எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எதிர்ப்பாளர்களைக் கைது செய்தது தவறு; உடனே விடுதலை செய்க!

அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கை!

 

அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விரோதமாக   ராமராஜ்ஜியம் அமைக்க ரத யாத்திரை நடத்துவதற்கு அனுமதித்துவிட்டு, அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களைக் கைது செய்யலாமா? அதுவும் அண்ணாவின் பெயரால் கட்சியையும், ஆட்சியையும் நடத்துபவர்கள் இவ்வாறு செய்யலாமா? அனைத்துக் கட்சியினரையும் ஒன்று திரட்டி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா என்பவர் பெரியார் சிலை உடைக்கப்படும் என்று சமூக வலைதளத்தில் அறிவித்ததைத் தொடர்ந்து, வேலூரை யடுத்த திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்களால் சேதப்படுத்தப்பட்டது.

தமிழ்நாடே கொந்தளித்ததே!

இதன் எதிரொலியாக தமிழ்நாடே கொந்தளித்து எழுந் தது. பா.ஜ.க.வைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் கடுமையான அளவுக்குக் கண் டனங்களைத் தெரிவித்தன.

யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தன்னிச்சையாக அனைத்துத் தரப்பினர்களும், மாணவர்களும் பல் வேறு வடிவங்களில் ஆர்ப்பாட்டங்களையும், போராட் டங்களையும் நடத்தினர்.

அந்தக் கனல் அணைவதற்குள் புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை விடுதியில் நேற்றிரவு (19.3.2018) கோழைத்தனமாக தந்தை பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டது என்ற தகவல் தமிழ்நாட்டை கொதி நிலைக்கு ஆளாக்கி இருக்கிறது.

ராமராஜ்ஜிய ரத யாத்திரையா?

ராமராஜ்ஜியத்தை உண்டாக்குவோம் என்று கூறி, ராம ராஜ்ஜிய ரத யாத்திரை ஒன்று விசுவ இந்து பரிஷத்தால் மேற்கொள்ளப்பட்டு இன்று (20.3.2018) காலை நெல்லை மாவட்டத்தில் நுழைகிறது.

அமைதிப் பூங்காவாக இருக்கும் தமிழ்நாட்டை அமளிக்காடாக்க கத்தி தீட்டப்படுகிறது. இந்த மதவெறி ரத யாத்திரையை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்துக் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் குரல் கொடுத்தன. குரல் கொடுத்தும் வருகின்றன.

திராவிடர் கழகம் நடத்தும் சாதாரணப் பொதுக் கூட்டத் திற்கே அனுமதி கொடுப்பதில் பல்வேறு தடைகளை மேற்கொள்ளும் நிலைதான் தமிழ்நாட்டில் உள்ளது.

எதிர்ப்பதற்கு உரிமை உள்ளதே!

அதேநேரத்தில், தமிழ்நாடே பொங்கி எழுந்து எதிர்ப் புத் தெரிவிக்கும் ஒரு நிலையில், அதனையெல்லாம் புறந்தள்ளி, பெரிய அளவில் போலீஸ் பாதுகாப்பு கொடுத்து, ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி கொடுக்கப்படுகிறது என்றால், இதன் பொருள் என்ன?

யாத்திரை நடத்துவது ஜனநாயக உரிமை என்றால், அதனை எதிர்ப்பது என்பதும் ஜனநாயக உரிமைதானே! தனது எதிர்ப்பை ஜனநாயக வழியில் தெரிவிப்பவர்களைக் கைது செய்துவிட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக ராமராஜ்ஜியத்தை உண்டாக்கப் போகிறோம் என்பதை முன்னிறுத்தி நடைபெறும் ராமராஜ்ஜிய ரத யாத்திரைக்கு அனுமதி அளிப்பது - ஓர் அரசாங்கமே சட்ட விரோத செயலுக்குத் துணை போவது ஆகாதா?

தீ வைப்பவர்களை அனுமதித்துவிட்டு, அதனைத் தடுப்பவர்களைக் கைது செய்வது எந்த வகையில் நியாயம்?

இது அசல் கேலிக்கூத்து!

பெயருக்குத்தான் தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க. அரசு என்று சொல்லிக் கொண்டிருக்கிறதே தவிர, நடப்பது பா.ஜ.க.வின் ராமராஜ்ஜிய அடிமை ஆட்சிதான் என்று உறுதியாகக் கருதும் அளவுக்கு நாட்டு நடப்புகள் இருந்து வருகின்றன.

அன்று சம்பூகன் தலை -

இன்று பெரியார் சிலையா?

அன்றைக்கு சம்பூகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்று கூறி, ராமன் அவன் தலையைச் சீவியதுபோல இன்றைக்கு ராமராஜ்ஜிய ரத யாத்திரை தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது என்பதற்கு அடையாளமாக புதுக்கோட்டை விடுதியில் உள்ள தந்தை பெரியார் சிலையின் தலை அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இதன் பாரதூர விளைவுகளுக்குத் தமிழ்நாடு அரசுதான் பொறுப்பேற்கவேண்டும்.

குமரி மாவட்டம், செண்பகராமன் புதூரில் உள்ள தந்தை பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அரசு ஆணைக்கு விரோதமாக தந்தை பெரியார் சிலைக்கு அருகிலேயே பிள்ளையார் சிலையை வைத்துக் கோவில் கட்டுவதை ஆதாரத்துடன் எடுத்துக்காட்டி கடந்த 27.1 .2018 அன்று தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கும், குமரி மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்தப் புகாரை நினைவூட்டி 24.2.2018 அன்று நினைவூட்டல் கடிதமும்  திராவிடர் கழகத்தின் சார்பில் எழுதப்பட்டும், அதன்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது எதைக் காட்டுகிறது? சட்ட விரோதமாக இந்தத்துவா சக்திகள் நடந்துகொண்டாலும், அவர்களின் முதுகை செல்லமாகத் தட்டிக் கொடுக்கும் மனப்பான்மையோடுதான் அண்ணா பெயரை வைத்துக் கொண்டிருக்கும் இந்த அண்ணா தி.மு.க. அரசு நடந்துகொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் சிலையை உடைத்த வர்கள்மீது நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்ளும் தமிழக அரசு, இதனைச் செய்வதற்குத் தூண்டுகோலாக இருந்த பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் எச்.ராஜாமீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்காதது ஏன்?

சம்பந்தப்பட்டவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திரு.ஜெயக்குமார் சொன்னாரே - அந்த உறுதி என்னாயிற்று?

யாருடைய தலையீட்டின் பேரில் தமிழக அரசு பதுங்குகிறது?

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டால், கண்டு கொள்ளமாட்டோம், அதேநேரத்தில், தந்தை பெரியாரை அவமதிக்கின்றவர்களுக்கு இந்த அரசு ஆதரவு அளிக்கும் - பச்சைக் கொடி காட்டும் என்ற போக்கு - அ.இ.அ.தி.மு.க.வை தனிமைப்படுத்தும் - அண்ணா பெயரில் இப்படி ஒரு கட்சியா - ஆட்சியா என்று நாடே பரிகசிக்கும். தேர்தலிலும் அதன் எதிர்விளைவை அ.இ.அ.தி.மு.க. சந்திக்கும். பா.ஜ.க.மீதான வெகுமக்கள் வெறுப்பும் கண்டிப்பாக அ.இ.அ.தி.மு.க. அரசின்மீதும் விழும் என்று எச்சரிக்கின்றோம்! எச்சரிக்கின்றோம்!!

தமிழக அரசே பொறுப்பு!

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை  கழகம் மேற்கொள்ளும்.  இவை எல்லாவற்றிற்கும் ஆளும் அ.இ.அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்கவேண்டும்.

 

சென்னை      தலைவர்

20.3.2018             திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner