எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலக மகளிர் நாள் சிந்தனைகள்!

பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணே -

மனுவை எதிர்க்க வா! மனிதத்தை மீட்க வா! வா!!

பெண்ணே பெண்ணே நினைத்துப் பார்,

பெரியாரின் தொண்டை உணர்ந்து பார்!

மண்ணுரிமையைவிட முக்கியமானது

பெண்ணுரிமை; காரணம் அது மானுடத்தின் சரி பகுதி!

என்றவர் தந்தை பெரியார்!

உங்கள் கைகளிலும், மூளைகளிலும்

பூட்டியிருந்த  ‘சமூக விலங்'கொடித்து,

விடுதலைப் பறவைகளாக உங்களை ஆக்கியவர் அவர்!

‘‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு'' (பயிர்ப்பு என்றால் அசிங்கம்)

என்று கூறி, அதனுள்

உங்களை - காலங்காலமாக அடைகாக்க வைத்த நிலை மாற்றி,

வீரம், துணிவு, யாருக்கும் தலை வணங்காத பீடுநோக்கு,

இயற்கை அழகுக்கு எதிராக செயற்கை அழகைத் தேடாமல்

இயற்கை அழகுடன் எழிலோடும், எழுச்சியோடும்

வாழுங்கள் - வளருங்கள் - சுதந்திர வாழ்வின்

சொக்கத் தங்கங்களாக மிளிருங்கள் என்று

உங்கள் நெஞ்சில் உரமூட்டி,

உங்களது மறுக்கப்பட்ட உரிமைகளை

மீட்டெடுத்துத் தந்தவர் தந்தை பெரியார்!

பிறவி பேதம் என்ற பெருங்கொடுமையை

சுயமரியாதை கோடரி கொண்டு வெட்டிச் சாய்த்த

வீரத் தலைவர் அவர்!

பிள்ளைக்காக ஏங்காதே! பிள்ளைக்காக வீங்காதே!

எள்ளி நகையாடுவர் எவராயினும்

அவரைத் தலைகுனிய வைக்க

உன் கருப்பையையே அறுத்துவிட்டு

இனி நான் ஒரு சுதந்திரப் பெண் என்று

உலகுக்குப் பிரகடனப்படுத்தி

உலகத்தை உன் பக்கம் திருப்பு!

எதிலும் குறைந்தவர் அல்ல நீங்கள்;

மறைந்து வாழாதீர்; மகிழ்ச்சியில் திளைக்க

எளிமையை, பகுத்தறிவைக் கொண்டு, அநீதி கண்டு

கொதித்தெழுந்து அதனைத் துடைத்தெறியும்

துணிவுள்ள வீரத்தினையே வெளிச்சமாக்கு

விடுதலைச் சங்கு ஊது பெண்ணே!  என் கண்ணே

என்று தந்தை தயார்படுத்தினார் உன்னை!

பின் ஏன் தயக்கம்?

இன்று அவரது திட்டங்கள் சட்டங்களாகி,

பொலிவுடனும், வலிவுடனும் ஆளுகின்றன!

இன்னமும் அச்சம் ஏன் உனக்கு?

எதிலும் நீ ஆணுக்குக் குறைந்தவர் அல்ல!

மேலே செல்; முன்னேறு!

மண்டியிட்ட காலங்கள் மடிந்த காலங்கள்

தலைமை தாங்க வாருங்கள் - எல்லாத் துறைகளிலும்

கெஞ்சிப் பெறுவதோ, கொஞ்சி மயங்குவதோ

அல்ல உங்கள் உரிமை;

அஞ்சியது அக்காலம் மிஞ்சி நின்று

வரலாறு படைக்க வா வெளியே!

உன் கதவை பெரியார்தம்

சுயமரியாதைத் திறவுகோல் திறந்துவிட்டது!

மீண்டும் மூட மதவெறியனும் -

ஜாதி ஆணவக்காரனும் மூட முயன்றால் கதவை உடை!

சிறைப் பறவை அல்ல! இனி நீ

சிறகடித்துப் பறக்கும் சுதந்திர வான்பருந்து என உணர்ந்து பற!

அழியும் அழகால் உன்னை உலகம் அளக்க அனுமதியாதே!

வழியும்  அறிவால் உன்னை உலகம் கணிக்கும் உந்து சக்தியாக மாறு!

தயக்கம் ஏன்? மயக்கம் ஏன்?

இதோ இந்த இயக்கம் உன் துணைக்கு வரும்

இலட்சியப் பயணத்தில் பீடுநடை போடு!

பெருமித வரலாறு படை! படை!!

ஆம்! இதோ உனது பெரும்படை; ஓரணி

திரண்டு வேலிகளையும், காலிகளையும்

வீழ்த்திவிட்டு விடுதலை வானில்

பறக்க வா! வரலாற்றைப் படைக்க வா!

பெரியார் கண்ட புரட்சிப் பெண்ணே, புத்தாக்கமே!

புயலே புறப்பட்டு வா! வா! விரைந்து வா!

மனுவை எதிர்க்க வா! மனிதத்தை மீட்க வா!

 

கி.வீரமணி

தலைவர் , திராவிடர் கழகம்.

 

8.3.2018

சென்னை