எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முழு வீச்சில் வெற்றி! வெற்றி!!

புதுடில்லி, செப்.10 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் இன்று (10.9.2018) முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரசு கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்குப் பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி இன்று (10.9.2018) முழு அடைப்புப் போராட்டம்  வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி, கருநாடகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட தனியார் வாகனங்கள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. தமிழகத்தில் பாதுகாப்புடன் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில் முழு அடைப்பில் பங்கேற் றுள்ள காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் சாலை மறியல், ரயில் மறியல், ஆர்ப்பாட்டம் என தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட்டிலிருந்து ராம்லீலா மைதானம் நோக்கி நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி பங்கேற்றார். அவருடன் குலாம் நபி ஆசாத் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மறியல்கள் - பேரணிகள் - ஆர்ப்பாட்டங்கள்!

ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் காங்கிரசு கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புவனேஸ்வரில் ரயில் மறியல், மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சாலையில் அமர்ந்து பேப்பர் படித்தும் ஆர்ப் பாட்டம் நடத்தினர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயவாடாவில் இந்திய கம் யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெலங்கானாவில் அய்தராபாத் மற்றும் யதாத்ரி புவனகிரி மாவட்டம் போங்கில் பகுதியில் காங்கிரசு கட்சியினர் போராட்டம் நடத்தினர். குஜராத் மாநிலம் பரூச் நகரில் போராட் டக்காரர்கள் சாலையின் நடுவே டயர்களை கொளுத்திப் போட்டு பேருந்து போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் 100 சதவீதம் கடைகள் அடைப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளது. நீலகிரியில் இருந்து கேரளா, கர்நாடகாவுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

முழு அடைப்பு ஆதரவாக மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காரைக்காலில் 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக் குச் செல்லவில்லை. காரைக்காலில் மீன் விற்பனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியிலிருந்து கேரளா செல்லும் பேருந்துகள் களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. தென்காசியிலிருந்து கேரளா வுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை

தமிழகத்தில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் திறக்கப்பட்டுள்ளன. ஆட் டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்பட வில்லை. மணல் லாரிகளும் இயக்கப்படவில்லை. புதுச்சேரியில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. ஆட்டோ வேன்களும் இயக்கப்படவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

எதிர்க்கட்சிகள் அறிவித்து இன்று நடைபெற்ற பாரத் பந்த் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.