எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி ஆணவக் கொலையைத் தடுக்க தனிப்பிரிவு தேவை!

ஒத்தக் கருத்துள்ளோரை இணைத்து பாதுகாப்புப் படை உருவாக்கப்படும்

திருச்சியில் தமிழர் தலைவர் பேட்டி

திருச்சி, நவ.19 ஜாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க காவல்துறையில் தனிப் பிரிவு தேவை - ஜாதி மறுப்புத் திருமணங்களை செய்து கொண்டவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க ஒத்தக் கருத்துள்ளவர்களை இணைத்துப் பாதுகாப்புப் படை ஒன்று தொடங்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.

திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (18.11.2018)  செய்தியாளர்களை சந்தித்தார்.

அதன் விவரம் வருமாறு:

செய்தியாளர்: புயல் பாதிப்பில் நிவாரணங்கள் சரி யாகக் கிடைக்கவில்லை என்று மக்கள் போராடுகின்ற அளவுக்கு வந்துள்ளார்களே? வாகனங்களை அடித்து நொறுக்கி, கைது நடவடிக்கைகள் நடந்துள்ளனவே?

தமிழர் தலைவர்: அதாவது, தமிழக அரசைப் பொறுத்தவரையில் தேசியப் பேரிடரான இந்த புயல் பற்றிய அறிவிப்பு வந்த நேரத்தில் மிகச் சிறப்பான முன்னேற்பாடுகளை புயலைத் தடுப்பது எப்படி, புயலிலே இருந்து உடனடியாக மக்களை காப்பாற்றுவது எப்படி என்பதிலேயே அதிக கவனம் செலுத்தினார்கள். அது பாராட்டத் தகுந்தது. குறைவான அளவுக்கு உயிர்ச்சேதங்கள் வந்திருக்கின்றன என்பது அதிலே மிகவும் ஆறுதலை அளிக்கக்கூடிய ஒரு செய்தி.

அதேநேரத்தில், ஒன்றை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள். என்னவென்று சொன்னால், உடனடியாக  அந்த புயல் இரண்டு, மூன்று நாள் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. வானொலிகளிலே, தொலைக் காட்சிகளிலே எல்லாவற்றிலும். அப்படி இருக்கும்போது, அதற்குத் தேவையான அடுத்த பணி என்ன செய்ய வேண்டும்? எந்த மாதிரியான தாக்கம் என்பது நமக்குத் தெரியும்.  வீடுகள் பாதிக்கப்படும், மரங்கள், மின்கம்பங்கள் சாய்வது இவைகளெல்லாம் இயல்பானது.

புயலுக்குப் பின் நிவாரணம் போதிய அளவு உண்டா?

உடனடியாக அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை, நிவாரணப்பணிகளை அங்கு கொண்டு சேர்க்க வேண்டும். அதையும் சேர்த்து ஒரே நேரத்திலே இரண்டு பகுதிகளாகப்பிரித்து, ஒரு பக்கம் தடுப்பு, வருமுன்னர் காப்பது, இன்னொரு பக்கம் வந்தபின்னே உடனடியாக உதவுவது என்ற அம்சத்திலே, உடனயாக உதவுவது என்பதிலே கொஞ்சம் சுணக்கம் காட்டியதனுடைய விளைவுதான் மக்களுடைய கோபம்! உடனடியாக அதைப்புரிந்து சரிசெய்ய வேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. அதேநேரத்தில் அரசாங்கத்தைப்பற்றி மட்டுமல்லாமல், ஏராளமான தன்னார்வ நிறுவனங்கள் முன்வரும் மனிதநேயங்கள் இந்த நேரத்தில் பளிச்சிடும். அவர்களை தெளிவாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுடைய வேண்டுகோளாகும்.

- திருச்சியில் செய்தியாளர்களிடையே  தமிழர் தலைவர்

திருமருகலில் பெரியார் மருத்துவ முகாம்

"மக்களை நாடி மருத்துவம்" "கஜா" புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில்  "இலவச பொது மருத்துவ முகாம்". "பெரியார் மருத்துவக் குழுமம், "பெரியார் மணியம்மை "புரா" ஊரக வளர்ச்சி மய்யம், பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவனம்,வல்லம், பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி இணைந்து நடத்தும் இலவச பொது மருத்துவ முகாம்!

இடம் : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, புத்தகரம்,திருமருகல் ஒன்றியம்.

நாள்: 25.11.2018  நேரம்: காலை 10  மணி முதல்  மாலை3  மணிவரை

பலதுறை மருத்துவர்களும் பங்கேற்கிறார்கள்.

அனைவரும் வருக! பயனடைக!!

- இயக்குநர்,பெரியார் மருத்துவக் குழுமம்.

போர்க்கால அடிப்படையிலே நிவாரணப் பணிகளில் தீவிரம் வேண்டும்

ஆனால், மக்கள் மத்தியிலே மக்கள் பிரச்சினை என்று வரும்போது, அவர்களுக்கு வேண்டிய உணவு, அவர்களுக்கு வேண்டிய மற்ற அடிப்படை உதவிகள், போர்வைகள் மற்றவை இந்த மாதிரியான உதவிகளை அவர்கள் மற்ற மாவட்டங்களிலிருந்து தயாரித்து, மற்ற பக்கத்திலேயே வைத்திருந்தார்களேயானால், உடனடி யாக அங்கு செல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். முதலில் போக்குவரத்திலே இடைஞ்சல், மின்சாரத் தடைக்கு தீர்வுகாண போர்க்கால அடிப்படையிலே தீவிரமாக செயல்படவேண்டும். இதிலே நாம் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பதைவிட, மிக முக்கியமாக பொதுநலக் கண் ணோட்டத்தோடு, மக்கள் நலக் கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும். அரசாங்கமும் யார் சொல்லுகிறார்கள் என்பதைப்பற்றிக் கவலைப்படாமல், மக்களுடைய  வேதனை, அவர்களைப் போராட வேண்டிய அளவிற்குத் தூண்டுகிறது.

ஆணவக்கொலை தடுக்க காவல்துறையில்  தனிப்பிரிவு வேண்டும்

செய்தியாளர்: இன்னமும் தமிழகத்தில் ஜாதி ஆணவப் படுகொலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவே?

தமிழர் தலைவர்: அதாவது ஏற்கெனவே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். பல மாநாடுகளிலே தீர்மானம்,  இந்த ஆணவக் கொலைகளை நடத்தக்கூடியவர்கள் என்று முன்கூட்டியே அறிந்து - இதுமாதிரி ஜாதி மறுப்புத்திருமணங்கள் செய்யக் கூடியவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அமைப்பை அரசு உருவாக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், இன்னும் தெளிவாக, அதற்கென்று க்யூ பிராஞ்ச்  மற்றும் ஸ்பெஷல் பிராஞ்ச் என்று வருகிறபோது, தனியே ஒரு காவல்துறை பிரிவு உண்டாக்க வேண்டும். அவர்கள் அதைக் கண்காணிக்கவேண்டும். அந்த பெற்றோர்களை கண்காணிக்க வேண்டும்.

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொள்வோருக்கு பாதுகாப்பு மய்யம்

அதுபோலவே, இந்த ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்கிறவர்கள் பொதுவாக அந்தக் கருத்தை ஆதரிக் கக்கூடிய அமைப்புகளிடம் நேரிடையாக வரலாம். அவர்களுக்கு நாம் பாதுகாப்பு கொடுப்பதற்கு என் றைக்கும் தயாராக இருக்கிறோம். அவர்கள் இனிமேலாவது, உங்கள் மூலமாக ஒரே யொரு வேண்டுகோள்  என்னவென்றால், பெற்றோர் களுடைய ஆசை வார்த்தைகளுக்கு அவர்கள் பலியாகி விடக்கூடாது. இவற்றில் முதலாவதாகக் கவனம்செலுத்தப்பட வேண்டும்.

உடனே, அவர்களை வரவேற்கவேண்டும், நாங்கள் திருந்திவிட்டோம், உடனே மாறிவிட்டோம்  என்று சொல்வது இருக்கிறதே, மாயமான் வேட்டை அது. எனவே, அந்த மாயமான் வேட்டைக்கு அவர்கள் பலி யாகமல், ஏமாறாமல், ஓராண்டுக்கு மேலாக , அவர்கள் அந்த எண்ணத்திற்கு வரட்டும். ஒரு குழந்தை பெற்ற பிறகு வரட்டும். அப்படி வந்தாலும்,  பரவாயில்லை என்று இருக்கவேண்டும். ஆகவே, இதுமாதிரி தனியே ஜாதி மறுப்புத் திரு மணங்கள் செய்து கொள்ளக்கூடியவர்களுக்கு ஒரு பாதுகாப்பு மய்யத்தை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்தத் துறையிலே எங்களைப் போன்ற அமைப்புகள், ஒத்தக் கருத்துகளை ஒன்று திரட்டி, அதற்கு ஒரு பாதுகாப்பு படையையே உருவாக்க நாங்கள் யோசித்துக்கொண்டிருக்கிறோம்.  ஏனென்றால், அரசாங்கங்கள் செய்ய வேண்டிய பணியை அவர்கள்  செய்யாதபோது, எங்களைப்போன்ற அமைப்புகள், முற்போக்கு அமைப்புகள் ஒத்தக் கருத்துள்ளவர்களை ஒருங்கிணைத்து சிறப்பான பாதுகாப்பைக் கொடுக்க வேண்டும். எனவே, ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்பவர்கள் மற்ற துறைகளை நம்புவதைவிட, மற்ற இடங்களுக்குப்போய் குடியிருப்பதைவிட தொடர்ந்து எங்கு வரவேண்டுமோ, அங்கு வரட்டும். நாங்கள் பாதுகாப்பு அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner