எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'விடுதலை' சந்தா அளிப்பு - கஜா புயல் நிதி திரட்டு விழாவில்  தமிழர் தலைவர் அறிவிப்பு

தொகுப்பு: மின்சாரம்

சென்னை, டிச.3  நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன. ஜாதி மறுப்பு, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோருக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகை யில் பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்றும், டிசம்பர் 30 அன்று ஓசூரில் ஜாதி- தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றும் சென்னை பெரியார் திடலில் நேற்று (2.12.2018) நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா - கோலாகலத்துடன் நடந்ததாகச் சொல்ல முடியாது.

அவர் தம் உயிராக நேசிக்கும் திராவிட இனத்தின் போர் வாளான விடுதலை'க்கு சந்தா சேர்க்கும் நிகழ்ச்சி யாக - சுயமரியாதை நாளாக எடுக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் கஜா புயலின் கோர அதீத விளையாட்டைத் தொடர்ந்து அந்த விழா கஜா புயல் நிவாரண நிதி திரட்டும் நிகழ்ச்சியாகவும், சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் மணியம்மையார் மருத்துவமனையில் குருதிக் கொடை வழங்குதல், மருத் துவ முகாம் காலை 9 மணிமுதலே தொடங்கி நடை பெற்றது. நூல்கள் வெளியீட்டு விழாவாகவும் புது உருவம் பெற்றது.

சென்னை பெரியார் திடல் - நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நேற்று காலை 9.45 மணியளவில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் எடுத்த எடுப்புடன் திராவிடர் கழகத் தலைவர் நடைபெறும் நிகழ்ச்சியின் நோக்கத்தை விளக்கினார்.

அதன்படி தமிழ்நாடு அளவில் திரண்ட கழக முக்கிய தோழர்கள் புயல் நிவாரண நிதிக்கான உண்டியலில் பணத்தைப் போட்டு, கழகத் தலைவரைச் சந்தித்தனர்.

கழகத் தலைவர் பிறந்த நாளுக்கென - அவர் தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையோடு நன்கொடையாக அளித்த 13,600 ரூபாயை, முதலாவதாக உண்டியலில் போட்டார். அதனைத் தொடர்ந்து தோழர்களும், பிரமுகர்களும் வரிசையாக வந்து உண்டியலில் நிதியைப் போட்டனர்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக விழா நாயகர் ஆசிரி யருக்குத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் சால்வை அணிவித்தார். கழகத் தலைவரின் வாழ்விணையர் மோகனா அவர்களுக்குக் கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி சால்வை அணிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கஜா புயல் நிவாரண நிதியை தோழர்கள் வரிசையாக வந்து அளித்த வண்ணமிருந் தனர்.

கழகத் தோழர்களும், பல்வேறு கட்சிகளை, இயக்கங் களைச் சேர்ந்தவர்களும், பல்துறையைச் சார்ந்த பெரு மக்களும் மன்றம் நிறைய கூடினர்.

பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளைக் கழகத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை எடுத்துச் சொன்ன நிலையில், அந்த வட்டாரத் தோழர்கள் சென்னை வர இயலவில்லை என்பதைவிட, வரவேண்டாம் என்று கழகத் தலைவர் கேட்டுக்கொண்டார் என்பதுதான் யதார்த்தமாகும்.

பல்வேறு மாவட்டக் கழகத் தோழர்களும், இளை ஞரணியினரும், மாணவரணியினரும், மகளிரணியினரும் விடுதலை' சந்தாக்களை விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் வழங்கிய வண்ணமிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை 11 மணிக்குக் கருத்துரை தொடங்கப்பட்டது. திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறியாளர் இன்பக்கனி வரவேற் புரையாற்றினார்.

அறிமுகவுரையைத் திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி நிகழ்த்தினார்.

நூல் வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை உரையில்,

தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, அவர்தம் கருத்துகள் உலகளாவிய அளவில் பரவியதற்கும், பெரியார் பன்னாட்டு மாநாடுகள் வெளிநாடுகளில் நடப்பதற்கும் காரணமாக இருக்கக் கூடியவர் திராவிடர் கழகத் தலைவரே என்று குறிப்பிட்டார்.

விஜயபாரதமும்', துக்ளக்'கும், தினமலர்'களும் சுற்றிச் சுற்றிச் சுற்றி திராவிடர் கழகத் தலைவரை நோக்கிக் கணைகளை ஏவுகின்றன என்றால், அதன் பொருள் என்ன என்பது நமக்கெல்லாம் எளிதில் விளங்கும்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, தி.க.விடமி ருந்தும், வீரமணியிடமிருந்தும் விலகி இருக்கவேண்டும் என்று சொல்லுவதன் நோக்கத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்களின் வேண்டுகோள்படி அனைவரும் எழுந்து நின்று கழகத் தலைவருக்குக் கரவொலி எழுப்பித் தங்கள் வாழ்த் துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழர் தலைவரை டிசம்பர் 2 அன்று

நேரில் வந்து பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்த முக்கிய தலைவர்கள் / பிரமுகர்கள்

1. சிறுநீரக மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.ராஜசேகரன்

2. காது, தொண்டை, மூக்கு மருத்துவ நிபுணர் டாக்டர் எஸ்.காமேஸ்வரன்

3. சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி முனைவர் ஏ.கே.ராஜன்

4. சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.எம்.அக்பர் அலி (வாழ்விணையருடன் வந்து வாழ்த்தினார்)

5. சமாஜ்வாதிக் கட்சி தமிழ்நாட்டு மாநில செயலாளர் வாசு

6. டி.கே.எஸ்.சகோதரர்கள் குடும்பத்தைச் சார்ந்த டி.கே.எஸ்.கலைவாணன்

7. தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் மேனாள் துணைத் தலைவர் முனைவர் அ.இராமசாமி

8. திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பெ.ஜெகதீசன்

9. சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் தியாகராஜன்

தொலைப்பேசி வழியாக மதுரை ஆதின கர்த்தர், தி.மு.க. கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.இராசா, வாசிங்டன் ராஜூ, சிபிஎம் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தோழர் இரா.முத்தரசன்


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் தன் உரையில் முக்கியமாகக் கூறியதாவது:

இந்த நிகழ்ச்சி திராவிடர் கழகத் தலைவருக்குக் கொண்டாடப்படும் ஒன்றல்ல - நாம் கொண்டாடுகிறோம் - அவரின் தொண்டின் அருமைக் கருதி.

ஒரு தந்தைக்கு ஒரு தனயன் கூறும் வாழ்த்தாக, மரியாதையாக இதனை எடுத்துக் கொள்ளவேண்டும். ஆசிரியர் அவர்களின் துணைவியார் அவர்கள் ஆசிரி யரின் தொண்டுக்குப் பெரும் துணையாக இருப்பதால், அவர் களையும் வாழ்த்தக் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் எங்கள் வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இன்றைய தினம் நாட்டில் ஒரு பாசிச ஆட்சி நடை பெற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில், நமது ஆசிரியர் அவர்களின் தலைமை மிகவும் தேவைப்படுகிறது.

ஒவ்வொரு பிரச்சினையின்போதும் அது தொடர்பான அறிக்கைகள், கூட்டங்கள், போராட்டங்கள் என்பன ஆசிரி யர் அவர்களின் அன்றாடப் பணியாகவே இருந்து வருகிறது.

இவர் நடத்துவது வெறும் அடையாளப் போராட்டங் கள் அல்ல - உணர்வுபூர்வமானது. தந்தை பெரியார் கண்ணோட் டத்துடன் கூடியது - அர்ப்பணிப்புத்தன்மை கொண்டது.

இயற்கையின் சீற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர் என்றவுடன், இரண்டு நாள்கள் வேதாரண்யம் - கோடியக்கரை வரை நேரில் சென்று அவதிப்படும் மக்களுக்கு ஆறுதலையும், தன்னம்பிக்கையையும் ஊட்டி வந்திருக்கிறார். செய்தியாளர் கள்மூலம் மாநில, மத்திய அரசுகள் என்னென்னவற்றை யெல்லாம் செய்யவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

மதவாதமும், ஆணவக் கொலைகளும் தலைதூக்கி நிற்கும் நிலையில், கம்யூனிஸ்டுகளும், திராவிடர் கழகமும், திராவிட இயக்கங்களும் இணைந்து போராடுவோம் என்று எடுத்துரைத்தார்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

துபாயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்ற நான் இன்று விடியற்காலைதான் சென்னைக்கு வந்தேன். இன்றும் அங்கு நிகழ்ச்சிக்கு ஏற்பாடாகி இருந்தது. அதைவிட தமிழர் தலைவர் நிகழ்ச்சியில் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்ற கடமை உணர்வோடு இங்கு வந்துள்ளேன் என்று சொன்னபொழுது பலத்த கரவொலி.

திராவிடர் கழகத்தின் இருப்பையும், அதன் தலைமையின் அவசியத்தையும் சரியாக உணர்ந்துள்ள இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தந்தை பெரியார்முன் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கு உரையாற்ற கிடைத்த வாய்ப்புப்போல எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால், தமிழர் தலைவர் தலைமையில் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தற்காக நான் பெருமைப்படுகிறேன்.

ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் தோழர் அருள்மொழியோடு நான் மாணவனாக இருந்தபோது கலந்துகொண்டு உரையாற்றும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது என்பதைப் பெருமையோடு நினைவு கூர்கிறேன்.

இடதுசாரி இயக்கங்களான கம்யூனிஸ்டுகளும், நாமும் இணைந்து போராடவேண்டிய காலகட்டம் இது.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இலட்சியம், இறுதி நோக்கம் என்பதில் இருவரும் ஒரே சிந்தனைப் போக்குடையவர்களே - எல்லைகள் நம்மைப் பிரிக்காது.

இந்துத்துவா நம்மை அன்னியப்படுத்துகிறது. பெரியாரிசம் அன்னியப்படுத்தப்பட்ட நம்மை எல்லாம் ஒருங்கிணைக்கிறது.

நாடு சனாதனத்திடம் சிக்கித் தவிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொட்டம் அதிகரித்துவிட்டது. பா.ஜ.க.வை இயக்குவது ஆர்.எஸ்.எஸே! பசுவின் பெயரால் படுகொலைகள் - தாழ்த்தப்பட்டோரும், சிறுபான்மையினரும் தாக்கப்படும் கொடுமை - இவற்றை முறியடிக்கவேண்டும்.

தமிழர் தலைவர்  ஏன் நீண்ட நாள் வாழவேண்டும் என்று ஆசைப்படுகிறோம்; இந்தத் தீயப் பிற்போக்குச் சக்திகளை முறியடிப்பதற்குத்தான்.

ஜாதி ஒழிப்பு சமத்துவக் கொள்கையை அடைகாக்கும், பாதுகாக்கும் அரணாக நமது ஆசிரியர் அவர்கள் திகழ்கிறார்கள் - அதற்காக அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

திராவிடர் கழகத்தை ஆசிரியர் அவர்கள் கட்டிக் காத்து வருகிறார். இளைஞர்களை ஈர்த்து வருகிறார் - விஞ்ஞானபூர்வ அணுகுமுறையோடு ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.

என்னைவிட அதிக அளவில் மூத்தவர் அவர்.

அவர் சதா சுற்றிக் கொண்டே இருக்கிறார் - இளையவனா கிய என்னால்கூட அவருடன் ஈடுகொடுக்க முடியவில்லை.

உலகம் முழுவதிலும் உள்ள பகுத்தறிவாளர்களை ஒருங்கிணைக்கும் தந்தை பெரியார் குறித்த பன்னாட்டு மாநாடுகளை நடத்துகிறார். அய்ரோப்பாவில், ஜெர்மனியில் மாநாட்டை நடத்துகிறார்.

விடுதலை' சந்தா சேர்ப்பு என்கிறார் - பெரியார் உலகம் என்கிறார் - அதற்காக நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுக்கிறார்.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதை, நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. பதவியில், அதிகாரத்தில் இல்லாத ஓர் இயக்கத்தால் நன்கொடை திரட்ட முடிகிறது. தமிழர் தலைவர் வேண்டுகோள் விடுத்தால், தமிழர்கள் அள்ளிக் கொடுக்கிறார்கள். இவையெல்லாம் சாதாரண மானவையல்ல - ஆச்சரியமானவை.

எல்லாத் தளத்திலும் போராடக்கூடிய தலைவராக விளங்கக் கூடிய தலைவர் நமது ஆசிரியர் அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்து நமக்கு வழிகாட்டவேண்டும் என்றார்.

திராவிடர் கழகம் ஒரு பவர்- ஜெனரேட்டர்

தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்


தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் அவர்கள் திராவிட இயக்கத்தின் அவசியம் குறித்து அழுத்தமான கருத்துகளை எடுத்துக் கூறினார்.

அவர் உரையில் மின்னித் தெறித்தவைகளில் ஒரு சில:

பேச்சைத் தொடங்கியபோது- எனக்கு விடுதலை' நாள்தோறும் இலவசமாய் வந்து கொண்டுள்ளது. அதற்கான ஆண்டு சந்தாவிற்கான தொகையை ஆசிரியர் அவர்களிடம் அளிக்கிறேன் என்று கூறி, ஆசிரியரிடம் அளித்தார். தொடர்ந்து பேசினார்.

இது பிறந்த நாள் விழா அல்ல - இனத்தைக் குறித்த விழாவே இது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான இளைஞர்களைப் பார்த்தேன் - பார்க்கிறேன். எனக்கொரு ஆச்சரியம், திராவிடர் கழகத்தில் இருந்தால், ஒரு பஞ்சாயத்து உறுப்பினராகக்கூட ஆக முடியாது -  பதவி கிடையாது, அப்படியிருக்கும்போது எப்படி இவ்வளவு இளைஞர்கள்?

பதவி கிடையாது - பகுத்தறிவு உண்டு. பகுத்தறிவு என்றால் உள்ளே வா - பதவி என்றால் வெளியேறு என்று சொல்லும் ஓர் இயக்கத்தில் இவ்வளவு இளைஞர்கள் என்பது ஆச்சரியமான ஒன்றுதான். இயக்கத்தை இளைஞர்களிடம் கொண்டு செல்லுவதில் நமது ஆசிரியர் வீரமணி வெற்றி பெற்றுவிட்டார்.

மாணவர் பருவத்தில் நாங்கள் எல்லாம் இருந்தபோது பெரியார், அண்ணா நூல்களைப் படித்தோம். ஆனால், அரசியலுக்கு வரும் இளைஞர்களிடம் இதனைப் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது.

மலேசிய திராவிடர் கழகம் வாழ்த்து

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆவது பிறந்த நாளில், மலேசிய திராவிடர் கழகம் தலைமைக்கழகச் சார்பில் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறோம். திராவிடர் கழகத் தந்தை பெரியார் விட்டுச்சென்ற பணியை, தன் தலைமையின் கீழ் கழகத் தோழர்களோடு கைகோத்து நடத்தி; பாதுகாத்து தந்தை பெரியாரின் கொள்கைகளை நிலைநாட்டுவதிலும்; உலக நாடுகளிலும் தந்தை பெரியார் கொள்கைகளை பரவ செய்வதிலும், ஒரு இளைஞனைப்போல் சூறாவளிப் பயணம் மேற்கொள் வதிலும் அயராத பணியின் முதன்மையானவருமான, அந்த ஒப்பற்ற பகுத்தறிவு மேதைக்கு இன்று பிறந்த நாள். அவர் எல்லா வாழ்வு நலனும் பெற்று சமுதாயப் பணியை தொடர்ந்து ஆற்றிட வாழ்த்துவோம்.

- ச.த.அண்ணாமலை

தேசியத் தலைவர்,

மலேசிய திராவிடர் கழகம். 2.12.2018.

பெரியார் ஒரு தனி மனிதராக இருந்து பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து, புராணங்களை எதிர்த்து இருண்டு கிடந்த சமுதாயத்தில் ஒரே ஒரு டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டார் ஒரு தனி மனிதராக என்றால், சாதாரணமா?

மிருகமாக, அடிமையாக இருந்த ஒரு இனத்திற்கு சுயமரியாதை உணர்வினைவூட்டி மனிதனாக மாற்றிய பெரியார் என்ற ஒருவர் இல்லை என்றால், நான் இல்லை, நீங்கள் இல்லை. ஏன் - இந்த இனமே இல்லை.

அய்யா இல்லை, அண்ணா இல்லை, கலைஞரும் இல்லை. நம்மோடு இருக்கும் தலைவர் நமது ஆசிரியர்தான். தி.மு.க. தலைவராக தளபதி மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - அவரிடம் நான் சொன்னேன், நீங்கள் ஒரு கட்சியின் தலைவர் மட்டுமல்ல; இனத்தின் தலைவராக இருக்கவேண்டும்; வெறும் கட்சியின் தலைவராக இருந்தால் பயனில்லை. இலட்சியம் இல்லையென்றால் எந்தக் கட்சியும் நிலைக்காது. இடதுசாரிகளுக்கு, கம்யூனிஸ்டுகளுக்கு இலட்சியம் உண்டு.

தி.மு.க. என்பதும் ஒரு கட்சியல்ல - ஓர் இயக்கம் - மூவ்மெண்ட்!

அவாளைப் பார்த்து நாம் தெரிந்துகொள்ளவேண்டும் - அவர்களிடம் இருக்கும் இன உணர்வு நமக்கு இருப்பதில்லை.

பெண்கள் விஷயத்தில் சங்கராச்சாரியார் இப்படி நடந்துகொண்டுள்ளாரே என்றால், எவ்வளவு சாமர்த்தியமாகப் பதில் சொல்வார்கள் தெரியுமா?

அதில் ஒன்றும் தோஷமில்லை. கடவுள் கிருஷ்ண பரமாத்மா எப்படியெல்லாம் இந்த விஷயத்தில் நடந்து கொண்டுள்ளார் தெரியுமா என்பார்கள்.

கொலை வழக்கு இருக்கிறதே - உங்கள் ஜெகத்குரு மீது என்றால், கடவுளே சண்டை போட்டிருக்கிறாரே - கொலை செய்திருக்கிறாரே என்று பேச ஆரம்பித்துவிடுவார்கள் என்று நகைச்சுவையுடன் செய்திகளை எடுத்து வைத்தார் தி.மு.க. பொருளாளர்.

நமக்கும் அந்த இன உணர்வு தேவை. இந்தத் தலைமுறையினருக்கு நமது பழைய வரலாறு தெரியாது. எனக்கு ஏற்பட்ட வலி என் மகனுக்குத் தெரிவதில்லை.

இப்பொழுதெல்லாம் ஏது சார் பிராமின் - நான் பிராமின் என்பான். ஒரு தாசில்தார் ஆபீசுக்குச் சென்று மொத்தடிப் பட்டான் என்றால், என்ன சொல்லுவான், பார்ப்பானைப் பத்தி பெரியார் சும்மாவா சொன்னார் என்பான்.

விடுதலை சந்தா அளிப்பு

இளைஞரணி சந்தா 518    7,74,900
மாணவர் கழகம் சந்தா 603    6,10,200
மாவட்ட கழகம்    சந்தா 1048    13,10,150
மொத்தம்    சந்தா 2169    26,95,250

மனிதனுக்கு மான உணர்ச்சி வேண்டும் என்று நாம் சொன்னால் கேலி பேசுவான் - அவனே இன்னொரு நாள் அவனுக்குப் பிரச்சினை என்று வரும்போது என்னை மானங்கெட்டவன் என்றா நினைத்தார்கள் என்பான்.

அவனுக்கென்று வரும்பொழுதுதான் பெரியாரின் அருமை தெரியும்; திராவிட இயக்கத்தின் - கோட்பாட்டின் அருமை புரியும்.

திராவிடர் கழகம் என்பது ஒரு பவர் ஜெனரேட்டர். அது அனைவருக்கும் சக்தியை வழங்கிக் கொண்டே இருக்கும்.

அய்யாவிற்குப் பிறகு,

அண்ணாவிற்குப் பிறகு,

கலைஞருக்குப் பிறகு,

நமக்குக் கிடைத்த தலைவர் வீரமணி

என்று பேசினார் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன்.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

எனக்கென்று பிறந்த நாள் விழா தேவையில்லை. பெரியார் பிறந்த நாளில் நாம் இருக்கிறோம். இங்கே நாம் கூடியிருப்பது - கூட்டணி என்று சொல்லுவது கொள்கைக் கூட்டணி. அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்தையும், தி.மு.க.வையும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார். நான் முன்பு சொன்னதுபோல விடுதலை சிறுத்தை களையும் சேர்த்து மூன்று குழல் துப்பாக்கியாகும்.

பத்திரிகைகளை நான்காவது தூண் என்பார்கள். அது இப்பொழுது பார்ப்பனர்கள், கார்ப்பரேட்டுகள், மதவாத சக்திகளின் கைகளில்தான் இருக்கின்றன. இந்த நிலையில், விடுதலை' என்ற போர் வாள் நம் இனத்தின் பாதுகாப்பு அரணாகும். 84 ஆண்டுகளாக நடக்கும் மூத்த பத்திரிகை விடுதலை'.

விடுதலை'யால் ஆட்சிகள் மாற்றப்பட்டதுண்டு. ஒடுக்கப் பட்ட மக்கள் உரிமை பெற்ற வரலாறு விடுதலை'க்கு உண்டு.

இங்கே மூவர் பேசினார்கள் - அந்தப் பேச்சுகள், கருத்துகள் எனக்கு மேலும் வலிமையைக் கொடுத்துள்ளன. இங்கே பேசப்பட்ட பேச்சுகள் அகங்கார - அலங்காரப் பேச்சுகள் அல்ல.

ஆற்றல்மிக்க இனவுணர்வு உரைகள். தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் நன்றாக சொன்னார், இது ஒரு கட்சியல்ல மூவ்மெண்ட்' என்றார்.

உடலில் மற்ற மற்ற உறுப்புகள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இதயம் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியுமா? மூவ்மெண்ட்' என்பதும் இதயம் போன்றதுதான்.

இதயத்துக்கு அடைப்பு ஏற்படுவது போல இயக்கங் களுக்கும் சில நேரங்களில் சோதனைகள் ஏற்படக்கூடும்.

வாழும் பெரியார் என்று என்னை மட்டுமல்ல, யாரையும் சொல்லாதீர்கள். பெரியார் மறையவில்லை - தத்துவத்தால் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் உள்ளார். பெரியார் ஒரு தனி மனிதரல்ல - ஒரு சகாப்தம் என்றார் அறிஞர் அண்ணா.

பெரியாரின் கொள்கை முக்கியமாகத் தேவைப்படும் கால கட்டம் இது. மத்தியிலே இருக்கக் கூடிய ஆட்சி சூழ்ச்சியும், தந்திரமும், வன்மமும் கொண்டது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம் என்பார்கள். அதேநேரத்தில், நீட்'டைக் கொண்டு வந்து திணிப்பார்கள்.

மதவாதமும், ஜாதிய வாதமும் தலைதூக்கி நிற்கிறது. இந்த நேரத்தில் நம் கொள்கைக் கூட்டணி இணைந்து போராடித் தகர்க்கவேண்டும்.

அரசியல் கூட்டணிக்கு நிரந்தரப் பகைவர்களோ, நிரந்தர நண்பர்களோ கிடையாது. கொள்கைக் கூட்டணிக்கு நிரந்தர நண்பர்களும், நிரந்தர பகைவர்களும் உண்டு.

ஆணவக் கொலைகளை அனுமதிக்கக் கூடாது. ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொள்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக படை அமைக்கப்படும். ஒரு பாசறை உருவாக்கப்படும் விரைவில். கூலிப்படைகள் வந்தாலும், அதையும் இந்தப் படை சந்திக்கும்.

முதற்கட்டமாக ஓசூரில் வரும் 30 ஆம் தேதி மாலை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும். இந்தக் கொள்கைக் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கும் என்று உச்சக்கட்டமாக அறிவித்தார் தமிழர் தலைவர்.

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி மலரவேண்டும்

தமிழ்நாட்டில் ஓர் ஆட்சி இருக்கிறதா? மத்திய - மதவாத ஆட்சியின் பிடியில் சிக்கித் இருக்கிறது. தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டில் ஆட்சி அமையும், அது காலத்தின் கட்டாயம் என்று அழுத்தமாகப் பதிவு செய்தார் தமிழர் தலைவர்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்  நன்றி கூறிட, பிற்பகல் 1.30 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

வந்திருந்த அனைவருக்கும் மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வி.பன்னீர்செல்வம், தி.இரா.இரத்தினசாமி, தே.செ.கோபால், வழக்குரைஞர் சு.குமாரதேவன், இரா.வில்வ நாதன், ப.முத்தையன், பா.தென்னரசு, புழல் த.ஆனந்தன், எண்ணூர் வெ.மு.மோகன், ஆர்.டி.வீரபத்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner