எழுத்துரு அளவு Larger Font Smaller Font

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்

பேரறி வாளன் திரு"                      - குறள் (215)

என்ற குறள் மொழிக்கேற்ப பணம் சேருவதோ, பணத்தைச் சேர்ப்பதோ முக்கியமல்ல; முட்டாள் களிடமும், அயோக்கியர்களிடம் கூட பணம் தவறான வழிகளால் சேருகிறது; அல்லது சேர்க்கப்படுகிறது. அது பெருமை அல்ல.

இன்றைய ஆடம்பர 'டம்பாச்சாரிகள்' (அக்காலத்தில் 'டம்பாச்சாரி' என்ற ஒரு தமிழ்ப் படமே கூட சுமார்  75 ஆண்டுகளுக்கு முன் வந்தது) நாளைய சிறைச்சாலைவாசிகள் அல்லது மஞ்சள் கடிதாசி கொடுத்துவிட்டு, ஓடி ஒளிந்து, மக்கள் முகங்களில் விழிக்க வெட்கப்பட்டு ஒதுங்கிடும் ஒப்பனை கலந்த மனிதர்கள்!

சிக்கனமும், எளிமையும் கொண்ட வாழ்வு வாழுவோர் ஒரே சீரான நிலையில் வாழ்ந்து மறைந்தாலும் நல்லவர்கள் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று நிலைத்தவர்கள் ஆவார்கள்.

பல பள்ளிகளில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற சுயமரியாதை வீரர் மானமிகு அய்யா இராமசாமி அவர்கள் - நேற்றைய 'வாழ்வியல்' கட்டுரை இறுதியில் குறிப்பிடப்பட்ட தொண்டறத்தின் தூய உருவம்.

தந்தை பெரியாருக்கும், திராவிடர்  கழகத்திற்கும் கண்ணுக்குத் தெரிந்த உறுப்பினர்களைவிட "கண்ணுக்குத் தெரியாத கடமை வீரர்கள்" - கொள்கைப் பற்றாளர்கள் ஏராளம் உண்டு. அதில் மானமிகு ஆசிரியர் ராமசாமி அவர்களும் ஒருவர். தலைமை ஆசிரியராக பல ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, நாணயத்தை முத்திரையாகப் பெற்று சக ஆசிரியர்கள், மாணவர்கள் பலராலும், கழகத் தோழர்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவர் இவர் (வயது 84).

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஹார்விபட்டி பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தன்னந் தனியராக வாழ்ந்து கொண்டிருப்பவர்; தனது தேவைகளைதானே பூர்த்தி செய்யும் அன்றாட வாழ்க்கை அவரது வாழ்க்கை.

பக்கத்து வீட்டு சகோதரி ஒருவர் சமைக்கும் காய்கறிகள் - குழம்பு போன்றவற்றை தயார் செய்து இவருக்குத் தருவதும், சோற்றை இவரே வடித்துக் கொண்டு தன் கடமைகளை தானே நடத்திக் கொண்டு 'விடுதலை' நமது கழக வெளியீடுகள் மற்றும் பயனுறு பகுத்தறிவுப்பனுவல்களைப் படித்து தனது வாழ்நாளை கழித்து வருபவர்.

விளம்பர வெளிச்சத்தை விரும்பாதவர் (இப்படி நாம் எழுதுவதுகூட அவருக்குப் பிடிக்காது என்பது நமக்குத் தெரியும் என்றாலும் மாமனிதர்களையும், அவர்களிடம் மேலோங்கிய மனிதத்தையும் கண்டு, கேட்டு மற்றவர்களும் பின்பற்றினால் 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே' என்ற இலக்கணத் திற்குரிய இலக்கியம் கிடைக்கும் என்பதால் எழுதுகிறோம்).

இவர் தனது கெட்டியான சேமிப்பிலிருந்து தந்தை பெரியார் அறக்கட்டளைக்கு - ஜெயங் கொண்டத்தில் சிறப்பாக இயங்கும் (அரியலூர் மாவட்டத்தின் பள்ளிகளில் முதல் வரிசையில் இருக்கும் சுமார் 2000 மாணவ, மாணவிகள் கற்கும் பள்ளி பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளையால் நடத்தப்படுவது) பள்ளிக்கு 30 லட்சம் ரூபாய் தந்தார். ரூ.ஒரு கோடிக்கு மேல் செலவழித்து பல வகுப்பறைகள் கொண்ட கட்டடம் அமைக்கப்பட்டு அவரது தந்தை பெயரில் உள்ளது!

கொடுத்த நன்கொடைகள் சரியாக செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை நமது கழக நன்கொடையாளர்கள் பலரும் நேரில் வந்து கண்டு மகிழ்ந்துள்ளார்கள். (5 லட்சம் ரூபாய்க்கான கொடை அளித்த அன்றைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் உட்பட)

தலைமை ஆசிரியர் நமக்கு மட்டுமல்ல; இயக்கப் பணிகள், பெரியார் உலகப் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் 3 லட்சம் ரூபாய் - அதற்கு முன் பல நன்கொடைகள். எளிய வாழ்வு வாழ்ந்து இனிய தொண்டறத்தை, சாதாரண எவ்வித படாடோபமும் காட்டாமல் செய்து வருபவர்!

அமெரிக்காவில் ஹார்வேடு பல்கலைக் கழக தமிழ்  இருக்கை அமைப்பிற்கு 5 லட்ச ரூபாய் அக்குழுவினருக்கு ஆசிரியர் அமைப்புத் தலைவர் நண்பர் பகுத்தறிவாளர் முத்துசாமி அவர்கள் குழுவினரிடம் அளித்து மகிழ்ந்தார்.

இப்படிப் பலப்பலரின் எதிர்பாரா உதவியாலும், ஒத்துழைப்பிலும் நமது கல்வி, மருத்துவ, பகுத்தறிவுப் பணிகள் நாளும் சிறந்தோங்கி நடக்கின்றன என்பதை தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாளில் பெருமையுடன் வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறோம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner