எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈ.வெ.ரா. மணியம்மை அறக்கட்டளை உருவாக்கம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் செயல் திட்டங்களை அறிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர், அன்னை மணியம்மையார் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது குறித்தும், லால்குடி - பூவாளூர் சாலையில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை நூற்றாண்டு உயர்நிலைப்பள்ளி தொடங்கப்படுவது குறித்தும்  திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:

கழகத்தைப் பலப்படுத்தியவர் நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார்

தந்தை பெரியார் என்ற நமது அறிவு ஆசானை 95 ஆண்டுகாலம் வாழ வைத்து, அவர் நலம் பேணி, அதன் பிறகு அவர் கண்ட திராவிடர் கழகத்திற்கு 5 ஆண்டுகாலம் தலைமையேற்று, கழகத்தைப் பலப்படுத்தியவர் நம் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் என்ற தொண்டறத் தின் தூய உருவம்!

அய்யாவின் இயக்கத்தை, அறக்கட்டளையைப் பாது காத்ததுடன், அவரது சொத்துக்களையும்கூட அவரது ரத்த உறவுகளுக்கு உரிமை ஆக்காமல், கொள்கை உறவுகளுக்கே அர்ப்பணித்து, கல்வி, நலவாழ்வு, சமூகத்தின் மான வாழ்வை சிறப்புற நடத்திட தனியே ஓர் அறக்கட்டளையை அமைத்து வரலாறு படைத்தவர் வைர நெஞ்சுரம் கொண்டவர் நம் அன்னையார்!

எளிமை, சிக்கனம், தொண்டறம், தன்னல மறுப்பு இவை களின் ஒட்டுமொத்தக் கூட்டாக அமைந்த அத்தகைய புரட்சித் தாய்க்கு நூற்றாண்டு 2019 மார்ச் 10 முதல் தொடங்கி 2020 மார்ச் 11 ஆம் தேதியோடு நிறைவு பெறுகிறது!

திராவிடர் கழக மத்தியக் கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவு

அதனை ஓராண்டு முழுவதும் ஒரு தொண்டறச் சிறப்பு விழாவாகக் கொண் டாடி  மகிழ, 6.10.2018 அன்று தஞ்சையில் கூடிய திராவிடர் கழக மத்தியக் கமிட்டி - பொதுக்குழு முடிவு செய்தது.

2019 ஜனவரி 5, 6 ஆகிய நாள்களில் திராவிடர் கழக மாநில மாநாடு - திராவிடர் கழகம் பவள விழா காணும் ஆண்டும் அதுவே!

அன்னையாரின் நூற்றாண்டு விழா - என்றென்றும் நினைவில் நிற்கும் ஆக்கபூர்வ விழாவாக அமைதல் வேண்டி, கீழ்க்காணும் பல செயல் திட்டங்களை நிறை வேற்றி, நாடு முழுவதும் மகளிர் உரிமை காக்கும் மகத்தான மாபெரும் விழாவாக்கிட அனைவரும் போட்டி போட்டு உற்சாகம் காட்டியது உள்ளபடியே நன்றி உணர்ச்சி மலர்ந்து, விரிந்து பூத்ததைக் காட்டிற்று!

செயல் திட்டங்கள்!

அத்தகைய திட்டங்கள் இதோ:

1. அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் எழுத்துகள் - பேச்சுகள் - முழுத் தொகுப்பு.

2. தனியே நூற்றாண்டு சிறப்பு மலர்

3. நூற்றாண்டு அஞ்சல் தலை வெளியீடு

4. மாவட்டத் தலைநகரங்களில் பெண்ணுரிமை - ஒரு தொடர் பயணம்'' - கருத்தரங்குகள் - பரப்புரைகள்.

5. ஒரு கோடி ரூபாய் மூல நிதித் திரட்டல் - குறைந்த பட்சம்

6. திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் அன்னை மணியம்மையார் சிலை

7. தனியே ஒரு கல்வி, சுகாதார, பகுத்தறிவு, சமூகநீதி - பாலியல் நீதி - மூடநம்பிக்கை ஒழிப்பு நோக்கங்களைக் கொண்ட அறக்கட்டளை

8. விதவைகளுக்குப் பூச்சூட்டு விழா

விதவைகள் திருமணங்களுக்குத் தலைமை தாங்க வைத்தல்

உடற்கொடை, உறுப்புக் கொடை வழங்கல்

மகளிர் தொண்டறத் தோழர்கள் - ம.தொ.தோ.''

சுற்றுச்சூழல் பாதுகாப்பு - பேய், பிசாசு - பாலின வக்கிரமங்கள் - ஒழுக்கக்கேடு முதலியவற்றை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

நம் கண்கள் நீர் வீழ்ச்சி'யாகக் கொட்டுகின்றன!

அன்னையார்தம்  அறக்கட்டளைக்கு ஒரு கோடி மூலதனம் - நன்கொடை மளமளவென்று உற்சாகப் பெரு வெள்ளமாய்ப் பாய்ந்தது அனைவரையும் வியக்கத்தக்க தாக ஆக்கிவிட்டது!

ஏற்கெனவே காசோலையாகக் கொடுத்தவர்கள் 5 பேர் - 5 லட்சம் ரூபாய்.

அறிவித்தவர்கள் (தலா ஒரு லட்சம்) குடும்பங்களின் சார்பாக இன்றுவரை மொத்தம் 30 லட்சத்தைத் தாண்டு கிறது!

இது ஒரு நன்றித் திருவிழா!

நடுத்தரக் குடும்பங்களின் நன்றியும், கடமை உணர்ச்சியும் பொங்கி வழிவதைக் கண்டு, நம் கண்கள் நீர் வீழ்ச்சி'யாகக் கொட்டுகின்றன! (இவர்களில் எவரும் பெரும் பண வசதி படைத்தவர்கள் அல்ல).

நமது தோழர்கள் - குடும்பங்கள் - இன உணர்வாளர்கள் - மானமிகு' சுயமரியாதைக்காரர்களின் அருஞ்செயல் எப்படி அவனியோர்க்கு வழிகாட்டும் விழாவாக அமைந்து விட்டது என்பது புரிகிறது.

'ஈ.வெ.ரா.மணியம்மை அறக்கட்டளை!'

ஈ.வெ.ரா.மணியம்மை அறக்கட்டளை' ('E.V.R. Maniammai Foundation') என்ற ஒரு புதிய அறக்கட்டளை கடந்த 5.10.2018 அன்று பதிவு செய்யப்பட்டு விட்டது. (பதிவு எண்:  164 of 2018 )

நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்குக் கிடைக் கும் நல்வாய்ப்பும் உள்ளது.

ஈ.வெ.ரா.மணியம்மை நூற்றாண்டு உயர்நிலைப்பள்ளி

188 அடி உயரத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பெரியார் உலகத்திற்கு அருகே, லால்குடி - பூவாளூர் சாலையில் உள்ள ஒரு பகுதியில் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மை நூற்றாண்டு உயர்நிலைப்பள்ளி ஒன்றைத் தொடங்கி, அந்த சுற்றுவட்டாரத்தில் உள்ள 35, 40 கிராமங்களில் உள்ள பிள்ளைகளுக்கு - சிறப்பும், மேன்மையும், ஒழுக்கத்தினை ஊட்டும் வகையில், புதிய பரிமாணத்தில் கூடிய தனித்துவ' பள்ளியாக அப்பள்ளி அமைந்திட - அரிய கல்வி நிபுணர்களின் ஆலோசனைப் பெறப்பட்டு, பள்ளி தொடங்குவதற்கு 4 ஏக்கர் நிலம் வாங்கிட விரைந்த ஏற்பாடுகள் வேக வேகமாக நடைபெறத் தொடங்கி விட்டன!

அதற்கென உள்ளூர் பிரமுகர்களைக் கொண்ட அமைப்பு - ஏற்பாட்டுக் குழுவும் உருவாக்கப்பட்டு பணி கள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன!

'நன்றி நாயகர்களாக' மாறுவோம்!!!

இந்த 100 குடும்பங்களின் - நன்கொடையாளர்கள் பெயர்கள் அப்பள்ளியில் பொறிக்கப்படும் நல்வாய்ப்பும் உண்டு. உடனே முந்துங்கள்! வரலாற்றில் இடம்பெறுங்கள்!!

'நன்றி நாயகர்களாக' மாறுவோம்!!!  வாரீர்! வாரீர்!!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

11.10.2018

சென்னை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner