எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘பவுத்தத்தை விரட்ட கண்டுபிடித்த கருவிதான் வி-நாயகர்''

மதவெறியை விரட்டி மனிதத்தைக் காப்போம் வாரீர்!

விநாயகர் சதுர்த்தி என்று வீட்டுக்குள் மட்டுமே நடந்து வந்தது. அதனை மாற்றி இந்துத்துவாவைப் பரப்பிட, மகாராட்டிரத்தில் வீதிக்குக் கொண்டு வந்தவர் திலகர் என்ற மராட்டிய பார்ப்பனரே! பவுத்தத்தை விரட்ட பிள்ளையார் உருவாக்கமும் நடந்துள்ளது என்பது வரலாறு; மதவெறியை மாய்த்து மனிதநேயத்தைக் காத்திட உறுதி கொள்வோம் என்று திராவிடர்  கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

ஆற்றங்கரையில், குளத்தங்கரையில், ஆலமரத்தடியில் இருந்த பிள்ளையார் இப்போது - இந்துத்துவா சக்திகளால் ஆர்.எஸ்.எஸ். பிள்ளையாராக, மதவெறிச் சின்னமாக அந்தப் பிள்ளையாரை அரசியல் ஆயுதமாக ஆக்கியவர் மகாராஷ்டிரத்து வர்ணாசிரம வெறியரான பால கங்காதர திலகர் என்ற மராத்திய சித்பவன் பார்ப்பனர் ஆவார்.

திலகர் கொளுத்திப் போட்ட தீ!

1893 ஆம் ஆண்டில் இவர்தான், பிள்ளையார் பக்தியை - ‘‘கணபதி வழிபாடு'' என்ற பெயரால் ஆக்கி, பிள்ளையார் சிலைகளை வைத்து, பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கும் விழாவாக அதனை ஆக்கி, இந்துத்துவா உணர்வை இதில் புகுத்தி, தனி நபர்களின் அடக்கமான நிகழ்வாக நடத்தியதை ஒரு அரசியலுக்கான மூலதனமாக ஆக்கினார்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரை - இது வாதாபியிலிருந்து பரஞ்சோதியால் கொண்டு வந்து இறக்குமதியான கடவுள்; ஆதி வேதங்களில்கூட பிள்ளையார் கிடையாது, பிறகு புராணங்கள்மூலம் புகுத்தப்பட்ட ஒன்று.

‘பிறந்தது எப்படியோ' என்ற நூலில் பன்மொழிப் புலவர் - பழுத்த ஆஸ்திகரமான - தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் எழுதியுள்ளார். இந்த பிள்ளையார் வாதாபியிலிருந்து கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சுமார் 1,300 ஆண்டுகளுக்குள்தான் தமிழ்நாட்டுக்குள் இது படையெடுத்தது.

பவுத்தத்தை விரட்டவே

பிள்ளையார்

வெறும் பக்தி, உள்ளூர் கோவில், குளங்கள், ஆற்றங்கரை புராணக் கடவுளை - பவுத்தத்தைப் பரவாமல் தடுக்கவே அப்போது வடக்கே கண்டறிந்து வி-நாயகன் என்று அரச மரத்திற்கு அடியில்  (போதிமரம் - அரச மரம்) வைத்து பவுத்தத்தை விரட்டினர் ஆரியப் பார்ப்பனர்கள்!

(புத்தருக்கு வி-நாயகர் என்ற பெயரும் உண்டு) கடவுளைப் பயன்படுத்தி  மதப் போதையை மதவெறியாக்கினர்.  பக்தி உணர்வை பாமரர்களிடம் தீவிரப்படுத்திட, பயன் படுத்தினர். இந்து மத விழாக்களை ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவமயமாக்க வேண்டுமென்றே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களில் ஒன்றான விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஒன்றுகூடியே பிள்ளையார், இராமர் போன்ற கடவுளரைக் கருவியாக்கி அரசியல் போராட்டப் போர் நடத்தி, சிறுபான்மையோர் உள்பட மற்றவர்களை மதக் கலவரத்தைத் தூண்டி அச்சுறுத்துகின்றனர்!

வடநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் வந்து, தமிழ் நாட்டில் ஒரு பிள்ளையார் சிலைக்கு இவ்வளவு ‘ரேட்'  கொடுக்கப்படும் என்று கூறி, வறுமையிலும், ஏழ்மையிலும் உள்ள அப்பாவிகளான ஒடுக்கப்பட்டோரை திட்டமிட்டே இதற்கும் பயன்படுத்தும் ஏற்பாடு (‘செட் அப்') விழாதானே தவிர, பக்தர்கள் பெரிதும் களிமண் பிள்ளையாரை விலை கொடுத்து வாங்கி வீட்டுக்குள் வைத்து, பிறகு கிணற்றிலோ, குளத்திலோ கரைக்கும்  பழக்கம் மாற்றப்பட்டது.

இந்தப் பக்தி போதையை வைத்து தேவையற்ற மதக் கலவரத்தை உருவாக்குவது என்பது முன்பே திருவல்லிக் கேணி பகுதியில் நடைபெற்றது!

சுமார் ஒரு லட்சம் காவல்துறையினரை இதற்கு அழைத்து வந்து, காவல் காத்து, கலவரம் நிகழாமல் காக்கும் நிர்ப்பந்தத்தை இவர்கள் உருவாக்கி வருகின்றனர். நீதிமன்றம் தலையிடும் நிலைகள் எல்லாம் உருவாக்கப்படுகின்றன. இதுதான் கடவுள் பக்தியா? சக்தியா?

பிள்ளையார் என்பது ஒரு மூடநம்பிக்கை; அதற்கென எந்த தனி சக்தியும் இல்லை என்று நிரூபித்துக் காட்டவே பிள்ளையார் உருவத்தை தந்தை பெரியாரும், அவர்தம் தொண்டர்களும் உடைத்துக் காட்டினர்! அது ஒரு வகையான நிரூபணக் காட்சி செயல்முறையே! (அதுவும் கழகத்தவர்களின் சொந்த செலவில்!).

27.5.1954 இல் உடைத்துக் காட்டிய பெரியார், 1973 வரை 95 வயது வரை வாழ்ந்து காட்டி - ‘‘பிள்ளையார் கண்களைக் குத்தவில்லை'' என்று காட்டி, மதக் கலவரங்களுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை என்று நிரூபித்தார்.

இப்போது செய்யப்படுவது தன்னிச்சையான பக்தியின் எழுச்சியால் அல்ல; பண சக்தியின் மகிமையே!

அதுவும்கூட நாளுக்கு நாள் மங்கி குறைந்துதான் வரு கிறது! அறிவுபூர்வ பிரச்சாரத்திற்குப் பதில் இதை ஊடகங்கள் ஊதுவதால் அதற்குத் தனி மகிமைபோல சித்தரிக்கப்படுகிறது!

மூட நம்பிக்கையாளர்கள் ‘அழுக்குருண்டை' கணபதியை கம்ப்யூட்டர்மூலம் புகுத்தி, அறிவியலை மூடத்தனத்துக்கு முட்டுக்கொடுக்க வைப்பது அறியாமையின் - அபத்தத்தின் வெளிப்பாடு!

கோவில் திருவிழாக்களில்தானே பெரும் கலவரங்கள் வெடிக்கின்றன! தடையால் கோவில் கதவுகளுக்குப் பூட்டும் போடப்படுகிறதே - பக்தியோ, மதமோ மக்களைப் பிளவுபடுத்துகிறதே தவிர, ஒன்றுபடுத்தப் பயன்படவில்லை என்பது உண்மை!

இவைதான் இன்றைய பிள்ளை-யார்? என்பதைப் புரிந்துகொண்டு, மதவெறியை விரட்டி, மனிதநேயம் காக்க அணிவகுப்பீர் திராவிடர்களே!

 

 

 

தலைவர்
திராவிடர் கழகம்.
சென்னை 13.9.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner