எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும்!

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மயக்கம்'' எனும் நாடக நூலை நீக்கியது கண்டனத்திற்குரியது. இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இந்த ஆணையைத் திரும்பப் பெற்று, மீண்டும் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூல் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்; இல்லையெனில் தொடர் போராட்டம் வெடிக்கும்  என்று திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு: காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம், வள்ளல் டாக்டர் அழகப்பாவின் கொடையில் முகிழ்த்த நாடறிந்த பல்கலைக் கழகமாகும்.

அக்காலத்தில், கோடி கொடுத்து, தான் குடியிருந்த வீடும் கொடுத்த வள்ளல் அழகப்பா'வால் உருவாக்கப் பட்ட புகழ்பெற்ற பல்கலைக் கழகம் அது. இப்போது தமிழ்நாடு அரசால் நடத்தப் பெறும் - மத்திய அரசின் பல்கலைக் கழகம். மானியக் குழு உதவி பெறும் பல்கலைக் கழகமும் ஆகும்.

அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' எனும் அரிய நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதா?

அறிவியல் தொழில் நுட்பத்திற்கு மிகுந்த ஆய்வுப் பணி நடத்திடும் சிறந்த பல்கலைக் கழகம்.

அப்பல்கலைக் கழகத்தின் பொதுநிலைக்கும், ஆய் வுத் திறன் வளர்ச்சிக்கும் எதிரான நிகழ்வு ஒன்றைக் கேள்விப்படும்போது நாம் மிகுந்த வேதனையும், வெட்கமும் அடைகிறோம்.

காரணம், நாம் அதனுடன் ஒருவகைத் தொடர்பு உடையவர்களுள் ஒருவர் என்ற உணர்வின் காரண மாக, இச்செய்தி எல்லையற்ற வருத்தத்தைத் தந்து, கண்டனத்தைத் தெரிவிக்க வற்புறுத்துகிறது!

அறிஞர் அண்ணாவின்  அரிய இலக்கிய, கருவூ லங்களில் ஒன்று - நாடாகத் துறையில் கருத்துப் புரட்சி - அறிவுப் புரட்சி ஏற்படுத்திய நாடகம் நீதி தேவன் மயக்கம்'' என்ற நாடகம்.

தென்னிலங்கை வேந்தன் இராவணனைப்பற்றி கம்பர் தனது கம்ப இராமாயணத்தில் பாடும்போது,

'இரக்கமெனும் ஒரு பொருளிலா அரக்கன்'

என்று குறிப்பிட்டதை எடுத்து, அதே கம்பனை நீதி மன்றத்திற்கு வரவழைத்து, கூண்டில் நிறுத்தி, இராவணன் குறுக்கு விசாரணை செய்யும் கேள்விகள் அறிவுக்கு விருந்தாகும். யார் யார் எல்லாம்  தெய்வீக அம்சம் படைத்தோர்' என்று மக்களால் கருதப்படுகிறார்களோ, அவர்கள் எப்படியெல்லாம் இரக்கம் சிறிதுமிலாது நடந்துகொண்டனர்; அவற்றோடு ஒப்பிடும்போது தனது (காப்பிய கதைப்படி) நடத்தை எப்படி மேம்பட்டது - நியாயப்படுத்தக் கூடியது என்று கம்பரிடம் கேள்வி மேல் கேட்டுத் துளைப்பார்!

வெளிநாடுகளில் எழுதப்பட்டிருந்தால் எந்தளவு பாராட்டப்பட்டிருக்கும்?

நீதிதேவன் இராவணன் கூற்றின் உண்மை அறிந்தும், கம்பருக்கு எதிராகத் தீர்ப்பு கூறவேண்டிய இக்கட்டான நிலை அறிந்து, இறுதியில் மயக்கமுறுவார் - நாடகத் திரை விழுந்துவிடும்!

என்னே அருமையான அண்ணாவின் படைப் பாற்றல்! இதுவே அய்ரோப்பா, அமெரிக்கா போன்ற நாடு களாக இருந்தால், அவர்களைப் பல்கலைக் கழகங்கள் சிறப்புப் பட்டங்கள் தந்து தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்களே!

கற்பனை வளம் மட்டுமல்ல; பகுத்தறிவு கூர்ப்பாய்ச்சல் - எல்லாவற்றிற்கும் மேலான நேர்மையான வாதத் திறமை -  இவை வழிந்தோடும் காவியப் பாத்திரப் படைப்பும், கவினுறு வசனங்களும் கண்டு உச்சத்திற்கே சென்று பாராட்டுவர்.

இந்நாடகத்தினை தனது திராவிட நாடு' ஏட்டில் தொடர்ச்சியாக அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய தோடு நின்றுவிடாமல், தானும், தனது நண்பர்கள் குழு வினரோடு நாடகமாக்கி நடித்தும் காட்டி நாட்டோருக்குப் புத்தறிவு பரப்பிடத் தயங்கவில்லை!

இராவணனாக அண்ணா - நீதிபதியாக பேராசிரியர்!

இராவணனாக' அண்ணாவும், கம்பராக' ஈழத்துச் சிவானந்த அடிகளும், நீதி தேவனாக' பேராசிரியர் க.அன்பழகன் அவர்களும் நடித்து பல ஊர்களிலும் நற்கருத்துப் பரப்பினர்.

அந்த இலக்கியத்தை அழகப்பா பல்கலைக் கழகம் எம்.ஏ., வகுப்பில் பாடமாக வைத்ததை, அப்பல்கலைக் கழக பாடத் திட்டக் குழவினர் - (Board of Studies) நீக்கி விட்டு, அரு.இராமநாதனின் இராஜராஜ சோழன் (பெரிய கோவிலை தஞ்சையில் கட்டிவிட்டு, உள்ளே போக முடியாமல் காவற்காரரைப்போல் சிலையாக நிற்கும் பெருமன்னன்) பாடத்தை வைக்கும் ஏற்பாடு செய்துள்ளனர் என்பது முற்றிலும் நடுநிலையாளர்கள் - உண்மையான இலக்கிய அறிஞர்கள் எவரும் ஏற்கக்கூடியதாக இருக்க முடியாது!

எம்.ஏ., தேர்வு எழுதுவோர், இலக்கிய ஆய்வு அறிவு எப்படியெல்லாம் புத்தொளி பாய்ச்சும் வண்ணம் எழுதவேண்டும் என்பதற்கானதே அண்ணாவின் இந்த நீதி தேவன் மயக்கம்' நாடகம். இதனை நீக்குவது எவ்வகையில் நியாயம்?

நடைபெறுவது அண்ணா தி.மு.க. ஆட்சிதானா?

நடைபெறுவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி - இந்த ஆட்சியில் அண்ணாவின் நாடகம் பாடப் புத்தகத்தில் - அதுவும் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்தில் - எம்.ஏ., பாடத் திட்டத்தில் இடம்பெறக்கூடாது என்பதைவிட, மிகவும் கேவலமான நடவடிக்கை வேறு இருக்க முடியுமா?

இந்திய அரசியல் சட்டத்தின் 51-ஏ(எச்) பிரிவு என்ற ஒரு பிரிவு குடிமக்களின் அடிப்படைக் கடமைகளில் (Fundamental Duty) ஒன்று அறிவியல் மனப்பாங்கை, கேள்வி கேட்கும் உணர்வை, சீர்திருத்தத்தை, மனித நேயத்தை வளர்த்து பரப்பிடவேண்டும் என்கிறது.

பல்கலைக் கழகங்களில் அதைச் செய்வதுதான் அறிஞர் அண்ணாவின் இந்நூல் கேள்விக் கணைகளை எழுப்பி கம்பரைத் திக்குமுக்காடச் செய்து, நீதிதேவன் மயக்கமுற்று விழச் செய்யும் வலிமை பெற்றது இந்தப் புதுமை இலக்கியம்.

ஒரு மாதத்துக்குள் ஆணையைத் திரும்பப் பெறாவிட்டால்...

இதற்குத் தடை போடலாமா? நீக்கலாமா? உடனடியாக  நீக்கிய ஆணையைத் திரும்பப் பெற்று, மீண்டும் பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்யவேண்டும்.

இந்த நீக்கத்தைத் தூண்டிய சக்திகள் எவை? காரணமான மத யானைகள்'' எவை? பின்னணி எது? ஆராய்ந்து கண்டறிந்து - பல்கலைக் கழகத்திற்கு  மதம் பிடிக்காமல்'' தடுத்தாகவேண்டும்.

தமிழக அரசு, குறிப்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அவர்கள், பாடத் திட்டக் குழுவினரோடு, துணைவேந்தர், பதிவாளர், உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் உடனே தொடர்புகொண்டு, நீக்கிய அண்ணாவின் காவியத்தை மீண்டும் பாட நூலாக்கிட அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும்.

புதிய துணைவேந்தர் வந்தவுடன் தேவையற்ற கெட்ட பெயருக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளக்கூடாது.

நாடு தழுவிய போராட்டம்!

இது மீண்டும் வைக்கப்படாவிட்டால், நாடு தழுவிய அளவில் கிளர்ச்சிகள் - தொடர் போராட்டமாக நடத்தப் படக்கூடும்.

வள்ளல் அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு ஏற்பட்ட அவலம் நீங்கிட, துணைவேந்தர் அல்லது பதிவாளர் அவர்கள், கல்விப் புலத் தலைவர் (Dean) ஆகியோர் உடனே முன்வரவேண்டும்.

கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்.

சென்னை

12.11.2018

(இனி விடுதலை''யில்  அண்ணாவின்   நீதிதேவன் மயக்கம்'' தொடர்ந்து நாள்தோறும் வெளிவரும்).

குறிப்பு: இது திரும்பப் பெற்று, மீண்டும் நீதி தேவன் மயக்கம்' நூல் இடம்பெறும் என்பதை அப்பல்கலைக் கழக துணைவேந்தர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக பத்திரிகைகளுக்குச் செய்தி அனுப்பினால் மட்டுமே உறுதியாகும்.

எனவே, உடனே அதை செய்யவேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner