எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவச் சிலையை சென்னை அண்ணா சாலையில், அதே இடத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நிறுவுவோம் - தமிழ்நாடு அரசின் ஆணையும், உயர்நீதிமன்ற தீர்ப்பும் இருப்பதால், அனைவரின் ஆதரவோடு கலைஞர் சிலையை நிறுவுவோம் என்று  திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

நமது அறிவு ஆசான் தந்தை பெரியாரின் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டு அதைச் செயல் படுத்துவதே தமது வாழ்வின் வரலாற்றுக் கடமை என்று கருதி உழைப்பவர்கள் கருஞ்சேனையான திராவிடர் கழகத்தவர்களாகிய நாம்!

ஆம்! அதைவிட நமக்கென்ன வேறு வேலை?

1968 இலும்,1971 ஆகஸ்டு 14 இலும் இருமுறை அறிவித்தார் பெரியார்!

1968 இலும் அண்ணா முதல்வராக இருந்தபோதே கலைஞருக்கு சிலை வைக்க உள்ள தகுதிபற்றி இரு அறிக்கைகள் எழுதியதோடு,

ஆகஸ்டு 14, 1971  இல் பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், தந்தை பெரியார், தனது குருகுல மாணவரான கலைஞர் செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் அவருக்கு சிலை வைக்கவேண்டும் என்று முழங்கினார்!

தவத்திரு குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் அருகே அமர்ந்து ஆமோதித்தனர். அதே மேடையில் கலைஞர் சிலை அமைப்புக் குழுவையும் அறிவித்தார் அய்யா!

திகைத்தார் முதலமைச்சர் கலைஞர்

திகைத்தார் மேடையிலிருந்த முதலமைச்சர் கலைஞர். பெரியார் கட்டளையை எப்படி மறுப்பது? சங்கோஜமும், சங்கடமும் அடைந்தார். அப்போது சமாளிக்க,  தி.மு.க. சார்பில் அய்யாவுக்கு சிலை வைத்த பிறகு வேண்டுமானால், அதுபற்றி ஏற்பாடு செய்ய லாம் என்பதுபோல கூறி, வசமாக அன்புப் பிடியில் அகப் பட்டுக் கொண்ட நமது கலைஞர் தப்பிக்க முயன்றார்.

அதே மேடையில் சிலை அமைப்புக் குழு அறிவிப்பு

சிலைக் குழுவுக்கு புரவலர் தந்தை பெரியார்

தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி.,

துணைத் தலைவர்கள்: நெ.து.சுந்தரவடிவேலு (துணைவேந்தர், சென்னைப் பல்கலைக் கழகம்),  மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன்

என்னை செயலாளராக அறிவித்தார் அய்யா. மேடையிலே நன்கொடையையும் அய்யா முதல் அனைவரும் அறிவித்தனர்.

காலம் ஓடியது.

அய்யா மறைந்து, கழகத் தலைவரானார் அன்னை மணியம்மையார். அய்யா விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங் களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று 1974 ஜனவரி 6 இல் திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் (மத்திய திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டியில்) எடுத்த முடிவுக்கு ஏற்ப - உடல் நலிந்த நிலையிலும், உள்ள வலிமை தளராது பணி தொடர்ந்தார் நம் அன்னை மணியம்மையார்!

திறக்கப்பட்டது சிலை

தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் (சிம்சன் அருகில்),  இனமானப் பேராசிரியர் தலைமையில், அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் முன்னி லையில், தந்தை பெரியார் சிலையை முதலமைச்சர் மானமிகு கலைஞர் திறந்து வைத்து, வரலாற்றின் பொன்னேட்டினை இணைத்தார்!

தி.மு.க. திறந்த பெரியார் சிலை திறப்பு விழாவில் அன்னையாரின் கண்டிப்பு!

அந்நிகழ்ச்சியில் பேசிய நம் அன்னையார் (ஈ.வெ.ரா.மணியம்மையார்), அய்யாவுக்கு சிலை வைத்த பின்பு, தனக்கு சிலை வைக்கலாம் என்று கூறி, அதை  ஏற்கெனவே காலந்தாழ்த்திய நமது கலைஞர் அவர்கள் இனியும் சாக்குப் போக்கு, மறுப்புக் கூறி, எங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அடுத்து உடனடியாக திராவிடர் கழகம் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைத்துத் திறப்போம் - இதற்கு மறுப்பு ஏதும் கூறக்கூடாது'' என்றார்!

திறக்கப்பட்டது முதலமைச்சர் கலைஞர் சிலை

முதலமைச்சர் கலைஞர் வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அ.தி.மு.க.வினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975  அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம். (G.O. MS.No.877 Dated 21.5.1975, Rural Development and Local Administration Department).

கழகத் தலைவர் அம்மா அவர்களின் தலைமையில்,

மகாசந்நிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எம்.எல்.சி., சிலையினைத் திறந்து வைத்தார்கள்.

டாக்டர் ராஜா சர். முத்தையா (செட்டியார்),

தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் மணலி சி.கந்தசாமி எம்.எல்.ஏ.,

சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி.நடராசன் எம்.பி.,

மற்றும்

சென்னை மாவட்டப் பொறுப்பாளர்கள் எஸ்.எம்.ஜக்கிரியா, எஸ்.பி.தட்சணாமூர்த்தி, மு.பொ.வீரன், அ.குணசீலன், செங்கற்பட்டு மாவட்ட தி.க. தலைவர் சி.பி.ராசமாணிக்கம், வட ஆற்காடு மாவட்ட தி.க. தலைவர் ஏ.பெருமாள், தெ.ஆ.மாவட்ட தி.க. தலைவர் கு.கிருஷ்ணசாமி, தஞ்சை மாவட்ட தி.க. தலைவர் அ.ஆறுமுகம், திருச்சி மாவட்ட தி.க. தலைவர் டி.டி.வீரப்பா, சேலம் மாவட்ட தி.க. தலைவர் க.சண்முகம், தருமபுரி மாவட்ட தி.க. தலைவர் எம்.என்.நஞ்சையா, கோவை மாவட்ட தி.க. தலைவர் ராமச்சந்திரன், மதுரை மாவட்ட தி.க. தலைவர் எஸ்.சுப்பையா, கி.இராமநாதபுர மாவட்ட தி.க. தலைவர் ஆர்.சண்முகநாதன், மே.இராம நாதபுர மாவட்ட தி.க. தலைவர் முத்துமுருகன், நெல்லை மாவட்ட தி.க. தலைவர் நட்சேத்திரம், குமரி மாவட்ட தி.க. தலைவர் கிருஷ்ணன் ஆகியோரின் முன்னிலை வகித்தனர்.

நாதசுரச் சக்கரவர்த்தி நாமகிரிப்பேட்டை கிருஷ் ணன் குழுவினரின் நாதசுர இன்னிசை விருந்து - இசை மாமணி சீர்காழி கோவிந்தராசன் அவர்கள் கலைஞரைப்பற்றி சில பாடல்களைப் பாடினர்.

உடைத்தனர் சிலையை!

அதன் பிறகு தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். நோயின் கொடுமையால் நம்மைவிட்டுப் பிரிந்த நிலை யில், (1978 இல் அன்னையார் மறைந்து, நான் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நடத்திய கால கட்டத்தில்) சென்னை நகரமெங்கும் நடந்த கலவரத்தில், சில விஷமிகள் திட்டமிட்டே கலைஞர் சிலையை உடைத்தனர்  (24.12.1987). அந்தப் படம் ஏடுகளில் வந்தபோதுகூட மானமிகு எதிர்க்கட்சித் தலைவரான கலைஞர்,

"உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை-

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!''

என்று கவிதை வரிகள் எழுதி, தன்மீது ஒரு செருப்பு (கடலூரில்) வீசப்பட்டபோது, மறு செருப்பையும் தேடி வாங்கி வைத்த தனது குருகுல ஆசானின் துணிவுமிக்க பாரம்பரியத்திற்கான இலக்கியமாக' நடந்துகாட்டி உயர்ந்தார் - உலகத்தார் முன்!

மீண்டும் அதே இடத்தில் சிலை - சில தடங்கல்கள்

அதன்பின் அதே இடத்தில் கலைஞரின் ஒரு புது சிலையை  உருவாக்கி வைப்பதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டபோது,  அவரது குடும்பத்தினரில் சிலரும், தி.மு.க.வில் உள்ள சிலரும் தயக்கமும், மறுப்பும் தெரிவித்தனர்.

இதை மீறி வைக்கவேண்டாம் என்று எம்மிடம் கலைஞர் உரிமை எடுத்துக்கொண்டு கூறினார். அதை ஏற்று அன்று முதல் நேற்றுவரை அமைதியாக இருந் தோம் - எங்கள் கடமையைப் பின்னுக்குத் தள்ளி!

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை' அகற்றாமல் தானே அவரைப் புதைத்தோம் என்று ஆதங்கப்பட்ட நமது மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் தம்வாழ்நாளில், அவர் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த இறுதி நாளில், அந்த வெற்றியைப் பெற்றார்; பாக்கி வைக்காமல் கடமையைச் செய்தார்!

தந்தையும் - தாயும் இட்ட ஆணை!

நாங்கள் - தாய்க்கழகத்தினர் - தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்றபடி,  தாயின் விருப்பத்தை  நிறை வேற்றும் வகையிலும் செயலாற்றுவதுதானே தலையாய கடமை? எனவே, நமது திராவிட இனத்தின் தீரமிக்க மானமிகு சுயமரியாதைக்காரரான'' நம் கலைஞரின் சிலையை அதே இடத்தில், சென்னை அண்ணா சாலையில்  திறந்து வைக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு உள்பட அனைவரின் ஆதரவும் தேவை!

ஏற்கெனவே தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பும் சிலைக்கு ஆதரவான நிலைப் பாட்டைத் தந்துள்ளன. இப்போது அவரது சிலை, அண்ணா சாலையில், தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை என்ற  வரிசையில் அமைவது எல்லா வகையிலும் பொருத்தமாகவே அமையும் என்பதால், தமிழக அரசு உள்பட அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் பெரிதும் நம்புகிறோம்.

எப்படியும் நம்மிடம் தயாராக இருக்கும் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விரைவில் உரிய காலத்தில் நடந்தே தீரும்!

நன்றிக்கு அடையாளம்!

இது ஒரு நன்றி காட்டும் நயத்தக்க பண்பாட்டின் அடையாளம்! இந்தியாவே, ஏன் உலகமே திரண்டு இறுதி மரியாதை செலுத்திய ஒரு மாமனிதர் நம் இனமானத் தலைவரின் சிலை ஒரு வரலாற்று சின்னமாக, கம்பீரமாக மீண்டும் எழுந்து நிற்கும்; நிற்க வைப்போம்!

வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

11.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner