதாவது:  இளைஞர்களே, நீங்கள் காதலிக்கும் பெண்ணை உங்கள் பெற்றோருக்குப் பிடித்திருந்தால் என் னிடம் வாருங்கள். பெண்ணின் பெற்றோருக்கு உங்களைப் பிடிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. அந்த பெண்ணைக் கடத்திக் கொண்டு வந்து உங்களிடம் ஒப்படைப்பேன். இவ்வாறு அவர் பேசினார். அவர் இவ்வாறு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இந்த நிலையில் எம்எல்ஏ ராம் கடம்மீது சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் பர்ஷி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து எம்எல்ஏமீது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொதுமக்களிடையே பீதி யைக் கிளப்புதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.