எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

ஒடுக்கப்பட்ட மக்கள் மருத்துவராவது இனி பகற்கனவே!

இன்னுமா உறக்கம் பெற்றோர்களே?

எழுவீர்! இன்னுயிரையும் தியாகம் செய்யத் தயாராவோம்!

2018 ஆம் ஆண்டுக்கான நீட்' தேர்வு முடிவுகளின் படி - தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்கள் டாக்டராவது இனி பகற்கனவுதான்; இதற்கு மேலும் பெற்றோர்களே உறக்கம் கொள்ளாதீர்! இன்னுயிரையும் ஈந்து சமூகநீதியைக் காக்க வீதிக்கு வந்து போராட வாருங்கள் என்று  தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரியிலும், பல் மருத்துவக் கல் லூரியிலும் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய அளவில் நீட்' என்னும் நுழைவுத் தேர்வை அறிவித்த அந்த நொடிமுதலே திராவிடர் கழகம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது - அனைத்துக் கட்சிகளையும் கூட்டி கண்டனத்தைத் தெரிவித்தது - நாடெங்கும் கருத்தரங்குகளையும், மாநாடுகளையும் நடத்தியது- வீதியெல்லாம் போராட்டங்களை நடத்தியது.

டில்லி நாடாளுமன்றம் முன்புகூட கழக ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. டில்லி கான்ஸ்டியூசன் மன்றத்தில்  பல மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திராவிடர் கழகத் தலைவர் தலைமையில், நீட்'டை எதிர்த்துக் கருத்துரை - கண்டன உரைகளை நிகழ்த்தினார்கள்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என்று முத்தரப்பினரையும் கூட்டி போர்ப்பறை கொட்டப் பட்டதும் உண்டு.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களும், குறிப்பாக கிராமப்புற மக்களும், முதல் தலை முறையாகக் கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைத்தவர்களும் இந்த நீட்' தேர்வால் தரைமட்ட மாக்கப்படுவார்கள்; மருத்துவக் கல்லூரி வாசல் பக்கத்தில் கூடத் தலை வைத்துப் படுக்க முடியாத ஒரு ரௌலட்' சட்டம் போன்ற தேர்வைத் திணிக்கிறது என்று நாம் கொடுத்த குரல்  உண்மை, உண்மை, நூற்றுக்கு நூறு உண்மை என்பது இப்போது நிரூபணமாகி விட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட நீட்' தேர்வின் முடிவுகளே தமிழ்நாட்டுக்குப் பேரிடியாக இருந்தது - 38.83 விழுக்காடுதான். இவ்வாண்டோ 39.55 விழுக்காடாகும்.

நீட்' பயிற்சி மய்யங்களைத் தமிழ்நாடு அரசு வைத்ததாக தமிழ்நாடு அரசு சொல்கிறது - அப்படி வைத்தும் இதுதான் நிலை!

அதேநேரத்தில், ராஜஸ்தான் மாநிலம் 74% டில்லி 74%

அரியானா 73%

உத்தரப்பிரதேசம் 60%

பீகார் 60% என்று பட்டியல் சொல்லுகிறது.

இவ்வளவுக்கும் நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் தமிழகத்தில் இருபால் மாணவர்களின் வெற்றி 91.1 விழுக்காடு.

உத்தரப்பிரதேசத்திலோ இது 77.16 விழுக்காடு

ராஜஸ்தானிலோ வெறும் 75 விழுக்காடு.

பிளஸ் டூ தேர்வில் குறைந்த எண்ணிக்கையில் வெற்றி பெற்ற மாநிலங்கள் நீட்' தேர்வில் அதிகம் பேர் வெற்றி பெறுவதும், பிளஸ் டூ தேர்வில் அதிக விழுக்காட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் நீட்' தேர்வில் குறைந்த அளவு வெற்றி பெறுவதும் எப்படி? இதன் பின்னணி என்ன?

பிளஸ் டூ தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளக் கூடாது என்ற சூழ்ச்சிக்கான காரணம் இப்பொழுது கண்கூடாகத் தெரிந்துவிட்டதா இல் லையா? தமிழ்நாட்டில் இவ்வாண்டு 1450 இடங்கள் பறிபோயிருக்கின்றன. கல்வியில் சிறந்த தமிழ்நாடு நீட்' தேர்வில் அகில இந்திய வரிசையில் 34 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ள கொடுமையை என்ன சொல்வது!

கடந்த ஆண்டு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளியின் மகள் அனிதாவால் பிளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட்' தேர்வில் வெறும் 87 மதிப்பெண்கள்தான் பெற முடிந்தது.

மருத்துவராகும் கனவு பலிக்கவில்லையே என்ற அதிர்ச்சியால் தற்கொலை செய்துகொண்டார் என்றால், இவ்வாண்டு செஞ்சியையடுத்த குக்கிராமமான பெரு வளூர் கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா - நீட்' தேர்வின் முடிவால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 495 மதிப் பெண்களையும், பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1125 மதிப்பெண்களையும் முதல் தலைமுறையாகப் பள் ளிக்குச் செல்லும் குக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்ணான ஒரு கூலித் தொழிலாளியின் மகள் பெற்றுள்ளார் என்பது ஓர் இமாலய சாதனையல்லவா!

பிளஸ் டூ தேர்வில் 1125 மதிப்பெண்கள் பெற்ற பிரதீபாவால் நீட்' தேர்வில் வெறும் 39 மதிப்பெண்கள்  தான் பெற முடிகிறது என்றால், இதற்குக் காரணம் பிரதீபாவா? ஒடுக்கப்பட்ட மக்களைக் குறி வைத்துக் கழுத்தறுக்கும் நீட்' தேர்வா?

அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சமூகநீதி என்பதற்கு என்னதான் பொருள்? அனிதாக்களும், பிரதீபாக்களும் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருளா?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் முடக்கப்பட்டு விட்டதா?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சி.பி.எஸ்.இ. யிடம் எந்தத் தகவலைக் கேட்டாலும் எங்களிடத்தில் தகவல் இல்லை என்பதுதான் ஒரே பதிலாக இருக்கிறதே - இதுகுறித்து விக்னேஷ் பழனிசாமி என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளாரே (4.6.2018).

இதன் மர்மம் என்ன? சூழ்ச்சிகளும், மோசடி களும் நீட்'டுக்குள் புதைந்து கிடக்கின்றன என்று அய்யப்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இது உறுதிப்படுத்த வில்லையா?

பத்து சதவிகிதம் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்களின் நலனுக்காக 90 சதவிகிதம் வேறு கல்வித் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பலியாகவேண்டுமா?

ஒரே மாதிரியான கல்வி திட்டமும், சம தரத்தில் கல்வி கற்பிக்கும் வசதியும், வாய்ப்பும் இல்லாத ஒரு துணைக் கண்டத்தில், அனைவரையும் சமதளத்தில் நிறுத்தி நீட்' என்ற பெயராலே தகுதி திறமையைச் சோதிப்பது கடைந்தெடுத்த அநீதியும், மோசடியும் அல்லவா!

மத்தியப் பிரதேசத்தில் வியாபம்' ஊழல் பிரசித்தி பெறவில்லையா? 10 ஆம் வகுப்பு படித்தவனெல்லாம் டாக்டர் ஆனது எப்படி? மருத்துவக் கல்லூரி ஊழல் வெடித்துக் கிளம்பிய நிலையில், அதில் சம்பந்தப்பட்ட நூற்றுக்கணக்கானோர் (ஆளுநர் மகன் உள்பட) தற்கொலை செய்துகொள்ளவில்லையா?

நீட்' தேர்வை நடத்த ஒப்படைக்கப்பட்ட அமெரிக் காவைச் சேர்ந்த புரோ மெட்ரிக் டெஸ்டிங் பிரைவேட் லிமிட்டெட்' என்ற நிறுவனத்தின் கணினியிலிருந்து கேள்விகள் திருடப்பட்டு பெருந்தொகைக்கு விற்கப்பட்டதாகத் தகவல் வந்ததே - இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட 30 டாக்டர்கள், கணினி பொறியாளர்கள், தேர்வு நடத்திய கண்காணிப்பாளர்களிடத்தில் காவல் துறையால் விசாரணை செய்யப்பட்டதே, அதன் தொடர்ச்சியான நிலைப்பாடு என்ன?

அதற்குப் பிறகு அதுகுறித்த எந்தவிதத் தகவலும் வெளிவராமல் கமுக்கமாக மூடி மறைத்தது ஏன்? அதில் இன்னும் யார் யாருக்குத் தொடர்பு?

சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடத்துக்காரர்கள் என்பதால் ஊற்றி மூடப்பட்டு விட்டதா?

தமிழில் எழுதப்பட்ட நீட்' தேர்வுக்கான கேள்வித் தாளில் 49 தவறான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதே - இதற்குப் பரிகாரம் என்ன? தேர்வு நடத்துவோர் தவறுக்காகத் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்பட வேண்டுமா? தவறான 49 கேள்விகளுக்காகக் கூடுதல் மதிப்பெண்கள் ஏன் வழங்கப்படவில்லை?

இதுதான் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியின் ஊழலற்ற நிருவாகத்துக்கான அக்மார்க்' முத்திரையா?

எத்தனைப் பேர் நீட்' தேர்வு எழுதினார்கள் என் பதில்கூட முன்னுக்குப்பின் முரணான தகவல்கள். இவர்கள்தான் தகுதி திறமைக்காகவே பிறந்தவர்களாம். நியாயமாக நடந்து முடிந்த நீட்' தேர்வே ரத்து செய் யப்பட்டு இருக்கவேண்டாமா?

நீதிமன்றமும்கூட ஏன் இதைக் கண்டுகொள்ள வில்லை? எல்லா வகையான ஆதிக்க சக்திகளும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே தூக்குக் கயிறைத் தூக்கிக்கொண்டு நிற்கிறது. மக்கள் புரட்சி ஒன்றால்தான் இதற்குத் தீர்வு கிடைக்க முடியும்.

நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமல், சந்தடி யில்லாமல், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் என்ற பெயரால் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரி களில் பார்ப்பன - பனியாக்களை திணித்ததுதான் இந்த ஆட்சியின் வெளிப்படைத் தன்மைக்கு எடுத்துக் காட்டா?

மேல்தட்டு சி.பி.எஸ்.இ.க்காக அந்த சி.பி.எஸ்.இ. என்ற அமைப்பே தேர்வு நடத்துவது என்பது எந்த வகையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது?

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரி இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி ஒன்றரை ஆண்டுகள் ஓடிய நிலையிலும், அதன் நிலை என்ன? அது கேட்பாரற்றுக் கிடக்கிறதே!  இதுதான் இந்தியாவின் கூட்டாட்சியா? மாநிலங்களை மதிக்கும் மனப்பான்மையா?

மாநில அரசும் அனைத்துக் கட்சிகளின் அழுத்தத் தால் ஏதோ ஒப்புக்காக இரு மசோதாக்களை நிறை வேற்றி அனுப்பிவிட்டோம் - அத்தோடு நம் கடமை முடிந்துவிட்டது என்று சோம்பல் முறித்துக் கிடப்பது வெட்கக் கேடல்லவா!

அம்மா ஆட்சி - அம்மா ஆவி என்று சொன்னால் போதுமா? 69 சதவிகிதப் பிரச்சினையில், அவர் எப்படி நடந்துகொண்டார் என்று ஒரே நொடி நினைத்துப் பார்க்க வேண்டாமா?

ஆட்சிகளும், நீதிமன்றங்களும் சமூகநீதிக்கு எதிராகக் கத்தி தீட்டினாலும், இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரப்படுவதற்குக் காரணமாக இருந்த மண் தந்தை பெரியார் பிறந்த மண்! இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும் வரை கண் துஞ்சாது.

இந்தியாவிலேயே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் கொண்டு வருவதற்கான மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களையும் நடத்தி வெற்றி பெற்ற மண் இந்தப் பெரியார் மண் - கழகம் திராவிடர் கழகம் - அனைத்துக் கட்சிகளின் பெரும் ஒத்துழைப்போடு!

நீட்' ஒழிப்பிலும் வெற்றி பெறுவோம் - வெற்றி பெற்றே ஆகவேண்டும்!

இது ஒரு கட்சிப் பிரச்சினையல்ல! பெற்றோர்களே, இது யாருக்கோ வந்த விருந்து என்று கருதி வீட்டில் உட்கார்ந்து பொழுது போக்கிக் கொண்டு இருக்காதீர்கள் - இது உங்கள் பிள்ளைகளின், சந்ததிகளின் எதிர்காலப் பிரச்சினை! எல்லாம் முடிந்துவிட்டது என்று நம்பிக்கை இழக்காதீர்கள்; 21 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெற்ற நுழைவுத் தேர்வை ஒழித்த வரலாறு நம் தமிழ்நாட்டின் வரலாறு.

உங்கள் வீட்டிலும் ஒரு டாக்டர் வரவேண்டாமா? டாக்டர் என்றால் உயர்ஜாதிக்காரர்களின் வயிற்றில் மட்டும் அறுத்து வைத்துக் கட்டப்பட வேண்டுமா?

மாணவர்கள் தேர்வில் காப்பியடிக்க அனுமதிக்கப்பட்டதா?

தேர்வு எழுதும் மாணவர்கள் விரும்பினால், காப்பியடிப்பது போன்ற ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு'' என்று பீகார் மாநிலக் கல்வி அமைச்சர் அசோக் சவுத்ரி (‘The Students who feel they have right to cheat'', 30.5.2017) கூறியதை நினைவு கூர்ந்தால், வடக்கே என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய முடியும்!

உங்களுக்காகக் குரல் கொடுக்க திராவிடர் கழகம் இருக்கிறது. சமூகநீதிக்காகக் குரல் கொடுக்கும் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சிகள், அமைப்புகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

வீட்டை விட்டு வெளியில் வாருங்கள் - எந்த ஓர் உரிமையும் இனாமாகக் கிடைத்துவிடாது - கஷ்ட நஷ்டம் என்னும் உயர்ந்த விலை கொடுக்கவேண்டும் என்பார் தந்தை பெரியார்.

நீட்'டை ஒழிக்கும் இந்த சமூகநீதிப் போராட்டக் களத்தில் இன்னுயிரையும் தந்து நமது சந்ததிகளின் எதிர்காலத்திற்கு ஒளியை ஏற்றுவோம்!

வாருங்கள்! வாருங்கள்!!

 

கி.வீரமணி

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

6.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner