எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களுக்கு நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டு -

மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா?

மக்கள் நலம் பயக்கும் திட்டங்களை கிடப்பில் போட்டுவிட்டு - மக்களைப் பாதிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதா? ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் அரசுகள் நீடிக்காது - நிலைக்காது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சித் திட்டங்கள் என்பவைகளுக்கு மக்கள் எதிர்ப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் இருப்பதற்கு முக்கிய காரணங்கள் எவை என்பதை அவ்வரசுகளை நடத்தும் பிரதமர், தமிழ்நாடு முதலமைச்சர் போன்றோர் ஆராய்ந்து, மக்களின் நியாயமான அடிப்படை உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத திட்டங்களாக அவைகளை அமைக்க வேண்டும்.

அடக்குமுறை தர்பார் ஒருபோதும்

ஜனநாயக நாட்டில் வெற்றி பெறாது

எடுத்துக்காட்டாக, ஏழை, எளிய, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையிலோ அல்லது சுற்றுச்சூழல் - நீர், நிலம், காற்று, தட்பவெட்பம் இவைகளைப் பாதிக்கும் வகையில் (ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைத் திட்டங்கள்), பசுமையைப் பறிக்கும் நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங் களைப்போல - 10 ஆயிரம் ஏக்கர் ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்களைப் பறித்து,  எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் என்பது போன்ற மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறிய திட்டங்களை, மக்களிடம் திணிப்பது, அடக்குமுறை - அதிகாரச் செல்வாக்கு இவை மூலம் செய்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டு, வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக' அவைகளை குறுக்கிவிடுவதும், எதேச்சதிகார மனப்பான்மையுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் (திருவண்ணாமலையில்)  நடத்த முயன்ற விவசாயிகளையெல்லாம் பிடித்து வழக்குப் போட்டு, சிறையில் அடைப்பது போன்ற அடக்குமுறை தர்பார் ஒருபோதும் ஜனநாயக நாட்டில் வெற்றி பெறாது; மாறாக, எதிர்விளைவுகளையே  உருவாக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

அ.தி.மு.க. ஆட்சியின்மீது

நீக்கப்பட முடியாத கறைகளாகும்!

தூத்துக்குடி துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிர் இழந்தவர்கள் குடும்பத்தினரைச் சந்திப்பதும், பெருங்காயப்பட்டு, குண்டடிப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரைச் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்மீது வழக்கு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றமும் முன்ஜாமீன் நிராகரித்த பிறகு தேடப்படும் குற்றவாளியை காவல்துறையின் பாதுகாப் போடு சுதந்திரமாக உலவ விட்டு, ஊடகங்களில் காட்சி தெரிய வைப்பது - தமிழக அ.தி.மு.க. ஆட்சியின்மீது நீக்கப்பட முடியாத கறைகளாகும்!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் முக்கிய குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதில் அளித்து, அதனை அவைக் குறிப்பில் பதிவு செய்வதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து சதா நீக்கும் ஜனநாயக விரோத கருத்துரிமைப் பறிப்பு போன்றவைகளில் ஆட்சிக்கு மிஞ்சுவது மக்களின் வெறுப்புதான்!

மக்களுக்காகவே நான்'' என்பதன்

உண்மைப் பொருள் என்ன?

மக்களால் நான்; மக்களுக்காகவே நான்'' என்று ஜெயலலிதா கூறியதைத் திரும்பத் திரும்ப மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கிடும் அம்மா ஆட்சி என்று கூறினால் மட்டும் போதுமா?

மக்களால்தான் உங்களுக்கு ஆட்சி கிடைத்தது; அதனை அந்த மக்களின் நலனுக்கு எதிராகப் பயன்படுத் துவதற்குப் பெயர் எதேச்சதிகாரமா? ஜனநாயகமா? மக்களுக்காகவே நான்'' என்பதன் உண்மைப் பொருள் என்ன?

மக்கள் விரும்பாத, ஏற்காத எந்த நடவடிக்கைகளிலும் எமது அரசு ஈடுபடாது என்பதுதானே!

நடைமுறையில் அந்த சிந்தனை இன்றைய ஆட்சி யாளர்களிடம் உள்ளதா?

தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் எத்திட்டத்தி னையும் எதிர்ப்பது மக்களின் ஜனநாயக உரிமை; அத னைப் புரிந்து அதற்குத் தலைவணங்குவது  ஆட்சி யாளர்களின் ஜனநாயகக் கடமை!

மக்கள் வரிப்பணம் விரயம் ஆகும்!

மக்களுக்கான நலத்திட்டம் என்றால், மக்களிடம் அரசு தக்க முறையில் அணுகி, எடுத்துச் சொல்லி அதனால் ஏற்படும் நன்மைகள் இவை என்று கூறி, மக்களைத் தம்வயப்படுத்தி, பிறகு அதை அமல் செய் தால், அத்திட்டம் வெற்றி பெறும். திட்டம் கைவிடப் படாவிட்டால், மக்கள் வரிப்பணம் விரயம் ஆகும்!

ஏற்கெனவே மதவெறி, அதிகார தன்முனைப்பு காரணமாக, தெற்காசியாவில் பொருளாதாரப் புரட்சியை ஏற்படுத்தும் திட்டம் என்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்கூட புகழ்ந்துரைக்கப்பட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், கலைஞர் அரசால், தி.மு.க. மத்திய அரசில் பங்கேற்று நடைமுறைப்படுத்திய ஒரே காரணத்திற்காக, 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழிக்கப்பட்ட பிறகும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அப்படியே கைவிட்டதைவிட, தமிழக விரோத, மக்கள் விரோத பா.ஜ.க. - அ.தி.மு.க. அரசின் செயல் வேறு உண்டா?

ஜெயலலிதாவின் பிடிவாதத்தால்....

'மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம்' 1000 கோடி ரூபாய் செலவழித்து பல தூண்கள் எல்லாம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை துறை முகத்திலிருந்து கண்டெய்னர்கள் அந்தப் பெரு வழிச் சாலையில் தடையின்றி செல்ல, மக்கள் போக்குவரத்துத் தடையின்றி செல்ல வழிவகுக்கும் ஏதுவான திட்டம். ஜெயலலிதாவின் பிடிவாதத்தால் அப்படியே பாழடிக்கப்பட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளோம்!

நியாயமில்லா காரணங்களால் அத்திட்டங்கள் நிறுத்தப்பட்டன!

நியாயமான காரணங்களுடன் மக்களைப் பாதிக்கும் திட்டங்களை, மக்கள் எதிர்ப்பதில் என்ன தவறு இருக் கிறது? அடக்குமுறைகள் ஒருபோதும் வெற்றி பெறாது!

ஜனநாயக உரிமைகளை மிதிக்கும் எவ்வரசும் நீடிக்காது; நிலைக்காது! வறட்டு கவுரவம் பாராது, நிறுத்தவேண்டியவைகளை நிறுத்துங்கள். ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம், வளமான வாழ்க்கைக்கு - விவசாயிகளின் வறுமை ஒழிப்புக்கு வகை செய்யும் வழியைக் கண்டுபிடிக்கட்டும் அரசுகள்.

மறுபார்வையுடன் இத்திட்டங்களை அணுகட்டும் அரசுகள் என்பதே சுவர் எழுத்து - அரசு பாடம் கற்றுக் கொள்வது அவசரம், அவசியம்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

22.6.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner