எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் அத்தியாயம் தொடங்கட்டும்!

நமது இலட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும்!

கலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில்  தமிழர் தலைவர் ஆசிரியர் வழிகாட்டும் உரை

பாளையங்கோட்டை, ஆக.27- மானமிகு கலைஞரின் ஆளுமை தொடங்கியது ஈரோட்டுக் குருகுலத்தில். தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் நான்காம் அத்தியாயம் தொடங்கட்டும் - நமது இலட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (26.8.2018) மாலை பாளையங்கோட்டையில் நடைபெற்ற கலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

கலைஞருக்கு வீரவணக்கம் செலுத்தக்கூடிய நிகழ்ச்சி

மிகப்பெரிய சோதனைக்கு ஆளாகிய நிலையில், தமிழ்ச் சமுதாயமும், தமிழ் இனமும் மட்டும் அல்ல, சமூகநீதியை விரும்புகின்றவர்கள் யாராக இருந் தாலும், மனிதாபிமானத்தை நேசிக்கிறவர்கள் யாராக இருந்தாலும், அரசியல் பண்பாட்டையும், நாகரிகத் தையும் நம்புகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இன்றைய நிலையில், சிறப்பாக ஒருவருடைய மறைவு குறித்து ஆறுதலும், அவருடைய புகழுக்கு வீரவணக்கமும் செலுத்தக்கூடிய இந்த நிகழ்ச் சிக்கு வருகை தந்துள்ள அனைவருக்கும் வணக்கம்.

கலைஞர் மறைந்துவிட்டார் என்று சொல்வதில், தகவல் என்ற அளவில் அது உண்மையாக இருக்கலாம். ஆனால், தத்துவம், கொள்கை, லட்சியப் பயணம் என்று சொல்லும்பொழுது, அதை ஒரு போதும் ஏற்க இயலாது என்று சொல்லக்கூடிய அளவில், நாமெல்லாம் அந்தப் பயணத்தைத் தொடரவேண்டும் என்று நினைக்கின்ற நேரத்தில், இந்தப் பாளையங்கோட்டையில் ஒன்று திரண்டுள்ளோம்.

பாளையங்கோட்டை தனிமைச் சிறையில் இருந்தவர் கலைஞர்!

இந்தப் பாளையங்கோட்டையில்தான் கலைஞர் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.தேசியப் பாதுகாப்புச் சட்டம் அன்றைக்குக் கலைஞரைத் தீண்டியது. அதே படை கலைஞருக்கு இன்றைக்கு வீர வணக்கம் செலுத்தியது என்று சொன்னால், கலைஞருடைய வாழ்வு எப்படிப்பட்ட வாழ்வு என்பதை அறியலாம். இந்த இயக்கம் தொடர் இயக்கமாக நடந்துசெல்லும் என்ற ஆறுதலை நாம் பெறுகிறோம். அதைத்தான் இங்கே நண்பர்களும் சொன்னார்கள்.

பெரியார் - அண்ணா - கலைஞர் வரிசையில் தளபதி மு.க.ஸ்டாலின்

நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராகவும், அதேநேரத்தில், இன்னும் 24 மணிநேரம் தாண்டியவுடன், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஒப்பற்ற தலைவராக, மூன்றாவது அத்தியாயம் முடிந்து, நான்காவது அத்தியாயம் தொடங்கவிருக்கிறது. நீதிக்கட்சி என்ற அடித்தளம் இதற்கு உண்டு. தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக - பெரியார் - அண்ணா - கலைஞர் என்கிற அந்த வரிசையில், தனித்துவிடவில்லை - வெறுமையில்லை - வெற்றிடமில்லை. இதோ அந்த இடம் நிரப்பப்பட்டு விட்டது என்று காட்டக்கூடிய அளவிற்கு, துணிவோடு வந்திருக்கக்கூடிய எங்கள் அருமை சகோதரர், அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே,

மேடையில் சிறப்பாக உரையாற்றிய தலைவர்களே, நீண்ட நேரம் அமர்ந்திருக்கக்கூடிய அருமைப் பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே எல்லோரும் சிறப்பாக உரையாற்றினார்கள். ஆளுமை என்று சொல்கிறபொழுது, கலைஞருடைய ஆளுமை என்பது ஆட்சியிலிருந்து வந்ததல்ல; அது குருகுலத்திலிருந்து வந்தது; ஈரோட்டு குருகுலத்தி லிருந்து வந்த ஆளுமை - பாராட்டி போற்றி வந்த பழைமைலோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்!

என்று எழுத ஆரம்பித்தார்கள் அல்லவா, அன்றிலிருந்தே அவர்களுக்கு அந்தப் பண்பாடு, அவர்களுடைய வாழ்நாள் முழுவதும், ஒரு நாள், ஒருபொழுதேனும், பெரியார் - அண்ணா பெயரை உச்சரிக்காத மேடை, நிகழ்ச்சி கலைஞருடைய வாழ்க்கையில் நிகழ்ந்தது கிடையாது.

அப்படிப்பட்ட ஒருவருடைய தொடர்ச்சி இன்றைக்கு, இந்தப் புகழ் வணக்கத்தின் மூலமாக உறுதி செய்யப்பட்டு, உலகத்திற்கு அறிவிப்பாக இங்கே வருகிறது, அதுதான் மிக முக்கியம்.

கலைஞர் புகழுக்கு வணக்கம் நிகழ்வில் திரண்டிருந்த மக்கள் கடல் (பாளையங்கோட்டை, 26.8.2018)

கொள்கை ரீதியாக குமரிஅனந்தன் நண்பர்; மகள் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்

இந்த மேடையில், அத்துணைத் தலைவர்களும் இருக்கிறார்கள். இதில் மிகவும் சிறப்பு என்னவென்று சொன்னால், எங்கள் அன்பு மகள் தமிழிசை அவர்கள் இங்கே பேசினார். என்னடா, இவர் திடீரென்று உறவு கொண்டாடுகிறாரே என்று நினைக்காதீர்கள். குமரிஅனந்தன் அவர்களும், நானும் ஒரு அரை நூற்றாண்டுக்குமேலே சகோதரர்கள். ஒன்றாகப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். இன்றைக்கும் நண்பர்கள். கொள்கை ரீதியாக அவர் நண்பர். ஆனால், மகள் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்.

இங்கே அவர் சொன்னார், நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்றால், இது பாரம்பரியம், அரசியல் கண்ணியம் என்றார்.

இது திராவிட இயக்கம் இந்த நாட்டிற்குத் தந்த பண்பாடு. திராவிடர் இயக்கத்தின் இடையில் அதற்கு ஒரு சின்ன தொய்வு இருக்கலாம். அதை இப்பொழுது இங்கே விளக்குவது நாகரிகமாக இருக்காது.

பெரியாரும் - விடுதலையும் என் அன்பான எதிரிகள் என்றார் இராஜாஜி

பெரியார் - இராஜகோபாலாச்சாரியார் (இராஜாஜி)பற்றி இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது. அதை அவர்களுக்கு விளக்கியாக வேண்டும். பெரியாரும் - ஆச்சாரியாரும் எவ்வளவு பெரிய எதிரா ளர்கள். விடுதலை' ஆசிரியர் என்கிற முறையில், ஆச்சாரியாரிடம் தந்தை பெரியார் விடுதலை மலருக்கு வாழ்த்துக் கேட்ட நேரத்தில்,

இராஜகோபாலாச்சாரியார் அந்த வாழ்த்துக் கடிதத்தில், பெரியாரும், விடுதலை'யும் எனது அன்பான எதிரிகள். பெரியார் நீண்ட காலம் வாழ்க. அவர் நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும்'' என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தந்தை பெரியாரின் பண்பாடு!

அதேபோல, ஆச்சாரியார் மறைந்த நேரத்தில், தந்தை பெரியார், கலைஞர் ஆகியோர் கிருஷ் ணாம்பேட்டை சுடுகாடு வரையில் சென்றதோடு மட்டுமல்ல, முதலமைச்சர் காமராசர் ஒரு பக்கம் அமர்ந்திருக்கிறார் தரையில், தந்தை பெரியார் அவர்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.  குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்கள் வந்த நேரத்தில், அவர் நின்று கொண்டிருந்தபொழுது, தன்னுடைய சக்கர நாற்காலியைக் கொடுத்து, அவர் குடியரசுத் தலைவர். எனவே, அவர் நிற்கக்கூடாது, இது பாரம்பரியம் அல்ல. ஆகவே, அவர் அமரட்டும்'' என்று சொல்லி சக்கர நாற்காலியைக் கொடுத்தார்கள்.

இந்தப் பண்பாட்டை துக்ளக்' ஏட்டில் சோகூடப் பாராட்டி எழுதியதுண்டு.

எதற்காக இதைச் சொல்கிறோம் என்றால், அந்தப் பண்பாடு. மாற்றாந் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு'' என்று அண்ணா அவர்கள் எழுதினாரே, அந்தப் பண்பாட்டு இருக்கிறதே - அது முழுக்க முழுக்க ஈரோட்டு குருகுலத்தினுடைய பண்பாடு. பாரம்பரியமான பண்பாடு. ஆகவேதான், அன்பு மகள் அவர்களே, இந்தப் பண்பாடு நீடிக்கவேண்டும். அதுதான் மிக முக்கியம்.

நம்முடைய தளபதி அவர்களுடைய காலத்தில் மீண்டும் அது கொடியேற்றப்பட்டு இருக்கிறது

நீங்களும் உங்கள் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை; உங்கள் கொள்கையை விட்டுவிடச் சொல்லி நாங்களும் சொல்லப் போவதில்லை. ஆனால், பண்பாடு, அரசியல் நாகரிகம் என்கிற கண்ணியத்தை திராவிட இயக்கம், ஆரம்பத்தில் எதை விதைத்ததோ அதை நம்முடைய தளபதி அவர்களுடைய காலத்தில் மீண்டும் அது கொடியேற்றப்பட்டு இருக்கிறது.

நீங்கள் உணர்ச்சிபூர்வமாக சொன்னீர்கள், சிவப்புத் தோழர்களை வைத்துக்கொண்டு சொன்னீர்கள்; கருப்பு - சிவப்பு என்றெல்லாம் வேகமாகப் பேசினீர்கள். நீங்கள் பா.ஜ.க.வில் தொடரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ஏனென்றால், எவ்வளவுதான் கொள்கையில் மாறுபட்டு இருந்தாலும், எங்கள் இனத்தவர் தலைவராக இருக்கிறார் என்பதில் ஒரு மகிழ்ச்சிதான். முத்தமிழ் அறிஞரைப் பாராட்டுவது தமிழிசை என்றால், தமிழிசை பாராட்டாமல் இருந்தால்தான் முத்தமிழுக்கும், தமிழிசைக்கும் சம்பந்தம் இல்லை என்று பொருளாகும்.

தெளிவாக பல கருத்துகளைச் சொன்னீர்கள். கருப்பு - சிவப்பு என்றெல்லாம் ஆழமாகச் சொல்லி, சிவப் பாகவே போய்விடக்கூடாது என்று நீங்கள் சொல்லி, அதற்கு உதாரணத்தையும் நீங்கள் சொன்னீர்கள்.

கருப்பு சிவப்பு ஒருபோதும் காவியாகாது!

நிச்சயமாக சொல்கிறோம், கருப்பு சிவப்பாக வேண்டும் என்பதுதான் இந்தக் கொடியினுடைய லட்சியமே. ஆனால், அன்பு மகள் அவர்களே, ஒருபோதும் இது காவி ஆகாது. அதை மட்டும் மிக முக்கியமாக சொல்லவேண்டிய செய்தி.

நீங்கள் அதற்காகப் பாடுபடுங்கள் - நாங்கள் இதற்காகப் பாடுபடுகிறோம். இந்த உறுதிதான், கலைஞருடைய புகழ் வணக்கத்திற்கு உத்தரவாதமான கொள்கை உறுதியாகும்.

நீங்கள் அழகாக சொன்னீர்கள், நான் இந்த வானத்தைப் பார்க்கிறேன், இங்கு சூரியன் மறைந்தால், நட்சத்திரங்கள் வருமே என்று பார்த்தேன். ஒரு நட்சத்திரம்கூட வரவில்லை என்று சொல்லி, சூரியன் மறையவில்லை என்று சொல்லி அமர்ந்தீர்கள்.

சூரியக் கதிர் இதோ உதயமாகிவிட்டது!

ஆம்! சரியாகச் சொன்னீர்கள். இதை இங்கு மட்டும் சொல்லாதீர்கள்; எல்லா இடங்களிலும் சொல்லுங்கள். ஏனென்றால், சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டு, சில நட்சத்திரங்கள் வரும் என்று சிலர் ஆசைப்படுகிறார்கள். நட்சத்திரங்களும் வராது - சூரியனும் மறையாது. சூரியக் கதிர் இதோ உதய மாகிவிட்டது. சூரியக் கதிருடைய ஒளி இருக்கிறதே, இதோ உதயமாகிவிட்டது.

எனவே, உதயமாகி இருக்கிற சூரியக்கதிர் எல்லா இடங்களிலும் ஒளியைப் பரப்பும். அறியாமை இருளை விரட்டும் - சமூக அநீதியை விரட்டும். அதுதான் இந்த இயக்கம்.

இது ஒரு அருமையான மேடை - கலைஞருக்கு உண்மையிலேயே புகழ் வணக்கம் என்று சொன்னால்,

கலைஞர் அவர்கள், பெரியாரிடத்தில், குருகுலத்தில், அண்ணாவிடத்தில், பாடம் பயின்றவர். அண்ணாவின் இதயம் என்றால் என்ன? அண்ணாவின் இதயத்தைப் பெற்றது என்று சொன்னால், வெறும் உவமையா? எதையும் தாங்கும் இதயம் என்று சொன்னார்களே, நெருக்கடி காலத்தில். நேரம் இல்லாத காரணத்தினால், அதைப்பற்றி விளக்கமாக சொல்ல முடியவில்லை.

நட்பில் சமரசம் செய்துகொள்வோம்; கொள்கையில்

ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளமாட்டோம்

நாங்கள் நட்பில் சமரசம் செய்துகொள்வோம்; கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். இதுதான் திராவிடர் இயக்கம்.

இந்த மேடையே அதற்குச் சாட்சி. இன்னும் எத்தனையோ நிகழ்ச்சிகளில் நாம் கலந்துகொள்ளலாம். அப்படிக் கலந்துகொள்வதினால், இந்தச் சாயம் அங்கே ஏறிவிடாது; அந்தச் சாயம் இங்கே ஏறிவிடாது. கலைஞருடைய ஆளுமைக்கு எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

நாடே சமத்துவபுரமாக ஆகவேண்டும், அதுதான் மிக முக்கியம்.

ஜாதி ஒழியவேண்டும், தீண்டாமை அழியவேண்டும், பெண்ணடிமை தீரவேண்டும். இவை அத்தனையும் செய்கின்ற இயக்கம், எங்கள் இயக்கம்.

கலைஞர் வெறும் படமல்ல; நமக்கெல்லாம் பாடம்!

எனவேதான் நண்பர்களே, நீங்கள் இவ்வளவு பெருமைகளை கலைஞருக்குச் சொல்லிவிட்டு, கலைஞர் புகழ் வணக்க நிகழ்விற்கு வந்துவிட்டு நீங்கள் செல்லும்பொழுது, கலைஞருடைய படத்தை மட்டும் பார்த்துவிட்டுப் போகாதீர்கள் தோழர்களே, கலைஞரிடமிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டு செல்லுங்கள். அது வெறும் படமல்ல; இனிமேல் அவர் நமக்குப் பாடம். அந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக் கிற அடுத்த ஆசான் இதோ வந்துவிட்டார். அந்த ஆசானுக்குப் பின்னால், அணிவகுத்து நிற்பதற்கு ஆயத்தமாகுங்கள்.

பயிர் எது? களை எது? என்று விவசாயிகளாக இருக்கக்கூடிய உங்களுக்கு நன்றாகத் தெரியும். பயிர் வளரும்; களை வளரக்கூடாது.

கலைஞருக்கு ஆளுமைத் திறன் உண்டு என்று

சொன்னவர் தந்தை பெரியார்!

திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா அவர்கள் மறைந்த நேரத்தில், கலைஞர் தலைவராக வர முடியுமா? கலைஞருடைய ஆளுமையைப்பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே - இந்த ஆளுமையில் அவருக்குத் திறன் உண்டு என்று அடையாளம் கண்டு அவருக்கு உத்தரவு போட்டவர் தந்தை பெரியார் அவர்கள்.

திராவிட இயக்கம் போடுகிற கணக்கு - தொலைநோக்கு

என்றைக்கும் தப்பாது

முதலமைச்சர் பதவியை ஏற்பதற்குக் கலைஞர் தயங்கினார். தந்தை பெரியார் கட்டளையிட்டார். சாட்சியாக நாங்கள் உயிரோடு இருக்கிறோம், இன்ன மும் சாட்சியங்களாக இருக்கிறோம். காரணம், பெரியாருடைய தொலைநோக்கு. ஒருபாதியை நான் முடிக்கிறேன்; இன்னொரு பாதியை என் தம்பி கருணாநிதி முடிப்பார் என்று அண்ணா சொன்னாரே - அது அண்ணாவின் தொலைநோக்கு. ஆகவேதான், திராவிட இயக்கம் போடுகிற கணக்கு - தொலைநோக்கு என்றைக்கும் தப்பாது. என்றைக்கும் அது சரியாக இருக்கும்.

ஆயிரங்காலத்துப் பயிரை, எந்த எருமையும்,

எங்கேயும் நுழைந்து அதை மேய்ந்துவிட முடியாது

எனவே, நண்பர்களே! கலைஞரைப் படமாகப் பார்க்காதீர்கள். அருமையான இந்த அரங்கத்தைப் பாருங்கள் - நீங்கள் செல்வதற்கு முன், ஒருமுறை இந்த அரங்கில் மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கிறது. அந்த மெழுகுவத்தி எரிந்துகொண்டிருக்கிறது என்றால், தன்னை அழித்துக்கொண்டு ஒளியைக் கொடுத்து - இருளை விரட்டுவதுதான் மெழுகுவத்தி. அப்படிப்பட்ட மெழுகுவத்திக்கே அந்த சக்தி உண்டென்றால், உதய சூரியன், உதய சூரியனாக இருக்கிறது என்று அவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர். படமாகக் கலைஞரைப் பார்க்காதீர்கள் - திராவிட இயக்கம் ஆயிரங்காலத்துப் பயிர் - இந்த ஆயிரங்காலத்துப் பயிரை, எந்த எருமையும், எங்கேயும் நுழைந்து அதை மேய்ந்துவிட முடியாது.

தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில்

நான்காவது அத்தியாயம் தொடங்கட்டும்!

எனவே, கலைஞருடைய ஆளுமை என்பது ஆட்சியில் இருக்கும்பொழுதல்ல - ஆட்சியில் இல்லாதபொழுது - எதிர்ப்பு வரும்பொழுது - கம்பீரமாக எழும் - உண்மையான எதிர்ப்பாக இருக்கும்பொழுதுதான் - அந்த சக்தி  மேலும் பலம் பெறும். அந்த வகையில், அனுபவம் பெற்றவர்தான் நாளை மறுநாள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்குத் தலைவராக வரப்போகிறார் - நம்முடைய ஒப்பற்ற தோழர், ஒப்பற்ற சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள்.

போட்டியில்லாமல் தேர்வு என்பதை அழகாக உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னார்கள் - சகோதரர் வைகோ உள்பட. இதுதான் வரலாறு. இந்த வரலாறு ஒரு புதிய அத்தியாயம்.

எனவே, நான்காவது அத்தியாயம் தொடங்கட்டும்!

நம்முடைய லட்சியப் பயணம் வெற்றி முரசு கொட்டட்டும்!

கொள்கைகள் ஓங்கட்டும்!

தடையில்லை - பயணம் செய்வோம் - பயணங்கள் முடிவதில்லை!

வாழ்க கலைஞர்! வாழ்க பெரியார்! வாழ்க திராவிடம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner