எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!''

வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்!!

வருகின்ற 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்த பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இப்பொழுது புதிய நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். ஜாதி -  வருண முறைகள் ஒழிக்கப்படவேண்டுமென்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியதை இப்போது தற்காலிகமாக (தேர்தல் வாக்கு வங்கிக்காக) மறைத்துப் பேசி மீண்டும் மயக்க பிஸ்கட்டுகளை'' தின்ன வைத்து, வாக்குகளைப் பறிக்கவே இப்படி ஒரு நாடகம் - இந்த வித்தைகள்'' இனியும் எடுபடாது. வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்  என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது

ஆளும் பா.ஜ.க.வின் வழிகாட்டியும், கொள்கை ஆணையர்களாகவும் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப் பிற்கு, வரும் 2019 பொதுத் தேர்தலில்  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பா.ஜ.க. - பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் இந்தியாவில் ஆட்சிக்கு வர முடியாது என்பது புரிந்துவிட்டது.

2014 ஆம் ஆண்டு - 18 வயது இளைஞர்களில் வேலையில்லாத பல லட்சம் இளைஞர்களுக்கும், வறுமையில் வாடிய பல்வேறு ஏழைகளுக்கும், விவசாயி களுக்கும் மாற்றம் வந்தால் நல்லது என்றும், வளர்ச்சி, வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம் என்பதை மட்டும் வெளிப்படையாகக் கூறி, மயக்க பிஸ்கட்டுகளைத் தந்து பொருள்களைப் பறிப்பதுபோல'' தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி, வாக்கை அள்ளி ஆட்சிக்கு வந்துவிட்டனர்! 4 ஆண்டு கடந்தும் ஏதும் செய்யவில்லை.

நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டனர்!

பண பலம், பத்திரிகை பலம், பல மாநிலங்களில் (வன்முறை) ஆள் பலம் - இவைகளை வைத்து, மோடி பிரச்சாரம் செய்தார். தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வந்து விழும்; 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு - வளர்ச்சியே எங்கள் லட்சியம் - சப்கே சாத் சப்கா விகாஸ்'' என்றெல்லாம் கூறி, பாமர மக்களை ஏமாற்றியதை இன்று நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொண்டனர்!

பசு மாட்டுக்குத் தரும் பாதுகாப்புகூட இந்த நாட்டின் படித்த அறிவாளிகளுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ, உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட சகோதரர்களுக்கோ, பெண்களுக்கோகூட கிட்டவில்லை என்பது பட்டாங்கமாய் புரிந்துவிட்டது.

அரசியல் சட்டத்தின் மூலக் கோட்பாடுகளையே விழுங்கி வருகிறார்கள்!

இதற்கு மூலகாரணம், எந்த அரசியல் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்து பதவியேற்றார்களோ, அதையே கரையான்கள் புத்தகங்களை அமைதியாக அரித்து பக்கங்களைத் தின்று விடுவதுபோல், இன்று அரசியல் சட்டத்தின் மூலக் கோட்பாடுகளையே விழுங்கி வரும் வேதனை  நாளுக்கு  நாள் பெருகிவரும் அவலமாகக் காட்சியளிக்கிறது! அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானமே தகர்க்கப்படும் பேரபாயம்!

இந்திய அரசியல் சட்டத்தின் மூலநோக்கில் அதன் பீடிகைகளில் - முக்கியமான சமதர்மம் - மதச்சார்பின்மை - ஜனநாயகம் - சமூகநீதி எல்லாம் தொடர்ந்து இவ்வாட்சியால் காணாமற்போகும் நிலை வெளிப்படையாகவே தெரிகிறது!

இந்திய அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானமே தகர்க்கப்படும் பேரபாயம் ஏற்பட்டுள்ளது.

அய்ந்து முக்கிய அம்சங்கள்தான் அடிப்படைக் கட்டு மானம்.

1. அரசியல் சட்டமே அதிகாரம் மிக்கது! அதற்கு மேலானது எதுவும் இல்லை என்ற உண்மை.

2. குடியரசு முறையிலான ஜனநாயக ஆட்சி முறை யானது.

3. மதச்சார்பின்மையைக் காக்கும் அரசியல் சட்டம்.

4. நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாகம், நீதித் துறையினர் தனித்தனி செயலாக்கும் உரிமை.

5. கூட்டாட்சித் தத்துவத்தைக் காக்கும் அரசியல் சட்டக் கடமை.

மதச்சார்பின்மை' என்பதை மோடி ஆட்சி தந்த முழு பக்க விளம்பரங்களில் துணிந்து எடுத்துவிட்டே முழுக்க முழுக்க விளம்பரம் தந்து வெள்ளோட்டம் விட்டுப் பார்க்கவில்லையா?

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை!

பேச்சுரிமை, கருத்துரிமைக்குப் பாதுகாப்பற்ற நிலை - அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே வெளியே வந்து பேட்டி கொடுக்கும் நிலை ஓர்புறம்; மற்றொரு புறம் - மாறுபட்ட கருத்துகளை சகிப்பதான (Dissent) ஆரோக்கிய ஜன நாயகம். அதை அடக்கினால், பிரஷர் குக்கர்' உள்ள ஆவியினால் அது வெடிக்கும் நிலைக்கு வந்துவிடும் என்று எச்சரிக்கும் நிலையில், மத்திய அரசின் தேச விரோத குற்றச்சாட்டுகளை'' சுதந்திர கருத்தாளர்கள்மீது ஏவுவதுபற்றிச் சுட்டிக்காட்டிடும் நிலை.

முந்தைய அமெரிக்க மெக்கார்த்தியிசம்'' இப்போது புதிய வடிவில் வருகிறதோ என்ற அச்ச உணர்வு - இவைகளால் நாட்டில் ஏற்பட்டுள்ள கொதி நிலையை உணர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, இப்போது தனது புதிய சாகச வித்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஓநாய்கள் ஜீவகாருண்யப் பிரசங்கம் செய்வதுபோல...

ஓநாய்கள் ஜீவகாருண்யப் பிரசங்கம் செய்வதுபோல, சைவத்தின்'' மேன்மையை பேசத் தொடங்கி, வாக்காளர் களை ஏமாற்றும் வகையில், ''புதிய அவதாரம்'' எடுத்து, ஜனநாயக அமைப்புதான் எங்கள் அமைப்பு'' என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ். என்பது பழைய வரலாறு!

ஆர்.எஸ்.எஸின் புதிய பிரசங்கம்!

இந்துராஷ்டிரத்தில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்று யார் சொன்னது? இந்துத்துவாவில் முஸ்லிம்களுக்கு இடமில்லை என்றெல்லாம் கூறுவது தவறு'' என்று புதிய இதோபதேசத்தை - புதுடில்லி விஞ்ஞான் பவனில் மூன்று நாள் மாநாடு என்று கூட்டி, புதிய பிரசங்கம்'' செய்துள்ளது!

பொதுவாக அரசு நிகழ்வுகளைத் தவிர கட்சி நிகழ்ச்சி களுக்கு - வாடகை தந்தால்கூட விஞ்ஞான் பவனைத் தரு வதில்லை என்ற நடைமுறைக்குக்கூட விடை கொடுத்து, இந்த மூன்று நாள் மாநாடு- கருத்தரங்கம்' என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்துள்ளது.

அதில் அதன் தலைவர் மோகன் பகவத் (பார்ப்பனர்) அம்பேத்கர் குறிப்பிட்டதை இந்து சட்டத் திருத்தத்தின் இந்து சட்டத்தின் சனாதனம் என்பது மனித மதிப்பிற்கு மாறானது என்று கூறியதைக்கூடச் சுட்டி,  பல திசை திருப்பும் வாதங்களைக் கூறியுள்ளார்!

அம்பேத்கர் அரசியல் சட்டத்தில் கூறிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்பற்றியும் குழப்பிவிட்டு, சகோ தரத்துவத்திற்கு'' புதிய பாஷ்யம்'' கூறுகிறார்!

அப்பட்டமான ஏமாற்று - புரட்டு!

புத்தர் சொன்ன சகோதரத்துவத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ். இப்போதும் பின்பற்றுகிறதாம்! என்னே வேடிக்கை!!

புத்தத்தை விழுங்கிவிட்டதுபோல், அம்பேத்கரையும் காவி வண்ணத்தைப் பூசி கபளீகரம் செய்வதுபோல பேசுகின்ற சைவமாகி'' விட்டோம் என்று கூறும் இந்த ஆரிய ஓநாய்கள்' கூறுவது அப்பட்டமான ஏமாற்று - புரட்டு என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை ஆசானாகிய கோல்வால்கரின் Bunch of Thoughts ஞானகங்கை'' என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலும், நாம் அல்லது நமது சமுதாயத்தன்மை'' என்ற நூலும் சரியான சான்றுகளாகும். (இந்நூல் எழுதப்பட்டது 1939 ஆம் ஆண்டு; மொழி பெயர்ப்புடன் வெளியீடு தமிழில் 1954, மே ஆகும். இந்த நூலில் இந்தியா அல்லது இந்தியன் என்ற சொல்லே எங்கு தேடினாலும் காணக் கிடைக்காத ஒன்று).

அதுபோலவே முஸ்லிம்கள்பற்றி ஞானகங்கை' நூலில் தனி அத்தியாயத்தில் அவர்கள் எவ்வளவு தாக்கப்பட்டிருக்கிறார்கள், கிறித்துவர்கள் போன்ற மைனாரிட்டிகளுக்கு - இந்துராஷ்டிரத்தில் என்ன இடம் என்பது போன்றவைகள் கொள்கை திட்டமாக அறி வித்திருக்கிறார்கள்.

இராமனை ஏற்காத இசுலாமியர்களுக்கு இடம் கிடை யாது; கிருஷ்ணனை கடவுளாக ஏற்காத கிறித்துவர் களுக்கு நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என்பது போன்ற கருத்துகள் அதில் இடம்பெற்றுள்ளன. (ஞான கங்கையையே முழுவதும் ஏற்கமாட்டோம் என்கிறார் இப்போது).

ஏதேதோ சமாதானம் சொல்லும் மோகன் பகவத்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பெண்களுக்கு இடமில்லை; பெண்ணுரிமையை அது ஏற்பதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஏதோ ஒரு சமாதானம் சொல்லி மழுப்பியுள்ளார்.

அந்தக் காலத்தில் ஆணும் - பெண்ணும் இணைந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றுவது கஷ்டமாக இருந்ததாம்!

பிறகு, அகில இந்திய பெண்கள் அமைப்பினை ராஷ்டிரிய சேவிகா சமிதி'' என்று உண்டாக்கினார்களாம்!

மனுதர்மத்தில் பெண்கள்பற்றி என்ன கூறப்பட் டுள்ளதோ, அதுதானே இன்றும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை - மகளிர் உரிமைகளைப் பொறுத்தவரை!

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் பெண்களுக்கான இடம் என்ன?

எனவே, முகமூடிகளைக் கண்டு என்றும் இன்றைய தலைமுறையினர் ஏமாறமாட்டார்கள். அடுப்பங்கரை, பிள்ளைப் பேறு - வீட்டுக்குள் சம்சார பந்தம் - இதுதானே ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் பெண்களுக்கான இடம் - மறுக்க முடியுமா?

வருண ஜாதி முறையின் மேன்மை குறித்து சிலாக்கியப்படுத்தி, அந்த ஜாதி - வருண முறைகள் ஒழிக்கப்படவேண்டுமென்று கூறுவது ஏற்கத்தக்கது அல்ல என்று கூறியதை இப்போது தற்காலிகமாக (தேர்தல் வாக்கு வங்கிக்காக) மறைத்துப் பேசி மீண்டும் மயக்க பிஸ்கட்டுகளை'' தின்ன வைத்து, வாக்குகளைப் பறிக்கவே இப்படி ஒரு நாடகம்! எவரும் ஏமாந்துவிடமாட்டார்கள்!!

வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்!

எட்டிக்குத் தேன் தடவி விட்டால் அதன் கசப்பு மாறிவிடுமா?

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!

எனவே, இந்த வித்தைகள்'' இனியும் எடுபடாது. வேஷங்கள் கலையும் - உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும்.

மோகன் பகவத்தின் பேச்சு மூன்றாம் நாளில் தலைகீழாக மாறியதுபோன்று கேள்வி - பதில் மற்றும் உரை வீச்சாக அமைந்தது.  2019 இல் நடைபெறவிருக்கும் தேர்தலில் தோல்வியைத் தடுக்கவே இப்படி ஒரு பசுத்தோலை' ஓநாய்கள் அணிவதுபற்றி நாளையும் விரிவாக அறிக்கை வரும்!

 

கி.வீரமணி,

தலைவர்  திராவிடர் கழகம்.

சென்னை

20.9.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner