எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பி.ஜே.பி. ஆட்சியின் பொருளாதார அலங்கோலங்களால் மக்களின் நல வாழ்வின் சீர்கேடுகள் ஒரு பக்கம்!

அறிவியலைக் கொச்சைப்படுத்தி புராணக் குப்பைகளை பி.ஜே.பி. அமைச்சர்களும், பிரதமரும் அரங்கேற்றும் அவலம் மற்றொரு பக்கம்!!

தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட உறுதிமொழி களை நிறைவேற்ற முடியாத - பொருளாதாரக் கொள்கைகளில் குழப்பங்கள் காரணமாக நாட்டின் பொருளாதார வீழ்ச்சி ஒரு பக்கம் - அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும் என்ற அரசமைப்புச் சட்டத்தின் சரத்துக்கு விரோத மாக, விஞ்ஞான மாநாடுகளில்கூட புராணக் குப்பைகளை அரங்கேற்றும் அவலம் இன்னொரு பக்கம் என்பதை எடுத்துக்கூறிய   திராவிடர்  கழகத் தலைவர்  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் - ஜனவரி 24 முதல் 2 வார காலத்திற்கு விஞ்ஞான மனப்பான்மையை மக்களிடம் வளர்க்கும் வகையில் திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகங்கள் சார்பில்  பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கட்டும் என்று வெளியிட்டுள்ள அறிக்கை  வருமாறு:

2014 இல் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. ஆட்சி பெரும் பான்மை - மக்களவையில் பெற்று வந்தவுடன், எதையெல்லாம் சொல்லி, வாக்குறுதிகளை வாரிவிட்டு, வளர்ச்சி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, ஒவ்வொருவருக்கும் வங்கியில் 15 லட்சம் ரூபாய் கணக்கில் போடப்படும் என்பது போன்ற ‘தேனினும் இனிய' பொய் மூட்டைகள் என்னும் மயக்க பிஸ்கெட்டை தந்து - அப்பாவி இளைஞர்களின் வாக்குச் சீட்டுகளைப் பறித்து பி.ஜே.பி. ஆட்சியில் அமர்ந்துவிட்டது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஆர்.எஸ்.எஸ்.  அதன் காவிக் கொள்கையை அனைத்து முக்கிய துறைகளிலும் திணித்துவிட்டது; உலகமே கைகொட்டிச் சிரிக்கும் அளவுக்கு கீழிறக்கத் திட்டங்களைத் துணிந்து அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக செய்த வண்ணம் உளறி வருகிறது!

மத்திய அரசின்

அலங்கோலங்கள் - வீழ்ச்சிகள்!

‘குறைந்த அரசு ஆதிக்கம்; நிறைந்த ஆளுமை'  (Minimum Government with Maximum Governance)  என்று கூறியதற்கு நேர்மாறாக, எல்லாம் நாங்களே என்று ‘‘தடாலடி தாண்டவராயத்தனத்தின் தர்பாராகவே'' மோடி ஆட்சி நடைபெற்று வருகிறது!

விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா இளை ஞர்களின் விரக்தியின் உச்சம், குழப்பமான பொருளாதார கொள்கைகள் , விதை நெல்லைக் கொண்டு விருந்து வைத்தல்போல, ரிசர்வ் வங்கியின் மூல நிதியையே எடுத்து பற்றாக்குறையை ஈடுகட்டுவது, முக்கிய மத்திய தன்னாட்சி அமைப்புகளுக்கெல்லாம் மூக்கணாங்கயிறு - போன்ற அவலங்களால் அன்றாட ஆட்சி அலங்கோலங்களால் நாடு நசிந்து கொண்டுள்ளது.

பிரதமர்மீது ஊழல் குற்றச்சாட்டு விவாதம் நாடாளு மன்றத்தில் வரும்போது, அதில்கூட கலந்துகொள்ளாத பிரதமர், தமிழ்நாடு போன்ற மாநிலத்து மக்கள் கஜா புயலால் நிர்க்கதி அடைந்து கதறிக் குமுறும் நிலையில், ஒருமுறைகூட நேரில் வந்தோ, ஆறுதலோ கூற மன மில்லாத ‘56 அங்குல' மார்புள்ளவர் என்று மார்தட்டும் ‘மகத்தான பிரதமர் மோடி'  என்னும் கித்தாப்புக்கு மட்டும் குறைச்சல் இல்லை; ஆனால், மக்கள் மத்தியிலோ அதிருப்தி அலை - அனைத்துத் தரப்பு மக்களிடமும் வேகமாகவே பரவி விட்டது.

புராணக் குப்பைகள் விஞ்ஞானம் ஆகுமா?

பேச்சுரிமை, கருத்துரிமைப் பறிப்பு, அறிவிக்கப்படாத நெருக்கடி கால நிலைபோல் நடப்புகள் இருந்து வரு கின்றன.

இந்நிலையில், இவரது காவி ஆட்சியில் அறிவியல் மாநாடு  (Indian Science Congress)
2015 இல் மும்பையிலும், இப்போது ஜலந்தரிலும் நடைபெற்றதில் அறிவியலை மிகவும் கொச்சைப்படுத்தி புராணக் குப்பைகளை முன்னிலைப்படுத்தி விஞ்ஞானத்தின் முன்னோடி எங்கள் நாடு என்று சிலாகித்து அமைச்சர்களும், சில படித்த (காவி) தற்குறிகளும் உளறியது கண்டு உலகமே சிரிக்கிறது - மகா மகாவெட்கக்கேடு!

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' ஏட்டின்

படப்பிடிப்பு

நேற்றைய ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா' (6.1.2019) ஏட்டில் கருநாடக பகுத்தறிவாளர்களின் கடும் எதிர்ப்புபற்றிய செய்திகளை விரிவாக வெளியிட்டிருக்கிறது (2 ஆம் பக்கம் காண்க) அதை அப்படியே தந்துள்ளோம் வாசகர் களுக்காக.

குறிப்பாக மாணவர்கள், கல்லூரி,  பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மத்தியில் எடுத்துப் பிரச்சாரம் செய்யும் பணிகளை - பிரச்சாரங்களை, ஆர்ப்பாட்டங்களை மாணவர்கள் செய்வது அவசியம்.

அக்கருத்துகளுக்கு இங்கே செலாவணி இல்லை என்று உலகம் புரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.

முன்னே போகவேண்டிய விஞ்ஞான வளர்ச்சி, பல நூற்றாண்டுகளுக்குப் பின் - காட்டுமிராண்டி காலத்திற்குத் தள்ளப்படுவதா என்று கண்டனங்களைத் தெரிவிக்க முன்வரவேண்டும்!

மும்பை அறிவியல் காங்கிரசு மாநாட்டில் பிரதமரின் பேச்சும் - விஞ்ஞானிகளின் அதிர்ச்சியும்!

2015 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற அறிவியல் காங்கிரசு மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடியின் உரையில், கணபதி (விநாயகர்) யானைத் தலையை வெட்டி வைத்தது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி  (Transplantation) என்று கூறியதைக் கேட்டு, அதிர்ச்சியும், வெட்கமும் அடைந்த நோபல் பரிசு பெற்ற (தமிழ்நாட்டைச் சேர்ந்த பார்ப்பனர் அவர்) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், இனிமேல் இந்தியாவில் நடைபெறும் அறிவியல் காங்கிரசு மாநாட்டிற்குச் செல்லவே மாட்டேன் என்றெல்லாம் சபதம் கூறி சென்றுவிட்டார்.

அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும்

பிரச்சாரம் நடக்கட்டும்!

இதைக் கேட்ட பிறகாவது புத்தி வரவேண்டாமா?

‘‘நீ என்ன சொல்லுவது -  நான் என்ன கேட்பது - நான் தொட்டுக்கொண்டுகூட சாப்பிடுவேன்'' என்று கழிப்பறையில் உண்டவன் சொன்னதுபோன்று பேசும் மோசமான கருத்தாடலுக்கு இடம் தரலாமா?

தமிழ்நாட்டில் திராவிட மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்பில் ஆங்காங்கு அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் விளக்கக் கூட்டங்களை நாடு தழுவிய அளவில் ஜனவரி 24 முதல் இரண்டு வாரங்களுக்குத் தொடர்ந்து நடத்திடுவோம்!

ஆயத்தமாவீர்!

கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்.

சென்னை

7.1.2019

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner