எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடியின் நிதிக்கொள்கை மிகத் தவறானது

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

சென்னை, அக்.6   பெட்ரோல், டீசல் விலை உயர்விற்குக் காரணமே மத்திய அரசுதான். மோடியினுடைய நிதிக் கொள்கை மிகத் தவறானது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

5.10.2018 அன்று மாலை  சென்னை பெரியார் திடலில்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

இது நிரந்தரமான பரிகாரமல்ல!

செய்தியாளர்: மத்திய அரசு நேற்று பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைத்திருக்கிறார்களே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பெட்ரோல், டீசல் விலை 350 சதவிகிதம் அதிகமாவதற்குக் காரணமே மத்திய அரசுதான்.  இப்பொழுது எதிர்ப்புகள் கடுமையாக வருகிறது, தேர்தல் நெருங்குகிறது என்கிற காரணத்தினால், ஒட்டகத்தின்மீது சுமையை ஏற்றியவர்கள், அதன்மேல் உள்ள வைக்கோல் பிரிகளை லேசாக எடுத்துவிடுவது என்கிற ஒரு பழமொழி உண்டு. அதுபோல் மத்திய அரசு செய்திருக்கிறது.  ஆனால், இது நிரந்தரமான பரிகாரத்தையோ, திருப்தியையோ தராது.

என்றாலும், மத்திய அரசு, மாநில அரசு கள்தான் செய்யவேண்டும் என்று சொல்கிறது. எங்களுக்கு வருகின்ற வருமானத்தை மத்திய அரசுதான் கொண்டு செல்கிறது என்று மாநில அரசுகள் சொல்கின்றன.

பா.ஜ.க. ஆளுகின்ற மாநிலங்களில், பெட்ரோல், டீசல் விலையை ஓரளவிற்குக் குறைத்திருக்கிறார்கள் என்றாலும், ஏற்றியது பல மடங்கு  - குறைத்ததோ ஒரு சில அளவுதான் என்னும்போது  இது சரியான பரிகாரமாகாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது விவசாயிகளை, இரண்டு சக்கர வாகன ஓட்டி களை - நடுத்தர மக்களை  இன்னமும் பாதித்துக் கொண்டிருக்கிறது.

அதோடு, ரூபாயினுடைய மதிப்பு மிகவும் கீழே போய்க் கொண்டிருக்கிறது. மத்திய நிதியமைச்சரோ, பண வீக்கம் 4 சதவிகிதத்தில் இருக்கிறது என்று சொல்வது நல்லதல்ல.

பண மதிப்பிழப்பு என்பதன்மூலம் அவர்கள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. மோடியினுடைய நிதிக் கொள்கை மிகத் தவறானது என்பதைத் தெளி வாக இது காட்டுகிறது.

வருமுன் காப்பதுதான் முக்கியம்

செய்தியாளர்: போக்குவரத்து ஊழியர்கள், அரசு எந்தவித உதவியையும் எங்களுக்கு செய்ய முன்வரவில்லை என்றும்,  எங்களுடைய கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்கிற கருத்தை முன்வைத்து, வருகின்ற நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போகிறோம் என்று சொல்லியிருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: பொதுவாக இன்றைய தமிழக அரசு ஆசிரியர்கள் கோரிக்கை, விவ சாயிகள் கோரிக்கை, தொழிலாளர்களின் கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலிக்க முன்வராமல், அடக்குமுறையை மட்டுமே நம்பி அவர்களை அடக்கிவிடலாம், சிறையில் போடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கத்தில், அவர்களுக்குள் இருக்கின்ற உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.

எனவே, இதில் போதிய கவனம் செலுத்தி, மக்கள் பிரச்சினைகள் வெடிக்காமல், தொழிலா ளர்களை உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, ஒரு நல்ல முடிவை எடுக்கவேண்டும்.

பாதிப்பு அதிகமாகி, 100 கோடி ரூபாய் இழப்பு இரண்டு நாள்களில் என்றால், அரசு பணம்தான் இழப்பு; பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற் படும். அதற்குமுன், வருமுன் காப்பது மிகவும் முக்கியமாகும்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner