எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக மீனவர் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை

மனித உரிமைப் பிரச்சினையாகி வெடிக்கும்-எச்சரிக்கை!

தமிழக மீனவர்களை முற்றிலும் ஒடுக்கிட கொடூர மான சட்டத்தை இலங்கை அரசு நிறைவேற்றியிருக்கும் ஒரு காலகட்டத்தில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாதது ஏன்? தமிழக மீனவர் பிரச்சினை என்பது உலக தமிழர் பிரச்சினை, மனித உரிமைப் பிரச்சினையாக வெடிக்கும் என்று எச்சரித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இலங்கைத் தீவின் பூர்விகக் குடிகளான ஈழத் தமிழர்கள் சிங்கள இன வாதத்தால் அழிக்கப்பட்டனர் - அழிக்கப்பட்டும் வரு கின்றனர் என்ற நிலையில், தமிழக மீனவர்களும் அதே வகையில் அழிக்கப்பட்டு வரும் கொடுமை நாளும் நாளும் எல்லை மீறுகிறது.

பட்டுப்புடவையை இரவல் கொடுத்துவிட்டு, இரவல் வாங்கிய சீமாட்டி செல்லும் இடமெல்லாம் மனைக்கட்டையைத் தூக்கிக் கொண்டு அலைந்த பரிதாபத்துக்குரிய பெண்மணியின் நிலை தான் இன்றைய தமிழ்நாடு!

கச்சத்தீவு தூக்கிக் கொடுக்கப்பட்டது

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான கச்சத்தீவை தன்னிச்சையாகக் தூக்கிக் கொடுத்துவிட்டு, பாரம்பரியம் பாரம்பரியமாக மீன் பிடித்துவந்த பகுதியில் நாளும் துயரங்களையும், இழப்புகளையும் தமிழக மீனவர்கள் அனுபவிக்கும் கொடுமையை என்னவென்று சொல்லுவது!

மத்தியில் ஆட்சி மாறினாலும், தமிழக மீனவர்களின் துயரம் மட்டும் மாறவேயில்லை; மாறாக மாளாத் துன்பம்தான் - தமிழக மீனவர் குடும்பங்கள் நாளும் மாரடித்து அழும் துயரக் கடல்தான்!

'ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்?'

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்பது போல இப்பொழுது இன்னொரு சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது இலங்கை சிங்கள அரசு.

இலங்கை மீன் வளத்துறை 59/1979ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு விட்டது (10.10.2018).

கொடூரமான சட்டம்!

இந்த சட்டத்தின்படி 15 மீட்டர் நீளமுடைய படகிற்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ரூ. 50 லட்சமும், 15 முதல் 24 மீட்டர் நீளமுடைய படகிற்கு ரூ. 2 கோடியும், 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுடைய படகிற்கு ரூ. 10 கோடியும், 45 முதல் 75 மீட்டர் நீளமுடைய படகிற்கு ரூ.15 கோடியும், 75 மீட்டருக்கு அதிகமுள்ள படகிற்கு ரூ.17.5 கோடியும் அபராதம் விதிக்கப்படும்.

மேலும் இலங்கை எல்லைக்குள் அத்துமீறும் வெளிநாட்டுப் படகுகளின் உரிமையாளர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வழக்கு ஒரு மாதத்திற்குள் முடித்து வைக்கப்படும் என்ற கொடூர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசோ, மத்தியில் அதிகாரத்தில் இருக்கக் கூடிய பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசோ எந்தவித கருத்துகளையும் எதிர்ப்பினையும் முன் வைக்கவில்லை.

தூத்துக்குடி மீனவர்களுக்குத் தண்டனை

இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேர்களை கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கைக் கடற்படை கைது செய்து, படகுகளையும் பறிமுதல் செய்தது.

அந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு தலா ரூ. 60 லட்சம் அபராதமும், மூன்று மாத சிறைத் தண்டனையையும் அளித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மாநில, மத்திய அரசுகள் என்ன செய்யப் போகின்றன?

உலகில் தமிழர்கள் என்றால் நாதியற்றவர்கள் தானா என்ற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் நெருப்பாகக் கனன்று கொண்டுள்ளது.

மோடி அரசு வந்தால் தமிழக மீனவர் பிரச்சினையே தீர்ந்துவிடும் என்று நான்கரை ஆண்டுகளுக்குமுன் ஜால்ரா' அடித்த கட்சிகள் இப்போதாவது உணருவார்களா - வறுவல்' சட்டியிலிருந்து அடுப்பிலேயே மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதை?

மாநில அரசும், மத்திய அரசும், இவற்றின்மீது எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? இது ஏதோ தமிழக மீனவர்கள் பிரச்சினை என்று ஒடுக்கிவிட, ஒதுக்கிவிட வேண்டாம். ஒட்டுமொத்தமான தமிழர்களின் பிரச்சினை, உலகத் தமிழர் பிரச்சினை - இன்னும் சொல்லப்போனால் மனித உரிமைப் பிரச்சினையாக வெடிக்கும் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!


கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

20.10.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner