எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய அரசு வழக்கம்போல காலந்தாழ்த்தாமல் உடனடியாக பார்வையாளர்களை

அனுப்பி தாராளமான நிதி உதவி வழங்கிடுக!

தன்னார்வ அமைப்புகள் - தனியார் நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டவேண்டிய தருணம் இது

கழகத் தோழர்களே, களத்தில் இறங்கித் தொண்டறம் புரிவீர்!

கஜா புயலின் காரணமாக கடும் இழப்புக்கு ஆளாகி இருக்கும் மக்களின் மீள்வாழ்வுக்காக மத்திய அரசு மிகப்பெரிய அளவில் நிதி உதவி செய்யவேண்டும் என்றும், தன்னார்வ அமைப்பு களும், தனியார் நிறுவனங்களும் தாராள மனப்பான்மையுடன் உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும், கழகத் தோழர்கள் களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை  வருமாறு:

கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டி எடுத் துள்ளது. 165 கி.மீ. வேகத்தில் வீசி உண்டு இல்லை என்று பார்த்து விட்டது. இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். வாழ்க்கைக்கு ஆதாரமாக இருந்த கால்நடைகள் அழிந்தன. குடியிருந்த வீடுகள், மரங்கள் எல்லாம் பெயர்த்து எறியப்பட்டு விட்டன.  பயிர்கள், வாழை மரங்கள் படுநாசமாகி விட்டன.

இருளில் மூழ்கிக் கிடக்கும் மாவட்டங்கள்

ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து பல மாவட்டங்கள்இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.

போக்குவரத்துச் சீர்பட இன்னும் எவ்வளவுக் காலம் தேவைப்படுமோ தெரியவில்லை.

எதிர்காலம் கேள்விக் குறியாகி மக்கள் நடுத்தெருவில் நிற்கும் அவல நிலைதான்.

பேரிடராக அறிவித்திடுக!

மாநில அரசு நிவாரணப் பணிகளையும், தொலை நோக்கு ஏற்பாடுகளையும் சிறப்பாகவே செய்திருப்பது பாராட்டுக்குரியதே!

தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக் குழு முன்னெச்சரிக்கையோடு பல ஏற்பாடுகளை மேற் கொண்டு, மேலும் உயிர்ச் சேதங்களைத் தவிர்த்தது சிறப்பான ஒன்றாகும்.

மாநில அரசு எவ்வளவுதான் உதவி செய்தாலும், இழப்பை ஈடுசெய்வது அவ்வளவு எளிதல்ல. இது ஒரு பேரிடர் நிகழ்வாகும். பேரிடர் நிகழ்வாக அறிவித்து மத்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்வது அவசர அவசியமான தருணம் இது.

இத்தகு இயற்கை உற்பாதங்கள் நடந்து பல நாள்கள் கழித்து ஆற அமர மத்திய அரசு பார்வையாளர்களை அனுப்பும் சடங்காச்சாரமான அணுகுமுறையைக் கைவிட்டு, உடனடியாகப் பார்வையாளர்களை அனுப்பி இழப்புகள் அனைத்திற்கும் நிவாரணம் அளிக்கும் வகையில் நிவாரணத் தொகையை பெரும் அளவில் உடனடியாக வழங்கிட வழிவகை செய்திடல் வேண்டும்.

அரசியல் கண்ணோட்டம் வேண்டாம்!

இதற்கு முன்பெல்லாம் மாநில அரசு கேட்கும் தொகைக்கும், மத்திய அரசு ஒதுக்கும் தொகைக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்கிற அளவில், சொற்பத் தொகையை அளித்து கடமை முடிந்ததாகக் கூறிக் கணக்கை முடித்துவிடும்.

அதுபோன்ற அணுகுமுறையைக் கைவிட்டு, தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தத் தருணத்தில், தங்கள் கட்சி ஆட்சியில்லை என்று கருதாமல், அரசியல் எண்ணத்தை மறந்து,  மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். காலந்தாழாமை என்பது இதில் மிகமிக முக்கியமாகும். போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளும், நிதி உதவியும் அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். தேவை மனிதாபிமான கண்ணோட்டம் - இதில் அரசியல் பார்க்கும் தருணமல்ல இது. கட்சிக் கண்ணோட்டம் தேவையே இல்லை.

தன்னார்வ அமைப்புகளும் -

தனியார் நிறுவனங்களும்...

தன்னார்வ அமைப்புகளும், வசதி வாய்ப்புள்ளோரும், தனியார் தொழில் நிறுவனங்களும் தங்களின் தாராள மனப்பான்மையை விரிவுப்படுத்தி எந்தெந்த வகைகளில் எல்லாம் வாரி வழங்கவேண்டுமோ அவ்வாறெல்லாம் அளித்திட முன்வரவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

கழகத் தோழர்களே களப்பணி ஆற்றுவீர்!

பெரியார் மருத்துவ அணியினர் மருத்துவ வசதி எட்டா கிராமப் பகுதி மக்களைச் சந்திக்க ஆயத்தமாக உள்ளனர்.

கழகத் தோழர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் எல்லா வகையான உதவிகளையும் மேற்கொள்வது கட்டாய மாகும்.

எல்லா அறங்களையும்விடத் தொண்டறமே மேலானது - அவசரம்! அவசரம்!! அவசியம்! அவசியம்!!

 

தமிழர் தலைவர்

கி. வீரமணி,

திராவிடர் கழகம்.

திருச்சி

17.11.2018


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner