எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சையில் தமிழர் தலைவர் பேட்டி

தஞ்சை, அக்.10  மனுதர்மப்படி வெறும் முதுகுகளுக்கு ஒரு நீதி - பூணூல் முதுகுகளுக்கு வேறொரு நீதி என்னும் நடைமுறை நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

6.10.2018 அன்று தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் பங்கேற்கச் சென்ற  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழா!

திராவிடர் கழகத்தின் மத்தியப் பொதுக்குழு இன்று தஞ்சையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கொட்டும் மழை, புயல் அறிவிப்புகள் இருந்தாலும், நம்முடைய இயக்க முக்கிய தோழர்கள் கன்னியாகுமரி தொடங்கி திருத்தணி வரையில்  இருக்கக்கூடிய பல மாவட்டங்களிலிருந்து தோழர்கள் ஏராளமாகக் கலந்துகொண்டார்கள்.

பொதுக்குழு உறுப்பினர்கள் 500 பேருக்கு மேற்பட்ட வர்கள் இங்கே வந்திருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இப்பொதுக்குழுவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. அந்தப் 14 தீர்மானங்களில் மிக முக்கியானது அடுத்தாண்டு வருகிற மார்ச் 10 ஆம் தேதி அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடங்கவிருக்கிறது. அந்த நூற்றாண்டு விழாவினை ஓராண்டு முழுக்க சிறப்பாகக் கொண்டாடுவது என்றும், அதற்கடுத்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 6, 7 ஆகிய நாள்களில் தஞ்சையில் திராவிடர் கழகத்தின் மாநில மாநாடு நடைபெறவும் ஏற்பாடாகி இருக்கிறது.

அன்னை மணியம்மையாருக்கு அஞ்சல் தலை

நிறைவேற்றப்பட்டதீர்மானங்களில் குறிப்பாக, அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஆங்காங்கே சிறப்பாக நடத்துவது -  கல்வி அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்து நடத்துவது, அஞ்சல் தலை வெளியிடுவது மற்றும் பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து நல்ல அளவிற்குப் பெண்ணுரிமை களத்தை உருவாக்கி அதை ஒரு பிரச்சாரமாக நடத்துவது என்று முடிவு செய்திருக்கிறோம்.

மேலும் முக்கியமான தீர்மானங்களாகக் குறிப்பிடப்பட வேண்டியது - நீட் தேர்வை ஒழிப்பதற்கு - ஏற்கெனவே விதிவிலக்குப் பெறுவதற்காக நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் அப்படியே ஊறுகாய் ஜாடியில் ஊறிக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த மசோதா என்னாயிற்று என்று மத்திய அரசினைக் கேட்க, தமிழக அரசு தயாராக இல்லை. மத்திய அரசினரும் பதில் சொல்லக்கூடிய நிலையில் இல்லை. நம்முடைய பிள்ளைகளின் தற்கொலைகள் ஏராளமாகப் பெருகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தடுக்கக் கூடிய வகையில், மத்திய அரசினை, மாநில அரசு வலியுறுத்தவேண்டும்.

அதேபோன்று, கீழடி அகழாய்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற நோக்கில், திடீரென்று நேற்று உத்தரவு போட்டி ருப்பதை வன்மையாக இப்பொதுக்குழு கண்டிக்கிறது.

அதேபோல, பல்கலைக் கழகங்களில் வேலை வாய்ப்பு களில் இட ஒதுக்கீட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தினை உரு வாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற தீர்மானங்கள் பதினான்கை இப்பொதுக் குழுவில் நிறைவேற்றி இருக்கிறோம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, மத்திய அரசு இந்துத் துவாவை இப்பொழுது திணித்து, மிகப்பெரிய அளவில் இந்துராஷ்டிரம் என்பதை அவர்கள் வலியுறுத்திக் கொண் டிருக்கிறார்கள்.

அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க நினைக்கிறார்கள்

ஒருபக்கத்தில் அமைதித் தவழக்கூடிய நேரத்தில், இராமனுக்குக் கோவில் கட்டுவோம் என்கிற பிரச்சினையை மீண்டும் கிளப்பி, அதன்மூலமாக, அமைதிக்குக் குந்தகம் விளைவிக்க முயல்கிறார்கள்.

பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை போன்றவற்றை அவமதிக்கின்றவர்களை விட்டுவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். ஒருவருக்கு ஒரு நீதி; இன்னொருவருக்கு வேறொரு நீதி என்று சொல்லக்கூடிய மனுநீதியை நடைமுறைப்படுத்தக்கூடிய அளவிற்கு இன்றைய தமிழக அரசினுடைய போக்கு இருப்பது - அதற்கு மிகப்பெரிய அவப்பெயரை உருவாக்கி இருக்கிறது.

எனவே, தமிழக அரசு இப்பிரச்சினையில், சுதந்திரத் தோடு, தன்னிச்சையாக நடந்துகொள்ளவேண்டும். இரட்டை அளவுகோலை கைது செய்யும்பொழுது பின்பற்றக்கூடாது - கழகக் கூட்டங்கள், தி.மு.க. கூட்டங்களுக்குத் தடை போடுகிறார்கள். அதேநேரத்தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். நீதிமன்றத்தை நாடிதான் உரிமைகளைப் பெறவேண்டிய அளவில் இருக்கிறது.

ஆகவே, இதனையெல்லாம் கண்டித்துத் தீர்மானங்களை நிறைவேற்றி, பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த இருக்கிறோம்.

எனவே, மக்களைப் பொருத்தவரையில், அவர்களை ஆயத்தப்படுத்தவேண்டும் என்பது மிக முக்கியமான திட்டம் - இது ஒரு பிரச்சாரத் திட்டமாகும்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்

அதுபோன்றே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பதில், பயிற்சி பெற்ற ஒருவர் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டார் என்கிற நிலையில், பயிற்சி பெற்ற 206 பேரில் ஒருவருக்குத்தான் வேலை வாய்ப்பினை வழங்கியிருக்கிறார்கள். இன்னும் 205 பேர் இருக்கிறார்கள். காலியான இடங்களும் உள்ளன. ஆகவே, அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பினை வழங்கவேண்டும்.

அறநிலையப் பாதுகாப்புத் துறையினை ஒழிக்கவேண்டும்; நீதிக்கட்சிக் கொண்டு அந்தத் திட்டத்தை அழிக்கவேண்டும் என்று பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு, கோவில் சிலை திருட்டுகளை அதற்கு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கோவில் சிலைகள் திருட்டு என்பது இருக்கிறதே, அது காலங்காலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில், சிலை திருட்டுக்கு உடந்தையாக இருக்கிற அர்ச்சகர் யாரும் கைது செய்யப்படவில்லை. இதிலும், பார்ப்பானுக்கு ஒரு நீதி; சூத்திரனுக்கு ஒரு நீதி என்று பாரதியார் சொன்னதைப்போல,  அவர்கள் மனுதர்மத்தைத்தான் கடைபிடித்து, பார்ப்பனரல்லாத அதிகாரிகளின்மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அதற்கு உண்மையாகவே துணை போயிருக்கக்கூடியவர்களை அவர்கள் விட்டு வைக்கிறார்கள் என்கிற நிலை இருக்கக்கூடாது.

அறநிலையப் பாதுகாப்புத் துறை என்பது திராவிட இயக்கம் 1924-1925 ஆம் ஆண்டுகளில் பலத்த எதிர்ப்புகளிடையே உருவாக்கப்பட்ட ஒரு துறையாகும். அதை அழிக்கவேண்டும் என்று இன்றைக்கு நினைக்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்கிற அளவிற்கு இன்றைக்கு நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேறப்பட்டு இருக்கிறது. ஆகவே, அந்தத் தீர்மானங்களை செயல்படுத்தவேண்டும் என்று திராவிடர் கழகம் தன்னுடைய பிரச்சாரத் திட்டத்தினை தொடங்கும்.

கருணாஸ் முதுகு வெறும் முதுகாக இருக்கிறது!

செய்தியாளர்: மத்திய அரசே இந்துத்துவா கொள்கையை கையில் எடுப்பது என்பது ஆபத்தானது அல்லவா?

தமிழர் தலைவர்: ஆபத்தானதல்ல. கலவரத்தை உருவாக்கக்கூடியது. இதுவரையில் அமைதிப் பூங்காவாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில், கலவரத்தை ஒவ்வொரு வகையில் ஏற்படுத்துவது. பெரியார், அம்பேத்கர் சிலைகளை சீண்டுவது. அவர்களுடைய நோக்கம் என்னவென்றால், மதக் கலவரங்களையும், ஜாதிக் கலவரங்களையும் உருவாக்க வேண்டும் என்பதுதான். அதேநேரத்தில், இந்தக் கலவரங்களைத் தூண்டி விட்டவர்கள்மீது எந்த நடவடிக்கையும் கிடையாது. வெறும் கருவிகளைத் தண்டிக்கிறார்கள். துப்பாக்கியை தண்டிக்கக்கூடாது; துப்பாக்கியைப் பயன்படுத்திய கைகளைத்தான் தண்டிக்கவேண்டும்.

அதுபோன்று வருகின்ற நேரத்தில், எச்.ராஜாக்கள் காவல்துறையினரின் பாதுகாப்போடு உலாவருகிறார்கள். எஸ்.வி.சேகர்கள் உலாவருகிறார்கள். ஆனால், கருணாஸ் போன்றவர்கள், மன்னிப்பு கேட்ட பிறகும்கூட,  வருத்தம் தெரிவித்த பிறகும்கூட, அவரை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். ஏனென்றால், கருணாஸ் முதுகு வெறும் முதுகாக இருக்கிறது; அவர்களுடைய முதுகில் பூணூல் தொங்குகிறது என்பதுதான் மிக முக்கியம்.

இந்த அரசாங்கம் முதுகெலும்போடு நடந்துகொள்ள வேண்டும். இரட்டை அளவுகோல் - மனுதர்ம ஆட்சியை நடத்தக்கூடாது. திராவிட ஆட்சி என்று சொல்லிக்கொண்டு, அம்மா ஆட்சி, அம்மா வழி என்று சொல்லிக்கொண்டு, இவர்களுடைய வழி என்பது டில்லி வழியிலேயே போய்க் கொண்டிருக்கிறார்கள். டில்லி உத்தரவிற்குக் கீழ்படிதல் என்பதைத் தவிர வேறு எதையும் செய்யாத அளவிற்கு இருக்கிறார்கள்.

ஆகவேதான், தமிழக அரசு இதில் தெளிவாக நடந்துகொண்டு, தங்களுக்கு உருவாகிக் கொண்டிருக்கின்ற கெட்ட பெயரைக் குறைத்துக் கொள்ளவேண்டும்; அவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும்மேலாக....

செய்தியாளர்: சாஸ்த்திரா பல்கலைக் கழகம் அரசு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளது என்று நீதிமன்றம் உத்தரவிட்டும், ஏற்கெனவே இருந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வில்லை; இப்பொழுது உள்ள அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்களே?

தமிழர் தலைவர்: இதிலேயும் மனுதர்மம்தான். தஞ்சை  செய்தியாளர்களாகிய நீங்கள் இதுபற்றி ஏராளமான செய்திகளை வெளியிட்டிருக்கிறீர்கள். உச்சநீதிமன்றம் வரையில் சென்றாகிவிட்டது.  அவர்களும் சக பல்கலைக் கழகத்தினர்தான். நாங்கள் இதுவரையில் எந்த சட்ட மீறலும் இல்லாமல் நடந்துகொண்டிருக்கிறோம்.

இங்கே, இவ்வளவு பெரிய அக்கிரமம் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? தமிழக தலைமைச் செயலாளராக ஒரு பார்ப்பன அம்மையார் இருக்கிறார்; குருமூர்த்தி அய்யர் இந்தப் பல்கலைக் கழகத்திற்கு வருகிறார். ஆகவே, இந்தப் பல்கலைக் கழகத்திற்கு தனிச் சலுகை காட்டலாமா என்று நினைக்கிறார்கள்.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரையில் சென்று எல்லாம் வந்த பிறகுகூட, இப்படி நடந்துகொள்வது என்பது தவறு. இந்த அரசாங்கம் முதுகெலும்போடு நடந்துகொள்ளவேண்டும். எங்களைப் பொருத்தவரையில் அவர்களும் கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள்தான். அதேநேரத்தில் அதனை சட்டப்படி செய்யவேண்டும். சட்டக் கல்லூரியை நடத்திக்கொண்டிருப்பவர்கள், சட்ட விரோதமாக நடத்துவோம் என்றால், அங்கே படிப்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்கிற கேள்வி எங்கும் பரவலாக இருக்கிறது.

ஆகவேதான், அவர்களாவது தங்களுடைய பெயரினைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு விரைவிலே இந்த ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடவேண்டுமோ அவ்வளவு விரைவில் விடுபடவேண்டும். அரசாங்கம் இதில் தயவு தாட்சண்யம் காட்டக்கூடாது.

ஒரு மடங்கு அல்ல; இருமடங்கு பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம்

செய்தியாளர்: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலும் இதுபோன்று அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்களே, அதுபற்றி...?

தமிழர் தலைவர்: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்காக அரசு நிலத்தினை ஒரு மடங்கு அல்ல - இரு மடங்கு பணம் கொடுத்து அந்த நிலத்தினை சட்டப்படி வாங்கியிருக்கிறோம். எல்லாமே சட்டப்படிதான் நடந்திருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதும், பணம் கொடுத்து வாங்கியிருக்கிறோம்.

கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுதும், பணம் கொடுத்து ஒரு மடங்கு அல்ல, இரண்டு மடங்கு பணம் கொடுத்து வாங்கி, சட்டப்பூர்வமாக வாங்கிப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஏற்கெனவே, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்து, உயர்நீதிமன்றமே சொன்னபடிதான், எங்களுடைய கல்வி நிறுவனங்களில், அவர்கள் கொடுத்த தீர்ப்பின்படி எந்தவித சட்ட மீறல்களும் கிடையாது. அப்படி நடந்திருந்தால், ஆகாயத்திற்கும், பூமிக்குமாக குதித்திருப்பார்கள். ஆனால், இது சூத்திரப் பல்கலைக் கழகம், ஆகவேதான், இதைப் பொருத்தவரையில், எதையாவது கிளப்பிப் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரையில், எந்தவிதக் கோளாறுகளும் கிடையாது.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner