எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டர் பதிவிட்ட

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை,ஜூன் 23  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று டுவிட்டரில் செய்தி பதிவிட்ட சுப்பிரமணியசாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும் என்று செய்தியாளர்களுக்குத்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:

நேற்று (22.6.2018) சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற இராமாயண ஆய்வு சொற்பொழிவு-7 இல் உரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

மாட்டுக்கறி நல்ல உணவாகும்;

ஏழை மக்களின் சத்துணவு

செய்தியாளர்: இராமாயண ஆராய்ச்சி சொற் பொழிவை நிறைவு செய்திருக்கிறீர்கள். அதில் ஒரு செய்தியை சொன்னீர்கள் - மூடநம்பிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாகவும், சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படவில்லை; ஆனால், மக்கள் எதிர்க்கின்ற சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக விரைவாகப் பணிகள் நடைபெறுகின்றன என்கிறீர்களே, அதுபற்றி சொல்லுங்களேன்...?

தமிழர் தலைவர்: ஒரு நாட்டின் பொருளாதாரம் மூடநம்பிக்கைகளால் பாதிக்கும் என்பதை ஜெர்மன் நாட்டு அறிஞர்கள் அய்.அய்.டி.,க்கு இருபது ஆண்டுகளுக்குமுன் வந்து ஓர் ஆய்வை செய்து கூறியிருக்கிறார்கள்.

பல ரூபங்களில் மூடநம்பிக்கைகள் இருக்கின்றன. உதாரணமாக, மாட்டுக்கறி சாப்பிடாதே என்று மத உணர்வு அடிப்படையில் சொல்கிறார்கள்; பொருளாதாரக் கண்ணோட்டத்தோடுபார்க்கின்றபொழுது,மாட்டுக் கறியில் சத்து அதிகம்; கோழிக்கறியைவிட, ஆட்டுக் கறியைவிட.

ஆனால், மத உணர்வு வந்தவுடன், ஒரு மதத்துக்காரர் பன்றிக் கறி சாப்பிடக்கூடாது என்கிறார்; இன்னொரு மதத்துக்காரர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்கிறார்; மற்றொரு மதத்துக்காரர் காய்கறிகளை மட்டும் சாப் பிடுங்கள் என்று சொல்கிறார்.

பொருளாதாரக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் பொழுது, பெரியார்தான் சொன்னார், மாட்டுக்கறி நல்ல உணவாகும்.  ஏழை மக்களின் சத்துணவு'' என்று. பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்திற்கு நம்முடைய மக்கள் வரிப்பணம் 2000 கோடி ரூபாய் செலவழித்து, இன்னும் 12 கிலோ மீட்டர்தான் மீதம் என்கிற அளவிற்கு - தி.மு.க. பங்கேற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபொழுது செயல்படுத்தப்பட்ட திட் டத்தை - இப்பொழுது திட்டமிட்டு முடக்கப்பட்டு இருக் கிறது - இதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்.

இராமனைக் காட்டி ஏமாற்றினார்கள்;

மக்களுடைய மத உணர்வைத் தூண்டினார்கள்

இந்தத் திட்டத்தை எதிர்த்து வழக்குப் போட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் - அவர்களுடைய கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தால் எவ்வளவு பெரிய நன்மைகள் விளையும் என்பதை எடுத்துச் சொல்லி, அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தினார்.

அவர்கள் கேட்ட சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - அவர்கள் எதிர்த்ததற்கு ஒரே காரணம் என்னவென்றால் தி.மு.க., ஆட்சியில் கலைஞர் செய்தார் என்பதற்காகத்தான். சுப்பிரமணியசாமி போன்றவர்கள் இராமனைக் காட்டி ஏமாற்றினார்கள். மக்களுடைய மத உணர்வைத் தூண்டினார்கள்.

தென்னாட்டில் அதற்கு ஒரு ஆதரவும் இல்லை. ஆனால், நீதிமன்றத்திற்குச் சென்று அத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

இத்திட்டம் மூலமாக தென்மாவட்டங்கள் மிகப்பெரிய அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதற்காக. அதே போன்றதுதான் சென்னை - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம். மக்கள் அத்திட்டத்தை வரவேற்றார்கள்.

ஆனால், அதற்கு நேர் எதிராக இன்றைக்கு மக்கள் விரும்பாத திட்டத்தை மக்களின்மேல் திணிக்கிறார்கள். பசுமைச் சாலை என்று சொல்லி, எட்டு வழிச் சாலைகளை அமைக்கும் திட்டமாம்.

10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்களை அழித்து, எட்டு வழிச் சாலை அமைக்கப் போகிறார்களாம். மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத்தான் ஒரு அரசாங்கம் திட்டத்தினைக் கொண்டு வரவேண்டும்.

மக்களால் நான்; மக்களுக்காகவே நான்'' என்று ஜெயலலிதா சொன்னதை - அம்மா ஆட்சி' என்று இன்றைக்கு சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் இவர்கள், மக்களுடைய உணர்வுகளைத்தானே பிரதிபலிக்க வேண்டும். அந்த உணர்வுகளுக்குப் புறம்பாக, கருத்துக் சொல்பவர்களைக்கூட சிறையில் தள்ளுகிற நிலை.

இது எதேச்சதிகார ஆட்சிக்கு சரியானதே தவிர, ஜனநாயக ஆட்சியினுடைய அம்சமாக இருக்க முடியாது.

அதுபோல, மக்கள் விரும்புகிற திட்டங்களையெல்லாம் இவர்கள் கீழே போட்டுவிட்டு, மக்கள் எதிர்க்கின்ற திட்டங்களையெல்லாம் அவர்களுடைய கையில் எடுத்திருக்கிறார்கள் என்றால், இது ஜனநாயகத்திற்கு முரணான ஒரு போக்காகும்; இதனை அவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும்.

சுப்பிரமணிய சாமியை

சி.பி.அய். விசாரிக்கவேண்டும்

செய்தியாளர்: ஏழு பேர் விடுதலை தொடர்பாக சுப்பிர மணியசாமி அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ராஜீவ் காந்தி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி இத்தாலியில் இருக்கிறார் என்று போட்டிருக்கிறாரே....?

தமிழர் தலைவர்: சுப்பிரமணியசாமிக்கு அது பற்றிய முழுவிவரம் தெரிந்திருக்கும். முதலில் சுப்பிர மணியசாமியை சி.பி.அய். விசாரிக்கவேண்டும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner