எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரணை செய்த நீதிபதி -  விசாரணை அதிகாரிகள்  விசாரணையில் தவறு நடந்தது என்று ஒப்புக்கொண்ட பிறகும்

நீதி புதைக்கப்படக்கூடாது; புதைக்கப்பட்ட நீதியை மீண்டும் ஆய்வு செய்க!

தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

சென்னை,ஜூன்16  பேரறிவாளன் உள்ளிட்டோரை விசாரித்த நீதிபதி, அதேபோல, விசாரணை செய்த அதிகாரி - நாங்கள் சரியாக விசாரிக்கவில்லை - நாங்கள் தவறாக எழுதிக்கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பதிவு செய்துள்ளபோது, நீதி புதைக்கப்படக் கூடாது; நிரபராதிகள் தண்டிக்கப்படக் கூடாது;  புதைக்கப்பட்ட பிணத்தைக்கூட மீண்டும் தோண்டி எடுத்து ஆய்வு செய்கின்ற நேரத்தில் - புதைக்கப்பட்ட நீதியையும் மீண்டும் ஆய்வு செய்து பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும் என்று செய்தியாளர்களுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

நேற்று (15.6.2018) சென்னை சி.அய்.டி. நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் சின்னக்குத்தூசி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

மத்திய ஆட்சியின் முடிவே முடிவல்ல

செய்தியாளர்: பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும் என்கிற தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளாரே?

தமிழர் தலைவர்: கட்சிகளைவிட வடக்கே இருக்கக்கூடியவர் களுடைய உணர்வுகள் எப்படி இருக்கின்றன என்பதை பிரதிபலிப் பதாகத்தான் இது இருக்கிறது.

ஆனால், நியாயப்படி அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள், அதற்காக ஆரம்பத்தில் பதிவு செய்த விசாரணை அதிகாரி தியாகராஜன் அவர்கள், இதுபோன்ற அதிகாரிகள் இந்த வழக்கு சரியாக நடைபெறவில்லை என்று சொல்கின்ற நேரத்தில், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், ஏதோ பொத்தாம் பொதுவில் இதனால் மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதைப்போல, குடியரசுத் தலைவர் நிராகரிப்பு என்பது சரியானதுதானா? மத்திய அரசினுடைய உள்துறை இதில் எப்படிப்பட்ட பார்வையைப் பார்க்கிறது என்றால், அது ஒரு மனிதாபிமானற்ற போக்கு. ஆனால், அது இறுதி முடிவல்ல. அதற்கு மாறுபட்ட சூழலை ஏற்படுத்தவேண்டும்.

அப்படி அவர்கள் உண்மையை நீதியை நிலைநாட்ட வேண்டு மானால், பேரறிவாளன் போன்றவர்களையும், மற்றவர்களையும் விசாரித்த நீதிபதி, அதேபோல, விசாரணை செய்த அதிகாரி - நாங்கள் சரியாக விசாரிக்கவில்லை - நாங்கள் தவறாக எழுதிக்கொண்டோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து பதிவு செய்துள்ளபோது, நீதி புதைக்கப்படக் கூடாது;  புதைக்கப்பட்ட பிணத்தைக்கூட மீண்டும் தோண்டி எடுத்து ஆய்வு செய்கின்ற நேரத்தில் - புதைக்கப்பட்ட நீதியையும் மீண்டும் ஆய்வு செய்து பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்யவேண்டும்.

மத்திய ஆட்சியின் முடிவே முடிவல்ல. மக்கள் மன்றம் அதற்கு ஒரு தீர்ப்பைக் கொடுக்கும்.

ஆட்சியாளர்கள் இதில் போதிய கவனம் செலுத்தவேண்டும். எனவே, இது முடிவல்ல - மறுபடியும் மாறுபட்டு, மறுபரிசீலனை செய்து, நியாயங்கள் மனிதநேயத்தோடு வழங்கவேண்டும்.

கொஞ்சம் காலம் பொறுத்திருக்கட்டும்,

மாற்றங்கள் நிச்சயம் வரும்!

செய்தியாளர்: பேரறிவாளனை விடுதலை செய்யாவிட்டால், அவரை சிறையிலேயே கருணைக் கொலை செய்துவிடுங்கள் என்று பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சொல்லியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: அந்த அளவிற்கு அவர்களுக்கு ஏற்பட்ட விரக்தி. ஒரு தாயினுடைய உணர்வு அது. காலம் நிச்சயமாகப் பதில் சொல்லும். கருணைக் கொலையோ அல்லது வேறு கொலையோ தேவையில்லை. மக்களுடைய ஆதரவு இருக்கிறது. எனவேதான், இதில் சில சிக்கல்கள் இருந்தால், அந்த சிக்கல்களைப் போக்கக் கூடிய அளவிற்கு, நிதானமாக இத்தனை ஆண்டுக்காலம் பொறுத் திருந்தவர்கள், கொஞ்சம் காலம் பொறுத்திருக்கட்டும், மாற்றங்கள் நிச்சயம் வரும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner