எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னார்குடியில் மானமிகு தமிழர் தலைவரின் மகத்தான உரை

தொகுப்பு: மின்சாரம்

மன்னார்குடி,செப்.9 மன்னார்குடியில் நேற்று (8.9.2018) மாலை பந்தலடியில் நடைபெற்ற - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையில் முதல் கட்ட வெற்றி விழாப் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முத்திரை பதித்த உரையை நிகழ்த்தினார்.

இதே மன்னார் குடியில் 1969 இல் தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தஞ்சை மாவட்டக் கழக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் இன இழிவு ஒழிப்புப் போராட்டத்தின் முதற்கட்டமாக மன்னார்குடி இராஜகோபால் சாமி கோவில் கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்கள்.

அதன் முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடும் பாராட்டு விழா அதே மன்னார் குடியில் நடைபெறுவது பொருத்தம்தானே என்று கழகத் தலைவர் முத்தாய்ப்பாக சொன்னபொழுது மன்னை மக்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

இன்னொரு தகவலையும் தலைவர் எடுத்துச் சொன்னது மக்கள் கடலின் நெஞ்சத்தைத் தொட்டது.

தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்று அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான சட்டத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறச் செய்தவர் மானமிகு மாண்புமிகு கலைஞர்.

தந்தை பெரியார் மறைந்த நிலையில் அரசு மரியாதை கொடுத்து அவர் உடலை அடக்கம் செய்த முதலமைச்சர் கலைஞர் தன் நெஞ்சில் வடியும் துயரத்தை அவருக்கே உரித்தான சொற்களால் வடித்தார்.

மானமிகு கலைஞரின் ஆதங்கம்!

தந்தை பெரியாரின் இறுதி விருப்பமான அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை நிறைவேற்றாமல், அந்தக் காட்சியைக் காணாமல் கண் மூடி விட்டாரே அய்யா -  ஆம் அய்யாவின் நெஞ்சில் தைத்த முள்ளோடு புதைத்து விட்டோமே என்று புழுங்கினார்.

ஆனாலும் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் இறுதி மூச்சை விடுவதற்கு முன் முதல் செய்தி மதுரையிலிருந்து வந்தது.

மாரிசாமி என்ற பிற்படுத்தப்பட்டவர் முதல்வர் கலைஞர் ஆணையால் திறக்கப் பட்ட அர்ச்சகர்ப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவர் மதுரை அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார் என்பதுதான் அந்தச் செய்தி.

இதில் முழு வெற்றி பெற்றோம் என்று மார்தட்டிக் கொள்ளவில்லை - அதே நேரத்தில் கணக்குத் திறக்கப்பட்டு விட்டது - ஒரு மாரிசாமிக்குக் கிடைத்திருக்கும் உரிமைக்கான காரணங்களும், நியாயங் களும், சட்டமும், தீர்ப்பும் அர்ச்சகர் பயிற்சி பெற்றுக் காத்திருக்கும் பார்ப்பனர் உள்ளிட்ட 200-க்கு மேற்பட்டவர்களும் உடனடியாக காலியாகவுள்ள இடங்களில் நியமிக்கப்படவேண்டும் என்று கழகத் தலைவர் சொன்னபொழுது - அதன் நியாயத்தை மக்கள் திரள் வரவேற்றது.

பார்ப்பனர் அல்லாதாருக்கு அர்ச்சகர் உரிமை என்று சொல்லும்பொழுது, அவர்கள் அர்ச்சகராவதால் மோட்சத்தில் முன்சீட்டுக் கிடைக்கும் என்ற நம்பிக்கையால் அல்ல - இது ஒரு மனித உரிமைப் போராட்டம் - ஜாதி ஒழிப்பு, இன இழிவை ஒழிக்கும் போராட்டமாகும் என்று இப்பிரச்சினையின் அடிவேர் நோக்கத்தை ஆழமாக அழகாகப் பதிவு செய்தார் ஆசிரியர்.

இதுபற்றி தந்தை பெரியார் என்ன சொல்லுகிறார்?

''கர்ப்பக்கிரகத்துக்கு வெளியே உள்ள சாமிகளையும், நவக்கிரகங்களையும் எல்லோரும்தான் தொட்டுக் கும்பிடு கிறார்கள். உள்ளே உள்ள சாமிக்குச் செய்வதுபோலத்தான் பூஜை முதலியனவும் நடைபெறுகின்றது. ஆளில்லாதபோது, நாய் முதலியனவும் அபிஷேகம் செய்யும் பொருளுக்காகச் சிலையை நக்குகின்றது. இதுகள் எல்லாமும் சாகாமல் இருக்கும்போது, கோவிலுக்குள் உள்ள சாமி மட்டும் எப்படி செத்துப் போகும்? மக்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். எனக்கென்ன வந்தது? நானோ, எங்களைச் சார்ந்தவர்களோ அர்ச்சகராக வேண்டும் என்றா? நமது ஜாதி இழிவு நீங்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்குத்தானே கூறுகின்றேன்'' என்று தந்தை பெரியார் அவர்கள் சென்னைக் கடற்கரையில் (15.4.1972) உரையாற்றுகையில் குறிப்பிட்டாரே - அதனைத்தான் தமிழர் தலைவர் மோட்சத்தில் முன்சீட்டுப் பெறுவதற்காகப் போராடவில்லை என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவனின் மூலக் கருத்திற்கு விரிவுரை செய்யும் பணியைத்தானே இந்த 85 ஆம் வயதிலும் தன் கடனாகப் போற்றி செய்து வருகிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் அவர்களின் ஆணையை ஏற்றுத் தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சட்டம் செய்தாலும், அந்தச் சட்டத்திற்கு வலுவைச் சேர்க்க கலைஞர் கையாண்ட அந்த யுக்தியையும் எடுத்துரைத்தார்.

தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள் இளைய பெருமாள் எம்.பி., தலைமையில் குழு ஒன்றை நியமித்து, அதன் பரிந்துரையை எதிர்பார்த்தார்.

இளையபெருமாள் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்த இளையபெருமாள் - பழுத்த பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்.

தீண்டாமை ஒழிப்புக்கு - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை அவசியம் என்று இளையபெருமாள் கமிட்டி முக்கிய பரிந்துரையைக் கொடுத்தது.

தந்தை பெரியாரின் சீடரான மானமிகு கலைஞர் அவர்கள் அந்தப் பரிந்துரையை எடுத்துக்காட்டி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான மசோதாவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறும்படிச் செய்தார் (30.11.1970).

மன்னையில் தமிழர் தலைவர் முன்னிலையில் கழகத்தில் இணைந்த இளைஞர்கள் (8.9.2018)

இப்பொழுதெல்லாம் யாருங்க ஜாதியைப் பார்க்கிறார்கள்? - நாங்கள் விட்டாலும் வீரமணி விட மாட்டார் போலிருக்கிறது என்று விதண்டாவாதம், விளக்கெண்ணெய், வெண்டைக்காய் விவாதம் செய்யும் வேதியக் குலத்தின் குறும்பு - விஷமப் பேச்செல்லாம் வெளி வேஷம் - பச்சையான உதட்டசைப்புதான் என்பதை முக்கியமான பிரச்சினையில், முக்கியமான இடத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை எடை போட்டுத்தானே முடிவு செய்யவேண்டும்.

அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து 13 பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றனர். அதில் சிறீபெரும்புதூர் ஜீயரும் அடங்குவர். காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகரேந்திர சரசுவதியின் ஆசியும் உண்டு - அரசியல் வேடம் பூண்டிருந்தாலும், ஆரியத்தின் பாதுகாவலரான குல்லூகப் பட்டர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) பங்கும் முக்கியமாக உண்டு. பல்கிவாலா என்ற புகழ்பெற்ற வழக்குரைஞரை வாதாடச் செய்தவரும் இவரே! பல்கிலாவா பணம் ஏதும் பெற்றுக்கொள்ளாமல் ஓசியிலேயே வாதாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மண்ணை மணந்த மன்னார்குடி பொதுக்கூட்டம்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் பிரச்சினையில் முதற்கட்ட வெற்றியின் அடிப்படையில் மன்னார்குடியில் நேற்று (8.9.2018) மாலை நடைபெற்ற வெற்றி விழாப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாகவே நடைபெற்றது
தவிர்க்க இயலாத காரணத்தால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட இந்தப் பொதுக்கூட்டம் மூன்றாவதாக அறிவிக்கப்பட்டு நேற்று மாலை எழுச்சியுடன் நடைபெற்றது. முகம் சுளிக்காமல், கழகம் ஆணையிட்டால் கருத்தூன்றி கவலை எடுத்துக்கொண்டு கடமையாற்றுபவர்கள்தானே கருஞ்சட்டைத் தோழர்கள். அதன் முழு வீச்சை நேற்று மன்னை விழாவில் பார்க்க முடிந்தது. ஊரெங்கும் கழகக்கொடி ஆக்கிரமிப்பை அறிய முடிந்தது. சுவர் எழுத்து வாசகங்களும் மக்களைக் கவர்ந்து ஈர்த்தன.
கழகத் தோழர்களின் துடிப்பான முயற்சிக்கு கழகத் தலைவர் பாராட்டுரை வழங்கினார். மன்னை பொதுக்கூட்டம் பலதரப்பட்ட மக்களும் சங்கமித்த பொதுக்கூட்டமாகவே அமைந்தது பாராட்டுக்குரியது. தஞ்சை, திருச்சி, நாகை மாவட்டங்களிலிருந்தும் கழகத் தோழர்கள் திரண்டு வந்திருந்தனர்.

கழகத்திற்குப் புதிய வரவுகள்!
திராவிடர் கழக தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல் ஆகியோரது முன்னிலையில், தஞ்சாவூர் பாரத் அறிவியல் மற்றும் நிருவாகவியல் கல்லூரி மாணவர் சஞ்சை மற்றும் ஜோசப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர் ஊ.உமேசு ஆகியோர் 8.9.2018 அன்று மன்னார்குடி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இராஜசேகரன் எம்.ஏ., பி.எட்., (தென் கோவனூர்), அருண் பி.இ., (மன்னார்குடி) ஆகியோரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கழகத்தில் இணைந்தனர்.

பார்ப்பனர்களின் வட்டாரம் முக்கியமான பிரச்சினையில் எப்படிப் பாதுகாப்பு வளையமாக அவசர கெதியில் சூழ்கிறது என்பதையும் கவனிக்கத் தவறக்கூடாது.

ஊளையிடும் பார்ப்பனர்கள்

இந்தப் பார்ப்பனர்கள்தான் இட ஒதுக்கீட்டிற்கு ஜாதியை சமூகநீதியின் அடிப்படையில் அளவுகோலாகக் கொண்டுவரும் பொழுது - அய்யய்யோ ஜாதியைத் தீனி போட்டு வளர்க்கிறார்களே, இது நியாயமா?' என்று திரிநூலைக் கொஞ்சம் உருவி விட்டுக் கொண்டு ஆகாயத்துக்கும், பூமிக்குமாகத் தாவி ஊளை யிடுகிறார்கள் என்பதை பார்ப்பனர் அல்லாத மக்கள் ஊன்றிப் பார்த்து உணரவேண்டும். ஆரியத்தின் இந்த ஆலகால நஞ்சை' எல்லாம் ஆசிரியர் அலசி எடுத்துச் சொன்னார்! பார்ப்பனர்களின் மூலவேர் உச்சநீதிமன்றம்வரை செல்லுகிறது என்றும் எடுத்துரைத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் செல்லமாட்டார்கள் பார்ப்பனர்கள் - நேராக உச்சநீதிமன்றம் சென்று விடுவார்கள் (உச்சநீதிமன்றமா? உச்சிக்குடுமி மன்றமா?' என்று கழக ஊர்வலத்தில் முழங்குவோமே - அதனையும் இந்த இடத்தில் நினைவு கொள்க!).

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஜஸ்டிஸ் திரு.ஏ.வரதராஜன் என்ற பெருமகனை தந்தை பெரியாரின் ஆணையை ஏற்று சுயமரியாதைக்காரரான முதல்வர் கலைஞர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக நியமனம் செய்வதற்குக் காரணமாக இருந்தாரே! அதனால் உயர்நீதிமன்றம் தீட்டுப்பட்டு விட்டது என்று பார்ப்பனர்கள் நினைத்திருக்கலாம் என்று தமிழர் தலைவர் சொன்னபொழுது பலத்த கரவொலி எழுந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை எழுதியவர் பலேல்கர் என்பவர். அவர் யார் என்றால், ஓர் அர்ச்சகப் பார்ப்ப னரின் மகன் (அர்ச்சகர் மகன் உச்சநீதிமன்ற நீதிபதியாக முடிகிறது என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்க!).

பரம்பரை அர்ச்சகர் முறை செல்லாது என்று பரந்த முறையில் தீர்ப்பு எழுதுவதுபோல் எழுதி விட்டு, குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் அர்ச்சகர் ஆக முடியும் என்று ஆணியும் அடித்துவிட்டாரே!

ஆசிரியர் அணியும் ஈரோட்டுக் கண்ணாடி

ஈரோட்டுக் கண்ணாடி போட்டு எதையும் பார்க்கும் விடுதலை'யின் ஆசிரியர் அவர்கள், விடுதலை'யில் தலையங்கமாக எழுதினார். அதன் தலைப்பு என்ன தெரியுமா?

ஆபரேசன் வெற்றி, நோயாளி செத்தார்!'' (விடுதலை', 15, 16.3.1972).

எவ்வளவு அழகான ஆழமான தலைப்பு. (தலைப்பு என்பது விடுதலை'க்கே உரிய தனிச்சிறப்பு).

இரண்டாவது முறையும் கலைஞர் ஆட்சியில் (2006 இல் ஆட்சிக்கு வந்தபோது அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டது). இதற்கான சட்டம் - நிறைவேற்றப்பட்டதை கழகத் தலைவர் எடுத்துச் சொன்னதோடு, அதனை எதிர்த்தும் மதுரை சிவாச்சாரியார்கள் வழக்கம் போல் உச்சநீதிமன்றம் சென்றனர். (பார்ப்பனர் அல்லாதார் என்றால், இழிவானவர்களே என்ற எண்ணம் பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே இருக்கிறது என்பதை முடிவு செய்ய இன்னுமா காத்திருக்கவேண்டும்).

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கூறுகிறார்.

2015 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாடு சட்டம் செல்லும் என்றுதான் தீர்ப்பு வழங்கியது. ஆனாலும், ஊடகங்கள் பார்ப்பனர்கள் கைகளில் இருப்பதால், தலைகீழாகப் புரட்டி, சட்டம் செல்லாது என்று தீர்ப்பு வந்ததுபோல, திசை திருப்பினர். கலைஞரிடம் இதுபற்றி கேட்கப்பட்டபோது, ஆசிரியர் இதுபற்றி என்ன கருத்துக் கூறியுள்ளார்? என்பதைத் தெரிந்து சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

அப்பொழுது திருவாரூர் திருமணத்திலும், மதியம் நாகூரிலும் நான் இருந்தேன். பல இடங்களிலும் உடனடியாக தொடர்பு கொண்டு, தீர்ப்பின் உண்மை நிலை என்ன என்பதை அறிந்து, தீர்ப்பு நமக்குச் சாதக மாகத்தான் வந்திருக்கிறது என்று எடுத்துச் சொன்னேன்'' என்றார் மன்னைக் கூட்டத்தில் தமிழர் தலைவர். (பார்ப்பனர் அல்லாதாருக்கு வெற்றி கிடைத்தாலும், அதனைப் புரட்டிச் சொல்லும் அற்பத்தனம் என்பது பார்ப்பனர்களுக்கே உரித்தான கல்யாண' குணம்!).

கலைஞரின் செயலாக்கம்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் குறிப்பிட்ட இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர்களாக இருந்த கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆதரவாகவே இருந்தனர் என்பதையும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பிரச்சினையின் அடிப்படையிலேயே எடுத்துச் சொன்னது - பொது மக்களின் பொதுப் புத்தியில் மதிக் கத்தகுந்த ஒன்றே! ஆனாலும், செயலாக்கத்தில் மானமிகு கலைஞர் அவர்களின் அக்கறையும், தீவிரமும் முதல் இடத்தில் இருந்தது என்பதை யாரே மறுக்க முடியும்?

மனுதர்மத்தைப்பற்றி நாம் எடுத்துச் சொன்னால், நாங்கள் மறந்துவிட்டோம் - ஆனால், வீரமணி மட்டும் மனுதர்மத்தை மறக்கவில்லை'' என்று ஏதோ பரந்து விரிந்த கடல் போல - விரிந்த கருத்துகளின் கர்த்தாக்கள்போல கதைக்கிறார்களே பார்ப்பனர்கள்,  அது உண்மைதானா? இந்த வாரம்கூட தினமலரில்' அத்தகைய கடிதங்கள் இடம்பெறுகின்றனவே. அதற்கான பதிலடியையும் விடுதலை' கொடுத்திருக்கிறதே. (பார்க்க இவ்வார ஞாயிறுமலர், 8.9.2018).

மன்னார்குடி பொதுக்கூட்டம்
தலைமை:
பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணை தலைவர் - இராசகிரி கோ.தங்கராசு
வரவேற்புரை:
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் - ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் - இரா.முத்தரசன்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் - கவிஞர் கலி.பூங்குன்றன்
திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் - தலையாமங்கலம் பாலு
சிபிஎம் மாவட்டச் செயற்குழு - தமிழ்மணி
இந்திய தேசிய காங்கிரசு கட்சி நகர தலைவர் - கனகவேல்
மதிமுக திருவாரூர் மாவட்டச் செயலாளர் - பி.பாலச்சந்திரன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலர் - முருகையன்
திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் - தஞ்சை இரா.ஜெயக்குமார்
திராவிடர் கழக மாநில அமைப்பாளர் - இரா.குணசேகரன்
மாநில விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளர் - இரா.கோபால்
திராவிடர் கழக தஞ்சை மண்டலத் தலைவர் - வெ.ஜெயராமன்
திராவிடர் கழக தஞ்சை மண்டலச் செயலாளர் - மு.அய்யனார்
திராவிடர் கழக தஞ்சை மாவட்டத் தலைவர் - சி.அமர்சிங்
திராவிடர் கழக குடந்தை மாவட்டத் தலைவர் - கு.கவுதமன்
திராவிடர் கழக பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் - பெ.வீரையன்
திராவிடர் கழக தஞ்சை மாவட்டச் செயலாளர் - அ.அருணகிரி
திராவிடர் கழக குடந்தை மாவட்டச் செயலாளர் - சு.துரைராசு
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் - மா.அழகிரிசாமி
பகுத்தறிவு ஆசிரியர் அணி மாநில அமைப்பாளர் - சி.இரமேசு
திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் - கோ.செந்தமிழ்ச்செல்வி
திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் - அ.கலைச்செல்வி
திருவாரூர் மாவட்டத் தலைவர் - வீ.மோகன்
திருத்துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் - கீ.முருகையன்
தாம்பரம் மாவட்டத் தலைவர் - முத்தையன்
திருச்சி மாவட்டத் தலைவர் - ஆரோக்கியராஜ்
அரியலூர் மண்டலத் தலைவர் - காமராஜ்
அரியலூர் மாவட்டத் தலைவர் - நீலமேகம்
நன்றியுரை: நகரத் தலைவர் - ஆர்.எஸ்.அன்பழகன்

மனுதர்மம் மட்டகரமானதுதான் - அதைக் குப்பையில் போடுங்கள்!'' என்று ஒரு பித்துக்குளி பார்ப்பனனையாவது சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். சங்கராச்சாரியாரையோ, ஜீயரையோ கருத்துகள் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

எப்படி கருத்துக் கூறுவார்கள்? கூற மாட்டார்கள் என்பதற்கு மனுதர்மத்திலிருந்து ஒரு சுலோகத்தை எடுத்துக்காட்டினார் ஆசிரியர் (எதையும் ஆதாரத்தோடு - புத்தகமும், கையுமாய் எடுத்துக் கூறும் தனித்தன்மை நம் தலைவருக்கே உண்டு!).

''பிராமணன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத்தக்கவனாயிருக்கிறான். மனிதர்களுக்குள் மிகவும் உயர்ந்திருக்கிறான் என்பதில் கேட்க வேண்டியதில்லை. பின்னும் உலகத்தாருக்கு நம்பத் தகுந்த பிரமாணமாகவிருக்கிறான். இவ்விஷயத்தில் அவன் உபதேசிக்கிற வேத மந்திரமே காரணம்'' (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 11, சுலோகம் 84).

இதனை எடுத்துக்காட்டியபோது, குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் அதிர்ந்து காணப்பட்டனர் (மனுதர்மத்தை தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஏன் எரித்தனர் என்பதை எண்ணுங்கள்!).

40 மணித்துளிகள்தான் பேசினார் தமிழர் தலைவர் என்றாலும், ஆதியந்தம் முதல் தற்காலம் வரை அலசி எடுத்தார்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner