எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகத் தலைவரின் கண்ணீர் அறிக்கை

நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத பேரிடியான செய்தி - கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி (வயது 72) அவர்களின் மறைவு செய்தி.

திருச்சி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் முடிந்து, சென்னை திரும்ப விமான நிலையத்திற்கு நான் சென்று கொண்டிருந்தபோது, குன்னூரில் நமது இயக்கக் கண்மணிகள் - கொள்கைக் குன்றுகள்- டாக்டர் கவுதமனும், அவரது வாழ்விணையரும், திராவிடர் கழகப் பொருளாளருமான டாக்டர் பிறைநுதல்செல்வி அவர்களும் விபத்துக்குள்ளானார்கள் என்ற செய்தி கிடைத்தது.

எனது பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் (2.12.2018) கலந்து கொண்டு, பெரியார் திடலில் நடைபெற்ற மருத்துவ முகாம் சேவைப் பணிகளை ஒருங்கிணைத்துவிட்டு, அன்று மாலை எங்களது வீட்டிற்கும் வந்து நீண்ட நேரம் குடும்பத்தவர்களுடன் பாசத்தோடு வழக்கம் போல் உரையாடி, உண்டு மகிழ்ந்து இரவு 10.30 மணிவரை பேசிக்கொண்டிருந்துவிட்டு, பிரியா விடைபெற்றுச் சென்றார்கள். உடல்நலம் பற்றி ஓர் அமெரிக்க இதயநோய் மருத்துவர் அண்மையில் எழுதியதை இருவருக்கும் படித்துக் காட்டி, இதன்படி உடல்நலத்தைப் பரிசோதித்து, அலட்சியப்படுத்தாமல் மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும் என்று நான் கூறியதை ஏற்று அதன்படியே செய்கிறோம். நாளை தங்கியிருந்து பார்த்துவிட்டு நாளை இரவு குன்னூருக்குப் போகிறோம் என்று மிகுந்த கலகலப்பான உற்சாகத்துடன், குடும்பத்தவர்களிடம் உரையாடிச் சென்றனர். அதுதான் இறுதி சந்திப்பு என்று தெரியாது.

திருப்பூரிலிருந்து குன்னூருக்கு தனது காரில் பயணம் செய்து நேற்று (4.12.2018) காலை குன்னூர் நெருங்கும் வேளையில், மூன்று, நான்கு கி.மீ. தூரம் இருக்கையில் மேலே இருந்து கீழே வந்த மற்றொரு கார், இவர்கள் காரின்மீது மோதி டாக்டர் கவுதமன், டாக்டர் பிறைநுதல்செல்விக்கு பலத்த அடியும், அதிர்வுகளும் ஏற்பட்ட நிலையில், அவரது மகன் டாக்டர் இனியன் வந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

காலை சுமார் 10 மணியளவில் எனக்கு வலிக்கிறது என்று கூறிய நிலையில், மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே ஸ்கேன் செய்து பார்த்தவுடன் உள்ளே கல்லீரல் (றீவீஸ்மீக்ஷீ),  மண்ணீரல் (ஷிஜீறீமீமீஸீ) பகுதிகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டு, உடனே தாமதிக்காமல் அறுவை சிகிச்சை மேற்கொள் ளப்பட்டது என்ற செய்தியோடு திருச்சி விமான நிலையம் சென்று கொண்டிருந்தேன்.  சென்னை வந்தவுடன் கோவை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தோழர் கருணாகரன், செல்வியின் மருமகள் டாக்டர் பாவனா ஆகியோர் தான் பேசினர். நிலைமை சற்று கவலைக்கிடமாகத்தான் உள்ளது என்று அவர்கள் சொன்னபோது எனக்கு இதயம் கனத்தது. எனது வாழ்விணையரிடம் தகவலைக் கூறினேன். டாக்டர் புகழேந்தியிடம் இடைவிடாமல் தகவல் கேட்டுக்கொண்டே இருந்தோம். சிறிது நேரத்தில் இதயம் வெடிப்பதைப்போல தாங்கொணா வேதனைச் செய்தி எங்கள் அனைவரையும் தாக்கியது. ஒரு பக்கம் கவிஞர் கலி.பூங்குன்றன், மறுபக்கம் அன்புராஜ் என மாறி மாறி பலரிடமிருந்து தகவல் கேட்டு, மறைவினை உறுதி செய்த நிலையில் அதிர்ச்சியில் உறைந்தோம். சிறிதுநேரம் நான் எப்போதுமில்லாத துயரத்தின் உச்சிக்கே செல்லும் நிலை!

எங்கள் வீடே ஒரு துக்க வீடாக - சோகமயமாக - கண்ணீர் சிந்தி,  பேச முடியாத அளவுக்கு இலக்கானது.  எப்படியோ அன்புராஜ், சீதாராமன் ஏற்பாட்டில் உடனே பயணமாகி ரயிலில் அமர்ந்த நிலையில், வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, ஒரு துளி துணிவை வரவழைத்துக் கொண்டோம்.

அவரது மறைவால் நேரடியாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளவர் எனது உடன்பிறவாத சகோதரன் டாக்டர் கவுதமன். அவரை மருத்துவக் கல்லூரியில் சேர்த்தது முதல் - ஜாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தது வரை, எல்லாவித முடிவுகளிலும் எனது - எங்களது பங்குண்டு. அந்த சகோதரனுக்கு ஆறுதல் தெரிவித்தேன்.

டாக்டர் பிறைநுதல் செல்வியைப்போல் ஒரு கொள்கைச் செல்வம், பண்பாட்டின் உருவம், பாசத்தின் ஊற்று, ஒழுக்கம், தன்னடக்கத்தின் எழிற்  கோல மனிதத்தை எளிதில் பார்க்க முடியாது.

கொள்கை வீராங்கனையாக - பட்டை தீட்டப்பட்ட வைரமாகத் திகழ்ந்தார்.

எங்களது கழகத்தின் ஒப்பற்றச் செல்வமே! "எனக்குப் பிறகு இந்த இயக்கத்தினை, அறக்கட்ட ளையை நம்பிக்கையோடும், நாணயத்தோடும் நடத்திட சரியானவர்கள் இருக்கிறார்கள்; கண்டறிந்து விட்டோம்! என்ற எனது நம்பிக்கையை திடீ ரென மின்னல் கண்களைப் பறித்ததுபோல ஆக்கி விட்டாயே!

யாருக்கு யார் ஆறுதல் கூறுவது - அவர்களுக்கா? எனக்கா? புரியவில்லை தவிக்கிறோம்.

கழகத்தினர் மத்தியில் அதிர்ச்சி - கதறல்கள் எங்கும் எங்கும்!

அய்யா சொல்லும் இயற்கையின் கோணல் புத்திதான்; வேறு எப்படி சமாதானப்படுத்திக் கொள்வது? பலகாலம் கட்டியது ஒருநொடியில் காணாமல் போய்விட்டதே! எவ்வளவு கொடுமை!

என்றாலும் நாம் பகுத்தறிவுவாதிகள்! அவரது கடமைகளை நிறைவேற்றிட அதே நாணயம், சிரித்த முகம், செயலாற்றும் தன்மை உள்ள தோழர்கள் - விழுதுகள் கிடைக்கும் என்ற நன்னம்பிக்கையுடன் எங்களின் இணையற்ற செல்வத்திற்கு வீரவணக்கம் கூறி வழியனுப்புகிறோம்!

மறையாது நெஞ்சில் நிறைந்த இயக்க வீராங் கனையாகி - தந்தை பெரியார், அன்னை மணியம் மையாரின் வழிபற்றிய உங்கள் தொண்டு என்றும் வரலாறாக ஒளி வீசும்.

அவரை இழந்து வாடும் எனது கொள்கை உறவுக் குடும்பமே, ஆறுதல் கொண்டு துணிவுடன் அவர் தொண்டைத் தொடர ஆயத்தமாவோம்!

அதுதான் அவருக்கு நாம் வைக்கும் லட்சிய மலர் வளையம்!

புரந்தார்கண் நீர் மல்க, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவரை வழியனுப்பி வைக்கிறோம் - வேறு வழிதான் என்ன?

என்றாலும் லட்சியப் பயணம் தடைபடாது செல்லும். அதுதானே உங்கள் விருப்பம்.

கழகத்தின் மருத்துவமே! உன்னை இழந்தோம், என்ன செய்ய? தவிர்க்க முடியாததை ஏற்பதே பகுத்தறிவு - இதையும் ஏற்கிறோம்!

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

கழகத்தின் சார்பில் ஒரு வாரம் துக்கம் கடைப்பிடிக்கப்படும்; கழகக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்கி, கழக நிகழ்ச்சிகளை ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

 

 

 

சென்னை       தலைவர்

4.12.2018        திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner