எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தாவின் வர்த்தக  அமைப்பில் அண்மையில் நான் பேசும்போது, இன்று நமது நாட்டின் பொருளாதார நிலை எவ்வாறு உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முயன்றபோது, 'மாயை' என்னும் தத்துவக் கோட் பாட்டினை நான் பயன்படுத்தினேன். பிரபஞ்ச ஆற்றல் கொண்ட  'மாயை' என்ற தவறான கருத்து, பிரபஞ்ச ஆற்றலின் உண்மை நிலை மற்றும் அதன் திரிபுகள் இரண்டின் முகத்தையும் திரை போட்டு மறைத்து இருக்கிறது. இதன் விளைவு என்னவென்றால்,  உண்மை என்பதே காண முடியாததாக நழுவிப் போய் விடுகிறது. நமது நாட்டின் இன்றைய பொருளாதார நிலை மாயை போன்ற ஏதோ ஒன்றாகவே  இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் கடந்த நான்காண்டு கால ஆட்சி எதையுமே சாதிக்க வில்லை என்று கூறமுடியாது. எந்த ஓர் அரசின் சாதனைப் பதிவுகளும் முழுமையாக சாதகமாகவோ, பாதகமாவோ இருக்காது. ஆனால், உண்மையில் இந்த அரசு எதனைச் சாதித்துள்ளது என்பதோ, எந்த அளவுக்கு அந்த சாதனை அமைந்துள்ளது என்பதோ, உண்மை நிலை மற்றும் மாயை இரண்டுக்கும் இடையே  ஏதோ ஓரிடத்தை  ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் விவாதத்திற்குரிய விஷயமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, உலகி லேயே ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (நிஞிறி) மிகமிக அதிக அளவிலான வளர்ச்சியைப் பெற்று, பொருளாதார நிலையில் அதி வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா ஆகிவிட்டது என்பதை புள்ளி விவரங்களைக் காட்டி அரசு, அந்த வளர்ச் சிக்கான  உரிமையைக் கொண்டாடுகிறது. ஆனால் மற்றவர்களோ அந்த புள்ளி விவரங்களைப் பற்றி சந்தேகம் கொண்ட கேள்விகளை எழுப்புவதுடன், செப்பிடு வித்தை போன்ற தந்திரமான முறையில் மாற்றப்பட்ட புள்ளிவிவரங்கள் அவை என்றும் கூறுகின்றனர். ஆட்சியாளர்கள் கூறுவது போல  7 சதவிகித அளவுக்கு  நிஞிறி உயரவில்லை என்பதும், அதற்கு 2 சதவிகிதத்திற்குக் குறைவான நிஞிறி வளர்ச் சியையே நாடு பெற்றுள்ளது என்பதும்தான் உண்மை நிலை என்று கூறப்படுகிறது. மேலும், நமது நாடு பொருளாதார நிலை யில் மிகமிக வேகமாக வளர்ந்து வருகிறது என்று கூறப்படுவது உண்மையானால், அந்த வளர்ச்சியின்  சில பயன்களாவது களநிலையில் ஏன் காணப்படவில்லை என்று சில விமர்சகர்கள் கேட்கின்றனர். எடுத்துக் காட்டாக பசியால் வாடும் மக்கள் வாழும் 119 உலக நாடுகளின் பட்டியலில், இந்தியா 2016-2017 ஆம்  ஆண்டுகளில் மூன்று இடங்களை இழந்து, இன்னமும் 100 ஆவது இடத்திலேயே உள்ளது என்பதுடன் நேபாளம், வங்காள தேச நாடுகளை விட பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

இது மட்டுமன்றி வேறு பல விடை காண முடியாத புதிர்களும் உள்ளன. பல தொடர் திட்டங்களின் மூலம்  மிகப் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அரசு உரிமை கொண் டாடுகிறது. ஆனால், அது உண்மையாக இருந்தால்,  எதற்கு விவசாயிகள் தொடர்ச்சியாக இடைவிடாது தற்கொலை செய்து கொள்கின்றனர்? பல துறைகளில் விவசாயப் பொருள்களின் உற்பத்தி மிக உயர்ந்த அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும்,  இந்த சாதனை படைத்ததற்காக நமது விவசாயிகளைப் பற்றி நாம் பெருமை பட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அரசு கூறுகிறது. இதில் ஒரு பகுதி உண்மைதான். ஆனால், அப்படியிருந்தால்,  தங்களது கடின உழைப்பிற்குத் தகுந்த வருவாய் கிடைக்கவில்லை என்பதற்காக விவசாயிகள் ஏன் தங்களது விளைபொருள்களை சாலைகளில் கொட்டுகிறார்கள்?  பிரதம அமைச்சரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்னவோ நல்ல நோக்கம் கொண்ட ஒரு திட்டம்தான். ஆனால், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியதில் விவசாயிகளை விட காப்பீட்டு நிறுவனங்களே அதிக லாபம் பெற்றன என்று  வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதே போலத்தான் விவசாய உற்பத்திப் பொருள் களுக்கு குறைந்த அளவு ஆதரவு விலை நிர்ணயிப்பது என்ற திட்டமும் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கிறது. விவசாயிகளுக்கு உறுதி அளிக்கப் பட்ட குறைந்த பட்ச  ஆதரவு விலையை அரசு அளிக்கும் என்று அரசு அறிவித்தது. உற்பத்தி செலவுடன் அதில் 50 சதவிகிதம் கூடுதலாக வைத்து விலை நிர்ணயம் செய்யப்படும் என்பதுதான் அந்த உறுதிமொழி. இது ஓர் ஆக்க பூர்வமான நடவடிக்கைதான்.  ஆனால், இந்த உறுதி மொழி நீண்ட கால தாமதத்திற்குப் பிறகு நடைமுறைப் படுத்தப்பட்டது என்பதுடன் உறுதி அளித்த அளவில் பயனும் அளிக்கப்படவில்லை.  2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த உறுதிமொழியை நிறைவேற்ற முடியாது என்று 2015 இல் உச்ச நீதிமன்றத்தில் அரசு பிரமாண வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. இப்போது, நான்கு ஆண்டுகள் கழித்து,  இந்த உறுதி மொழி மறுபடியும் புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் இந்தப் பிரச்சினையில் முக்கியமாகக் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் பல உள்ளன. விவசாய உற்பத்திப் பொருளின் விலை எவ்வாறு நிர்ணயம் செய்யப்படுகிறது? அனைத் துக்கும் மேலாக உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்யவும், அவற்றைப் பாதுகாத்து வைக்கவும் தேவை யான கட்டுமானங்கள் இல்லாத நிலையில், உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை விவசாயியைச் சென்றடையுமா?

உண்மை மற்றும் உண்மை நிலைக்கும் இடையே நிலவும் இந்த நிழலாட்ட மாறுதல்கள் அதாவது  சாதனைகளுக்கு உரிமை கோருவது மற்றும் அதனை மறுப்பது என்பது மற்ற பல துறைகளிலும் உள்ளன. அந்நிய நேரடி முதலீடு எப்போதும் இல்லாத அளவில் மிக உயர்ந்த அளவில் கிடைத்துள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அமெரிக்க டாலருடனான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ந்துள்ளது. இந்த அரசின் ஆட்சிக் காலத் தொடக்கத் தில் உலக அளவிலான கச்சா எண்ணெயின் விலை முன் எப்போதுமே இல்லாத அளவுக்குக் குறைந்திருந்தது.  ஆனால் அதனால் கிடைத்த பயன்களை அரசு நுகர் வோருக்கு அளிக்கவில்லை. இப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றுக் கொள்ள முடியாத அளவில் உச்சத்தை எட்டியுள்ளது. பெரிய அளவில் பணவீக்கம் கட்டுப்பாட்டுக்குள் இருந்த போதிலும், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி யிருக்கிறது.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு கணக்கு துவங்கி வைக்கும்  ஜன் தன் யோஜனாதிட்டம் நடை முறைப்படுத்தப் பட்டது.  அக்கணக்குகளில் எவ்வளவு கணக்குகளில் இன்னமும் 0 இருப்பு உள்ளது;  எவ்வளவு கணக்குகளில் எந்த ஒரு  பரிவர்த்தனையும் மேற் கொள்ளப்படாமல் உள்ளது  என்பவை  நிலை நாட்டப்பட வேண்டியது அவசியம். இலவச எரிவாயு இணைப்பு தரும் உஜ்ஜவ்லா திட்டம் ஒரு நல்ல திட்டம்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், வழங்கப்பட்ட இணைப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இணைப்புகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் திரும்பவும் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

புல்லட் ரயில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியர்களான நாம் பெருமைப்பட முடியும் .என்பது உண்மைதான். ஆனால்,  சாதாரண குடிமக்கள் பயணம் செய்யும் சாதாரண ரயில்களின் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தத் தேவையான பணம் அரசிடம் இல்லை. சுவாச் பாரத் என்னும் தூய்மை இந்தியா திட்டம் போற்றத் தகுந்த திட்டம்தான். ஆனால், அரசு கட்டித் தந்ததாகக் கூறும் கோடிக் கணக்கான கழிப்பிடங்களில் எத்தனை இன்று செயல்படும் நிலையில் உள்ளன என்பது பற்றி அறிவதற்கு ஒரு நேர்மையான சமூக தணிக்கை தேவைப்படுகிறது. இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாகியும் கூட, டில்லி காஜிபூர் குப்பை மேட்டில் குவிக்கப்படும் குப்பைகளின் உயரம் குதுப்மினாரின் உயரத்தையும் தாண்டிவிடும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர் விமர்சிக்கும் அளவுக்கு நாட்டில் குப்பைகளை அழிக்கும் பணி மிகமிக மோசமானஅளவில் நடைபெறுவது ஏன்?

வேலை வாய்ப்புகள் அற்ற வளர்ச்சியே நாட்டில் இல்லை என்று அரசு கூறுகிறது.  முத்ரா திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கில் கடன்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சுயவேலை வாய்ப்பு பெற்ற ஏராளமான தொழில் முனைவோர் வளம் பெற்றுள்ளதாகவும் அரசு கூறுகிறது. எவ்வாறாயினும், ஆண்டு ஒன்றிற்கு2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அளிக்கப்பட்ட உறுதிமொழி பொய்யாகப் போய்விட்டது தெளிவாகத் தெரிவதாக சாதாரண குடிமக்கள் கூறுகின்றனர். உண்மையைக் கூறுவதானால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன், ஏற்கெனவே பணிகளில் இருந்த பணியாளர்கள் பலரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, நாட்டில் இருந்த கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப் பட்ட துணிவான முடிவு என்று அரசு கூறுகிறது. இந்த நோக்கம் நல்லதுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் அந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது "என்றும் மறவாமல் நினைவு கூரத்தக்க மிகப் பெரிய முட்டாள்தனமான செயல்" என்பதில் சிறிதளவும் சந்தேகமே இல்லை. நாட்டின் பொருளாதார நிலை யையே தடுமாறச் செய்த அது,  குறிப்பாக முறைசாரா துறைகளில் கண்ணுக்குத் தெரிந்த அளவில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது.சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப் படுத்தப் பட்டது தேவையான ஒரு சீர்திருத்தம்தான் என்பது பற்றி எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட விதம் பெரிதும் விரும்பத்தக்கதாக இல்லை என்பதுடன் தவிர்க்க இயன்ற துன்பங்களைத் தொடர்ந்து அது அளித்துக் கொண்டே இருக்கிறது.

எளிதில் வர்த்தகம் செய்வது என்ற அளவுகோலில் இந்தியா உயர்ந்துள்ளது என்ற நியாயமான பெருமையை அரசு பாராட்டிக் கொள்கிறது. ஆனால், அது பற்றிய முழு அறிக்கையையும் பரிசீ லித்துப் பார்க்கும் போது, குழப்பம் மிகுந்த ஒரு தோற்றத்தையே அது காட்டுகிறது. 2016 ஆம் ஆண்டு வங்கிகள் திவால் சட்டம் ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கைதான். ஆனால், ஒரு வியாபாரத்தை எளிதாகத் துவங்குவது என்பது போன்ற அத்தியாவசியத் தேவைப் பட்டியலில்  இன்னமும் நாம் அடித்தளத்தின் அருகில்தான் இருக்கிறோம். வரிவிதிப்பு நடைமுறை சீர்திருத்தப்பட்டுள்ளது என்று அரசு பெருமை பாராட்டிக் கொள்கிறது. ஆனால், சாதாரண குடிமகன் தன் மீது சுமத்தப்படும் வரிச் சுமையில் சேர்க்கப் பட்டுள்ள கூடுதல் வரிகளின் எண்ணிக்கையையே  நினைவில் வைத்துக் கொள்ள இயலவில்லை. கார்ப்பரேட் தலைவர்களோ, தொலைக் காட்சி கேமராக்களுக்கு முன் பேசும்போது, அரசைப் பாராட்டியும், புகழ்ந்தும் பே சுகின்றனர். ஆனால், தனிப்பட்ட முறையில் உரையாடும் போது, முதலீட்டு சூழ்நிலை மிக மோசமாகி வருவதைப் பற்றியும், வர்த்தகர்களின் நம்பிக்கை சரிந்து வருவதைப் பற்றியும் அவர்கள் பேசுகின்றனர்.  லஞ்ச ஊழல் குறைந்து போய்விட்டது என்று அரசு கூறிக் கொள்கிறது. ஆனால், கருப்பு பணமோ பழிதீர்க்கும் வகையில் திரும்பவும் உருப் பெற்றுள்ளது:. அரசு வங்கிகளில் இருந்து கடனாகப் பெற்ற ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்களை திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வோரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மலை போன்ற வருவாய் ஈட்டித் தராத சொத்துகளை வைத்துக் கொண்டு அரசு வங்கிகள் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

எல்லாம் மாயை. அதன் கற்பனை ஆற்றலை எவரே தான் புரிந்து கொள்ள முடியும்? முகத்தை மூடிக் கொண்டிருக்கும் திரைக்கு அடியில் ஏதோ ஓரிடத்தில் தான் உண்மை உள்ளது. ஆனால் அந்தத் திரையை விலக்க இயன்றவர் யார் என்பதுதான் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருப்பதாகும்.

நன்றி: 'தி டெக்கான் கிரானிகிள்' 26-08-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

பவன் கே. வர்மா

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner