எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மனித மலக்கழிவுகள் அகற்றும் தொழிலாளிகளின் தொடரும் அவலநிலை!

அரசுகள் அக்கறை காட்டுமா?

சென்னை, ஜூன் 29 மனித மலக்கழிவுகளை அகற்றும் தொழிலாளி கள்குறித்த விவரங்களை பதிவு செய்ய மறுத்துவருகின்ற அரசு, அத்தொழிலாளிகளின் குடும்பம், குழந்தைகள்குறித்து சற்றும் கவலைகொள்ளவில்லை என்று தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் (26.6.2018) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை யில் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

1993ஆம் ஆண்டில் தடை

மனித மலக்கழிவுகள் மனிதர்களால் அகற்றப்படுவதற்கு 1993ஆம் ஆண்டிலேயே சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், நடைமுறையில் மனிதமலக்கழிவுகளை அகற்றும் பணிகளில் துப்புரவு பணியாளர்கள் நாடுமுழுவதும் ஈடுபடுத்தப் பட்டே வந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மனித மலக்கழிவுகளை அகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட  தொழிலாளிகள் 300க்கும் மேற்பட்டவர்கள் விஷவாயு தாக்கியதில் 1993ஆம் ஆண்டில் உயிரிழந்தார்கள்.

தனி அமைப்பு

கழிவுகளை அகற்றும் தொழிலாளிகளின் நலனுக்காக என்எஸ்கே எஃப்டிசி (National Safai Karmacharis Finance and Development Corporation-NSKFDC) எனும் அமைப்பு உருவாக் கப்பட்டது-. மதுரையை அடுத்துள்ள உசிலம்பட்டியில்  பள்ளிகள் உள்ளிட்ட திறந்தவெளிப்பகுதிகளில் மலக்கழிவுகளை அகற்றும் பணியில் எவ்வித பாதுகாப்பு கருவிகளுமின்றி பெண்தொழிலாளி துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவருகிறார். பாதுகாப்பு எச்சரிக்கை குறித்த குறிப்பேடுகளைக்கூட அவரால் படிக்க முடியாது. வாழ் வாதாரத்துக்காக அத்தொழிலில் ஈடுபட்டுவருகிறார்.

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் தடுப்பு மற்றும் அத்தொழிலில் ஈடுபட்ட தொழிலாளிகளின் மறுவாழ்வுக்காகவும் 2013ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

குழந்தைகள் கல்விக்கு ரூ.40ஆயிரம்

அத்தொழிலாளிகளை அடையாளம் காண அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு, அவர்களின் குழந்தைகளின் கல்வி உதவித்தொகையாக ஒரே நேரத்தில் அளிக்கும்வகையில் ரூ.40 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று சட்டம் கூறுகிறது-.

சமூகநீதி மற்றும் அதிகாரத்துறை அமைச்சகத்தின்சார்பில் இலாப நோக்கில்லா நிறுவனம் (என்எஸ்கேஎஃப்டிசி)  அமைக்கப் பட்டு, நாடுதுமுழுவதும் உள்ள மனிதக் கழிவகற்றும் தொழி லாளிகள் குறித்து கணக்கிடப்பட்டது. ஆனால், அப்பணிக்கு மாநில அரசு அலுவலர்கள் போதிய அளவுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.

பதிவு செய்யும் தொழிலாளிகளுக்கு அச்சுறுத்தல்

அந்நிறுவனத்தின்கீழ் பதிவு செய்து கொண்டு கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

விழிப்புணர்வுக்  கூட்டங்கள்

தமிழ்நாடு உள்ளிட்ட அய்ந்து மாநிலங்களில் அந்நிறுவனத்தின் சார்பில் கடந்த ஏப்ரலில் முகாம் அமைக்கப்பட்டு விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் அக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. அக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களை தொழிலாளிகள் பதிவு செய்துகொண்டபின்னர், ஒரு வார காலத்தில் அச்சுறுத்தலுக்கு ஆளானார்கள். பட்டியலிலிருந்து பெயரை நீக்கிக்கொள்ள வேண்டும், இல்லையேல், கைது செய்யப்படும் நிலையும், செய்துவரும் பணியை இழந்து வாழ்வாதாரத்துக்கு தொல்லை படவேண்டியதாகிவிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (Safai Karmachari Andolan-SKA) எனும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கான அமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் டி.வி.சாமுவேல்  கூறியதாவது:

என்எஸ்கேஎப்டிசி மற்றும் எஸ்கேஏ சார்பில் துப்புரவுத் தொழிலாளிகள் 1993ஆம் ஆண்டில் நாடுமுழுவதும் 300பேர் உயிரிழந்தார்கள். 2013ஆம் ஆண்டில் துப்புரவுத் தொழிலாளிகள் உயிரிழப்பு குறித்த ஆதாரங்களை அளித்தோம். உள்ளாட்சி நிர்வாகம் எங்களுடன் இணைந்து சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புள்ளிவிவரங்களை சேகரித்தோம்.

தமிழ்நாட்டில் 3,023 பேர் பதிவு

தமிழ்நாட்டில் மனித கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் குறித்த விவரங்களை தமிழ் நாடுஅரசிடம்கோருகின்றநூற்றுக்கும்மேற் பட்ட தகவல் பெறும் உரிமை சட்ட மனுக் களை ஆவணப்படுத்தியுள்ளோம். ஆனாலும், அப்படி மனித மலக்கழிவுகளை அகற்றும்  தொழிலாளிகளே இல்லை என்றே பதிலாக கூறப்பட்டு வருகிறது-. கடந்த மார்ச் மாதத்தில் 3,023 மனித மலக்கழிவகற்றும் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் இருப்பதை நாங்கள் பதிவு செய்துள்ளோம் என்றார்.

பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளிகள் தங்களின் பெயரை திரும்பப் பெற்றிட வேண் டும் என்று துப்புரவு ஆய்வாளர்கள், உள்ளாட்சித் துறையின் மாவட்ட அலுவலர்களால் அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று எஸ்கேஏ தொண்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கூறுகின்றனர்.

அவ்வமைப்பின் மதுரை  ஒருங்கிணைப்பாளர் பி.சத்தியா கூறியதாவது: தொழிலாளிகள் தங்களுக்கான பணிப் பாதுகாப்புகுறித்த அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்'' என்றார்.

மதுரை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக் கான நலத்துறை அலுவலர் எம்.முருகேசுவரி கூறு கையில், "அப்படி கூறுவது சரியல்ல. இதுகுறித்து மாவட்ட ஆணையரிடம் ஆலோசிப்போம் என்றார்.

சென்னையில்...

சென்னையில் வியாசர்பாடியில் கடந்த எட்டு ஆண்டுகளாக துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளி நோய்வாய்ப்பட்டார். அன்றாட செல வினங்களுக்கும் தேவையான வாய்ப்பின்றி துன்பப் பட்டார். வாந்தி பேதியால் அவதியுற்றார். போதிய மருத்துவ வசதியும் அவருக்கு கிட்டவில்லை. அவர் நிலைகுறித்து புள்ளிவிவர சேகரிப்பின்போது அவர் கூறியதையடுத்து, அவரையும் அவருடைய நண்பரையும் துப்புரவுத் தொழிலாளிகள் அல்லர் என்று கடிதம் எழுதித் தருமாறு கட்டாயப் படுத்தப் பட்டுள்ளார்கள்.

சென்னை பெருநகர கழகத்தில் பணியாற்றிவரும் உதவி பொறியாளர் பிரமிளா ராணி கூறுகையில்,  துப்புரவுத் தொழிலாளிகளுக்குரிய பலன்களை அதற்குத்  தகுதியில்லாத கட்டுமானம் மற்றும் கட்டட பராமரிப்பு தொழிலாளர்கள் பெறுவதற்கு இதுபோன்ற (எஸ்கேஏ) முகாம்கள் வாய்ப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன என்றார்.

தொழிலாளர் அடையாள அட்டை வழங்கப்படுவதில் அரசுகள் மெத்தனம்

வழக்குரைஞர் ஆர்.கருணாநிதி கூறுகையில், மனித மலம் அகற்றும் தொழிலில் ஈடுபடுவோர்மீது உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒடுக்குமுறையைக் கையாண்டு வருகின்றன. கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நானும், வேறு சிலரும் மதுரை மற்றும் விருதுநகர் பகுதிகளில் உள்ள 247 தொழி லாளர்களின் கோரிக்கைகளை முன்வைத்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்குகளைத் தொடர்ந்தோம். அத்தொழிலாளர்களில் பலர் உள் ளாட்சி நிர்வாகத்தினரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக் கப்பட்டு, பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களும் ஆவர். மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்கள் பணியின்போது உயிரிழக்கும்போது, அவர்களின் குடும் பத்தினருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என்கிற எங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இன்னமும் அத்தொழி லாளர்களில் பலருக்கும் அடையாள அட்டைகளை அளிக்கப்படவில்லை. இது அரசின் மெத்தனப் போக்கை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றார்.

மனித மலத்தை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது சட்டப்படி தடை செய்யப்பட்ட போதிலும், அத்தொழிலாளர்களை அப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அதேநேரத்தில் அவர்களுக்குரிய அரசுத்திட்டங் களின் பயன்கள், மறுவாழ்வுத்திட்டங்கள் அவர்க ளைச் சென்றடையவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள்

1993ஆம் ஆண்டில் சட்டப்படி மனிதக் கழிவு மனி தர்களைக் கொண்டு அகற்றுவது தடை செய்யப்பட்டு உள்ளது.

2008ஆம் ஆண்டில் கழிவுகளை அகற்றுவதற்கு எந்தி ரங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனிதர்கள் கழிவுகளை அகற்றும்போது நோய்த் தொற்று ஏற்படுவதால், அது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் வீட்டு மனைகள் மற்றும் குடியிருப்புகளை அத்தொழிலாளர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று 2014ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது-.

1993ஆம் ஆண்டிலிருந்து மனித கழிவுகளை அகற் றும் பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என் றும் உத்தரவானது.

1993 ஆம் ஆண்டில் உலர் கழிவறைகள் கட்டவும், மலக்கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கான  தொழி லாளர்களை நியமிக்கவும் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட நிலையிலும், மனிதர்களின் கழிவுகளை மனிதர்கள் அகற்றும் பணி தொடர்ந்துகொண்டிருந்தது.

இழப்பீடுகள்

மனித மலக்கழிவு அகற்றும் தொழிலாளிகள் தடுப்பு மற்றும் அவர்களின் மறுவாழ்வுத் திருத்தச் சட்டம் 2013இன்கீழ் பணியின்போது தொழிலாளி உயிரிழந்தால், அவர் குடும்பத்திற்கு அரசு அளிக்கும் இழப்பீடு ரூ.10 லட்சத்துடன், பணிக்கு அமர்த்திய தனி நபர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்  ரூ.10லட்சம் தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டில் நவம்பரில்  கூறப்பட்டது-.

1993ஆம் ஆண்டில் பணியின்போது உயிரிழந்த துப் புரவு பணியாளர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 8 விழுக்காடு வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று இம்மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தர வில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள்

மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் உயி ரிழப்பு குறித்த மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் பதிவுகளின்படி, 1993ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் உயிரிழப்புகள் அதிக மாக உள்ளது.

2018 ஜூனில் சென்னை பல்லாவரத்தில் பணியின்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு 26 வயது தொழிலாளி உயிரிழந்தார்.

2018 பிப்ரவரில் சிறீபெரும்புதூர் அருகில் பொந்தூர் பகுதியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது தொழிலாளி மூவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந் தார்கள்.

2018ஆம் ஆண்டு ஜனவரியில் மனிதக்கழிவுகளை அகற்றும் தொழிலாளிகள் உயிரிழப்பு குறித்து  மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் குறிப்பிடும்போது, 1993ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட் டில் அதிகமாக உள்ளது.

2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடலூரில் சாக் கடை அடைப்பை சரிசெய்யும் பணியின்போது தொழி லாளிகள் மூவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந் தார்கள்.

2016ஆம் ஆண்டு முதல் சென்னையில் அய்ந்து பேரும், விருதுநகரில் இருவரும், மதுரை, திருவள்ளூர், திருச்சி மற்றும் விழுப்புரத்தில் தலா ஒருவரும் ஆக மொத்தம் 11 தொழிலாளிகள் பணியின்போது உயிரிழந்து விட்டதாக தமிழ்நாடு அரசு புள்ளிவிவரத் தகவல் கூறு கிறது.

மத்திய அரசின் சேவைத் தொழில் பட்டியலில்...

2015ஆம் ஆண்டில் மனிதக்கழிவு அகற்றுவது சேவைத் தொழில்களுக்கான தேசியப் பட்டியலில் இடம்பெற்றது.

கழிவகற்றும் தொழிலாளிகள் தகுதிநிலைகுறித்த வரையறையை மாவட்ட அலுவலர்களுடன் இணைந்து என்எஸ்கேஎப்டிசி உருவாக்கியது..

பியூசிஎல் தேசியக்குழு உறுப்பினர் எஸ்.பால முருகன் கூறுகையில், மனிதர்களின் கழிவுகளை அகற் றும் தொழிலாளிகளுக்கான சட்டம்2013இன்படி, அத் தொழிலாளிகள் குறித்த பார்வை பரந்துபட்டதாகவும், குறிப்பிடத்தக்கதாகவும் இருக்கவேண்டும். மனிதர்க ளின் கழிவுகளை அகற்றுவதற்காக தொழிலாளியை அப்பணியில் ஈடுபடுத்தக்கூடியவர் யாரானாலும், அவர் களுக்கு சட்டம்குறித்த தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

மோடி கூறும் கர்ம யோகம்

மத்திய அரசு வளர்ச்சி என்று கூறிக்கொண்டிருக்கின்ற அதேநேரத்தில் போதிய பாதுகாப்பு கருவிகள் ஏதுமின்றி மனிதர்களின் கழிவுகளை மனிதர்களே அள்ளி அகற்று கின்ற அவலநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிரதமர் மோடியோ, அத்தொழிலாளிகள்குறித்து கவ லைகொள்ளாமல், கழிவுகளை அகற்றும் பணி கர்ம யோகம் என்று கூறத்தயங்குவதில்லை.

இந்த கர்மயோக தொழிலில் குறிப்பிட்ட ஜாதியி னர் மட்டுமே பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டு, வரு ணாசிரமக் கொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக் கின்றன. கோயில் கருவறையில் அர்ச்சகர்களாக உள்ள பார்ப்பனர்கள் எவரும் இந்த கர்மயோகமான செயல் களை செய்வது கிடையாது. கர்மயோகிகளிலும் ஜாதி வேறுபாடுகள் உள்ளன. இதுதானே புனித இந்து மதம்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner