எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பல இடங்களிலும் அடிதடி - கல்வீச்சு - காவல்துறையினருக்கும் காயம்!

சென்னை, செப்.14 விநாயகர் ஊர்வலம் என்ற பெயரால் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் இந்து முன்னணி வகையறாக்கள் வன்முறையில் ஈடுபட்டனர். கல்வீச்சுக் காரணமாக காவல் துறை யினரும்கூட காயம் அடைந்தனர். ஓர் இடத்தில் காவல்துறையினரே பிள்ளையார் பொம்மையைக் கரைக்கும் அவலம் ஏற்பட் டுள்ளது.

சாதாரணமாக களிமண்ணில் பிள்ளையார் பொம்மையைச் செய்து வீட்டோடு மட்டுமே நடைபெற்றுவந்த பிள்ளையார் சதுர்த்தி என்பதை தெருவுக்கு கொண்டு வந்து, வீதிக்கு வீதி, உயரமான சிலைகளை வைத்து, தெருவை அடைத்துள்ளதுடன், ஒலிபெருக்கி, இசைத் தட்டுகளை ஓடவிட்டு, ஒட்டுமொத்த பகுதியை யுமே ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.  விநாயகர் சிலை அமைப்பது தொடங்கி, விழா நடத்துவது, சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது வரை எல்லாவற்றிலும் அடாவடிகள், அடிதடிகள், வன்முறைகள் மேலோங்கியுள்ளன.

செங்கோட்டை, மேலூரில் மோதல்

செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கல், பாட்டில் வீசி நடந்த தாக்குதலில் 3 காவல்துறையினர் உள்பட 10 பேர் காய மடைந்தனர். செங்கோட்டை மேலூரில் ஆண்டுதோறும் சதுர்த்தியையொட்டி மொத்தம் 38 விநாயகர் சிலைகள் வண்டிமறிச்சம்மன் கோயில் முன் வைப்பதற்காக மேலூர் பெரிய பள்ளிவாசல் தெரு வழியாக கொண்டுசெல்ல அனுமதி பெற்றிருந்த பெண்கள் உள்ளிட்ட விழாக்குழுவினர் சுமார் ஆயிரம் பேர், நேற்று இரவு 9.30 மணி அளவில் விஸ்வநாதபுரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்தனர். அது அனுமதிக்கப்படாத பகுதியாகும்.

அப்போது அந்த தெருவை சேர்ந்த மக்கள், விநாயகர் சிலையை கொண்டு செல்ல கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 500 பேர் திரண்டனர். இதையடுத்து விநாயகர் சிலை அந்த தெருவுக்கு வந்தபோது இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்குமிடையே கல்லெறி சம்ப வம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் சுரேஷ்குமார் தலை மையில் குறைந்த அளவில் பாதுகாப்புக்கு சென்ற காரணத்தால் இந்த தாக்குதலில் காவல்துறையினர் மூவர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். கல் வீச்சில் அப்பகுதியில் இருந்த கடைகளும் சேத மடைந்தன.  தொடர்ந்து இருதரப்பினரையும் சமரசப்படுத் தினர். மேலும்  ஊர்வலக் குழுவினரை பாதுகாப் பாக மீட்டு அனுப்பிவைத்தனர். விநாயகர் சிலையும் வேனில் பலத்த பாதுகாப்புடன் அதே தெரு வழியாக வண்டிமறிச்சம்மன் கோயில் முன் கொண்டுசென்று வைத்தனர்.

தகவலறிந்து தென்காசி காவல்துறை துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையில் விரைந்து வந்த நூற்றுக்கணக்கான காவல்துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின் றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவுகிறது.

சேலம், ஆத்தூர்

ஆத்தூரில், விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு வழிவிடாதது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கல்வீசி தாக்கியதில் அதிமுக முன்னாள் நகரமன்ற தலைவி உள்பட 25 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

ஆத்தூரில் இரவு 9 மணியளவில் விநாயகர் சிலை மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகளின் வழியாக சரக்கு ஆட்டோவில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலம் மந்தை வெளி மற்றும் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களை கடந்து நடுபெரியார் தெரு அருகே சென்றது. இருதரப்பினர் இடையே கல்வீச்சு, வாக்கு வாதம்  மோதலாக மாறியது. உருட்டு கட்டை, கற்கள் ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடை பெற்றது. நகரசபை முன்னாள் தலைவர் உமா ராணி, அவருடைய கணவர் பிச்சை கண்ணன், மகன்கள் விக்ரம், வினோத் மற்றும் ரேணுகா, விமல்ராஜ், மீனா, பிரியா உள்பட 13 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் சென்ற ராஜ மாணிக்கம், ராஜா உள்பட 6 பேர் காயம் அடைந்தனர். இருதரப்பை சேர்ந்த மொத்தம் 19 பேர் காயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து இருதரப்பை சேர்ந்தவர் களும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவ மனைக்கு வந்தனர். மருத்துவமனையிலும் இரு தரப்பினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற் பட்டது. மேலும் மோதல் ஏற்படும் சூழல் உரு வாகியது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் பொன். கார்த்திக்குமார், ஆத்தூர் காவல்துறை ஆய்வாளர் கேசவன் மற்றும் காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இந்த மோதல் சம்பவத்தால் விநாயகர் சிலை ஊர்வலம் பாதியில் நின்றது. இதனால் விநாயகர் சிலை எடுத்து சென்ற வாகனம் மாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக ஆத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கலில் தடையை மீறிய இந்து முன்னணி

திண்டுக்கல் மாவட்டத்தில் 1,183 இடங்களில் சிலை வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. பிரச்சினைக்குரிய 150 இடங்களில் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டது. திண்டுக்கல் குடைபாறைப்பட்டி கருப்பசாமி கோவில் முன்பு விநாயகர் சிலை வைக்க பொதுமக்கள் அனுமதி பெற்றிருந்தனர். இதேபோல, இந்து முன்னணி சார்பிலும் அங்கு ஒரு சிலை வைக்க அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி அளிக் கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி சிலை வைக்க இந்து முன்னணியினர் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று காலை அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு தயாராக வைத்திருந்த சிலையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கருப்பசாமி கோவிலில் தடையைமீறி சிலையை வைக்கத் தயாரானார்கள். இதையடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். பின்னர், காளியம்மன் கோவிலுக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மோகன்ராஜ், வீரபாண்டி மற்றும் வட்டாட்சியர் லட்சுமி ஆகியோர் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அனுமதிக்கப்படாத இடத்தில் சிலை வைக்கக்கூடாது என்று அவர்கள் எச்சரித்தனர்.

காவல்துறையினருடன் இந்து முன்னணி மோதல்

ஆனால், உடன்பாடு ஏற்படாததால் காவல்துறையினர் சிலையை பறிமுதல் செய்ய முயன்றனர். இதனால், இந்து முன்னணியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனே, அங்கிருந்த இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் சங்கர்கணேஷ், செயலாளர்கள் சஞ்சீவி, பாலசங்கர், வீரதிருமூர்த்தி மற்றும் 4 பெண்கள் உள்பட 45 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினரே கரைத்த அவலம்

மேலும், சிலையையும் பறிமுதல் செய்து அங்கிருந்து காவல்துறையினர் எடுத்து சென்றனர். பின்னர், காவல்துறையினரே அந்த சிலையை திண்டுக்கல் கோட்டை குளத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டியில் கரைத்தனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட 45 பேரையும் திண்டுக்கல்-நத்தம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காவல்துறையினர் அடைத்துவைத்தனர்.

பொள்ளாச்சி அருகே கரட்டுபாளையத்தில் இந்து முன்னணி சார்பில் நேற்று விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த இடத்திற்கு மட்டும் சிமெண்டால் ஆன மேற்கூரையால் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.  அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்று, விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த பந்தலுக்குள் புகுந்தது. இதில் பந்தல் சரிந்து விழுந்து சேதம் அடைந்தது. அப்போது பந்தல் மற்றும் அந்த பகுதியில் நின்றிருந்த குழந்தைகள், பெண்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அய்யோ, அம்மா என்று கூச்சலிட்டனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.

இதையடுத்து அக்கம், பக்கத்தினர் உடனே அங்கு சென்று, சரக்கு ஆட்டோவை பின்னோக்கி எடுத்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்புலன்சு வாகனங்கள் மூலம் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். இந்த விபத்தில் தர்ஷினி (வயது 12), பவித்ரா (16), நர்மதா (18), காமாட்சி (35), அருணா (17), சரோஜினி (34), ரேவதி (34), திரேசா (27), கோகுல்பிரவீன் (5), மகாலட்சுமி (28), பாலு (40), கீதா (7), லோகநாயகி (45), செந்தில்குமார் (13), அனன்யா (17) ஆகிய 15 பேர் படுகாயமடைந்தனர்.

இதில் அருணா, தர்ஷினி, கோகுல் பிரவீன் ஆகியோர் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் கரட்டுபாளையத்தைச் சேர்ந்த பாலு என்பவர் குடிபோதையில் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் பாலுவை வலைவீசி தேடி வரு கின்றனர். -விநாயகர் ஊர்வலத்தால் காங்கேயத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த அவதியுற்றனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில்  விசுவ இந்து பரிஷத் மற்றும் சங்-பரிவார்களின் ஆதரவு அமைப்பான விவேகானந்தர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில்  13.09.2018 மாலை 4 மணியளவில் களிமேட்டிலிருந்து  துவங்கிய விநாயகர் ஊர்வலம் காங்கேயம் நெடுஞ்சாலை சந்திப்பை அடைந்தவுடன் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தவேண்டும் என்ற கலவர நோக்கோடு வாகனங்களை நகர்த்தாமல் வேண்டுமென்றே  வி.எச்.பி. உள்ளிட்ட சங்-பரிவார் கும்பல்கள் சாலையில் கூச்சலிட்டுக் கொண்டு ஆட்டம் போட்டனர். இதன் விளைவாக காங்கேயம் நான்கு சாலை சந்திப்பில் அரைமணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். இதையொட்டி காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை திட்டமிட்டே ஏற்படுத்திய சங்-பரிவார்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யவில்லை, மாறாக ஊர்வலத்தை விரைவாக நகர்த்தக் கோரி காவல்துறையினர் சங்-பரிவார் கும்பல்களிடம் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner