எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே

கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட

தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்!

அறிஞர் அண்ணா இறந்தபோது அய்யா இருந்தார்; இப்பொழுது கலைஞர் மறைந்த நிலையில் அவர் காலத்தில் அவரால் அடையாளங்காட்டப்பட்ட தலைமையின்கீழ் கட்டுப் பாட்டுடன் தி.மு.க. செயல்படட்டும்; தாய்க்கழகம் கவசமாக இருந்து துணை புரியும்  என்று  திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

தி.மு.க.வின் அன்பு உடன்பிறப்புகளே!

நமது இனமானத் தலைவர் உடலால் மறைந்து, இன்றுடன் ஏழு நாள்கள் ஆகின்றன.

சத்தங்கள் சரித்திரமாகா!

ஆனால் துக்கம் தனியாத நிலையில் துயரம் வடியாத நாளில், 6 ஆம் நாளிலேயே துரோகக் குரல் - தூண்டிவிடப்பட்ட அம்புகள் ஆரிய வில்லிலிருந்து வடக்கே இருந்துவந்த திட்டப்படி சல சலக்கவும், அதற்குத் தகுதிக்கு மேற்பட்ட விளம்பரங்களை சில ஊடகங்களும், ஏடுகளும் (அதுவும் வடக்கே இருந்துதான் துவக்கம்) தந்து தி.மு.க. என்ற எஃகு கோட்டையை தகர்த்து, இராணுவக் கட்டுப்பாட்டுடன் கலைஞரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையை ஒருமனதாக, ஒரு குரலாக ஏற்க திடசித்தத்துடன் இருக்கையில், சில சத்தங்களை எழுப்பினால் சரித்திரம் மாறிவிடும் என்று நப்பாசை கொள்கின்றனர்.

தாய்க்கழகத்தின் பிரமாணப் பத்திரம்!

மீண்டும் சொல்கிறோம். தாய்க்கழகம் பிரமாணப் பத்திரம்போல் கூறுவது என்னவென்றால், தி.மு.க. மணல் வீடல்ல மகத்தான தியாகங்களால் கட்டப்பட்ட தொண்டர்களின் அசைக்க முடியாத பாடி வீடு; பாசறை!

இதை அசைத்துப் பார்க்க எந்த ஆரியத்தாலும் அவர்களின் பஞ்ச தந்திரங்களாலும்'' முடியாது! முடியவே முடியாது! சலசலப்புச் சத்தங்கள் சங்கீத கச்சேரிகளாகி விட முடியாதல்லவா?

வீட்டிற்குள்ளே இல்லாதவர்கள் - வர முடியாதவர்கள் எதையும் பேசக்கூடும்! கலைஞரால் - தலைமையால் - கழகமா, பாசமா என்றால், கழகத்திற்கே முன்னுரிமையான கவலையோடு கூடிய ஏற்பாடு என்று ஏற்கெனவே தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதால், அவ்வீடு என்ற இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் விருந்தில் தலைமை இனி எனக்குத்தான் என்று கூறுவதுபற்றி யாரும் கவலைப்படாமல், கட்டுப்பாடு காத்து - கண்ணியத்துடன் கடமையாற்ற, வடக்கின் வாடையை விரட்டிட வைராக்கிய உணர்வோடு களத்தில் நில்லுங்கள், வெல்லுங்கள்!

அண்ணா மறைந்தபோது அய்யா இருந்தார்

அறிஞர் அண்ணா மறைந்தபோதும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடந்தன என்பது பழைய வரலாறு.

அப்போது நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அறிவுரைத்தார்.

"தி.மு.க. கெட்டியான பூட்டு; கள்ளச்சாவி போட்டுவிடாமல் கழகத் தொண்டர்கள் காத்துக் கொள்ளவேண்டும்'' என்று.

அதையே நினைவூட்டுகிறோம்.

கலைஞருக்கு உண்மையான மரியாதை செய்வது என்பது அவர் நினைவிடத்தில் மலர்வளையம் வைப்பது மட்டுமல்ல, அவரது இயக்கத்தை, அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ், கட்டுப்பாடு காத்து இலட்சியப் பயணத்தைத் தொய்வின்றித் தொடருவதேயாகும்!

இது இப்போது தனி நபர்கள் தலைமைத்துவ பிரச்சினையல்ல. திராவிடமா? ஆரியமா? என்ற நீண்ட கால இனப் போராட்டத்தின் புதிய வடிவம் - புரிந்துகொள்வீர்!

துரோகம் தொலையட்டும் - தூய தொண்டு ஒளிரட்டும்!

தாய்க்கழகமாம் திராவிடர் கழகம், தி.மு.க.வின் கவசமாய் உங்களுக்கு இருக்கும்; முன்பு உண்மை திராவிடர் இயக்கத்திற்கு ஏற்பட்ட சோதனைகளையெல்லாம் ஏற்று, சாதனைகளாக' மாற்றிய வரலாறு தொடரட்டும்!

துரோகம் தொலையட்டும்,

தூய தொண்டு ஒளிரட்டும்!

சுயமரியாதைச் சூரியக் கதிரொளி

அய்யிரண்டு திசைமுகத்தும்

பரவட்டும்! பரவட்டும்!!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

14.8.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner