எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆர். ராமச்சந்திரன்

(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும்  திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)

நேற்றைய தொடர்ச்சி...

உயர்கல்வி நிறுவனங்களின்  மீதான தேசிய கல்வி ஆணையத்தின் கட்டுப்பாட்டு செயல்பாடுகளில்  நேரடி அரசியல் குறுக்கீடுகள் செய்வதற்கு பெரிதும் வசதி செய்து தருவதாக இந்த மசோதாவின் வடிவம் அமைந் துள்ளது. இதன் விளைவு உயர்கல்வி நிறுவனங்களில் இந்துத்துவ செயல் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு  வழி வகுப்பதாக இது இருக்கும். உயர்கல்வி நிறுவனங்களுக்கு  தேசிய கல்வி ஆணையத்தால் வழங்கப்படுவதாகக் கூறப்படும் குறைந்த அரசாட்சி, நிறைந்த மேலாண்மை என்ற உறுதிமொழியும்,  மக்களின் உயர்கல்விக்கு உதவ வேண்டிய அரசின் கடமைகளை சிறிது சிறிதாக திரும்பப் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்வித் துறையில் லாப நோக்குடன் நுழைவதற்குக் காத்திருக்கும் தனிப்பட்டவர்களுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கும் எளிதான ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுப்பதற்குமான  ஒரு சாக்குதான் இது.

இந்திய உயர்கல்வி ஆணைய சட்டத்தை விரிவாக நாம் ஆய்வு செய்வதற்கு முன்பு,  நிர்வாகத்தின் மிகுந்த உணர்ச்சியற்ற தன்மையும், உயர்கல்வி மீது அரசு கொண்டிருக்கும் முழுமையான அலட் சியத்தையும்  கீழ்க்கண்டவற்றிலிருந்து அளவிட்டு நம்மால் தெரிந்து கொள்ள முடியும். இந்திய உயர் கல்வி ஆணைய சட்டம் ஒரு முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், என்னவெல்லாம் நடக்கும் என்பதைத் தெரிவிப்பதாக அது இருக்கிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்றவை என்று கூறப்படும் 25 அய்.அய்.டி.க்கள் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இப்போது உள்ளன. பல்வேறு கால கட்டங்களில் உருவாக் கப்பட்ட இந்த நிறுவனங்களில், திருப்பதி, பாலக்காடு, தார்வாடு, பிலாய், கோவா, ஜம்மு ஆகிய 6  அய்.அய்.டி.க்கள் 2015-2016 இல் துவக்கப் பட்டவை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் என்று இந்த  அய்.அய்.டி.க்கள் அனைத்தும் பட்டியலிட் டுள்ள போது,  மும்பை மற்றும் டில்லி   அய்.அய்.டி.க்கள் உயர்சிறப்பு வாய்ந்த நிறுவனங்கள் என்று அண்மையில் தேர்ந் தெடுக்கப் பட்டுள்ளன. மற்ற  அய்.அய்.டி.க்களை விட அதிக அளவிலான தன்னாட்சியை இந்த இரு  அய்.அய்.டி.க்களும் அனு பவிக்கும் என்றும், அடுத்த 5 ஆண்டு களுக்கு ஆண்டொன்றிற்கு 1000 கோடி ரூபாய்  நிதி உதவி பெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட 6  புதிய  அய்.அய்.டி.க்கள் துவங்கப்பட்டு  இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும், இவை களுக்கான இயக்குநர்கள் நியமிக்கப் பட்டுள்ள போதிலும்,  அவற்றின் மேலாண்மைக் குழு ஆளுநர்கள் இன்னமும் அரசால் நியமிக்கப்பட வில்லை.  இந்த ஒவ்வொரு  அய்.அய்.டி.க்கும் நியமிக்கப்பட்ட இயக்கு நருடன் சேர்ந்து இரு உறுப்பினர் குழுவின் தலைவராக மனிதவள மேம்பாட்டுத் துறைச் செயலாளர் இந்த 6 அய்.அய்.டி.க்களுக்கும் செயல்படுவார். இந்த புதிய  அய்.அய்.டி.க்களில் பல முக்கியமான துறைகளுக்கும் போதுமான அளவு ஆசிரியர்கள் இல்லை.  எனவே, அடையாளம் காணப்பட்ட இதர அய்.அய்.டி.க்கள் இவற்றை வடிவமைக்கும் தலைமை  அய்.அய்.டி. ஆக செயல்பட்டு, தேவைப்படும் துறைகளில் தேவைப்படும் ஆசிரியர்களை அனுப்பி வைத்து உதவி செய்யக் கூறப்பட்டுள்ளது. இதுபோல ஜம்மு நிறுவனத்துக்கு டில்லி நிறுவனமும்,  பிலாய் நிறுவனத்துக்கு அய்தராபாத் நிறுவனமும் தலைமை நிறுவனங்களாக செயல்படும். இந்த புதிய நிறுவனங்களின் செலவினத்தின் ஒரு பகுதி, தலைமை நிறுவனத்தின் நிதியிலிருந்து செலவிட்டுக் கொள்ளப்பட  வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டி ருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அத்துடன்  இந்த தலைமை நிறுவ னங்கள் தங்களது சொந்த திட்ட செலவினங்களுக்கான நிதி திரட்டுவதைத் தாங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையிலேயே உள்ளன.

ஊதியம் மற்றும் கட்டுமானச் செலவுகள்  நீங்கலான மற்ற செலவினங்கள் அனைத்தையும்,  2017 பொதுவான நிதி விதிகள் இப்போது ஒப்புதல் அளித்துள்ளபடி, இந்த நிறுவனங்கள் தங்களுக்குள்ளாகவே நிதி வசதிகளை உற்பத்தி செய்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. எடுத்துக்காட்டாக,; சிறப்பான தொழில் துறை பாடங்களில் தொடர் பயிற்சி நிறுவனங்களை நடத்துவதற்கு, எதேச்சதிகாரமாக  வசூலிக்கப்படும் மிக உயர்ந்த கல்விக் கட்டணத்திலிருந்தோ  அல்லது முன்னாள் மாணவர் அமைப்புகளால் திரட்டி வைக்கப்பட்டுள்ள நிதியிலிருந்தோ  அல்லது புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் உயர்கல்வி நிதியளிக்கும் முகமையிடமிருந்து கடனாகப் பெற்றோ செலவு செய்யப்படவேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த முகமை மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் கனரா வங்கியின் கூட்டு நிறுவனமாகும். அய்.அய்.டி.க்கள் தங்கள் பணியாளர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் 40 சதவிகித அளவிற்கு தங்களது சொந்த நிதியை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது. அப்படி யானால், போட்டி நிறைந்த தேசிய அளவிலான தேர்வுகளில் வெற்றி பெற்று வந்து இந்த புனிதமான  அய்.அய்.டி.க்களில் சேரும் மாணவர்களின் கதி என்ன?  ஆனால், அதைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்?

இந்திய உயர்கல்வி ஆணையத்தின் மீது முழு கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டிருப்பதற்கு ஏற்றதொரு வழியில் ஆணையம் வடிவமைக்கப்பட் டுள்ளதால்,  தனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கு இதுவரை மனிதவள மேம்பாட்டுத் துறை  என்ன செய்து வந்ததோ, அதையே பல்கலைக் கழகங்களுக்கும் செய்வதற்கு இந்த ஆணைய சட்டம் வழி வகுக்கும். இந்த கல்வி ஆணை யம் ஒரு முறை நிறுவப்பட்டுவிட்டால், பல்கலைக் கழக விவகாரங்களில் நேரடி அரசியல் தலையீட்டிலிருந்து பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் அளித்து வந்த ஓரளவிலான பாதுகாப்பும் சிறிது சிறிதாகக் காணாமல் போய்விடும். பல்கலைக் கழகங்களின் தன்னாட்சியை உயர்த்துவது என்ற பெயரில்,  தங்களது நிதித் தேவை களை பல்கலைக் கழகங்களே நிறைவு செய்து கொள்வதற்காக அவை வற்புறுத்தப்படும்.

பல்கலைக் கழக மானியக் குழுவினை மாற்றி அமைக்க வேண்டிய தேவை பற்றி கல்வி ஆணைய சட்ட வரைவின் முன்னுரையில் கூறப்பட்டுள்ளதாவது: "பல்கலைக் கழக மானியக் குழுவிற்கு அளிக்கப் பட்டுள்ள கட்டளையில் எதிரொலிக்கும் தற்போதுள்ள கட்டுப்பாட்டு கட்டமைப்புக்கு, உயர்கல்வியில் மாறிக் கொண்டு வரும் முன்னுரிமைகளின் அடிப்படையில் மறு விளக்கம் அளிக்கப்படுவது தேவைப்படுகிறது." பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு அளிக்கப்பட்ட கட்டளை மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எந்த ஒரு விளக்கமும் இந்த அறிவிப்பில் அளிக்கப்படவில்லை என்று டில்லி பல்கலைக் கழக மிராண்டா கல்லூரி இயல்பியல் பேராசிரியர் ஒருவர் கூறுகிறார். உயர் கல்வியில் மாறிக் கொண்டு வரும் முன்னுரிமைகளின் தேவை என்ன என்பதும், தற்போதைய கட்டமைப்புக்கு திருத்தங்கள் ஏன் தேவை என்பதும் அதில் தெரிவிக்கப் படவில்லை.

பல்கலை மானியக் குழுவையும், அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தையும் மாற்றி 'உயர்கல்வி அதிகார கட்டுப்பாட்டு அமைப்பு' என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பை உருவாக்குவது பற்றி  2017 ஜூலையில் மனிதவள மேம்பாட்டுத் துறை திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டம் தொடர்பான எந்த ஒரு ஆவணமும் இல்லாத நிலையில், இரண்டு மாதங் களுக்குள் இந்த திட்டத்தை அமைச்சகம் அமைதியாகக் கைவிட்டு விட்டது. தற்போதுள்ள பல்கலைக் கழக மான்யக் குழு நடைமுறையை  மீண்டும் ஒரு வழியில் புதுப்பித்துக் கொள்வது, ஒரு புதிய சட்டம் உருவாக்கப்படு வதற்காகக் காத்திருப்பதை விட மேலானது என்று 2017 ஆகஸ்டில் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உயர்கல்வித் துறை என்னும் இந்த மிகமிக முக்கியமான துறையை நிர்வ கிப்பதில்   முழுமையான நேர்மையான எண்ணத்தையும் முயற்சியையும் அரசு கொண்டிருக்கவில்லை  என்ற உண்மையை இது காட்டுகிறது.

(தொடரும்)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner