எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 8- வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம் ஆகிய பணிகளுக்காக ஞாயிற்றுக்கிழமை (செப். 9) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 67,644 வாக்குச் சாவடிகளில் இந்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1 -ஆம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர், அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளன.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்காக அளிக்கப்பட்ட இரண்டு மாத காலத்தில் நான்கு சிறப்பு முகாம்களும் நடைபெறவுள்ளன. அதன்படி, இந்த மாதம் 9, 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளன.

இந்த சிறப்பு முகாம்கள் அனைத்தும் வாக்குப் பதிவுக்காக பயன்படுத்தும் வாக்குச்சாவடி அமைவிடங்களில் நடத்தப்பட உள்ளன. காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம் என்றும் தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பு முகாம்களின்போது அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதி ஒருவர் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் முகவராக இருப்பார். அவர் தனது சார்பாக வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான 10 விண்ணப்பங்களை அளிக்கலாம் என தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

அரசு ஊழியர் வரன்முறைக்

குழு காலம் நீட்டிப்பு

சென்னை, செப். 8- அரசு ஊழியர் வரன்முறைக் குழுவின் கால அளவு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசுத் துறைகள், உள்ளாட்சி அமைப்புகளில் தேவையற்ற பணியிடங்களைக் கண்டறிவது போன்ற வரன்முறைப்படுத்தல் பணிகளை மேற்கொள்ள ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஆதிசேஷையா தலைமையில் அரசு ஊழியர் வரன்முறைக் குழு அமைக்கப்பட்டது.

நிதித் துறை செயலாளர் (செலவினம்) எம்.ஏ.சித்திக், குழுவின் அலுவல் சாரா செயலாளராக உள்ளார். அரசின் செலவினத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், அரசுத் துறைகளின் ஊழியர்கள் எண்ணிக்கையை மதிப்பிட்டு, தேவையில்லாத பணியிடங்களைக் கண்டறிந்து, ஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை நியமிக்கக் கூடிய பணியிடங்களைத் தேர்வு செய்து அரசுக்கு இந்தக் குழு அறிக்கை அளிக்க வேண்டும். இந்தக் குழு 6 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதம் 2 -ஆம் தேதி முதல் குழு தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இந்த நிலையில், குழுவின் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 18 -ஆம் தேதி வரை நீட்டித்து நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உத்தர விட்டுள்ளார்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner