எழுத்துரு அளவு Larger Font Smaller Font

**ஆர். ராமச்சந்திரன்**

(62 ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் பல்கலைக் கழக மானியக் குழுவின் இடத்தில் இந்திய உயர் கல்வி ஆணையத்தை உருவாக்கி வைக்கும் முயற்சி, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்தது முதல் உயர்கல்வி மீது நேரடி யாகவும், மறைமுகமாகவும்  திட்டமிட்டு நடத்தப்பட்டு வரும் உச்சநிலைத் தாக் குதலுக்கு சாட்சியாக அமைந்துள்ளது.)

நேற்றைய தொடர்ச்சி...

இதற்கு முன் திட்டமிடப்பட்ட உயர்கல்வி அதிகார கட்டுப்பாட்டு அமைப்பினை உருவாக்குவது பற்றிய திட்டத்தைப் பொருத்த அளவிலாவது, அது பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட நடைமுறையாவது மேற்கொள்ளப் பட்டது. அமைச்சகம் எந்த அளவுக்கு எதேச்சதி காரத்துடனும், சிந்தனையின்றியும் செயல்பட்டு வருகிறது என்பதைக் கீழே குறிப்பிட்டுள்ளது உறுதிப்படுத்தும். நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் அல்லது நாம் என்ன செய்யவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் அமைச்சகம் செயல்பட்டுக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. "பல்கலைக் கழக மானியக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள்" பற்றி ஆலோசனைகளைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு 15 நாள் அவகாசம் அளித்து, மனிதவள மேம்பாட்டுத் துறையுடன் தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக் குழு ஜூன் 10 ஆம் தேதியன்று ஓர் அறிக்கையை வெளியிட்டது என்றும், ஆனால் இந்த 15 நாள் கால அவகாசம் முடிவதற்கு இரு நாட்களுக்கு முன்பே,  உத்தேசிக்கப்பட்டுள்ள இந்திய உயர்கல்வி ஆணைய சட்ட மசோதா மீதான பொதுமக்கள் கருத் தினை 10 நாள் அவகாசத்தில் ஜூலை 7 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி மனிதவளமேம்பாட்டுத் துறை அறிக்கை வெளியிட்டது என்றும், பல்கலைக் கழக மானியக் குழுவை கலைக்கும் மிகமிக முக்கியமான விவகாரத்தில்  பதில் அளிக்க வெறும் 10 நாள் அவகாசம் மட்டுமே அளிக்கப்பட்டது என்றும் அபாவ் தேவி ஹபீப் கூறுகிறார்.

பொதுமக்களின் கருத்துகளை நாடாளுமன்ற நிலைக் குழு பரிசீலனை செய்வதற்கு முன்பாகவே பல்கலைக் கழக மானியக்குழுவைக் கலைப்பது என்ற முடிவை மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் மேற் கொண்டுவிட்டது. அரசமைப்புச் சட்டப்படியான நாடாளுமன்ற நடைமுறை மீதோ அல்லது பிரச் சினையுடன் தொடர்புடையவர்கள் அளிக்கும் கருத்துகள் பற்றியோ சிறிதும் மரியாதை அற்ற ஒரு அரசை நாம் சந்தித்து வருகிறோம் என்ற உண்மையை இது உறுதிப்படுத்துகிறது. நியூஸ் லாண்டரி என்ற தனது வலைதள செய்தியிதழில், "இந்தியாவில் உயர்கல்வியை மேம்படுத்தி நவீனப்படுத்துவதன் ஒரு முக்கியமான ஒரு படி இந்த ஆணையம் என்று பெருமை பாராட்டிக் கொண்டாலும்,  பொதுமக்களின் பரிசீலனையின் முன் நிற்கும் ஆற்றலை இந்தத் திட்டம் பெற்றுள்ளது என்பது பற்றியே அரசு நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்று நன்றாகத் தெரிகிறது" என்று எழுதியுள்ளார்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இரு ஆட்சிகளிலுமே,  கடந்த சில ஆண்டுகளாக உயர்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு பொதுவாகவே குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்போது அது மிகமிக மோசமான நிலையில் உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக பட்ட மேற்படிப்பு உதவித் தொகைகள் குறைந்து வந்துள்ளன. தேசிய தகுதித் தேர்வு அல்லாத இதர படிப்புதவித் தொகைகளை நிறுத்துவ தற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன என்று கூறப்படுகிறது. ஆய்வுத் திட்டங்களுக்கான பணம், அத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகும்,  பல மாதங்கள் கழித்தும், சில நேரங்களில் ஆண்டுகள்கடந்தும் வருவதாக உயர்கல்வி நிறுவன ஆய்வர்கள் கூறுகின்றனர். முன்பு கூறியது போலவே,  அய்.அய்.டி.கள் மட்டுமல்லாது இதர கல்வி நிறுவனங்களும், தாங்களாகவே நிறுவனத்துக்கு உள்ளே இருந்து நிதி திரட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன. கட்டண உயர்வின் மூலம்தான் இதனைச் செய்யமுடியும் என்று கூறும் தேவ் ஹபீப், விரிவாக்கம் மட்டுமல்லாமல் மத்திய மாநில பல்கலைக் கழகங்களின் பராமரிப்பு செலவுக்கான சுமை இப்போது மாணவர்கள் மீது மாற்றப்பட்டுள்ளதாக கூறுகிறார். "இந்த இரு பாதிப்பு களும், பொதுமக்களுக்கு உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதுடன்,  பொதுத்துறை மற்றும் தனியார் துறை கல்வி நிறுவனங்களிடையே ஒரு சம விளையாட்டு களத்தை  உருவாக்குவதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சந்தை உயர்வுக்கும் வழி வகுக்கின்றன".

குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தின் தேவைகளைப் பரிசீலனை செய்து அதன் அடிப்படையில்  கல்வி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான மானியங்களைப் பல் கலைக் கழகங்களுக்கு அளிப்பது  பல்கலைக் கழகக் குழுவின் ஒரு முக்கியமான பணியாகும். உத்தேசிக்கப் பட்டுள்ள கல்வி ஆணையத்துக்கு இந்த மானியம் அளிக்கும் பணி வழங்கப்படவில்லை; அது கல்வி விவகாரங்களை மட்டுமே கவனிக்கும். மானியம் வழங்கும் பணி மனிதவள மேம்பாட்டுத் துறை  அமைச்சகத்தினால், அதன் கீழ் இருக்கும் ஏதோ ஒரு வகையிலான அமைப் பினால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால்,  அப்பணி அரசியல் வாதிகள், அதிகாரிகள் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான். இது பற்றி நாம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறோம். அதிக எண்ணிக்கை கொண்ட உயர் கல்வி நிறுவனங்களின் தேவைகளை, குறிப்பாக அவற்றின் கல்வித் தேவைகளை மதிப்பீடு செய்வதற்கான அமைப்புகளும், கல்வி வல்லமையும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருக்கின்றதா?

போதுமான அளவு நிதி அளிப்பதன் மூலம் மட்டுமே உயர் கல்வி நிறுவனங்களின் கல்வி தரம் மற்றும் ஆய்வுப் பணிகளை மேம்படுத்த இயலும். இந்த இரு செயல்களும் பிரிக்கப்பட்டு, மானியம் வழங்கும் பணி அமைச்சகத்திடம் ஒப்படைத்திருப்பது, ஒரு குறிப்பிட்ட கல்வி நிறுவனத் துக்கு  அளிக்கப்படும் மானியம், ஆளுங்கட்சியின் அரசியல் செயல் திட்டத்திற்கு அந்த நிறுவனம் எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதைப் பொருத்து இருக்கக்கூடும். டில்லி அய்.அய்.டி.யில் உள்ள கிராமப்புற மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப மய்யம் பசு அறிவியல் என்னும் பஞ்சகாவ்ய  ஆய்வு தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதாகவும், அதன் போலியான ஆய்வு நடவடிக்கைகளுக்கு தாராளமாக நிதி வழங்கப் படுவதாகவும் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மற்ற துறைகளோ நிதி பற்றாக்குறையை சந்திக்க வேண்டும் அல்லது முகமையிடம் கடன் உதவி கேட்டு நிற்கவேண்டும். எனவே, இப்போது உத்தேசிக்கப் பட்டுள்ள திட்டப்படி, பல்கலைக் கழகங்களும் கூட தங்களது கல்விக் கட்டணங்களை உயர்த்தவோ அல்லது சிறப்பு சேவை அளிப்பது போன்ற இதர வழிகளில் நிதி திரட்டவோ கட்டாயப் படுத்தப்படுகின்றன. இதனால்  கல்வி தர மேம்பாட்டில் அவற்றால் கவனம் செலுத்த இயலாமல் போய்விடுகிறது.

ஒரே மாதிரியான தரங்களை உருவாக்குவதன் மூலம்,  உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது தனது முக்கிய நோக்கங்களில் ஒன்று என்று இந்த சட்டமசோதாவின் முன்னுரை கூறுகிறது. ஒரே மாதிரியான தரத்தை மேம்படுத்துவது என்பது உயர்கல்வி தரத்தின் உணர்வுக்கே எதிரானது.  நாட்டில் நிலவும் பன்முகத்தன்மை கொண்ட  சமூக, கலாச்சார சூழல் காரணமாகவும், மாநிலங்களிலும், பிராந்தியங் களிலும் நிலவும் மாறுபட்ட மனிதவள, கனிமவள, நிதி ஆதாரங்கள்  காரணமாகவும்,  கல்வியின் உயர்தரத்துக்கு வளைந்து கொடுக்கும் தன்மையும், பன்முகத் தன்மையும் தேவையானவை. இதற்கு மாறாக, உயர் கல்வி நிறுவனங்களுக்கு குறைந்த அளவு தரத்தையும், பாட திட்டத்தையும் நிர்ணயித்து,  தங்களது சொந்த பாடதிட்டங்களையும், தரங்களையும் நிர்ணயித்துக் கொள்வதற்கு தனிப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடம் அளிக்க வேண்டும் என்ற கட்டளை பல்கலைக் கழக மான்யக் குழுவிற்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள ஆணையத்தின் நோக்கங்கள்,  கூடுதலான தன்னாட்சி அளிக்கும் கட்டுப்பாட்டு நடைமுறைகளை சீர்திருத்துவதும், கல்வி நடைமுறையின் புனிதமான வளர்ச்சிக்கு வழிகோலுவதும்,  கல்வி நிறுவனங்களின் மேலாண்மைப் பிரச்சினைகளில் இனியும் குறுக்கிட முடியாத அளவுக்கு கட்டுப்பாடுகளின் அளவைக் குறைப்பதும்" என்று கூறியிருந்தாலும், அந்த சட்ட வரைவு மசோதா அதற்கு நேர் மாறான வேலையையே செய்திருக்கிறது.

(தொடரும்)

நன்றி: 'ஃப்ரண்ட் லைன்' 17-08-2018

தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner

Banner
Banner
Banner