எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள்!

தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள்

தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும்,பிற்படுத்தப்பட்டவர்களுக்காகவும் அக்கறை காட்டுவதுபோல ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. இப்பொழுது பேசுவது, நடந்துகொள்வது எல்லாம் தேர்தல் உத்திகளே தவிர, உண்மையில் அவர்களின் கடந்தகால நடவடிக்கைகள் எல்லாம் இவற்றிற்கு எதிராகவே நடந்துள்ளன என்பதை எடுத்துக்காட்டி,  திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களின் வாழ்வுரி மைக்குப் பாதுகாப்புத் தரும் Atrocities against S.C., S.T., Prevention Act  என்ற சட்டத்தில், தீண்டாமையைக் கடைப் பிடிப்போரை உடனடியாகக் கைது செய்யும் பிரிவுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் (கடந்த 2018, மார்ச் மாதம்) உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து நாடே கொந்தளித்தது!

உச்சநீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்டோர் உண்டா?

சமூகநீதியில் உண்மையான நம்பிக்கைக் கொண்ட நீதிபதிகள் - (தாழ்த்தப்பட்டோர் ஒருவர்கூட இல்லாத உச்சநீதிமன்றத்தில் மலைவாழ் மக்கள்  நீதிபதியும் இல்லை) பிற்படுத்தப்பட்டவரோ ஒரே ஒருவர் என்று இருக்கும் நிலையில், எருதின் புண் காக்கைக்குத் தெரியாது'' என்ற பழமொழிபோல், அந்த உயர்ஜாதி வன்மத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்தத் தீர்ப்பு வந்தது!

அது வந்தவுடன் நாடே சமூகநீதி எரிமலை வெடிப்பது போல எதிர்ப்புகள் அலை அலையாக ஆர்ப்பரித்துக் கிளம்பின!

மத்திய பா.ஜ.க. மோடி அரசு, நாளும் பலத்த சரி வினை சந்தித்து வருவதாலும், ஏற்கெனவே இருந்த செல்வாக்கினை வேகமாக இழந்து வருவதாலும், அதை சரிகட்டும் உத்தியாக, பழைய வலிமை அச்சட்டத்திற்கு வரும் வகையில், நாடாளுமன்றத்தில் புதிய சட்டத் திருத்தங்களைக் கொணர்ந்து, மக்களவையிலும், நேற்று மாநிலங்களவையிலும்  நிறைவேற்றியுள்ளனர்.

காங்கிரசு தலைவர் ராகுல் எழுப்பிய கேள்வி

அந்த விவாதத்தில் கலந்து பேசிய காங்கிரசு கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், வெளி நிர்ப்பந்தம் காரணமாக இப்படி ஒரு சட்டத்தை பா.ஜ.க. அரசு அவசர மாகக் கொண்டு வந்து நிறைவேற்றுகிறதே தவிர, மனதார, இலட்சியபூர்வமாக இதைச் செய்யவில்லை.

உண்மையில் தாழ்த்தப்பட்டோர்மீது அக்கறையும், ஆர்வமும் மோடி அரசுக்கு  குறிப்பாக பிரதமர் மோடிக்கு இருந்தால், அவரது மாநிலமான குஜராத்தில் பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள பாட புத்தகங்களில் தலித்துகள் - தாழ்த்தப்பட்டோர் மலம் அள்ளும் பணி செய்வதில், துப்புரவுத் தொழில் செய்வதில் ஒரு பெரும் ஆத்ம திருப்தி அடைகின்றனர்'' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்குமா?

எனவே, உண்மையிலேயே தலித் சகோதரர்களுக்கு ஆதரவான மனோபாவம்  (Mindset)  மோடிக்குக் கிடை யவே கிடையாது'' என்று மிகவும் அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்ததுடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கோ, பிரதமர் மோடிக்கோ, பி.ஜே.பி.,க்கோ தலித்துக்களுக்குரிய பங்கைத் தருவதற்கு என்றும் தயாராக இல்லாதவர்கள் என்று கூறி, அவர்களைப்பற்றி நாடாளுமன்ற உரையில் தெள்ளத் தெளிவாக விளக்கியுள்ளார்.

வி.பி.சிங் ஆட்சியை

பி.ஜே.பி. ஏன் கவிழ்த்தது?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா, தனது டுவிட்டரில் ராகுல் காந்தியை - காங்கிரசைத் தாக்கிப் பதில் கூறும்போது, தாழ்த்தப்பட்ட மக்கள்மீது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வன்கொடுமை - கொலைகள் நடக்கின்றனவே, ஏன் அதனைத் தடுக்க முன்வரவில்லை என்ற ராகுல் காந்தி யின் கேள்விக்குரிய பதில் தர முடியாமல், உங்கள் கட்சி பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய கமிஷனுக்கு நாங்கள் கொடுத்ததுபோல அரசியல் சட்ட அந்தஸ்தைக் கொடுத்தார்களா? அம்பேத்கர், பாபுஜெகஜீவன்ராம் போன்றவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்தீர்களா? மண்டல் கமிஷனையே உங்கள் கட்சி (ராஜீவ் காந்தி) எதிர்த்தவர்தானே'' என்று கேட்டு, பிரச்சினையை திசை திருப்பியுள்ளார்!

காங்கிரசு செய்ததா, செய்யவில்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், இவர்கள் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஓடிவிட்டதே, எத்தனை தாழ்த்தப்பட்ட நீதிபதிகளை இதுவரை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்தனர்?

மண்டல் கமிஷனை அப்போது காங்கிரசு கட்சி - வி.பி.சிங் ஆட்சி நடைமுறைப்படுத்த முயன்றபோது, ஆதரிக்கவில்லை என்பது உண்மைதான் என்றாலும்கூட, அதைக் கேட்கும் தார்மீக உரிமை ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு உண்டா?

காரணம், 10 மாதங்கள்கூட நிறைவடையா நிலையில், சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்து மண்டல் கமிஷன் பரிந்துரையின் ஒரு பகுதியை (வேலை வாய்ப்பு) அறிவித்ததற்காக அவரது ஆட்சிக்கு வெளியில் இருந்து கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டு, அதைக் கவிழ்த்தவர்கள்தானே இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.,யினர்?

ர(த்)த யாத்திரையை அத்வானி நடத்திய பின்னணி என்ன? மக்களுக்குத் தெரியாதா?

ஓணானைப் பார்த்து ஒட்டகம் பழிப்பதா?

மக்களவை சபாநாயகராக ஜெகஜீவன்ராம் மகள் மீராகுமார் அவர்களை காங்கிரசு கொண்டு வந்தது. (அதற்குமுன் அவர் மத்திய அமைச்சர்).

முதல் முதலில் குடியரசுத் தலைவராக கே.ஆர்.நாராயணனை நியமித்தது! அதன் பிறகு, இப்போதுதானே இவர்கள் ஒரு தலித் குடியரசுத் தலைவரைத் தேடிக் கண்டுபிடித்துள்ளனர் என்பது மக்களுக்கு மறந்துவிடுமா?

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோர் படுகொலை!

குஜராத் உன்னா பகுதியில் மற்ற பகுதிகளில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும் ஜாதி பஞ்சாயத்துக்களாலும் எத்தனைத் தலித்துகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர் - இவர்களின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் என்பது நாடறிந்ததாகுமே!

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி., எஸ்.டி.,)மீது ஆர்.எஸ்.எஸ். காட்டும் பரிவு - தேர்தல் நெருங்குவதால் போடும் மாய்மாலம் என்பது யாருக்குத் தான் தெரியாது? என்டிஏ கூட்டணி கட்சிகள் போர்க் கொடி தூக்கியதால் இச்சட்டத் திருத்தம் வந்தது.

இச்சட்டம் சிறப்பாக செயல்படவேண்டுமானால் இதனை அரசியல் சட்டத் திருத்தம்மூலம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பில் வைக்க முன்வாருங்கள், வரவேண்டும் என்று காங்கிரசு கட்சியைச் சார்ந்த பஞ்சாப் உறுப்பினர் (முன்னாள் அமைச்சர்) குமாரி செல்ஜா அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்!

தமிழ்நாட்டின் குரல் வடக்கே கேட்கிறது!

தமிழ்நாடுதான் முதல் - நமது யோசனையை ஏற்று அன்றைய அ.தி.மு.க. முதலமைச்சர் ஜெயலலிதா 69 சதவிகித இட ஒதுக்கீட்டை சட்டமாக்கியதோடு, 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்பையும் பெற்று, 76 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக நிறைவேற்றியது. அதனை வடக்கே உள்ளவர்களும் பின்பற்றவேண்டுமென விரும்பு வது பெரியார் மண்ணான இந்த சமூகநீதி பூமிக்குக் கிடைத்த தனிப்பெருமையும், வெற்றியுமாகும். தமிழ்நாடு வழி காட்டுகிறது!

பா.ஜ.க.வின் தேர்தல் உத்திகள்!

தேர்தலில் வாக்குகளை அதிகம் பெற கையாளப்படும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.சின் உத்திகள் இவை - அவர்களின் கொள்கைத் திட்டங்கள் அல்ல என்பதை நாடு நன்கறியும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தெளிவாகப் புரிந்து வைத்துக்கொண்டுள்ள மாநிலங்கள் ஆகும். இந்தியாவே இனி புரிந்துகொள்ளும்.

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

10.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner