எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலை வாய்ப்பின்மை - பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட தோல்விகளை மறைக்க - பிரதமர் மோடி செய்யும் "வித்தைகளே!''

வித்தைகள் எடுபடாது - அவை வெறும் மத்தாப்புகளே!

வேலை வாய்ப்பின்மை, பொருளாதார வீழ்ச்சி, மதவாதம், மாநில உரிமைகள் பறிப்புப் போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளிலிருந்து மக்களைத் திசை திருப்பிட, மோடி கண்டுபிடித்த வித்தைதான் 597 அடி உயர வல்லபாய் படேலின் சிலை திறப்பு  என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை  வருமாறு:

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் சுமார் 3000 கோடி ரூபாய் செல வில் உருவாக்கப்பட்டு, உலகில் மிக அதிகமான உயரமுள்ள இந்த வெண்கலச் சிலை குஜராத்தின் நர்மதை நதிக்கரையில் ஒரு காட்சியகம் உள்பட நேற்று (அக்டோபர்  31 )  பட்டேல் பிறந்த நாளில் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது   வானொலி மற்றும் தொலைக்காட்சி, தூர்தர்ஷன்' முதல் தனியார் தொலைக்காட்சிகள் வரை மிகப்பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எசுக்கும் - பட்டேலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

சர்தார் பட்டேலுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பு என்ன? உறவு எப்படிப்பட்டது என்பதை, இன்றைய தலைமுறையினருக்கு விளக்க வேண்டியது அவசியமாகும். சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சராக இருந்தபோது - 1948 இல் காந்தியாரை ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் பயிற்சி எடுத்த நாதுராம் விநாயக் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பனர் சுட்டுக்கொன்ற போது, முதல்முறையாகத் தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்.எஸ்.எஸ். ஆகும்.

அதன்பிறகு மீண்டும் இரண்டு முறை தடை செய்யப்பட்ட பெருமை'' பெற்ற இந்துத்துவ இயக்கம் அது!

வளர்ச்சி, வளர்ச்சி' என்று வாக்காளர் கண்களில் பொடி தூவி, 2014 இல் ஆட்சியைப் பிடித்து பிரதமரான மோடியின் 5 ஆம் ஆண்டுகால ஆட்சியின் கடைசிப் பகுதி இப்போது.

நாட்டின் அவலப் பட்டியல் நீள்கிறது

நாட்டில் வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரச் சீர்கேடு - பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல் விலை கடும் ஏற்றம் - சர்வதேச சந்தைகளில் இவைகளின் விலை பீப்பாய்க் குறைந்த நிலையிலும்கூட, ரூபாயின் மதிப்பு சர்வதேசத்தில் வரலாறு காணாத வீழ்ச்சி, அந்நிச் செலாவணி கையிருப்பு நாளும் தேய்வு, விவசாயிகள் பிரச்சினை - பல நூற்றுக்கணக்கில் தற்கொலை - உள்நாட்டு - வெளியார் முதலீடுகள் வெளியேற்றம் -  அதிகரிப்புமூலம் இளைஞர்களின் விரக்தி - தனி மனித சுதந்திர உரிமைகள் பறிப்பு,  முக்கியமாக சுதந்திரமாக இயங்கவேண்டிய சி.பி.அய். தொடங்கி ரிசர்வ் வங்கி என்ற மத்திய வங்கி (சென்ட்ரல் பேங்க் ஆஃப் இண்டியா) அமைப்பினரின் பகிரங்க எதிர்ப்பு - விரக்தி வேதனையின் வெளிப்பாடு மதவெறி, தாழ்த் தப்பட்டோர் படுகொலை, பெண்களுக்குப் பாதுகாப்பு இன்மை போன்ற பலப்பல அரசின் தோல்விகளை மறைக்க அல்லது திசை திருப்ப - பிரதமர் மோடி இப்படிப்பட்ட பல வித்தைகளைச் செய்கிறார் என்பது விவரமறிந்தோர் அனைவரும் கூறுவதாகும்!

எத்தனை எத்தனை வித்தைகள்!

1. காந்தியைச் சுட்டுக் கொன்ற மதவெறி அமைப்பு களின் துணையோடு உருவாக்கப்பட்ட இந்த ஆட்சி யில் காந்தியாரின் 150 ஆம் ஆண்டு ஜெயந்தி'' விழாக் கொண்டாடப்படும் என்ற வித்தை!

2. நான் சாகும்போது, ஒரு இந்துவாக சாகமாட்டேன்' என்று வஞ்சினம் கூறி - அதை நடைமுறையில் காட்டிய, பவுத்தரான பாபா சாகேப் அம்பேத்கருக்கு ஜெயந்தி என்ற பெயரில், அவர் புகழ் பாடுவதும், அம்பேத்கர் சுற்றுலா லண்டனில் தொடங்கி மத்திய பிரதேசம் வரை என்பதும் மற்றொரு வித்தை. புரியாதவர்கள் கண்ணில் பொடி தூவும் மயக்க வித்தை!!

இதே வரிசையில்தான் - இப்போது நாட்டில் கொழுந்துவிட்டெரியும் பிரச்சினைகளை மக்கள் மறந்து, பட்டேல் சிலையின் உயரத்தை மக்களிடம் காட்டி வியந்து, மெய் மறந்து, நாட்டின் மெய்யான நிலவரத்தையும்கூட துறந்துவிட இந்த வித்தை - 3 ஆவது வித்தை!!!

நாட்டின் ஒற்றுமை என்பதை உண்மையில் அரசியல் சட்டத்தின் முதலாவது பிரிவில் India - that is Bharath shall be a union of States என்ற பிரிவின்மூலம் டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார். ஆனால், இன்றோ எல்லாம் தலைகீழ்தான்!

இந்திரா காந்தியின் நினைவு நாளை மறைக்க...

மாநில உரிமைகளை நாளும் பறித்துக் கொண்டு, இந்தியாவின் ஒற்றுமையை மோடி அரசு ஏற்படுத்து வதாகச் சொல்வது எத்தனை விபரீத வேடிக்கை -பசப்புத்தனம்!

நேற்று (அக்.31) மதவெறிக்குப் பலியான பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் நினைவு நாள் - அதையே தேசம் மறக்கும்படி மிக லாவகரமான தேர்வு நாள் - பட்டேல் சிலை திறப்பு!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் - வித்தை! இது ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஒன்றும் புதிதல்லவே!

டிசம்பர் 6 - டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாள் - அதை பாபர் மசூதி இடிக்கத் தேர்ந்தெடுத்து, அவரது  நினைவு நாளின் முக்கியத்துவத்தை இழக்கச் செய்த வித்தை - அவர்களது திட்டமிட்ட இத்தகைய பணிகள்!

மக்கள்மத்தியிலும், வாக்காளர்கள் மத்தியிலும் எவ்வளவு திசை திருப்பும் யுக்திகளை மேற்கொண்டாலும், வித்தைகளை அரசியல் தளத்தில் மோடி நிகழ்த்தினாலும், 2019 இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது என்பது உறுதி! உறுதி!!

அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பு மக்களையும் பகைத்துக் கொண்டுள்ள அரசுக்குப் பெயர்தான் மோடி அரசு!

வித்தைகள் நிலைத்த பலனைத் தராது!

எஞ்சியுள்ளதைத் துடைத்தெறிய பா.ஜ.க.வின் தலைவராக உள்ள அமித்ஷாவின் அணுகுமுறைகள் (வாணலியில் இருந்து அடுப்புக்குள் துள்ளி) எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றி அதனை அணைக்க''(?) முயற்சி செய்யும் மற்றொரு வித்தை!

இந்த வித்தைகள் நிலைத்த பயனைத் தராது - அவ்வப்போது கொளுத்தப்படும் மத்தாப்பு வெளிச்சமே அது!

புரிந்துகொள்வீர்!

 

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

1.11.2018

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner